அமெரிக்க குடியரசுக் கட்சிக்குப் பெண்களுடன் உள்ள பிரச்சினை

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

ரிச்சர்ட் மொரின்


(தமிழில் : ஆசாரகீனன்)

[வாஷிங்டன் போஸ்ட் ஜனவரி 11, 2004 இதழில் Richard Morin எழுதிய கட்டுரையின் மொழி பெயர்ப்பு. மொழி பெயர்ப்பில் ஆங்காங்கே சில குறிப்புகள் தரப்படுகின்றன. தமிழரில் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளைப் பற்றி அதிகம் அறியாத உள் நாட்டு வாசகருக்கு, அறிவார்ந்த தகவல்களைச் சற்று எளிதாகப் புரியும்படி ஆக்கும் முயற்சியே இக் குறிப்புகள்.]

அமெரிக்க வாழ்வின் பல பகுதிகளிலும் ஆண்களும் பெண்களும் சமத்துவத்தை அடைந்திருந்தாலும், குடியரசுக் கட்சி (Republican அல்லது GOP)-யின் முதற்கட்டத் தேர்தல் வாக்காளர்கள் இவர்களை சமமாக நடத்துவதில்லை என்பதென்னவோ உண்மை.

[முதற் கட்டத் தேர்தல் என்று இங்கு குறிப்பிடப்படுவது அமெரிக்காவில் பிரைமரீஸ் (Primaries) என்று சொல்லப்படும் ஒரு தேர்தல் முறை. பொதுத் தேர்தலில் இரு அல்லது பல கட்சியினருடன், தம் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் முதலில் ஒரு உள்கட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும். இந்தத் தேர்தலும் பகிரங்கமாகவே, அனைத்து மக்களுக்கும் தெரியும் வகையில் நடக்கும். அப்படிப் போட்டியிடும் தமது கட்சியினரில் ஒருவரை, அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்துப் பொதுதேர்தலில் தமது கட்சியின் வேட்பாளராக நிற்க அங்கீகாரம் தரும் முறையாகும் இது – மொ.பெ.]

அரசியல் அறிவியலாளர்களான ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் டேவிட் ஸி. கிங் மற்றும் ஹ்யூஸ்டன் பல்கலைக் கழகத்தின் ரிச்சர்ட் இ. மாட்லாண்ட் ஆகியோர் நடத்திய ஆய்வு இது. ஒத்த தகுதியிருந்தாலும், பெண் வேட்பாளர்களை விட ஆண் வேட்பாளர்களே குடியரசுக் கட்சியின் முதற்கட்டத் தேர்தல்களில் அதிகமும் தேர்ந்தெடுக்கப்படுவதாக இந்த ஆய்வில் இவர்கள் காண்கின்றனர். அதே நேரத்தில், அரசியல் சார்பில்லாதவர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி (Democrats)-யினர், தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக ஆண்களை விடப் பெண்கள் தேர்வு செய்யப்படுவதையே பெரிதும் விரும்புகிறார்கள். [குடியரசுக் கட்சியின் முக்கியப் போட்டிக் கட்சி ஜனநாயகக் கட்சியாகும் – மொ.பெ.]

வாக்களிப்பு விருப்பங்களை, பால்(Gender) எவ்விதம் பாதிக்கிறது என்பதைச் சோதிக்க, இந்த ஆய்வாளர்கள் 1990-லிருந்து அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை(House of Representatives அல்லது Congress)க்கு நடந்த, ஏற்கனவே பதவியில் இருப்பவர் போட்டியிடாத இடங்களில் நடந்த தேர்தல்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டினர். இந்தப் பொது இடங்களே, நாடாளுமன்றத்தின் உருவாக்கத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் உந்து சக்தியாகத் திகழ்பவை என சமீபத்தில் வெளிவந்த ‘அமெரிக்க அரசியல் ஆய்வு ‘ என்ற இதழில் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடுகின்றனர்.

