அப்துல் கஃபார் கான் : அறியப்படாத அமைதிப் புறா

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

அமிதாப் பால் (தமிழில் : கல்பனா சோழன்)


இந்தியாவிற்கு காந்தி போல, பாகிஸ்தானுக்கு அப்துல் கஃபார் கான். அமைதியை விரும்பிய இந்த இருவரின் நாடுகள் இன்று இரு துருவங்கள் போல எப்போதும் விரோதம் பாராட்டிக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டம்தான். காந்தியை உலகத்துக்கு தெரிந்த அளவுக்கு அப்துல் கஃபார் கானைத் தெரியாது.

எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட அப்துல் கஃபார் கான் வாழ்நாள் முழுதும் பாகிஸ்தானில் சமாதானத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் பாடுபட்ட பெரும் மனிதர். காந்தியை மகாத்மா என்று அழைத்ததால் இவரை தலைவர் அல்லது மன்னர் என்று பொருள்படும்படி பாட்ஷா என்று மக்கள் அன்புடன் அழைத்தார்கள்.

முப்பது ஆண்டுகள் சிறையில் வாழ்ந்த இவர், இரண்டு முறை கொலை முயற்சிகளில் இருந்து தப்பிப் பிழைத்தவர். 1988ஆம் ஆண்டு, தனது 98 வயதில், மறையும் காலம் வரை சமூக சீர்திருத்தத்திற்காகவும், அமைதி வழியை வலியுறுத்தவும் அயராது உழைத்தவர்.

‘அணுகுண்டு அது, இது என்று அடிபடுகிற இந்த காலகட்டத்தில் இன்றைய குழந்தைகளுக்கும் உலகிற்கும் நான் விடுக்கும் செய்தி இதுதான் : அமைதி வழி நடந்தால்தான் அழிவில் இருந்து தப்பிக்க முடியும். இல்லா விட்டால் இந்த உலகம் பாழாய்ப் போகும் ‘ என்று 1985ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் அப்துல் கஃபார் கான் கூறி இருந்தார்.

‘வன்முறையை விட அமைதிவழி நடக்கத்தான் நிறைய துணிச்சல் வேண்டும். வன்முறை வெறுப்பை விதைக்கும். சமாதானமே அன்பை வளர்க்கும். இதுதான் என் தாத்தா எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம் ‘ என்கிறார் அஸ்ஃபான்டியார் வாலிகான்.

எல்லை காந்தி, சிறு வயதில் பஷ்துன் சிறுவர்களுக்கான பள்ளியில்தான் படித்தார். பிறகு, சமூக சீர்திருத்தவாதியான ஹாஜி அப்துல் வாஹித் சாஹிப்பினால் கவரப்பட்டார். விரைவிலேயே இந்தியாவில் இருந்த முற்போக்கு முஸ்லீம் தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். அவர்கள், பஷ்துன்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக உழைக்கும்படி அப்துல் கஃபார் கானை ஊக்கமூட்டினார்கள். ஆனால் தனது தேடலுக்கான விடை அவருக்கு இன்னும் கிடைக்காமல் இருந்தது. 1914ஆம் ஆண்டு பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அந்த உண்ணாவிரதம் சமூக சீர்திருத்தத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வது என்ற அவரது தீர்மானத்தை பலப்படுத்தியது. இது நடந்த சில நாட்களிலேயே காந்தி பற்றியும் அவரது இயக்கம் பற்றியும் கேள்விப்பட்டு இன்னும் அதிக ஊக்கம் பெற்றார்.

`கடவுளின் ஊழியர்கள் ‘ என்று பொருள்படும் குடாய் கிட்மட்கார் என்ற அமைதி இயக்கத்தை 1929ல் ஆரம்பித்தார் அப்துல் கஃபார் கான். ஒரு லட்சம் பஷ்துன்கள் கொண்ட இந்த இயக்கம், சமூக சீர்திருத்தத்திற்கும், அப்போது பிளவுபடாமல் இருந்த இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும் பாடுபட உறுதி பூண்டது. சமுதாய மாற்றம், மத நல்லிணக்கம், நியாயமான நில பங்கீடு போன்று அப்துல் கபார் கான் முன் வைத்த பல கொள்கைகள் சில மதத் தலைவர்களையும், நில சுவான்தார்களையும் அச்சுறுத்துவதாக அமைந்தது. சளைக்காமல் தினமும் குறைந்தது 25 மைல் பயணம் செய்து, கிராமம் கிராமமாகப் போய், சமூக சீர்திருத்தம் பற்றி பேசினார். அவரது இயக்க உறுப்பினர்கள் அமைதிவழியின் வல்லமையை வலியுறுத்தி நாடகம் போட்டார்கள்.

