This entry is in the series 20040610_Issue

ஈழநாதன்


!
அம்மா….!
முந்தாநேற்று
வந்து சேர்ந்த
உன் கடிதத்துடன்,

ஊரிற் பிள்ளையாரை
துணைக்கழைத்து!
உச்சியில் எழுதிய
‘உ ‘

துர்க்கை அம்மனின்
துணையை வேண்டி
தடவி அனுப்பிய
குங்குமம்!

உறுப்பெழுத்தும் இன்றி
கோழிக்கிளறலும் இன்றி
மணிமணியான
உன் கையெழுத்து!

கோடிடாத தாளிலும்
வரிகளை உருவாக்கி
இடைவிட்டெழுதும்
உன் நேர்த்தி!

ஒவ்வொருமுறை
பிரிக்கும் போதும்
புதிதாய் மணக்கும்
உன் வாசம்!

மடிப்பின் ஓரத்தில்
தவறிக் கிடந்த
பாதி நரைத்த
உன் தலை முடி!

‘இப்படிக்கு அம்மா ‘
முடிக்கும் வரிகளில்
கலங்கிய எழுத்தில்
உன் கண்ணீர்!

இத்தனையும் வந்தன.
நீ மட்டும்!
ஏன் வரவில்லை ?
—-
eelanathan@hotmail.com

Series Navigation