அப்துல்கலாம் இந்தியாவின் குடியரசுத்தலைவராக ஆவது சிறப்பானது

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

சின்னக்கருப்பன்


ரஃபீக் ஜக்கரியா என்ற காங்கிரஸ் தலைவர், இஸ்லாமிய படிப்பாளி . காங்கிரஸ்காரர். முக்கியமான அறிவு ஜீவி. ஆஸியன் ஏஜ் பத்திரிக்கையில் அப்துல் கலாம் முஸ்லீமே அல்ல என்று கட்டுரை எழுதியிருக்கிறார். ( இவரது புதல்வர் பரீத் ஜக்கரியா, அமெரிக்க பத்திரிக்கையான நியூஸ்வீக் என்ற பத்திரிக்கையில் ஆசிரியராக இருக்கிறார்.)

பிரபுல் பித்வாய் அப்துல்கலாமை ஆர்எஸ்எஸின் போஸ்டர்பாய் முஸ்லீம் என்று அழைத்து பாகிஸ்தானிய பத்திரிக்கையான தி நியூஸில் கட்டுரை எழுதியிருக்கிறார். (பாகிஸ்தானில் போஸ்டர்பாயாகக் கூட ஒரு இந்துவை முன்னிறுத்த முடியவில்லை என்று அவர் எழுதவில்லை. எழுத மாட்டார். ஏன் என்பது பிறகொரு காலத்தில்)

இளமுருகு திண்ணையில் மூன்று குறிப்பிட்ட விஷயங்களை எடுத்து அவை எப்படி மோசடியானவை என்று எழுதியிருக்கிறார்.

இந்திய அரசியலில் எந்த ஒரு முஸ்லீம் பெரும் பதவிக்கு வந்தாலும், அவர்கள் கம்யூனிஸ்ட்களாலும், தீவிரவாத முஸ்லீம்களாலும் ‘சர்காரி முஸ்லீம் ‘ என்று கேவலப்படுத்தப்படுவதும், அவர்கள் முஸ்லீம்களின் பிரதிநிதி அல்ல என்று கட்டுரை எழுதப்படுவதும் தொடர்ந்து நடந்து வந்துகொண்டே இருக்கிறது. இடதுசாரிகள் நிரம்பி வழியும் இந்திய ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இது போன்ற அபத்தமான கட்டுரைகளுக்கு நிறையவும் இடம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் முஸ்லீம்கள் என்றால் ஒற்றைப் பரிமாணத்தில் இருப்பவர்கள் அல்ல என்று சொல்லிக் கொள்வதும், மறுபுறம் மு மு இஸ்மாயில், அப்துல் கலாம் போன்ற, இவர்களே கட்டுவித்த முஸ்லீம் stereotype-ஐ உடைக்கும் முஸ்லீம்களை முஸ்லீம்களே அல்ல என்று இழிவாகப் பேசுவதும் இவர்களின் போக்கு. (ஒருவரை மற்றொருவர் முஸ்லீம் அல்ல என்றோ, இந்து அல்ல என்றோ, கிரிஸ்துவர் அல்ல என்றோ கூற முடியுமா ? கூறி அவர்களை பிரஷ்டம் செய்ய உரிமை இருக்கிறதா ? அது சட்டப்பூர்வமான ஒன்றா ?)

மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. ஏனெனில் பதில்களால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. சொல்லப்போனால், எழுதிய அனைவருக்கும் அதன் பதில்களும் தெரியும்.

இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் ஓட்டுவங்கிகளல்ல, அவர்களது நம்பிக்கைகளும் கட்சி சார்புகளும், தனி மனித விருப்பு வெறுப்புகளும் எல்லா இந்தியர்களையும் போலவே வெகுவாக வேறுபட்டவை. அவர்களை ஒரு சட்டத்துக்குள் அடைத்து, ஒரு ஸ்டாரியோடைப் செய்வது தவறானது என்று வெகுகாலமாக எழுதி வந்த ரபீக் ஜக்கரியாவுக்கு, அப்துல்கலாம் போல கோடிக்கணக்கில் முஸ்லீம்கள், பல்வேறு விருப்பு வெறுப்புகளோடு, தனிமனிதத்துவத்தோடு இந்தியாவில் இருக்கிறார்கள் எனத் தெரியாதா ? தெரியும்.