அப்துல் கஃபார் கானின் பணியைத் தொடர்வதாகக் கூறும் ஆவாமி (மக்களின்) நேஷனல் பார்ட்டியின் மத்திய தலைவரான அஸ்பான்டியார், ‘சமீபத்தில் ஒரு குக்கிராமத்துக்குப் போய் இருந்தேன். அந்த கிராமத்துக்குப் போகிற முதல் வெளியாள் நான் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்புறம் பார்த்தால் 1942ஆம் ஆண்டிலேயே பாட்ஷா கான் அங்கே வந்திருந்தார் என்று தெரிய வந்தது. அந்தக் காலத்தில் இருந்த நிலைமையை யோசித்துப் பாருங்கள். ஒரு பத்து, பன்னிரண்டு மணி நேரம் நடந்துதான் அவர் அங்கே போய் சேர்ந்திருக்க முடியும் ‘ என்று பிரமிக்கிறார்.

பிரிட்டிஷார், அப்துல் கஃபார் கானையும் அவரது இயக்கத்தினரையும் மிகக் கடுமையாக நடத்தினார்கள். இந்திய அகிம்சைவாதிகளை நடத்தியது போல அல்லாமல் மிகக் கொடூரமாக நடத்தினார்கள். ‘கொடுமைக்காரர்களை கொடுமையாகத்தான் நடத்த வேண்டும் ‘ என்று 1930 ஆம் ஆண்டு பஷ்துன்களைப் பற்றி பிரிட்டிஷார் வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

‘பதான் (பஷ்துனுக்கு இன்னொரு பெயர்) அமைதி வழி நடப்பதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. எல்லாம் வேஷம். கொஞ்சம் சுரண்டிப் பார்த்தால் குள்ள நரித்தனமும், கொடூரமும் மறைந்திருப்பது தெரியும் ‘ என்றுதான் பிரிட்டிஷார் நினைத்தார்கள் என்கிறார் Non Violent Soldier of Islam : Badshah Khan, A Man to Match His Mountains (Nilgiris Press, 1999) புத்தகத்தை எழுதிய ஏக்நாத் ஈஸ்வரன். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற விரும்பிய கிட்மட்கார் மீது கடும் கோபத்தில் இருந்தது பிரிட்டிஷ் அரசு. கிட்மட்கார் உறுப்பினர்களை 1930களிலும் 1940களிலும் கொடுமைப்படுத்தி, அவர்களது வீடுகளையும் வயல்களையும் நாசமாக்கி, படுகொலை செய்தது. அப்துல் கஃபார் கானும் இந்த கால கட்டத்தில் 15 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். பல நேரம் தனிமைச் சிறை வேறு. ஆனால் இந்த பஷ்துன்கள் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளான போதும் அமைதி வழியை கைவிடவில்லை.

பெஷாவரில் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடந்த படுமோசமான தாக்குதலில், பிரிட்டிஷார் குறைந்தது 200 கிட்மட்கார் உறுப்பினர்களைக் கொன்று குவித்தனர். அமைதிப் போராட்டம் பற்றி ஆராய்ந்து எழுதிய ஜீன் ஷார்ப், அந்தக் காட்சியை விளக்குகிறார் : முன்வரிசையில் இருந்தவர்கள் குண்டு பாய்ந்து சரிந்து விழுகிறார்கள். பின்னால் நிற்பவர்கள் வெற்று மார்புடன் முன்னால் வந்து நின்று துப்பாக்கி சூடுக்கு தயாராக நிற்கிறார்கள். சிலர் மார்பில் 21 குண்டுகள் துளைத்தெடுக்கிற அளவுக்கு தாக்குதல் நடக்கிறது. கண்முன் சரிந்து விழுவதைக் கண்டும் அடுத்து வரிசையில் வந்து நிற்கிறார்களே தவிர யாரும் பயந்து ஓடவில்லை. அரசு சார்பான லாகூரைச் சேர்ந்த ஆங்கிலோ இந்திய பத்திரிகையே, ‘ மக்கள் ஒருவர் பின் ஒருவராக துப்பாக்கி சூட்டின்போது வரிசையாக வந்து நின்றார்கள். சரிந்து விழுந்தவர்களை இழுத்துப் போட்ட பின் அடுத்து வரிசையில் வந்து நிற்கிறார்கள். இப்படி பதினோரு மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடந்தது. சடலங்கள் குவிந்த பிறகு அரசாங்கத்தின் ஆம்புலன்ஸ் வண்டிகள் வந்து அவற்றை அள்ளிச் சென்றன ‘ என்று தான் எழுதியது.