[இந்தியா போல அல்லாமல், அமெரிக்கத் தேர்தல்களில் பெரும்பாலும் ஏற்கனவே தொகுதிப் பிரதிநிதியாக இருப்பவர்தான் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவார். இதனாலேயே அமெரிக்க நாடாளுமன்றங்களிலும் சரி, மாநில சட்டமன்றங்களிலும் சரி, பல மக்கள் பிரதிநிதிகள் கிட்டத்தட்ட அவர்களது வாழ்நாள் முழுவதுமே தோற்கடிக்கப் படாமல் பதவியில் இருக்கிறார்கள். உதாரணமாக, சமீபத்தில் தம் நூறாவது வயதில் இறந்த ஸ்ட்ராம் தர்மாண்ட், நாடாளுமன்றப் பேரவையில் 32 வருடங்கள் இருந்த பின் விலகிய ஜெஸ்ஸி ஹெல்ம்ஸ் போன்றார் 30 ஆண்டுகளுக்கும் மேல் பதவியில் இருந்து, இறுதியில் முதுமை காரணமாகத் தாமாக விலகினார்கள். தர்மாண்ட் 90 வயதுக்கு மேல் கூடப் பதவியில் இருந்தார் என்பது கவனிக்கத் தக்கது. எனவே விலகல், இறப்பு அல்லது வேறு ஏதோ காரணங்களால் ஒரு தொகுதியில் இடைவெளி ஏற்பட்டால் அது போட்டியாளருக்குக் கிட்டத் தட்ட சம வாய்ப்பு தருகிறது என்பது இங்கு உட்கிடை – மொ.பெ.]

பின்னர், இவர்கள் [மேற்கண்டபடி] திறந்த சம வாய்ப்பு அளித்த தொகுதிகளுக்கான முதற் கட்டத் தேர்தலில், இரு முக்கிய கட்சிகளைச் சார்ந்த பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட இடங்களில் மட்டும் கவனம் செலுத்தினர். இப்படிப் போட்டியிட்ட பெண்களின் எண்ணிக்கை 243. இத்தகைய போட்டிகளை ஆராய்ந்த கிங்கும் மாட்லாண்டும், முதற் கட்டத் தேர்தல்களில், குடியரசுக் கட்சியை விட ஜனநாயகக் கட்சியிலேயே அதிக அளவில் பெண்கள் கட்சி வேட்பாளராகும் வாய்ப்புக்குப் போட்டியிடுவதாகக் கண்டனர். ஜனநாயகக் கட்சியின் சார்பில் நிற்க 148 பெண்கள் போட்டியிடுகையில், குடியரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளராக 95 பெண்கள் மட்டுமே போட்டியிட்டனர்.

இந்தத் தகவல்களைத் துருவி அலசினால், குடியரசுக் கட்சியின் பெண் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருப்பதும் தெரிய வந்தது. சற்றொப்ப பாதிக்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்கள் ஜனநாயகக் கட்சியின் முதற் கட்டத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கையில், குடியரசுக் கட்சியில் 39 சதவீதம் பெண்களே வென்றனர்.

மக்கள் பிரதிநிதிகள் அவைத் தேர்தலுக்குப் போட்டியிட முயன்ற குடியரசுக் கட்சிப் பெண் வேட்பாளர்கள், ஜனநாயகக் கட்சியின் பெண் வேட்பாளர்களை விட அதிகம் தேர்ந்தெடுக்கப் பட்டது ஒரே ஒரு முறை மட்டுமே – அதுவும் மயிரிழை வித்தியாசத்திலேயே. இது நடந்த 1992-ம் வருடத்தை அரசியல் பண்டிதர்கள், ‘பெண்களின் ஆண்டு ‘ என்று நினைவு கொள்கிறார்கள். இதில், ஜனநாயக் கட்சியின் 57.5 சதவீதப் பெண்களும், குடியரசுக் கட்சியின் 57.9 சதவீதப் பெண்களும் வென்றனர். ( ‘சினம் மிகுந்த வெள்ளை இன ஆண்களின் ஆண்டு ‘ என்று சில அரசியல் வல்லுநர்களால் அடையாளம் காணப்பட்ட 1994-ல் இந் நிலை தலைகீழாக மாறியது: பொதுவான முதன்மைத் தேர்தல்களில், ஜனநாயக் கட்சியில் போட்டியிட்ட 48 சதவீதப் பெண்களும், குடியரசுக் கட்சியில் போட்டியிட்ட 26 சதவீதப் பெண்கள் மட்டுமே வெல்ல முடிந்தது.)

