அமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(!) எழுதிய கடிதம்

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

வெங்கட் சாமிநாதன்


1. மல்லிகை-யில் ஒர் கேள்வியும் அதற்கு ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் பதிலும்:

கேள்வி: வெ.சாமிநாதன் என்பவர் கலாநிதி க.கைலாசபதியைத் தாக்குகிறாரே ?

பதில்: வெ.சாமிநாதன் என்பவர் அமெரிக்க உளவு நிறுவனம் CIA யுடன்

தொடர்பு கொண்டவர். இந்திய உளவு ஸ்தாபனம் CIA யில் வேலை

செய்பவர். அவரிடமிருந்து வேறு என்ன எதிர் பார்க்க முடியும் ?

2. ‘ 1977-ஆம் ஆண்டு சமயநல்லூர் கிராமத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு வந்த நண்பர் சமவேல் உற்காகத்துடன்

பேசிக் கொண்டிருந்தார். திடாரென தணிந்த குரலில் சொன்னார். ‘நான் இப்ப திருநெல்வேலியில் இருந்து வாறேன்.

விஷயம் கன்பாம் (confirm) ஆயிருச்சி. வெங்கட் சாமிநாதன் சி.ஐ.ஏ. ஏஜெண்ட் தானாம். என்னால் எதுவும் பேச

இயலவில்லை. வெ.சாமியின் கருத்துக்களுடன் முழுக்க எனக்கு உடன்பாடு இல்லெயெனினும் அவரது தடாலடியான

விமர்சன முறை சுவரசியமானதாகத் தோன்றும். அவருக்கு அமெரிக்க பயணம் வந்துகிட்டிருக்கு. நான் குழம்பிப் போய்,

‘ஏன் அப்படி ? அதனால் அமெரிக்காகாரனுகளுக்கு என்ன பிரயோஜனம் ? ‘ என்றேன். ‘இடதுசாரி இலக்கியம் தமிழ்

நாட்டில் பரவிவிடாமல் தடுப்பதற்காக அமெரிக்க சதியின் வெளிப்பாடுதான் வெங்கட் சாமிநாதன் ‘. அமெரிக்க உளவாளி, சி.ஐ.ஏ. ஏஜெண்ட், என்ற பிம்பங்கள் எனக்கு திகிலூட்டின. உலகம் முழுக்கச் சதி உளவு வேலையில் ஈடுபட்டிருக்கும்

அமெரிக்கா, வெ.சா.வடிவில் தமிழ்நாட்டிற்குள்ளேயுமா ? என்று மனதுக்குள் நினைக்கவே ஒரு விதமான பயம். எண்பதுக்களின்

இறுதியில் ஜிப்பா காலருக்குள் கர்ச்சிப்பைத் திணித்துக் கொண்டு எரிச்சலும் கேலியும் கலந்த அந்நியமான பார்வையுடன்

இருந்த வெ.சாவை நேரில் சந்தித்தபோது உளவாளி பிம்பம் தகர்ந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழகத்தில்

எவ்வளவோ மாற்றங்கள் ‘.

‘(ந. முருகேச பாண்டியன், சதங்கை, மார்ச்-ஏப்ரல், 2002.)

3. சிகரம் பத்திரிகையில், அதன் ஆசிரியர் (செந்தில் நாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர், சென்னை

உயர் நீதி மன்றத்தில் வழக்குரைஞர்) வெங்கட் சாமிநாதன் CIA ஏஜெண்ட், அவருக்கு அமெரிக்காவிலிருந்து பணம்

வருகிறது, எனவே அவர் முற்போக்குகளுக்கு எதிரி என்று எழுதியது பற்றி, தான் செந்தில் நாதனிடம் பேசியதாக கோவை

ஞானி என்னிடம் நேரில் சிரித்து கொண்டே சொன்னது:

நான் செந்தில்தானிடம் ஒருமுறை கேட்டேன்: ‘ஏன் ஐயா இப்படி உங்களுக்கு பொய் எனத்தெரிந்தும் அவதூறைக்

கிளப்புகிறீர்கள் ? எதற்கும் ஆதாரம் வேண்டாமா ? ஆதாரம் இல்லாமல் என்ன வேண்டுமானாலும் சொல்லி விடுவதா ? என்று

கேட்டதற்கு செந்தில் நாதன்,:

‘அவருக்கு அமெரிக்காவிலிருந்து பணம் வராமல் இருக்கலாம். இப்படிச் சொல்லி வைத்தால் அது இவங்களுக்கு

எச்சரிக்கையாக இருக்குமே. எதிர்காலத்தில் அமெரிக்க ஏஜெண்டாக ஆகாமல் தடுத்து விடலாமே ‘ என்றார்.