ஆயுதம் ஏந்தாமல் எதிர்ப்பவர்களை தொடர்ந்து சுட்டுத் தள்ள இந்திய வீரர்களில் ஒரு படையினர் மறுத்த போதுதான் அந்தப் படுகொலை நின்றது. ஆணையை மீறியதற்காக அந்த வீரர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.

இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்திய அப்துல் கஃபார் கான், பாகிஸ்தான் என்றொரு தனி நாடு உருவாவதைக் கடுமையாக எதிர்த்தார். பாகிஸ்தான் போன்ற ஒரு சிறிய, மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பாகிஸ்தானை விட, பெரிய, அதிகாரபரவல் மிக்க ஒன்றிணைந்த இந்தியாவில், பஷ்துன்களின் உரிமைகள் அதிகம் மதிக்கப்படும் என்று அவர் நினைத்தார். பாகிஸ்தான் என்றொரு தனி நாடு உருவான பிறகு பஷ்துன்களுக்கென பஷ்துனிஸ்தான் என்ற தனி பிராந்தியம் வேண்டும் என்று அவர் கோர ஆரம்பித்தார். அது பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியா அல்லது தனி நாடா என்பதைப் பற்றி வேண்டுமென்றே திட்டவட்டமாக எந்த் வரையரையும் செய்யாமல் இருந்தார். இதெல்லாம் பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை தேச விரோத செயல்களில் ஈடுபடுபவராக குற்றம் சாட்ட வைத்தது. கானின் ஆதரவாளர்களை சிறையில் அடைத்தார்கள். சிலர் கொல்லப்பட்டார்கள். பாகிஸ்தான் அரசு, கிட்மட்கார் இயக்கத்தைத் தடை செய்து, அதன் தலைமையகத்தை நிர்மூலமாக்கியது. இருந்தும் அப்துல் கஃபார் கான் தன் பணியைத் தொடர்ந்தார்.

‘கிட்மட்கார் இயக்கம் சுய அலசலையும், சுய சீர்திருத்தத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாமும் புக்துன்வாலியும்தான் அதன் அஸ்திவாரம். இங்கே புதிய பார்வையில் அகிம்சை என்ற சித்தாந்தக் கொள்கை இஸ்லாம் மற்றும் புக்துன்வாலியுடன் இரண்டற கலந்து விடுகிறது. ‘ என்கிறார் The Pathan Unarmed: Opposition and Memory in the North West Frontier (அமெரிகன் ரிசர்ட் பிரஸ் 2000ஆம் ஆண்டு வெளியிட்ட) புத்தகத்தை எழுதிய முகுலிகா பானர்ஜி.

‘இந்த இயக்கம் முதலில் மத அடிப்படையிலானது. தனது சமூக, பொருளாதார சீர்திருத்தத்தையும், அரசியல் சுதந்திரத்தையும் முக்கிய நோக்கமாகக் கொண்டது. இந்திய தேசிய காங்கிரஸை விட முழுமையாக அகிம்சையை தழுவியது. காரணம், குடாய் கிட்மட்கார் அகிம்சையை ஒரு கொள்கையாக அல்லாமல், வாழும் வழிமுறையாக கொண்டது. ‘ என்று (பிரின்ஸ்டன் யுனிவர்சிடி ப்ரெஸ் 1988 ஆம் ஆண்டு வெளியிட்ட) Conquest of Violence : The Gandhian Philosophy of Conflict புத்தகத்தில் எழுதுகிறார் ழான் பான்டுரன்ட்.

