அன்று ஜல சமாதி , இன்று அக்கினிப் பிரவேசம்.

This entry is part [part not set] of 4 in the series 20000206_Issue

சின்னக்கருப்பன்


ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேல் அப்பீல் செய்வதற்காக, ஏப்ரல் 3 ஆம் தேதிவரை அந்த தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஓராண்டு சிறைத்தண்டனை அறிவித்தது காலையில். மதியத்துக்கு மேல்தான் அதிமுக எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் அமைச்சர்களும் வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள். பல அதிமுகவினர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விவசாயக்கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவிகள் அதிமுக வெறியர்களால் கொளுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு அதிமுக தொண்டர் தீக்குளித்திருக்கிறார். 100க்கும் மேற்பட்ட பஸ்கள் கொளுத்தப்பட்டிருக்கின்றன. கடைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. தனிச்சொத்தும் பொதுச் சொத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றது. அதிமுகவின் தானைத்தலைவி அனைத்து அழிவும் திமுகவினரால் செய்யப்பட்டிருக்கிறது என்று இரண்டு நாட்களுக்குப் பின்னர் அறிக்கை விட்டிருக்கிறார். மூப்பனார் தானைத்தலைவிக்கு தரும் ஆதரவு தொடரும் என்று அறிக்கை விட்டிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியினரும் இவ்வாறே தொடர்ந்து இந்த அராஜககும்பலுக்கு ஆதரவு தெரிவித்து விட்டனர்.

அதிமுகவுக்கும் ஹர்கத்-உல்-அன்ஸாருக்கும் என்ன வித்தியாசம் ? ஹர்கத் தன் மூன்று தலைவர்களை ஜெயிலிலிருந்து விடுதலை செய்வதற்காக 150 பயணிகள் உள்ள விமானத்தை கடத்தியது. இன்னும் ஜெயிலுக்குப் போகாத தன் தலைவியை ஜெயிலுக்கு அனுப்பாமல் இருப்பதற்காக அதிமுக, தமிழகத்தின் 5 கோடி மக்களை வன்முறை மூலம் பயமுறுத்தி கைதிகளாக வைத்திருக்கிறது.

ஹர்கத் கொன்ற ஆள் ஒருவர். அதிமுக மூன்று விவசாயக் கல்லூரி மாணவிகளை கொன்றிருக்கிறது.

இதற்கு முன் ஹர்கத் கொன்ற ஆட்கள், ஆன்மீகானுபவத்துக்காக இந்தியா வந்த 7 வெளிநாட்டினர். இதற்கு முன் அதிமுக கொன்ற ஆட்கள் ஆன்மீக அனுபவத்துக்காக கும்பகோணம் மகாமகத்துக்கு சென்ற இந்தியர்கள் உட்பட 100க்கும் மேல்.

ஹர்கத் தான் காஷ்மீரின் ஆட்சிக்கு வரவேண்டும் இல்லையென்றால் வன்முறைதான் என்கிறது. அதிமுக தான் தமிழக ஆட்சியில் இருக்கவேண்டும் இல்லையென்றால் வன்முறைதான் என்கிறது.

ஹர்கத் கொளுத்திய பஸ்கள் 5. அதிமுக கொளுத்திய பஸ்கள் 100க்கு மேல்.

ஹர்கத் தடை செய்யப்பட்ட கட்சி. அதிமுக தடை செய்யப்படாத ஒரு அரசியல் கட்சி.

எனவே அதிமுக ஹர்கத்தை விட தீய சக்தி. இது தடை செய்யப்பட வேண்டிய ஒரு தீவிரவாதக் கட்சி.

தமிழகத்தின் எல்லாக் கட்சிகளின் வரலாற்றிலும் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன, திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் போன்ற எந்தக் கட்சிகளுமே இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் எங்காவது ஒரு காலத்தில் இந்தப் போக்கு நிறுத்தப்பட வேண்டும். அது இன்றே இப்போதே நடக்கப்படவேண்டும். அதிமுக தடை செய்யப்பட்டால் அது மற்ற கட்சிகளுக்கும் ஒரு பாடமாக இருக்கும். இது போல ஒன்று இனிமேல் நடக்காமல் இருக்கவேண்டுமென்றால் அந்த தண்டனை மிகக் கடினமானதாக, கொடுமையானதாக இருக்கவேண்டும். கொல்லப்பட்ட மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்களாகக் கூட இருந்திருக்கலாம். இதுதான் அந்த ஓட்டுகளின் மிகமிக அவலமான விளைவு. அரசியல் செல்வாக்கின் கீழ் பாதுகாப்பாக இருந்து கொண்டு ஓட்டுப் போட்ட மக்களையே கொல்கின்ற இது போன்ற அமைப்புகளும் அதன் தலைவர்களும் சரியான முறையில் பாடம் கற்பிக்கப் படவேண்டும்.

மகாமகக்குளத்தில் இறந்தவர்களுக்கு ஒரு நினைவாலயம் கூட இல்லை. அந்தப் படுகொலையை விசாரணை செய்ய ஒரு சரியான விசாரணைக் கமிஷன் கூட இல்லை. அந்தப் படுகொலையில் இறந்தவர்கள் தமிழர்களால் மறக்கப்பட்டுவிட்டார்கள். இந்த மாணவிகளின் மரணமும் அதே போல் மறக்கப்படக்கூடாது.

