அம்பாடி

This entry is part [part not set] of 16 in the series 20010304_Issue

சக்கரியா


முன்னொரு காலத்தில், இங்கிருந்து வெகுதூரத்தில் உள்ள ஒரு காவியத்தில், ஒரு பிரபு தம் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கே செல்வதற்கு ஒன்பது நாள் யானை மீதும், ஒன்பது நாள் பறக்கும் குதிரை மீதும், எட்டரை நாள் ரயிலிலும் பயணம் செய்யவேண்டுமென்று சொன்னால் தூரத்தின் ஓர் உத்தேச அளவு உங்களுக்குப் புரியுமல்லவா ? நல்ல முதல்தர உவமைகள் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருந்தது பிரபுவின் வீடு. முகப்பும் பூந்தோட்டமும் நானாவித அலங்காரங்களுடனும், படுக்கையறையும் கேளிக்கை அறையும் சுத்த சமஸ்கிருதத்தாலும் கட்டப்பட்டிருந்தன. குளியல் அறை, கக்கூஸ், விறகு அறை, ஆடு கட்டுமிடம் முதலியவை காணப்படவில்லை. இவ்வாறு அந்த பிரபு வேட்டையாடியும் நீராடியும் உல்லாசமாக வசித்துவந்தார். குடும்ப நபர்களைப்பற்றி அதிகம் குறிப்பிட இங்கே தேவையில்லை. கன்னிகளும் தோழிமார்களும் வைப்பாட்டிகளும் நிறையவே இருந்தனர். ஏராளமான கட்டில்களும், சோபாக்களும், மெத்தைகளும், நிலைக்கண்ணாடிகளும் இருந்தன. மூத்த கன்னிக்கோ இளையவளுக்கோ, சரியாகத் தெரியவில்லை, ஒரு காதலனும் இருந்தான். இதெல்லாம் அவ்வளவு முக்கியமானவை அல்ல. உங்களுக்குத் தெரியவேண்டியது இதுதான். மாளிகையின் வடக்குப் பகுதியிலுள்ள அந்தப்புரத்தில் பட்டுத் திரைச் சீலைகளால் மறைக்கப்பட்ட ஒரு திட்டி வாசலின் பக்கத்தில், நடுவே ஒரு மலையாளச் சொல்லும் சுற்றிலும் சமஸ்கிருதமும் உபயோகித்து ரமணீயமாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு கிளிக் கூண்டு தொங்கிக்கொண்டிருந்தது. இந்த கிளிக் கூண்டில் ஒரு வானம்பாடி – இல்லை, கிளி – வீண் தர்க்கம் வேண்டாம், ஆனால் வானம்பாடி என்றுதான் படித்ததாக எனக்கு நல்ல நிச்சயம் – சிறைப்பட்டிருந்தது. உங்கள் விருப்பம்போல் கிளியாகவோ வானம்பாடியாகவோ வைத்துக்கொள்ளுங்கள், எனக்கென்ன ? எப்படியாயினும் ஒரு வானம்பாடி கைதியாக இருந்தது. ரத்தினங்களாலும் வஜ்ரக்கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த இந்தக் கூண்டில் தங்கத்தால் செய்யப்பட்ட சுத்தமான தண்ணீர் நிரம்பிய ஒரு குளியல் தொட்டி இருந்தது. கீழே தரையில் மலஜலம் கழிப்பதற்காக ஒரு செய்திப் பத்திரிகை இடப்பட்டிருந்தது. கூண்டில் பால், பழம், தேன், அம்ருத், வெண்ணெய், கோரோசனை, மிளகு ரசம் முதலிய பல பட்சணங்களும் தொடப்படாமல் சிதறிக் கிடந்தன. ஓலைச் சுவடிகள், வசம்பு, பிரம்பு, வெள்ளெழுத்துக் கண்ணாடி போன்ற மொழி பயிற்சிக்கான உபகரணங்களும் ஆங்காங்கே இருந்தன. இப்படி நிகழ என்ன காரணம் ? நமது கண்களுக்குப் பாத்திரமாகவிருக்கும் இந்த நிலைக்குக் காரணம் யாது ? கிளி அல்லது வானம்பாடி எங்கே ? கிளி அல்லது வானம்பாடி கூண்டின் வெளியே இருந்த மற்றொரு கிளி அல்லது வானம்பாடியோடு மலையாளத்திலும், சிலசமயம் மொழியை மாற்றி வங்காளியிலும், சில சமயம் மீண்டும் மொழியை மாற்றி ஆங்கிலத்திலும் சுதந்திரம் என்ற பொருள்பற்றி உரையாடிக்கொண்டிருந்தது. பேசிய விஷயம் சுருக்கமாக இதுதான்: கூண்டுக்கிளியான நான் சில விஷயங்களில் காட்டுக்கிளியான உன்னைப்போல் மாற விரும்புகிறேன். எனக்கு இப்படியெல்லாம் நேர்ந்ததற்குக்காரணம் எனது அம்மாதான். பார்ப்பவனெல்லாம் கையெட்டும் உயரத்தில் ஏன் கூடு கட்டினாள் ? கொஞ்சம் காமன்ஸென்ஸ் வேண்டாம் ? சொல்லி என்ன பயன் ? எனக்கு இந்த பழமும் தேனும் அறவே பிடிக்கவில்லை. இன்று இரண்டு மூன்று தடவை வயிற்றுப்போக்கு இருந்தது. ஏதாவது புழுவோ சிலந்தியோதான் எனக்குத் திருப்தி. அப்படிக் கிடைத்துக்கொண்டிருந்தால் இந்த இடம் அவ்வளவு மோசம் என்று சொல்லமாட்டேன். மற்றப்படி இங்கு ஒருவாறு வசதிதான். ஆமாம். என்ன வழி ? கிம் கரணியம் என்று கிளைமாக்ஸாக சமஸ்கிருதத்திலும் எடுத்துவிட்டது. இதில் வெளியிலிருந்த கிளி அல்லது வானம்பாடி அசந்துபோய்விட்டது. சாத்வீகமா(னா)யிருந்தது அது, அல்லது அவள், அல்லது அவன். கடவுள் ஏதாவது மார்க்கம் காண்பிக்காமலிருப்பாரா என்று சொல்லிவிட்டு எங்கோ பறந்து சென்றது. கூட்டில் வானம்பாடி தூரத்தில் நீல வானின் எதிரே தெளிவாகத் தெரிந்த சிலந்தி வலையை கொதியோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘சிலரிடம் பேசி எந்த பயனும் இல்லை. பேசப் போகிறவன்தான் முட்டாள் ‘ என்று தன்னைத்தானே நிந்தித்துக்கொண்டு, ஒரு துண்டு கோரோசனையை அசுவாரஸ்யமாகக் கொத்தத் தொடங்கியது. சற்று நேரம் அப்படியே கொத்திக்கொண்டிருக்கட்டும். கதை தொடர வேண்டுமானால் நாம் வேறொரு கதாபாத்திரத்தைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது.