II. அமெரிக்க தகவல் நிலையத்திற்கு (U.S.I.S) என் கடிதம் :

வெங்கட் சாமிநாதன் டெல்லி/14.2.97

அன்புடைய….

நேற்று மாலை நான் உங்கள் இருவரையும் சந்தித்தபோது, மிஸ்…. என்னிடம் கொடுத்த வேலைக்கு மனுச்செய்யும் படிவங்கள் இரண்டையும் இத்துடன் இணைத்துள்ளேன். அவை, பெற்றவாறே, திருப்பி அனுப்பப்படுகின்றன.

என்னிடமிருந்து எத்தகைய உதவியை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பது பற்றி நீங்கள் எனக்குச் சொல்வீர்கள் என்ற எண்ணத்தில் தான் நான் அங்கு வந்திருந்தேன். நான் உங்கள் காரியாலயக் கதவை, ஏதும் வேலை கேட்டுத் தட்டவில்லை என்பதை நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் காரியாலயம் தான் என் உதவியை நாடியது என்பதை நீங்கள் நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும். உண்மை விவரம் அப்படியிருக்க, என்னை உங்கள் காரியாலயத்துக்கு அழைத்து, ஒரு வேலை கேட்கும் மனுவை என்னிடம் கொடுத்து அதை நிரப்பு என்று சொல்வது என்னை அவமானப்படுத்துவதாகும்.

ஏழை இந்தியர்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள். எனக்கு எரிச்சலாகவிருந்தது. அப்போதே நான் என் மனத்தில் பட்டதை உங்களுக்குச் சொன்னேன். இருப்பினும் உங்களைப் பாதிவழியிலாவது சந்திக்க முடியுமோ என்று நினைத்தேன்

ஆனால், முடியாது. உங்கள் அமைப்பின் ‘பெரியண்ணா உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் (Big Brother is watching you) ‘ மனோபாவம், திகைப்பும் அச்சுறுத்தலும் தருவதாக இருக்கிறது. நீங்கள் தந்த படிவம், என்னுடைய சொந்த வாழ்க்கையிலும், என் குடும்பத்தின் வாழ்க்கையிலும், அருவருப்பு ஊட்டும் அளவுக்கு ஆக்கிரமிப்பு பாவம் கொண்ட ஊடுருவலாக இருக்கிறது. சாகித்ய அகாடமி, சங்கீத நாடக அகாடமி, நேசனல் புக் டிரஸ்ட் பொன்ற இந்தியாவின் பிரதான இலக்கிய கலாசார ஸ்தாபனங்கள் எதற்கும் என் பெயரைத் தவிர வேறு எதுவும் தேவையாக இருக்கவில்லை. அவர்களுக்கு என்னிடமிருந்த தேவை, Library of Congress-க்கு புத்தகம் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதை விட பல படிகள் உயர்ந்த தளத்தில் இருந்தது. இதற்கு எதிராக உங்கள் பெரியண்ணன் (Big Brother) அமைப்பு என்னிடம் என்ன கேட்கிறது ? என் பிறப்பு தகவல்கள், படிப்பு, பெற்றோர், செய்த பணிகள், என் வேலக்கால அதிகாரிகள், என் சகோதரர் – சகோதரிகளின் தகவல்கள், என் மன ஆரோக்கியத்தின் சரித்திரம் …. இப்படியாக நீண்டு போகிறது. என்ன ஆயிற்று அமெரிக்காவிற்கு ? அதன் ஆபாசமான செல்வக் கொழிப்பு, அதை பைத்தியமாக்கி விட்டதா ? உங்கள் காங்கிரஸ் நூலகத்திற்குப் புத்தகம் தேர்ந்தெடுக்கும் என் தகுதியை, நீங்கள் என்னிடம் கேட்கும் தகவல் குப்பைகள் எப்படி தீர்மானிக்கும் ? ‘தெரியவேண்டிய அவசியம் ‘ (Need to know) என்று ஒரு செயல் முறை உண்டு தெரியுமல்லவா ? இந்தத் தகவல் குப்பைகள் உண்மையிலேயே உங்களுக்குத் தேவையா ? அல்லது ஒரு வேளை பெரியண்ணனின் (Big Brother) திமிரையும் பேராசையையும் இது வெளிக்காட்டுகிறதா ?

