அன்பு நண்பா !

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

சத்தி சக்திதாசன்


நண்பா உன் மடல் கண்டேன்
நலமறிந்து மகிழ்வுற்றேன்

தேவைகளைத்
தேடித் தேடி
தேய்ந்து போன பாதங்களுடன்
தேங்கி நீ
துவண்டு விட்டாய் என்றறிந்தேன்

ஏன் நண்பா ?
ஏக்கங்களை தூக்கியெறியும்
ஏற்றம் இன்னும் காணவில்லையா ?

சமுதாய மாற்றம் வேண்டி
சத்தம் போட்ட
சந்தர்ப்பங்களை மறந்தது
சார்ந்திருந்தோரின் சங்கற்பமா சொல் நண்பா ?

நிம்மதி ஒன்றேதான் நம் வாழ்வில்
நிச்சயமான உழைப்பு
நீயும் நானும் அன்றுரைத்த
நீண்டகால லட்சியம்
நீர்மேற் குமிழியாயிற்றா ?

உண்மையொன்று நானும் தான்
உணர்ந்து கொண்டேன்

வாழ்க்கைத் திட்டங்கள்
வளமாய் நாம் ஆயிரம் தீட்டலாம் – அவை
வாய்ப்பது ஓரிருவர்
வாழ்வில் மட்டுமே

நாம் போகும்பாதை
நன்றாய் அறிந்தேதான் போனாலும்
நடுவினிலே தடைகள்
நடைமாறி
நாமும் வேறுவழி சென்றிருப்போம்

நானிருக்கும் உலகும்
நாளும் வேதனைதான்
நானொன்று நினைக்க
நடக்காது என தானொன்று நினக்கும்
நடக்கும் இந்தக் காலம்

ஓய்வுனக்கு தேவைதான்
ஓயாமல் உழைத்தவனே

மறுபடியும் எழுந்துவிடு
மறக்காதே பயணத்தை
மனிதர்கள் எனும் போர்வையில்
மாயர்கள் வாழும் உலகில்
மனிதத்தைக் காக்க
மனிதத்துவம் நிறைந்த உன் தேவை உண்டு

பயணத்தில்
பாதிதூரம் கடந்தபின்
பதில் ஒன்று எழுதிவிடு
பார்த்திருக்கும் என் விழிகள்
பயணத்தில் ஓரடி கூட வரமுடியா
பாதமிழந்த இம்மனிதன் ….

*
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்