பிரபுவின் கன்னிகைகளில் ஒருத்திதான் இவள். பிரபுவின் கன்னிகை என்று சொன்னால் அனியாயமாகத் தவறாக நினைக்கவேண்டாம். அவருக்கு எந்தவிதமான உடல் பலவீனமும் இல்லை. கன்னி என்ற வார்த்தை யால் சொல்ல வந்தது திருமணமாகாத பெண் என்றுதான். கல்யாணம் ஆகாதவள் கன்னி என்ற பொதுவான நல்ல எண்ணத்திலேயே இங்கே குறிப்பிடப்படுகிறது. கொஞ்சம் ஞாபகக் குறைவால், மூத்தவளோ இளையவளோ, அவளுக்கும் இளையவளோ – சரியாகத் தெரியவில்லை – அடையாளம் இதுதான் – யாருக்கு காதலன் இருந்தானோ, அவள்தான். மூன்று வயதுடைய எல்லோருக்கும் இளையவளுக்கு காதலன் இருக்க வழி இல்லை. அப்போது மூத்தவளோ அதற்கடுத்த இளையவளோ, யாரோ ஒருத்தி. ஆறோ ஏழோ உவமைகளும், இரண்டு உயர்வு நவிர்ச்சி அணிகளும், மூன்று உருவகங்களும் அணிந்திருந்த இவள் பொதுவாக அழகாகவே இருந்தாள்.பல்வேறு க்ரீடைகளில் க்ரீடித்தும், நீர் நிலைகளில் ஆடியும், தோழிமார்களோடு களித்தும், நிலைக் கண்ணாடியில் புன்னகை புரிந்தும், நந்தவனங்களில் பூக்களைப் பறித்தும் வாழ்ந்துவந்த விலாஸினி இவள்.