கோத்ராவில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தை பூசி மொழுக இது போன்றதொரு டோக்கனிஸ வேலையைச் செய்வதாக இளமுருகு உட்பட பலரும் எழுதி பேசி வருகிறார்கள். லட்சுமி செகால் அதனையே தனது முக்கியமான விஷயமாக பேசியிருக்கிறார்.

***

கம்யூனிஸ்ட்களின் அடிப்படைக்கொள்கை முரண்பாடுகளை தீவிரப்படுத்துவது. (sharpening the contradictions). அதன் மூலம் அவர்கள் செய்ய விரும்புவது இந்திய அரசியலமைப்பில் இருக்கும் முரண்பாடுகளை தீவிரப்படுத்தி அதன் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது. இந்திய அரசியலமைப்பில் இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து, அதிகாரப்பகிர்வு சமச்சீர் அளவில் நடந்து முரண்பாடுகள் குறைவதில் கம்யூனிஸ மற்றும் இடதுசாரிகளுக்கு அக்கறையும் இல்லை, அது வேண்டவும் வேண்டாம். இதனாலேயே கண்மூடித்தனமான காங்கிரஸ் எதிர்ப்பை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு காலத்தில் கொண்டிருந்தன. பிறகு ரஷ்யாவின் கண்ணசைப்பில் மாறிப்போனது. சீன ஆதரவு கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிளந்ததும் வரலாறு. அது அவ்வப்போது அவர்களது மாஸ்கோ மற்றும் பீஜிங் மேலதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவ்வப்போது மாறும்.

ஆனால் இந்தியாவின் அரசியலமைப்பு முரண்பாடுகளைக் களைவதற்கென்றே ஏற்பட்டது. இந்திய அரசியலமைப்பு உண்மையிலேயே வெற்றிகரமாக எத்தனையோ வரலாற்றுச் சுமைகளைக் களைந்து வந்திருக்கிறது. எத்தனை எத்தனையோ மனச்சாய்வுகளை வெற்றிகரமாக தாண்டிவந்திருக்கிறது.

முஸ்லீம் ஜனாதிபதிகளுக்குப் பின்னர்தான் ஒரு தலித் ஜனாதிபதி ஆக முடிந்திருக்கிறது என்பது நம் வரலாற்றுச் சுமையால் வந்த விஷயம். ஏற்கெனவே முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டிருந்ததால், நாம் ஒரு முஸ்லீமை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்வதில் எந்த விதத் தயக்கமும் இல்லை. அதே ஒரு தலித் ஜனாதிபதி ஆக இருந்தபோது நடந்த விவாதங்கள் எளிதில் மறக்கக்கூடியதல்ல. நேரு இருந்த அத்தனை வருடங்களில், இந்திரா காந்தி இருந்த அத்தனை வருடங்களில் ஒரு தலித் ஜனாதிபதி ஆகவில்லை என்பது அவர்களுக்கு கேவலமல்ல. அது தாண்டமுடியாத நம் மனச்சாய்வைத்தான் சொல்கிறது.

நம் வரலாற்றுச்சுமையின் பாரம் எளியதல்ல. எண்ணற்ற சாதிகளாலும், ஆர்ய திராவிடப்பிரிவாலும், எண்ணற்ற மதங்களாலும், எண்ணற்ற மதப்புரிதல்களாலும், எண்ணற்ற மொழிகளாலும், உள் மொழிகளாலும் பிரிந்து கிடக்கும் நாம் அத்தோடு கூடவே அத்தனைக்கத்தனை மனச்சாய்வுகளையும் சுமந்து கொண்டு வாழ்கிறோம். அது போதாது என்று நாடு சுதந்திரம் அடைந்தபோது கூட, வன்முறையும், கலவரமுமாக, இந்து முஸ்லீம் பிரிவினையாக நாடு துண்டாடப்பட்டும் அந்த வரலாறும் நம் சுமையாக மனத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