உங்கள் படிவத்தில் நான் ‘ ‘எப்போதாவது, ஒரு கம்யூனிஸ்ட் அல்லது ஃபாஸிஸ்ட் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டிருந்ததுண்டா ? ‘ என்று ஒரு கேள்வி இருக்கிறது. கடந்த 35 வருட காலமாக, தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் சார்பில் இயங்கும் இலக்கிய அமைப்புகளால் நான், ‘அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாய் ‘ என்றும், ‘சி.ஐ.ஏ. உளவாளி ‘ என்றும், சி.ஐ.ஏ.யின் ஊதியப் பட்டியலில் என் பெயர் இருப்பதாகவும், இன்னும் என்னென்னவோ, வசை பாடப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான். இதன் விடம்பனம் என்ன தெரியுமா ? ஒரு இலக்கிய வியக்தியான என்னைத் தனக்கு அலோசனை சொல்லி உதவ அழைத்து, அருவருக்கத்தக்கதும், என் சொந்த வாழ்க்கையை ஊடுருவி அறியும் நோக்கம் கொண்டதுமான ஒரு வேலை மனுப் படிவத்தை என் மீது விட்டெறிந்து, என்னைத் தன்னுள் இழுத்து விழுங்கப் பார்க்கிறதே, ஏதோ நான் -சங்கல் அடுக்கும் கொத்தனார் போல, என் வேலை நேரத்தின் மணிக்கணக்கில் எனக்கு ஊதியம் தருவதாகவும், நான் ஃபாஸிஸ்டா, கம்யூனிஸ்டா அல்லவா என்றும் பார்க்கிறதே, அந்த உங்கள் அமைப்பில் தான் பாஸிஸத்தின் எல்லாக் குணங்களையும் பார்க்கிறேன்.

ஆனால், இந்த ஃபாஸிஸ்ட் முத்தண்ணா, ‘ஜனநாயகம், தனி நபர் சுதந்திரம் ‘ ன்று கோஷங்கள் இடுவதிலிருந்து அதன் வாய் ஓய்வதில்லை. கடந்த நாற்பது வருட கால என் பொது வாழ்வில் என் சுதந்திரத்தையும் என் நேர்மையையும், என் வழியில் மிகுந்த ஆக்கிரோஷத்துடனேயே பாதுகாத்து வந்துள்ளேன். . ‘உன்னுடைய நேர்மையயும், சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டினால், உன் எழுத்தோடு சம்பந்தப்படாத ஒரு வேலையை, இரவு நடன விடுதியில் பியானோ வாசிப்பது போன்ற ஒரு வேலையைச் செய் ‘ என்று சொன்னது உங்கள் நாட்டவன் ஒர் அமெரிக்கன், வில்லியம் ஃபாக்னர். கடந்த நாற்பது வருடங்களாக இது போன்ற ஒரு காரியத்தைத் தான் நான் செய்து வந்திருக்கிறேன். நான் வேலை பார்த்த் இரவு நடன விடுதிகள் என்னென்ன ? அங்கு நிர்வாண நடனம் ஆடியவர்கள் யார் யார் ? நடன விடுதியின் முதலாளிகள் யார் ? என்று நாற்பதாண்டு தகவல் குப்பைகள், புத்தகம் தேர்ந்தெடுக்கும் என் தகுதியைத் தீர்மானிக்க உங்களுக்குத் தேவையா ?

முதலில், என் தகுதியை அளக்கும்படி நான் உங்களைக் கேட்கவே இல்லையே.

உங்கள் இருவருக்கு எதிராக எனக்கு ஏதும் புகார்கள் இல்லை. நீங்கள் என்னிடம் சிநேக பாவத்துடன் தான் இருந்தீர்கள். ஆனால், நீங்கள் வேலை செய்யும் அமைப்பு, செல்வத்தாலும், தன் அதிகார பலத்தாலும் மதிமயங்கிக் கிடக்கும் ஒரு ஃபாஸிஸ் அமைப்பு. மனிதர்களை மதிக்க அந்த அமைப்பு கற்றுக் கொள்வது நல்லது. நேற்று மாலை ஒரு மணி நேரம் உங்களுடன் சிநேக பாவத்துடன் கழிந்ததற்கு நன்றி. உங்களுக்காக நான் வருந்தத் தான் செய்கிறேன்.

உங்கள் உண்மையுள்ள,

வெங்கட் சாமிநாதன்.

திருமதி….

அமெரிக்க தகவல் மையம்.

புது டெல்லி.

(மூலம் ஆங்கிலம்: 14.2.1997)

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்