இது கவனத்தை ஈர்ப்பதுதான். ஆனால், இது விளக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே. குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், தேர்தலில் போட்டியிடும் பெண்களைக் கண்டதும் உற்சாகம் இழப்பது ஏன் என்பதற்கான காரணம் இங்கு காணப்படவில்லை. இதை விளக்குவதற்குத் தேவையான தகவல்களைச் சேகரிப்பதுதான் மிகக் கடினமாக இருந்தது. ஆனால் கிங் மற்றும் மாட்லாண்டிற்கு ஒரு புதையலே கிட்டியது – அதுதான் குடியரசுக் கட்சியின் கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘பொதுமக்கள் கருத்துகளுக்கான வழி முறைகள் ‘ என்னும் அமைப்பு 1993-ல் குடியரசுக் கட்சிக்குப் பெண்களைத் தேர்ந்தெடுப்பது பற்றி நடத்திய, அதிகம் வெளியே தெரிய வராத, ஒரு தேசிய கருத்துக் கணிப்பு (national survey).

கணித முறைகளின் படி ஏதேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, வாக்களிக்கும் வயதுள்ள 820 பேரிடம் தொலைபேசியில் நடத்தப்பட்ட இக் கருத்துக் கணிப்பில் ஒரு புதுமையான பரிசோதனையும் அடங்கும். பங்கெடுப்பவரிடம் கற்பனையான ஒரு குடியரசுக் கட்சி வேட்பாளரைப் பற்றி விவரங்கள் சொல்லப்பட்டன. இந்த பிரதிநிதி அவைக்கான வேட்பாளர் வெற்றி கண்ட ஒரு வணிக நிறுவனர், இதுவரை எந்தப் பொது அரசு பதவிக்கான தேர்தலிலும் போட்டியிடாதவர், தற்போதைய ‘மக்கள் பிரதிநிதி அவையினர் சுத்த உதவாக்கரைக் கூட்டம் ‘ என்று கருதுவதால், தானே தேர்தலில் போட்டியிட முன் வந்துள்ளார் என்றும் சொல்லப்பட்டது. தேர்தலில் வெற்றி கண்டால், ‘அரசாங்கச் செலவுகள் மற்றும் விரயத்தைக் குறைப்பதே ‘ இவரது தலையாய பணியாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.

வாக்காளர்களின் பால்-சார்பைப் பரிசோதிக்க, இந்த ஆய்வாளர்கள் ஒன்று செய்தார்கள்: கருத்துக் கணிப்பில் பங்கு பெற்றவர்களில் பாதி பேர்களிடம் வேட்பாளர் ஒரு பெண் என்றும், மீதிப் பாதியினரிடம் வேட்பாளர் ஓர் ஆண் என்றும் சொல்லப்பட்டது. மற்றபடி, வேட்பாளரைப் பற்றி ஒரே மாதிரியான விவரங்களே சொல்லப்பட்டன.

குடியரசுக் கட்சியினரைப் பொறுத்தவரை, வேட்பாளர் ஆணா பெண்ணா என்பது மிக முக்கியமானது என்பதை இதன் முடிவு தெளிவுபடுத்தியது. இத்தகைய வேட்பாளர் ஆணாக இருக்கும் பட்சத்தில் அவரைத் தேர்ந்தெடுக்க, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களும் (57 சதவீதம்) , அதை விடச் சற்றுக் குறைந்த அளவில் பெண்களும் (53 சதவீதம்) விருப்பம் தெரிவித்தனர். வேட்பாளர் பெண் என்னும் பட்சத்தில் இத்தகைய விருப்பம், ஆண் வாக்காளர்களிடையே 14 சதவீதமும், பெண் வாக்காளர்களிடையே 11 சதவீதமும் குறைந்தது.