அப்துல் கஃபார் கான் இஸ்லாமும் அகிம்சையும் ஒன்றிணைந்தது என்று வலியுறுத்தினார். ‘என்னைப் போன்ற ஒரு முஸ்லீம் அல்லது பதான் அமைதி வழியைக் கடைபிடிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை ‘ என்று அப்துல் கஃபார் கான் சொன்னதாக ஈஸ்வரன் எழுதிய புத்தகம் கூறுகிறது. ‘ இது ஒன்றும் புதிதல்ல. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே மெக்காவில் பின்பற்றியதுதான். ‘ என்கிறார். அவரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்றால் அன்பு, சேவை, நம்பிக்கை. இஸ்லாமின் அமைதி வழியை அறியாத பஞ்சாபி முஸ்லீம் ஒருவருடன் தான் பேசியதைப் பற்றி காந்தியிடம் ஒரு முறை சொன்னார் கான்: ‘ குரான் அமைதிவழியை எந்த அளவு வலியுறுத்துகிறது என்று காட்டுவதற்காக குரானில் இருந்து ஒரு பகுதியை சுட்டிக் காட்டினேன். இஸ்லாமிய வரலாற்றின் பெரும் தலைவர்கள் எல்லாம் எப்படி அடக்கம், அமைதியின் உருவமாக இருந்திருக்கிறார்கள் என்றும் சுட்டிக் காட்டினேன். அவரால் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் போயிற்று ‘.

சமாதான வாழ்வே இஸ்லாம் அடிப்படை என்று விளக்கினார் அப்துல் கஃபார் கான்.

அவரது மருமகளும் ஆவாமி நேஷனல் பார்ட்டியின் மாகாண தலைவருமான பேகம் நசீம் வாலி கான், ‘பாட்ஷா கான் இஸ்லாம் யாரையும் சொல்லால், செய்கையால் காயப்படுத்தக் கூடாது என்ற ஒரே ஒரு கொள்கையையே முன்வைக்கிறது என்று எல்லோரிடமும் சொன்னார். திருடக் கூடாது. பொய் சொல்லக் கூடாது. துன்புறுத்தக் கூடாது. இதுவே உண்மையான இஸ்லாம் ‘ என்கிறார்.

இந்த இயக்கம் எந்த பாகுபாடும் இல்லாதது. பெஷாவரில், இந்துக்களும், சீக்கியர்களும் தாக்கப்பட்ட போது, பத்தாயிரம் கிட்மட்கார் உறுப்பினர்கள்தான் அவர்களது உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள உதவினார்கள். 1946, 1847 ஆம் ஆண்டுகளில் பீஹாரில் கலவரம் வெடித்தபோது, அங்கே அமைதியை நிலை நாட்ட காந்தியுடன் அப்துல் கஃபார் கானும் போயிருந்தார்.

‘இயக்கத்தின் அடிப்படை இஸ்லாமாக இருந்தாலும் அதன் கொள்கைகளில் ஒன்று இந்து முஸ்லீம் ஒற்றுமையை வளர்ப்பது ‘ என்கிறார் பான்டுரன்ட்.

1990களின் ஆரம்பத்தில் யுனிவர்சிடி காலேஸ் லண்டன் விரிவுரையாளரான பானர்ஜி, அப்துல் கஃபார் கானின் குடும்பத்தினரோடு பல மாதங்கள் தங்கி இருந்தார். இன்னும் உயிரோடு இருந்த எழுபது கிட்மட்கார் உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார். ஆரம்பத்தில் அப்துல் கஃபார் கானால் கவரப்பட்டு மக்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தாலும், போகப் போக ஒரு பெரிய இலக்கை அடையும் உற்சாகமே மிகுந்திருந்தது. அப்துல் கஃபார் கானுடன் இருந்த பிணைப்பை விட, அமைதி வழியுடனான பிணைப்பு அதிகம். அப்துல் கஃபார் கான் சொன்னால் வன்முறை வழியில் நடப்பார்களா என்று அந்த இயக்கத்தினரிடம் 1938 ஆம் ஆண்டு காந்தி கேட்ட போது அவர்கள் ‘மாட்டோம் ‘ என்று உறுதியாக பதில் சொன்னார்கள்.