அவ்வாறிருக்கும்போது விலாஸினிக்கு ஒரு காதலன் கிடைத்தான். காதலன் யார் என்பது அவ்வளவு முக்கியமல்ல. அவன் ஒரு தாழ்ந்த சாதிக்காரன் என்பதும், ரகசியக் காதலன் என்பதும் நமக்குத் தெரிந்தால் போதும். காதல் வந்ததால் விலாஸினிக்கு ஏற்பட்ட மாற்றங்களும், அவை எப்படி கிளி அல்லது வானம்பாடியின் வாழ்க்கையை பாதித்தது என்பதுமே இங்கே முக்கியமான விஷயம். சுருக்கமாகச் சொன்னால் அவள், அதாவது விலாஸினி, எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்தும், புத்தகமும் கையுமாகவும் இருந்தாள். மூன்று மைல் தூரத்திலிருந்த முனிஸிப்பல் நூல் நிலையத்திலிருந்து நிறைய இலக்கிய நூற்களை கைகளிலும் தலையிலுமாக சுமந்துகொண்டுவருவது தோழிமார்களின் வேலையாயிருந்தது. இந்த சமயத்தில்தான் விலாஸினி சுதந்திரம் என்ற கருத்தைப்பற்றிக் கேள்விப்பட்டாள். சுதந்திரம் என்ற இந்த எண்ணம் விலாஸினிக்கு மிகவும் பிடித்துப் போயிருந்த காலத்தில் ஒரு நாள் நந்தவனத்தில் லதா மண்டபத்தில் திருட்டுக் காதலனோடு கேளிக்கையில் மூழ்கியிருந்தபோது பிரபு அவர்களைப் பார்த்துவிட்டார். காதலன் தப்பி ஓடிவிட்டாலும் விலாஸினிக்கு நல்ல உதை கிடைத்தது.

இதன்பிறகு அவள் எப்போதும் துயரத்தில் ஆழ்ந்திருந்தாள். ஆதர்சவாதியாக மாறிவிட்டாள். இந்த ஆதர்சவாதம் நமது கதையை முழுக்கப் பாதிக்கப்போகிறது. இவ்வளவுதூரம் நீங்கள் படித்தது கதையின் ஒரு பாகம்தான். இனிதொடர்ந்து படியுங்கள்.

இந்த நிலையில் ஒரு நாள் விலாஸினி தன் தோழிகளோடு வருத்தப்பட்டுக்கொண்டிருக்கையில், ஓர் உவமையை நினைத்துக்கொண்டாள். ‘ஹா, நான் ஒரு கூண்டுக்கிளியாகவன்றோ இருக்கிறேன். ‘ இப்படி ஒன்றிரண்டு உருவகங்களைத் தனக்குத்தானே சொல்லிவிட்டு, அவள் தன் முன்னாலிருந்த பட்டுத் திரையை அகற்றி, சாளரத்தைத் திறந்து, காற்றில் அசைந்தாடும் பூக்கள் நிறைந்த ஒரு மரத்தின்பால் தன் பார்வையைச் செலுத்திவிட்டு, ரத்தினங்கள்பதித்த கூண்டிலும்,அதற்குள் ஒரு துண்டு கோரோசனையை சிரத்தையின்றி கொத்திக் கொண்டிருந்த கிளி அல்லது வானம்பாடியின்மேலும் பதித்தாள். விலாஸினி சட்டென்று அவற்றை – தன் கண்களை – அங்கிருந்து அகற்றி, மீண்டும் முகத்தில் பதித்துக்கொண்டு ஒன்றும் நிகழாத மாதிரி ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டபடி கூறினாள்: ‘ஹே வானம்பாடி, நான் சற்றுமுன் கூறிய உவமை எவ்வளவு கச்சிதமாகவிருக்கிறது. நீயும் என்னைப்போல் சுதந்திரத்திற்காக ஏங்குகிறாய் அல்லவா ? உனக்காக யாரோ ஒருவன் எங்கோ ஒரு அடர்ந்த காட்டில் துயரத்தோடும், சிந்தனையோடும், விரகதாபத்தோடும் காத்திருக்கிறான் அல்லவா ? சுதந்திரம் என்கிற லட்சியம் எவ்வளவு மனோகரமானது! சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கோகலேயோ வேறு யாரோ கூறியிருக்கிறார்கள் அல்லவா ? நீல வானில் மெல்லிய அசைவில் பறக்க வேண்டிய நீ இங்கே இப்படி சிறைப்பட்டிருக்கிறாயே! நாம் இருவரும் ஒரே மாதிரி பாவம் செய்தவர்கள். பிரியப்பட்ட கிளியே, அல்லது வானம்பாடியே, எனது சகோதரன் ஸ்கூலிலிருந்து வருவதற்குமுன் உன்னை விடுதலை செய்யத் தீர்மானித்திருக்கிறேன். நீயாவது சுதந்திரமாகப் பறந்து செல். ‘