ஆயினும், புரட்சிகரமாக, எவ்வளவு குறுகிய காலத்தில் நம் மனச்சாய்வுகளை நாம் கடந்து வந்திருக்கிறோம் என்பதை உண்மையாய்க் கண்டறிந்து நாம் பாராட்டிக்கொள்ளவில்லை என்றால், அது நாம் நமக்கே செய்யும் துரோகம். நேரு , காந்தி போன்ற தலைவர்களின் தொலை நோக்குப் பார்வைக்குச் செய்யும் துரோகம். எல்லோருக்கும் வாக்குரிமை -Universal franchise- இல் தொடங்கி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை, ஆங்கிலோ இந்தியர்களுக்கு நியமன பிரதிநிதித்துவம், சிறுபான்மையினருக்குக் கல்வி நிலையங்கள் தொடங்கி நடத்தும் உரிமை என்று பலவிதங்களில் இதன் செய்லபாடு பரந்து கிடக்கிறது.

பாகிஸ்தான் என்ற ஒரு நாடு துண்டாடப்பட்டும், இந்து இந்தியர்களும் சரி, முஸ்லீம் இந்தியர்களும் சரி, அது காரணமாக தொடர்ந்து ஒருவரோடு ஒருவர் சண்டை போடக்கூடாது என, ஜாகிர் உசேனை ஜனாதிபதி ஆக்கியதும் கூட இது போன்றதொரு இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிதான். அப்போது கூட இது டோக்கனிஸம் என எதிர்த்ததும் இடதுசாரிகள்தான். அப்போதிலிருந்து டோக்கனிஸம் என்ற வார்த்தையை கேவலமான பொருளில் உருவாக்கி, இந்திய அரசியலமைப்பு எந்த வழியில் எல்லா மக்களையும் மைய நீரோட்டத்தில் இணைக்க முயலும்போதெல்லாம் அந்த முயற்சிகளைக் கேவலப்படுத்தி, தலித்துகள் எனவும், கிரிஸ்துவர்கள் எனவும், முஸ்லீம்கள் எனவும், உயர்சாதியினர் எனவும், கீழ்சாதியினர் எனவும், ஆயிரக்கணக்கான பிரிவுகளை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி மக்களை ஒருவரிலிருந்து மற்றவரைப் பிரிக்க முனைவதும் இடதுசாரியினரே செய்துவந்த விஷயம். அது அவர்களது முரண்பாடுகளைத் தீவிரப்படுத்துதல் என்ற அடிப்படைக் கொள்கையிலிருந்து வருவதால் அவர்களையும் குறை சொல்ல முடியாது. அதுவே நீண்டு இன்று பாஜக ஆட்சியை illegitimate ஆக ஆக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சிப்பது. பாஜக அரசை காட்டுமிராண்டி அரசு என்று அழைத்தது ஆகியவை. பாகிஸ்தான் இந்தியாவில் மதக்கலவரங்களைத் தூண்டுவதன் முக்கியமான நோக்கம், இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பை போலி என்று பிரச்சாரப்படுத்தி, அதன் மூலம், இந்தியாவின் அரசியலமைப்பை முஸ்லீம் மக்களிடம் illegitimate ஆக்குவது. பாகிஸ்தான் என்ற எதிரி நாடு, இடதுசாரிகள் – இருவரது கோரிக்கைகளும் ஒரு முனையில் இணைவது எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியது.

அது போன்றதொரு பிரச்சாரம் இருந்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அதன் சமஉரிமை அடிப்படைகளும், இந்தியாவின் தலைவர்களும் செய்த முயற்சிகளால், இந்திய மக்களால் அங்கீகரிப்படுவது அதிகரித்துத்தான் வந்துள்ளது.

