அயான் ஹிர்ஸி அலி – கருத்துகளுக்கு தரும் விலை

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

இர்ஷத் மஞ்ஜி


தமிழில்: ஆசாரகீனன்

(டைம் பத்திரிகை ஒவ்வோர் ஆண்டும் செல்வாக்கு மிக்க 100 பேர்களைப் பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் டச்சு நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான அயான் ஹிர்ஸி அலி. பல-பண்பாட்டியம் பேசும் இடதுசாரிகளின் ஆசியுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ‘கொலைப் பட்டியலில் ‘ இருப்பவர் இவர். இவர் எழுதிய சரணாகதி என்ற திரைப்படத்தின் காரணமாக அந்தப் படத்தின் இயக்குனர் தியோ வான் கோ இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டது திண்ணை வாசகர்கள் அறிந்ததே. ஹிர்ஸி அலி பற்றிய இந்தக் குறிப்பை டைம் பத்திரிகையில் எழுதியிருப்பவர் Trouble with Islam புத்தகத்தை எழுதி இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலைப் பட்டியலில் இருக்கும் மற்றொரு முஸ்லிம் பெண் எழுத்தாளரான இர்ஷத் மஞ்ஜி.)

தம் கருத்துகளில் உறுதியாக நிற்பதால் ஏற்படக்கூடிய அபாயங்களைப் பற்றி நன்கு அறிந்தவர் அயான் ஹிர்ஸி அலி. சோமாலியாவில் பிறந்து நெதர்லாந்தில் குடியேறிய டச்சு அரசியல்வாதியான இவர், தம் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களால் மத அடிப்படையில் கொடுமைப்படுத்தப்படும் ஒரு முஸ்லிம் பெண்ணைப் பற்றி ‘சரணாகதி ‘ என்ற தலைப்பிலான படத்தை உருவாக்கியவர். இந்தப் படத்தில் குர்ரானின் சர்ச்சைக்குரிய வரிகளை காட்சிப்படுத்தும் திரையாக பெண்ணின் உடலைப் பயன்படுத்தினார். படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான தியோ வான் கோவைக் கொலை செய்யுமளவுக்கு இந்தப் படம் ஒரு வெறியனுக்கு ஆத்திரமூட்டியது. வான் கோவின் உடலில் கத்தியைச் சொருகிய பின்னர் உயிரற்ற அவரது உடலையே ஓவியம் தீட்டும் தம் திரைச்சீலையாக ஆக்கிக் கொண்டான் அந்தக் கொலைகாரன். அந்த உயிரற்ற உடலில் அவன் செருகிய மிரட்டல் ‘அடுத்தது நீதான் ‘ என்று ஹிர்ஸி அலியை எச்சரித்தது.

35-வயதே ஆகும் ஹிர்ஸி அலியை கடந்த ஆண்டு நான் ஒரு புத்தக விற்பனைப் பயணத்தின் போது சந்தித்தேன். இஸ்லாத்தை சீரமைக்க நான் வெளிப்படையான ஓர் அழைப்பை விடுத்திருந்த காரணத்தால், என்னை நேர்காணல் செய்யும் – பாதை தவறிய ஒருவரை பாதை தவறிய மற்றொருவர் சந்தித்துப் பேசும் – பொறுப்பை அவருக்கு ஒரு டச்சுப் பத்திரிக்கை கொடுத்திருந்தது. ஒரே ஒரு வித்தியாசம்: அவர் ஏற்கனவே இஸ்லாத்தைக் கைவிட்டவர். நான் இன்னமும் அல்லாவைப் பற்றிக் கொண்டிருப்பதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டேன். ‘போய் விடாதே, இஸ்லாத்துக்கு நீ தேவை ‘ என்றார் ஹிர்ஸி அலி.

ஒரு சிக்கலான சவாலை எதிர்கொள்ள ஐரோப்பாவுக்கு அவர் மிகவும் தேவைப்படுகிறார்: ஒன்றுடன் ஒன்று உறவே இல்லாமல் பன்முகத் தன்மையை ஒரு பல-பண்பாட்டிய சமூகம் உருவாக்க முடியுமா ? ஹிர்ஸி அலியின் உரிமைகளை நிலைநாட்ட ஐரோப்பா இதுவரை பெரிதாக எதையும் செய்து விடவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் தியோ வான் கோ படுகொலை செய்யப்பட்ட பின்னர், இரண்டு மாதங்கள் ஹிர்ஸி அலி தலைமறைவாக இருக்க வேண்டியிருந்தது. அப்போது போலவே இன்றும் அவர் நான்கு காவலர்கள் என்ற புர்க்காவினால் எப்போதும் மூடப்பட்டே இருக்கிறார்.

ஆனால், இன்னமும் அவர் துடிப்புடன் இருக்கிறார். ‘கெளரவக் கொலைகள் ‘ போன்ற குற்றங்களைத் தடை செய்யும்படி அவர் நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். இந்தக் குற்றங்களுக்கு குர்ரானைக் காரணமாகச் சொல்ல முடியாது என்றாலும், இவை தொடர்ந்து நடக்க முஸ்லிம் தலைவர்களில் மவுனமே காரணமாக இருக்கிறது. ‘உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ எதிரானதாக இருந்தால் கூட நீங்கள் உண்மையான சாட்சியாக இருங்கள் ‘ என்று குர்ரான் வலியுறுத்துவதை இந்தத் தலைவர்கள் மறந்து விட்டதாக ஹிர்ஸி அலி சொல்கிறார். இந்த விதத்தில் அயான் ஹிர்ஸி அலி ஓர் உண்மையான நம்பிக்கையாளர்.

aacharakeen@yahoo.com

Series Navigation

இர்ஷத் மஞ்ஜி

இர்ஷத் மஞ்ஜி