நான்வயலென்ஸ் இண்டர்நேஷனல் அமைப்பின் இயக்குனரான பாலஸ்தீனிய அமெரிக்கர் முபாரக் ஆவாத், அப்துல் கஃபார் கானால் கவரப்பட்டு, அவரது உரைகளையும், படைப்புகளையும் அரபிய மொழியில் மொழி பெயர்த்துள்ளார். ‘அவரைப் பற்றி அறிந்து கொண்டதில், அவரது இயக்கத்தினர் சிலரை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் இஸ்லாமையும் அமைதி வழியையும் பின்பற்றினார். இது பலவீனர்களுக்கான வழிமுறை மட்டும் அல்ல என்று வாழ்ந்து காட்டினார். இத்தனைக்கும் வீரர்குல வழி வந்தவர் அவர். ‘ என்கிறார்.

‘அப்துல் கஃபார் கான் ஏராளமான முஸ்லீம்களின் அறிவுக் கண்களைத் திறந்தவர் ‘ என்கிறார் ஆவாத். ‘அவர் இஸ்லாம் வழி அமைதிப் பாதையில் நடந்து காட்டினார். உறுதியான மனிதர்கூட அமைதி வழி நடக்க முடியும் என்று காட்டினார் ‘ என்கிறார் ஆவாத்.

பெண்கள் சமத்துவம், பெண் கல்வியை வலியுறுத்தியவர் அவர். ‘புனித குரானில், ஆண்களுக்கு நிகரான பங்கு உங்களுக்கும் இருக்கிறது. அல்லாவின் ஆணையை ஆண்கள் புறக்கணித்ததால்தான் இன்று நீங்கள் ஒடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நாம் வெற்றி பெற்றால் உங்கள் உரிமைகள் உங்களுக்கு கிடைக்கும் என்று உறுதி அளிக்கிறேன் ‘ என்று பெண்களிடம் கூறியவர் அவர். ஆரம்பத்தில் இருந்தே பெண்களின் பங்கை உற்சாகப்படுத்திய இயக்கம் அது. ‘பதான் பெண்கள், அமைதி வழி பிரசாரங்களின்போது போலீசாரை நேருக்கு நேர் சந்திப்பார்கள்; குரானின் பிரதிகளை கையில் ஏந்தி வரிசையாக நிர்பார்கள் ‘ என்று எழுதுகிறார் பான்ட்ரன்ட்.

காந்தியைப் போலவே அப்துல் கஃபார் கானும் எளிய வாழ்வு வாழ்ந்தார். அரசியல் ஈடுபாடு காரணமாவும், தொடர்ச்சியான சிறைவாசத்தினாலும் குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்தார். ‘வாழ்வின் சுக போகங்களைத் தனக்கு முதலில் மறுத்துக் கொண்டு பிறகு நீங்களும் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பியவர் அவர் ‘ என்கிறார் அஸ்பான்டியார். 1950களில் அப்துல் கஃபார் கானை சந்தித்த இந்திய பத்திரிகையாளர் ஒருவர் sawaal.com-ல் சமீபத்தில் எழுதிய கட்டுரையில், ‘ அவரது உடைமைகள் என்று பார்த்தால் ஒரு சில பவுண்டுகள்கூட இருக்காது. ஒரு பெட்ஷீட், ஒரு டவல், உடுத்தி இருந்ததைத் தவிர இன்னும் ஒரு சல்வார் கமீஸ் மட்டுமே அவரது சொத்து ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

கானும் காந்தியும் இணைந்து செயல்பட்ட காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்காக 1985ஆம் ஆண்டு இந்தியா சென்றிருந்த போது, ட்யூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாட்டி கன்னா, அப்துல் கஃபார் கானை சந்தித்தார். இந்திய பிரிவினை பற்றி தான் எடுத்த Division of Hearts என்ற டாகுமெண்டரிக்காக 1987ஆம் ஆண்டு அப்துல் கஃபார் கானை பேட்டி எடுத்த அனுபவத்தை உணர்வு பூரவமாக விளக்குகிறார் சாட்டி கன்னா.