இந்த அங்கீகாரம் என்பது மக்கள் சட்டப்பூர்வமானதாக ஒப்புக்கொள்ளும் ஒரு அங்கீகாரம். இதுவே இந்தியாவுக்கும், இந்திய அரசியலமைப்புக்கும் legitimacyஐ அளிக்கிறது. இந்த சட்டப்பூர்வமான அங்கீகாரம் ஒவ்வொரு குழுமமும் இந்திய அரசிலமைப்புச் சட்டத்தை ஒப்புக்கொள்வதில் தான் தோன்றமுடியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு legitimacyஐ அளிக்காதவர்கள் என நம் நாட்டில் பல குழுமங்கள் இருந்திருக்கின்றன. சில இன்னும் இருக்கின்றன. வட கிழக்கு மாநில இனவாத கம்யூனிஸ்ட்கள். அதாவது நாகாலாந்து, மிசோரம், மேகாலயா போன்ற மாநிலங்களில் இருக்கும் இடதுசாரி இனவாதக்குழுக்கள் இந்திய அரசிலமைப்பை ஒப்புக்கொள்ளாமல் இருந்தன. அவைகளில் இன்று நாகாலாந்தின் மக்களில் பெரும்பான்மை மட்டுமே இந்திய அரசிலமைப்புச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்காமல் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ஒப்புக்கொள்ளும் திசையில்தான் சென்று கொண்டிருக்கிறார்கள். அடுத்தது, காஷ்மீர முஸ்லீம் மக்கள். காஷ்மீர இந்துக்களும் பெளத்தர்களும் தீவிரமாக இந்தியர்களாகத்தான் தங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

இந்தியாவெங்கும், தமிழ்நாட்டிலும் இருக்கும் இடதுசாரிகள், தலித்துகளையும், முஸ்லீம்களையும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானவர்களாக உருவாக்க வெகுகாலம் உழைத்து வந்திருக்கிறார்கள். காஞ்சா அய்லய்யா, அ.மார்க்ஸ், ரோமிலா தாப்பர் போன்றவர்கள் இந்த சிந்தனையாளர்களில் முக்கியமானவர்கள். இவர்களது பார்வையில், இந்தியா ஒரு மேல் ஜாதி இந்துக்கள் மேலாண்மை செலுத்தும் நாடு. இந்த நாட்டில், இந்த அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கும், தலித்துகளுக்கும் நீதி இதுவரை கிடைத்ததில்லை, இனிமேலும் கிடைக்காது. அந்த அடிப்படைக் கொண்டு பார்க்கும்போது, தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்கும் உயர்பதவிகள் கிடைப்பதெல்லாம் வேஷம், டோக்கனிஸம் என்பதுதான் இந்த பழம்பெரும் பார்வை. (அதாவது முஸ்லீம்களுக்கு உயர்பதவி தரப்படாமல் இருந்தால் ‘பாருங்கள் பார்ப்பனர்கள் தம்முடைய அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதில்லை. ‘ என்று கூக்குரலிடலாம். முஸ்லிம்களுக்கு உயர்பதவி தரப்பட்டால் ‘ இது வெறும் குறியீடு தான் ‘ என்று கூக்குரலிடலாம். அதுவும் நடந்து வருகிறது.)