ஜனநாயகக் கட்சியினரிடமும், கட்சி சார்பற்றவர்களிடமும் இதற்கு நேர் எதிரான தேர்வு நிலை காணப்படுகிறது. இவர்களிடையே குடியரசுக் கட்சியின் வேட்பாளராக விரும்புபவர் ஒரு பெண் எனத் தெரிந்தால் அவருக்கு ஆதரவு 5 முதல் 8 சதவீதம் அதிகரித்தது எனக் கருத்துக் கணிப்பு காட்டுகிறது. ஜனநாயகக் கட்சியின் வாக்காளரில் பெரும்பாலானோர், ஆணோ பெண்ணோ யாராயினும், ஒத்த தகுதி இருந்தால் ஓர் ஆண் வேட்பாளரை விட, பெண் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

வேட்பாளர் நம்பக் கூடியவரா, அவரது ஒட்டு மொத்தத் தகுதி போதுமானதா, வாக்காளரின் விருப்புகளோடு வேட்பாளருக்கு இணக்கம் உள்ளதா என்பன போன்ற குணங்கள் குறித்து, பெண் வேட்பாளர்களைக் குறைத்து மதிப்பிடும் போக்கு குடியரசுக் கட்சி வாக்காளர்கள் பலரிடமும் தப்பாமல் காணப்படுகிறது. இதற்கு நேர்மாறான நிலை ஜனநாயகக் கட்சி மற்றும் கட்சி சார்பற்றவர்களிடம் இருக்கிறது.

குடியரசுக் கட்சியின் தீவிர வாக்காளர்கள், பெண் வேட்பாளரின் தலைமை தாங்கும் ஆற்றல் மற்றும் பழமைவாதப் பிடிப்பு (conservatism) ஆகியவற்றைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதாக ஆய்வாளர்கள் கண்டனர். ஒரு வேட்பாளர் அசலான பழமைவாத ஆதரவாளரா என்று எடை போடும்போது, பெண் வேட்பாளரை விட ஆண்களுக்கே 14 சதவீதம் அதிக ஆதரவு கிடைத்தது.

‘பிரமாதம்தான், இருந்தாலும் 1993-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பாயிற்றே, வயசாகிப் போச்சே இதற்கு ? மக்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கண்டு பிடிப்புகள் பழைய கதையாகவில்லையா ‘, என்று ஒரு குறுக்கு புத்திக்காரர் கேட்கலாம்.

ஒருக்கால் அப்படி இருக்கலாம் – ஆனால் அனேகமாக இது மாறியிராது என்கிறார் ஹார்வர்ட் பல்கலையின் அரசியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான கிங். அண்மைக் காலத் தகவல்களுடன் கூட இந்த முடிவுகள் ஒத்துச் செல்கின்றன என்கிறார் அவர்.

‘1993-ல் நாம் கண்ட உலகுக்கும் இன்றைய உலகுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சொன்னால் அது மிகையாகாது ‘, என்றும் சொல்கிறார் கிங்.

[தற்போது அமெரிக்கக் குடியரசுக் கட்சி நாடாளுமன்றங்களில் மேலவையான ஸெனட், கீழவையான மக்கள் பிரதிநிதி அவை மற்றும் நாடாளுனர் பதவியையும் (Presidency) தன் கையில் வைத்திருக்கிறது என்பதை மேல் கண்ட விவரங்களோடு இணைத்து நோக்கினால், பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதில் அமெரிக்க அரசியல் அமைப்பின் இயல்பு எத்தகையதாக இருக்கும் என்பது பற்றிய ஓர் ஊகம் நமக்குக் கிட்டும். – மொ.பெ.]

(கட்டுரையாளரின் மின் அஞ்சல் : morinr@washpost.com)

aacharakeen@yahoo.com

Series Navigation

ரிச்சர்ட் மொரின்

ரிச்சர்ட் மொரின்