சரி. ஏன் அப்துல் கஃபார் கான் இப்படி யாருக்கும் அதிகம் தெரியாதவராக இருக்கிறார் ? பாகிஸ்தானிய அதிகாரிகளுடனான கருத்து வேறுபாடுகளால் அவரது பெயர் பாகிஸ்தானின் வரலாற்றில் இடம் பெறவில்லை. அவரது எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்கு உள்ளேயே அவரைப் பற்றி அதிகம் தெரியாது. ‘ என்னுடைய பாகிஸ்தானிய நண்பர்களில் சிலருக்கு அவரைப் பற்றி தெரியவே தெரியாது. இந்த மாமனிதரைப் பற்றியும் அவரது இயக்கம் பற்றியும் எதுவுமே பாகிஸ்தானிய சரித்திரத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்தப் பகுதியில் உள்ள அடுத்த தலைமுறைக்கேகூட அவரைப் பற்றி தெரியாத நிலை இன்று ‘ என்கிறார் பானர்ஜி.

அவரைப் பற்றி ஏதாவது சொல்வதானால், பஷ்துன் தேசியவாதி என்றுதான் சொல்கிறார்களே தவிர அமைதி வழி பற்றியோ சமூக சீர்திருத்தம் பற்றியோ எதுவும் சொல்வதில்லை. இந்தியாவிலும் அப்துல் கஃபார் கானுக்கு உரிய அங்கீகாரம் இல்லை. பெரும்பாலும் காந்தியுடன் இணைத்தே சித்தரிக்கப்படுகிறார். அதனால்தான் எல்லைகாந்தி என்ற அடைமொழி.

உண்மை என்னவென்றால் அப்துல் கஃபார் கான் காந்தியை சந்திப்பதற்கு முன்பே அமைதி வழியையும் சமூக சீர்திருத்தம் பற்றியும் வலியுறுத்தி, செயல்பட ஆரம்பித்தவர். அவர் அமைதிவழியை குரானிலும் அல்லாவிலும் கண்டவர். ஆனால் காந்தியின் அகிம்சை கொள்கைகள் பகவத் கீதை, பைபிள், டால்ஸ்டாயின் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டவை.

அப்துல் கஃபார் கான் இப்படி அறியப்படாமல் இருப்பதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன. காந்தி நிறைய எழுதினார். ஆனால் கானின் சுயசரிதை தவிர அவரைப் பற்றியும் அவருடைய பணிகள் பற்றியும் பேச அதிகம் இல்லை. அத்தோடு அவர் காந்தியைப் போல மேலை நாடுகளுக்கு போகாமல் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தாலும் வாழ்க்கையை கழிக்க முடிவெடுத்தார். ஆனால் இதெல்லாம் நாம் அவருடைய பணியையும் பாதையையும், அவரது சக பஷ்துன்களையும் – இந்த சமூகத்திற்கு தலிபான்காரர்களின் கைங்கர்யத்தால் ஒரு மோசமான பெயர் ஏற்பட்டுள்ளது – அங்கீகரிக்க விடாமல் தடுக்கக் கூடாது. அமைதிவழி, மத சகிப்புத்தன்மை, பெண்கள் உரிமை, சமூக நீதி போன்ற இலட்சியங்களை பரப்புவதைத் தவிர அப்துல் கஃபார் கான் இன்னும் எவ்வளவோ மோசமான செயல்களைச் செய்திருக்க முடியும். சகிப்புத்தன்மை அற்றது என்று சிலர் பழிக்கிற அதே மதத்தில் இருந்துதான் அவர் தன் நற்செயல்களுக்கான உத்வேகம் பெற்றார். இந்திய, பாகிஸ்தானிய தலைவர்களுக்கு மட்டுமல்ல, அவர் இன்னும் எத்தனையோ விஷயங்களில் வழிகாட்ட வல்லவர். இத்தனை செய்த அவர் இப்படி அறியப்படாமல் இருக்க எந்த நியாயமும் இல்லை.

Amitabh Pal is Editor of the Progressive Media Project, an affiliate of The Progressive magazine.

Series Navigation

author

அமிதாப் பால் (தமிழில் : கல்பனா சோழன்)

அமிதாப் பால் (தமிழில் : கல்பனா சோழன்)

Similar Posts