அந்த குற்றச்சாட்டு ஓரளவுக்கு உண்மைதான் என்பது நரசிம்மராவ் ஆட்சியிலிருந்து இறங்கும் வரை ஆண்ட அனைத்து பிரதம மந்திரிகளும் மேல்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெரும்பாலான முதலமைச்சர்கள் மேல்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதிலும் நிரூபணமாகிக் கொண்டு வந்தது. ஜமீன்தார்கள் கட்சியாக இருந்த காங்கிரஸில் அப்படிப்பட்ட ஒரு வெளிப்பாட்டைத்தான் பார்க்கமுடியும். அப்படிப்பட்ட கட்சியாக இருந்தும், காந்தி நேரு போன்றவர்களால், எதிர்காலத்தில் இப்படி இருக்கக்கூடாது, இந்திய அரசியலதிகாரம் பரந்து பட்டதாக, அனைத்து மக்களையும் மைய நீரோட்டத்தில் கொண்டதாக, ஜாதி மதம், இனம் மொழி, தந்தையரின் சொத்து கடந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவா அவர்களது பேச்சுக்களிலும், செய்கைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டேதான் இருந்தது. அதுவே கம்யூனிஸ்ட்கள் வெறுக்கும் டோக்கனிஸமாக, அம்பேத்காருக்கு சட்ட அமைச்சர் பதவியாகவும், ஜாகீர் உசேனுக்கு ஜனாதிபதி பதவியாகவும், பரம்பரை பரம்பரையாக இந்திய மக்களிடம் அவர்களில் பெரும்பான்மையான இந்துக்களின் மனச்சாய்வை உடைப்பதாக வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது.

டோக்கனிசம் என்பது ஒரு குறியீட்டுச் செயல். இது குறியிட்டுச் செயல் என்பதாலேயே அர்த்தமற்றது என்று சொல்ல முடியாது. குறியீட்டுச் செயலுக்குத் தேவை எங்கிருந்து வந்தது ? இந்தியா ஒரு பலகலாசார, பல மதச் சமூகம் என்பதன் அங்கீகாரத்திலிருந்து வந்தது. இந்த சந்தர்ப்பத்தில், டோக்கனிசமாகக் கூட பாகிஸ்தானிலோ, பங்களா தேஷிலோ, ஸ்ரீலங்காவிலோ, இந்துக்கள் ஒரு சம அந்தஸ்து உள்ள குடிமக்களாகக் கூட அங்கீகாரம் பெற்றுவிடவில்லை என்பதைப் பார்க்கும் போது இந்தியாவின் பெருமை நமக்குப் புரியவேண்டும். இந்த நாடுகளில் இந்துக்கள் கணிசமான அளவில் இருந்தனர், இருக்கின்றனர் என்பதனால் இதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

வாழையடி வாழையாக நம் குடும்பத்திலும், நம் குழுமத்திலும், நம் சாதாரண பேச்சுக்களிலும் இருக்கும் மனச்சாய்வுகள் நம்மை அறியாமலேயே வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவைகளை உறுதி செய்யக்கூடாது என்பதும், அதற்கான நியாயப்படுத்தலை சட்டத்துக்குப் புறம்பானதாக மட்டுமல்லாமல், சமூகப் பார்வைகளுக்கும் புறம்பானதாகவும் (socially illegitimate) ஆக்க வேண்டும் என்பதாலும், தீண்டாமை ஒழிப்புச் சட்டங்களும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி ஒதுக்கீடும் வந்தன. (இவை காலாவட்டத்தில் காலாவதி ஆகவேண்டும் என்பதுதான் அனைத்து மக்களின் , முக்கியமாக தலித்துகளின் விருப்பமாக இருக்க வேண்டும். அதற்கான தேவை இல்லாமல் இருப்பதுதான் உண்மையான சம அந்தஸ்து என்பது சொல்லியா தெரியவேண்டும் ?)

இப்படிப்பட்ட மனச்சாய்வை உடைக்கும் ஒரு முக்கியமான செயல் அப்துல்கலாம் அவர்களின் ஜனாதிபதி வேட்பு மனு.

இது ஒரு கிரிட்டிகலான சமயத்தில் வருகிறது. உலகெங்கும் முஸ்லீம்களுக்கு எதிரான, இஸ்லாமுக்கு எதிரான ஒரு போர்க்கொடி உளமாற அறிந்தோ அறியாமலோ தூக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 11ஆலும், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்யும் கொடுமைகளால் திருப்பித் தாக்கும் தற்கொலை முயற்சிகளாலும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏன் சொல்லப்போனால் கிரிஸ்தவ உலகம் முழுவதிலும் இஸ்லாமுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான குரல் உரத்து ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அது பாகிஸ்தான் செய்யும் முட்டாள்தனங்களால், இந்தியாவிலும் அது வெடிக்க ஆரம்பித்திருக்கிறது.