கிளி அல்லது வானம்பாடி மனதில் ஒரு திகிலோடு இந்த வார்த்தைகளைக் கேட்டது. தெய்வம் ஒரு வழியைக் காட்டியது மட்டுமன்றி அந்த வழியில் தன்னைப் பிடித்துத் தள்ளவும் செய்திருக்கிறதே! சாத்வீகமான அந்தக் காட்டுக்கிளியை சற்று நேரம் சபித்த பிறகு அது இவ்வாறு மனதுக்குள் சொல்லிக்கொண்டது: இது ஒரு ஆபத்தான விளையாட்டு. சுதந்திரம் – மண்ணாங்கட்டி. விஷயம் சிக்கலாகிவிட்டதே. வெளியே விட்டுவிட்டால் நான் என்ன செய்வேன் ? தேவி பகவதீ, இரை தேட யார் எனக்குக் கற்றுத் தந்தார்கள் ? யாருமில்லையே ஈஸ்வரா. வம்பாகப்போய்விட்டதே. மட்டுமல்ல, நான் இனி யாருடன் சேருவேன் ? என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிடவேண்டுமென்பதா உன் விருப்பம் ? பறக்கக்கூடத் தெரியாத நான் காகத்திற்கோ கழுகுக்கோ இரையாகவா ? நீ ஏதாவது செய்துதான் தீரவேண்டும். ‘

இதன் பிறகு அது தியானத்தில் ஆழ்ந்தது. பாதி மூடிய கண்களுடன் கிளி அல்லது வானம்பாடி ஓர் அற்புதம் நிகழக் காத்திருந்தது.

ஒன்றும் நிகழவில்லை.

விலாஸினி தோழிமார்களுடன் கூண்டுக்கு நேரே மெல்லமெல்ல நடந்து வருகிறாள். கிளி அல்லது வானம்பாடி தியானத்தை நிறுத்திவிட்டு கத்தியபடியே கூண்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாகப் பறக்கிறது. விலாஸினி, ‘ஹா, சுதந்திரம் பெறப்போகிற குஷி இந்த கிளியைகூட துள்ளிக் குதிக்கவைத்துவிட்டதே ‘ என்று மனதுக்குள் சொல்லியபடி கூண்டுக்குள் கையைவிட்டு கிளி அல்லது வானம்பாடியை சிறகோடு பற்றிப்பிடித்துத் தோழிகளுடன் நந்தவனத்துக்கு வந்து ஒரு பெருமூச்சுவிட்டபடியே அதைப் பறக்கவிட்டாள். கிளி அல்லது வானம்பாடி கல்போல தரையில் பொத்தென்று விழுந்தது. உருண்டு புரண்டு எழுந்து கூண்டின் நேரே பாயும்போதுதான் அந்தப்புரத்திலுள்ள பூனை ஏதோ அவசரமாக நந்தவனத்துக்கு வந்தது. ‘சே, பூனை ‘ என்று சொல்லியபடி ஒரு தோழி பூனையை எட்டிப் பிடித்தாள். ‘அக்கக்கா பூனை பூனை ‘ என்று சொல்லியபடியே கிளி அல்லது வானம்பாடி செய்வதென்னவென்றறியாது நின்றது. மற்ற தோழிமார் சேர்ந்து அதை ஓடிப் பிடித்து நந்தவனத்திலுள்ள ஒரு அழகிய மரத்தின் உச்சியில் வைத்து விட்டு, கூண்டை அவிழ்த்துக்கொண்டு எஜமானியோடு மாலை டாயும் கேக்கும் சாப்பிடச் சென்றனர்.

