அம்மாவின் கணவர்

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

சே பிருந்தா


எல்லா அப்பாக்களின் விரல்களும்
அகப்படாமல் பிஞ்சுக் கைகளுள்
அதன் ரகஸ்ய எல்லைகளுடன்
பருத்திருக்கின்றன.

சைக்கிள் கேரியரின் பின் அமர்ந்து
ராஜா டாக்டரிடம் காய்ச்சலுக்குப் போகையில்
அப்பாவின்
அசைந்து நகரும் முதுகு
காட்சிகளை மறைக்கிறது.

ஏனோ வளர்ந்து பெரிதானதும்
எல்லைகள் சுருங்கி
அப்பாவின் பரிமாணங்கள்
அதன் ஆரம்பப் புள்ளியுடன்
ஒடுங்கிப் போயின –
அம்மா அறிமுகப் படுத்தின
அம்மாவின் கணவனாலும்.

(பறத்தல் அதன் சுதந்திரம் – தமிழ்ப் பெண் கவிதைகள் தொகுப்பிலிருந்து)

Series Navigation

சே பிருந்தா

சே பிருந்தா