வெளிப்படையாகவே அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. சட்டம் தாண்டி நடைமுறையில், சாதாரண மக்களிடமும், காவல்துறையினரிடமும், முஸ்லீம் மக்கள் மீதான மனஸ்தாபமும் கோபமும் பல்வேறு விதங்களில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. விமானங்களை உபயோகப்படுத்தும் முஸ்லீம்களும், ஏன் எந்த பொது வாகனத்தை உபயோகப்படுத்தும் முஸ்லீம்களும் ஜாக்கிரதைப் பார்வைகளால் துன்புறுத்தப்படுகிறார்கள்.

கோத்ராவில் நடந்த படுகொலைகளுக்கு இப்படிப்பட்ட ஒரு திருப்பித்தாக்குதல் இருக்க வேண்டுமா ? அது நிச்சயம் பாஜக, விஹெச்பி திட்டமிட்டு செய்த படுகொலைகள்தான் என்று பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பாஜகவுக்கு இந்தியாவில் சுமார் 28 சதவீத மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். பாஜக கூட்டணிக்கட்சிகளுக்கும் சேர்த்துப் பார்த்தால் சுமார் 45-55 சதவீத மக்கள் ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அவ்வளவு மக்களும் சமீபத்திய பாகிஸ்தான் -இந்தியப் போர் சமாச்சாரத்தாலும், வெளிப்படையாக நடக்கும் காஷ்மீர இஸ்லாமிய ஜிஹாத்தினாலும், பொதுவாக முஸ்லீம்கள் மீது வன்மம் பாராட்டி வருகிறார்கள். இது சாதாரணப் பேச்சில், வீடுகளிலும், வீதியிலும், முஸ்லீம்கள் இல்லாதபோது நடக்கும் பொதுவான விஷயமாக ஆகியிருக்கிறது. குஜராத் கலவரங்களில் முஸ்லீம்களை விட மிகவும் மோசமான அடி வாங்கியது இந்தியாவின் மதச்சார்பற்ற கலாச்சாரம். இது மகா ஆபத்தான விஷயம். இது உடனே கட்டுப்படுத்த வேண்டிய சமாச்சாரம்.

இதனை உணர்ந்தோ என்னவோ, பெரும்பான்மையான இந்திய முஸ்லீம்களைப் போல, தன்னுடைய நாட்டுக்கும், தன்னுடைய மக்களுக்கும் விசுவாசமாகவும் அவர்கள் நலம் விரும்பும் ஒரு சாதாரண இந்தியரை, ஒரு சாதாரண முஸ்லீமை ஜனாதிபதியாக ஆக்க முன்வந்திருக்கிறது.

அது நெத்தியடி போல, பலரது வாய்க்குப் பூட்டாகும். தொழில்நுட்பவியலாளரான, வலிமையான இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் முஸ்லீம் என்பது முஸ்லீம் என்றாலே வெறுப்பு கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பாஜக வாக்காளர்களுக்கு நெத்தியடியாக பாஜக தலைமை சொல்லியிருக்கும் புத்திமதி இது என்பதை புரிந்துகொண்டால் பாதி குழப்பம் முடிந்துவிடும்.

அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்குவது ஒரு வகையில் இந்திய முஸ்லீம்களிடையே இந்திய அரசியலமைப்புக்கான அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சி என்றாலும், அதனைத் தாண்டி, இந்திய இந்துக்களிடம் முஸ்லீம் எதிர்ப்புத் தீவிரவாதம் வராமல் தடுக்கும் முக்கியமான முயற்சி.

அந்த ஒரு அடிப்படைக்காக மட்டும், அப்துல்கலாமை இந்திய ஜனாதிபதி ஆக்குவதை மனமாற வரவேற்கிறேன்

*****

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்