தன்னுடைய கூண்டு மறைந்ததைப் பார்த்ததும் கிளி அல்லது வானம்பாடியின் சர்வ நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது. முனிசிப்பல் நூல் நிலையத்தின் ஒவ்வொரு புத்தகத்தையும் மனம் நொந்து திரும்பத்திரும்ப சபித்தது. கடைசியாக மீண்டும் கடவுளை பிரார்த்தனை செய்துவிட்டு அங்கேயே பலம் குன்றி இருந்தது. ஒன்றும் நிகழவில்லை. மேலும் ஐந்து நிமிஷம் கடவுளுக்கு அனுமதித்துவிட்டு காத்திருந்தது. அப்புறமும் எதுவும் நடக்கவில்லை. ‘தேவையான சமயம் கிடைக்கவில்லை என்ற நிலைவேண்டாம். சூரியன் மறைவதுவரை டைம் தருகிறேன் ‘ என்று சொல்லி, மேலும் இரண்டு மணி நேரம் காத்திருந்தது. ஒன்றும் நிகழவில்லை. சூரியன் அஸ்தமித்தது.

இதனால் கிளி அல்லது வானம்பாடி நம்பிக்கையிழந்து நாஸ்திகன் ஆகிவிட்டது. கடவுள் பேரில் நம்பிக்கை போய்விட்டது என்பது மட்டுமல்ல, அதைவிட கஷ்டம், சர்ச் மேலும் போப் பேரிலும் நம்பிக்கை இழந்துவிட்டது. இதன்மூலம் நம் கதாநாயகி பாவம் செய்துவிட்டாள். அவள் வேரொரு காரியமும் செய்தாள். இரவு முழுவதும் பறப்பதற்கு முயன்றாள். பொழுது விடியும்போது ஐந்தடி உயரமே பறக்கமுடிந்தது. சூரியன் தூரத்தில் பனிமூடிய மலைகளுக்குப் பின்னே முகம் காட்டிக்கொண்டிருக்கும்போது கிளி அல்லது வானம்பாடி உடல் முழுக்க சேறும் கண்களில் தூக்கக் கலக்கமும் வயிற்றில் பசியுமாக விறைத்து பதறி சரிந்து மறிந்து பறந்து சென்றது. கதை முடிந்தது என்று நினைக்கிறீர்களா ? முடியவில்லை. தொடர்ந்து படியுங்கள்.

முதல் நாள் முழுதும் சிலந்திகளையும் புழுக்களையும் தேடி காடெங்கும் பறந்தது. கடைசியில் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்கியது. இரண்டாம் நாள் எதிர்பாராது கண்ணில்பட்ட ஒரு சிலந்தியின் நேரே சற்று தாழ்வு உணர்ச்சியுடன் மெதுவாக நடந்து செல்ல, சிலந்தி உரக்க சிரித்தபடி ஒரு மரத்தில் ஏறி மறைந்தது. அன்றும் அது தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு உறங்கியது. மூன்றாம் நாள் ஒரு மக்கிப்போன மரக்கட்டையின் மேல் சாய்ந்தது. வெயில் காய்ந்துகொண்டிருந்த ஒரு புழுவைக் கண்டு ஆவலுடன் பாய்ந்து செல்ல, புழு ஒளிவீசும் கண்களால் ஒரு பார்வை பார்த்து, ‘பா ‘ என்று காறி உமிழ்ந்துவிட்டு, ஆட்டம் ஆடி மின்னல் வேகத்தில் ஒரு துவாரத்தில் மறைந்தது.

அன்று இரவு தன் வயிற்றில் சுத்த தண்ணீர் ஒரு கடல்போல் அலைவீசுவதை உணர்ந்து உறங்காமல் இருந்த கிளி அல்லது வானம்பாடி தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தது. அக்னிபிரவேசம் என்ற டெக்னிக்கை அனுசரிக்க முடிவுசெய்தது.