அதிகாரத்திலும் அரசியலில் செல்வாக்குடனும் இருப்பவர்கள் தாங்கள் எப்போதுமே சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக, தான் சிறைக்குப் போனால் பல தொண்டர்கள் தமக்காக உயிர்துறப்பார்கள் என்ற போலி கெளரவத்தை காண்பிக்க தொடர்ந்து இந்த தலைவர்கள் முயன்று வருகிறார்கள். இதன் விளைவே அதிமுக தொண்டர் வேலாயுதத்துக்கு ஜெயலலிதா அளித்த 50000 ரூபாய். இது இன்னும் பல வறுமையின் நுனியில் உள்ளவர்களை தீக்குளிக்கத் தூண்டும். எனவே, இது போன்ற அன்பளிப்புகள் தடை செய்யப்படவேண்டும்.

அது மட்டுமல்ல. இவ்வாறு கொடுத்து வேலாயுதத்தை தீக்குளிக்கத் தூண்டினார் என்று ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்படவேண்டும். அதுவே, எதிர்காலத்தில், இதுபோன்று வெட்டி தீக்குளிப்புகள் நடை பெறாமல் தடுக்க ஒரே வழி.

இந்தப் போக்கைக் கண்டிக்க யாருக்குமே இல்லை. கும்பகோணத்தில் மகாமகத்தில் நடந்த ஜலசமாதிக்குப் பிறகு தான் ராமதாஸ், வாழப்பாடி, வைகோ, திண்டிவனம் ராமமூர்த்தி, தேவர் பேரவை, மூவேந்தர் சங்கம் , முஸ்லீம் லீக், பி.ஜே.பி, கி வீரமணி (இப்போது ஜி கே மூப்பனார்) என்று எல்லாருமே ஜெயலலிதா பின்னால் சென்றார்கள். அடுத்த தேர்தலிலும், நீ யாரைக் கொன்றாலும் பரவாயில்லை, ஒரு எம். பி , எம் எல் ஏ சீட்டுக் கொடுத்தால், உன் பின்னால் வர நாங்கள் தயார் என்று இவர்கள் எல்லோருமே பிரகடனம் செய்யக் கூடியவர்கள் தான். தாம் எப்படியாயினும் தனிமைப் படுத்தப் பட மாட்டோம் என்கிற நம்பிக்கையில் தான் ஜெயலலிதாவின் அடியாட்களும் ஏவி விடப் படுகிறார்கள்.

உடனடியாய் செய்யப் பட வேண்டியது.

1. இந்தப் படுகொலைக்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன்பு நிறுத்தி அதிக பட்சத் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.

2. ஜெயலலிதாவோ, அல்லது வேறு அதிமுக பிரமுகர்களோ, கூப்பிட்டு பேசி நடந்த விஷயமா என்று அவர்கள் யாரிடம் எப்போது தொலைபேசியில் பேசினார்கள் என்று பார்த்து ஆராயப்பட வேண்டும். அ.தி.மு.க இந்த வன்முறைக்குக் காரணகர்த்தா என்ற முறையில் தடை செய்யப் பட வேண்டும். (இது மிகப் பெரிய பலனைத் தராது தான். அ.தி.மு.க என்ற பெயருக்குப் பதிலாக, ஜெ.தி.மு.க என்கிற பெயரில் இதே பிரமுகர்கள் வலம் வருவார்கள் என்பது உண்மை.) ஜெயலலிதாவோ மற்றவர்களோ நேரடியாக இந்த வன்முறையை தூண்டிவிட்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு சட்டத்தின் முன்னிலையில் சரியான தீர்ப்பு வழங்கப்படவேண்டும்.

3. இது வரை நடந்த பொதுச் சொத்து அழிவிற்கு அ தி மு க-விடமிருந்தும், ஜெயலலிதாவிடமிருந்தும் நட்ட ஈடு வசூல் செய்ய வகை செய்ய வேண்டும்.

4. வேலாயுதத்தை தீக்குளிக்கத் தூண்டினார் என்று கொலை வழக்கு ஜெயலலிதா மீது தொடரப்பட வேண்டும்.

4. இந்த மூன்று பேர் குடும்பத்தினரும் இணைந்து இப்படிப் பட்ட அர்த்தமற்ற வன்முறையை எதிர்த்துப் பிரசாரம் செய்ய வழி செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும், பள்ளியிலும் இவர்கள் குரல் ஒலிக்க வேண்டும்.

5. அ.தி.மு.கவுடன் இணைகிற கட்சிகளை மக்களும், பத்திரிகைகளும் பகிஷ்கரிக்க வேண்டும். அவர்கள் பேச்சுக்கோ, அறிக்கைக்கோ இடம் அளிக்கக் கூடாது. அவர்களின் பேச்சைத் தடை செய்ய ஜன நாயக உரிமை இல்லை. ஆனால், புறக்கணிக்க உரிமை உண்டு.

6. பொது வாழ்வில் வன்முறையை ஆதரிப்பதில்லை என்று கட்சிகள் பிரமாணம் செய்ய வேண்டும். அதன் படி நடக்கவும் வேண்டும்.

Thinnai 2000 February 6

திண்ணை

Series Navigation

author

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்

Similar Posts