அடுத்த நாள் காலையில் சீக்கிரமாக எழுந்து, தாமதியாமல் சோலைக்குச் சென்று குளித்துவிட்டு வந்தது. இறகுகளை சீவி மினுக்கி ஒதுக்கி, அலகை அழகுபடுத்தியது. சுருக்கமாகச் சொன்னால் கிளி அல்லது வானம்பாடி எவரையும் மயக்குகிற அழகியாக மாறியது. பிறகு தன் கடைசி ஓய்விடத்துக்கு மெல்ல மெல்ல நடந்து சென்றது. நிறைய பருந்துகள் சுற்றிப் பறக்கிற ஒரு வெட்டவெளி அது. அங்கே ஒரு உறுதியான கல்லின்மேல் அமர்ந்து கண்களை மூடியது. அதன் கண்களின் உள்ளே மறைந்துபோன அதன் கூண்டு தோன்றிக்கொண்டிருந்தது. அதன் பின்னர் நடந்தவற்றை நாஸ்திகர்களுக்கான ஒரு பாடமாக நாம் குறிப்பிடுகிறோம். அந்த அனாதையான, கைவிடப்பட்ட, தெய்வ நம்பிக்கையற்ற, கிளி அல்லது வானம்பாடிக்கு என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் நன்றாகக் கவனியுங்கள்.

திடாரென்று பிறந்த ஒரு இன்ஸ்பிரேஷனில் அது, ‘கிருஷ்ணா, பகவானே ‘ என்று மனமுருகிப் பிரார்த்தித்தது.

அப்போது எல்லையற்ற அந்த நீலவானிலிருந்து ஒரு கருடன் பறந்துவந்து ஓர் அம்புபோல் அதன்மேல் பாய்ந்தது.

‘ஹரே ராம் ‘ என்று சொல்லிக்கொண்டே கிளி அல்லது வானம்பாடி கண்களை இறுக மூடிக்கொண்டது.

மீண்டும் கண்களைத் திறந்தபோது தான் ஒரு மிருதுவான படுக்கையில் கிடப்பதை உணர்ந்தது. பக்கத்தில் காதல் பொங்கும் விழிகளால் நோக்கியபடி கருடன்!

கண் திறந்தவுடனே கருடன் அவள் முன்னால் மண்டியிட்டபடி, தளும்பிய கண்களுடன் இவ்வாறு கூறியது: ‘உன் அழகில் மயங்கி உன்னைக் கடத்தி வந்த பிழையை தயவுசெய்து பொறுத்தருள்வாயா ? இந்தப் பாவியின் மனைவி ஆவாயா ? ‘

‘ஆவேன் ‘ என்று சொல்லிவிட்டு கிளி அல்லது வானம்பாடி எழுந்து அடுக்களை எங்கே என்று கேட்டபடி உள்ளே சென்றது. கருடனும் பின்னால் சென்றது. புழுக்கள் நிறைந்த டின்னைத் திறக்க முயன்றுகொண்டிருந்த அவளைக் கட்டிப்பிடித்து, அந்த நிமிஷமே அவளை மனைவியாக்கிக் கொண்டது. மறு நாள் கலப்புமண ஆதரிப்பு சங்கத்திற்குச் சென்று பெயர்களைப் பதிவுசெய்துகொண்டன.

காலாகாலத்தில் குஞ்சுகள் பிறந்தன. அவை கருடம்பாடி என்று அழைக்கப்பட்டன. கருடக்கிளி என அழைக்கலாம் என்று கூறிய ஒன்றிரண்டுபேரின் மூக்கைக் கடித்துத் துப்பியதோடு கருடம்பாடி என்ற பெயர் நிலைத்துவிட்டது.அவைகளும் அவற்றின் சந்ததியினரும் குடியேறிய இடமே அம்பாடி என்று அழைக்கப்பட்டது.

இவர்களில் ஒரு பகுதியினர் சீர்ஷாசுரனின் படையெடுப்புக் காலத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு படைக்கு முன்னால் தெற்கு நோக்கி ஓடின. படையும் பின்னே சென்றது. சிறிது தூரம் ஓடிய பிறகு கருடம்பாடிகள் பறந்துவிட்டன. படை தோற்றுத் திரும்பியது. சீர்ஷாசுரன் ஒரு கல்லில் இடறி கீழே விழுந்து இறந்தான். இந்தப் பகுதியினர் மைசூர் பட்டணத்தின் சமீபம் குடியேறின. அந்த இடமே கிருஷ்ணராஜ சாகர் அல்லது பிருந்தாவன் கார்டன் அல்லது கண்ணம்பாடி என்று அழைக்கப்படுகிறது.

ஊர்களின் பெயர்க் காரணங்களை ஆராய்வது எத்தனை சுவாரஸ்யமான விஷயம்!

*************

தமிழில்:எம். எஸ்.

Series Navigation