அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

ஞாநி


அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு

வணக்கம்.

உங்களை மாண்புமிகு பிரதமர் என்று அழைக்காததற்கு மன்னிக்கவும். அடுத்த தேர்தலில் அதை எப்படியும் நீங்கள் அத்வானிக்கோ சோனியாஜிக்கோ பறி கொடுத்துதானே தீர வேண்டும். நிரந்தரமான ஓர் அடைமொழியை நீங்கள் சம்பாதிக்க வேண்டாமா ? உங்கள் ஆருயிர்த் தோழர் கருணாநிதியிடம் கேட்டால் சொல்லுவார். முதல்வர் பதவி நிரந்தரமல்ல. கலைஞர் என்ற பட்டமே நிரந்தரமானது.

நீங்களும் முயற்சி செய்துதான் பார்க்கிறீர்கள்; கவிஞர், சிந்தனையாளர் என்றெல்லாம் நிரந்தரப் பட்டம் பெற்றுவிட முடியுமா என்று. நேற்று வந்த அப்துல் கலாமின் பாடலை மியூசிக் அகாடமியில் பாடுகிறார்கள். அசல் பிராமணக் கவியான உங்களுக்கு இன்னும் அகாதமி இடம் தரவில்லை பாருங்கள்.

சிந்தனைச் சிற்பி முயற்சியெல்லாம் வேண்டாம். கோவாவில் கடலோரம் உற்சாக பானத்தின் உதவியோடு நீங்கள் சிந்தித்து வெளியிட்டதை பி.ஜே.பியும் கண்டு கொள்ளவில்லை; உங்கள் வழிபாட்டுக்குரிய சங்கப் பரிவாரமே உங்களை பதவி ஆசை பிடித்த கோழை என்று கண்டிக்கிறது.

சிறந்த பார்லிமெண்ட்டேரியன் என்று நேருவால் பாராட்டப் பட்ட நீங்கள் இந்த அந்திமக் காலத்திலாவது நேருவின் வழியைப் பின்பற்றலாமே. உள்ளூர் பிரச்சினைகளை அத்வானியும் மோடியும் பார்த்துக் கொள்ளட்டும். உலகப் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தினால், நேருவுக்கு இணையான உலக அந்தஸ்து இதுவரை காங்கிரசல்லாத அரசியல்வாதி எவருக்கும் கிட்டவில்லை என்ற வசைச் சொல்லும் உங்களால் நீங்குமே.

கடந்த சுமார் இருபதாண்டுகளாக இந்தியத் தலைவர்கள் உலகத்துக்கு அறிவுரை சொல்லும் தார்மிக பலத்தை இழந்து, அமெரிக்க அதிபர் எவனாயிருந்தாலும் அவன் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டு பின்பற்றும் அடிமைகளாக மாறி வந்திருக்கிறார்கள். நாளுக்கு நாள் இது இன்னும் மோசமாகி, அமெரிக்க அதிபர் என்று இல்லை, அமெரிக்க கம்பெனியின் சேல்ஸ் ரெப்ரசெண்ட்டேடிவ் எவனாவது வருகை தந்தால் கூட அவனை ஜனாதிபதி மாளிகையில் விருந்துக்கழைத்து ஏதாவது அட்வைஸ் சொல்லிவிட்டுப் போங்களேன் என்று கெஞ்சுகிற நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.

இதை நீங்கள் மனது வைத்தால் மாற்றலாம். மாற்றினால் நாட்டுக்கும் நல்லது. உலகத்துக்கும் நல்லது. உங்களுக்கும் வரலாற்றில் இடம் நிச்சயம் ரிசர்வ் செய்யப்பட்டு விடும்.

ஒரு நல்ல வாய்ப்பு இப்போது கிட்டியிருக்கிறது.

இராக் மீது யுத்தம் நடத்தியே தீருவது என்று அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது.இதே சதாம் ஹுசேனுக்கு 1980லிருந்து 1988 வரை ரசாயன, உயிரியல் கொலை ஆயுதங்களை அள்ளித்தந்து ஊக்குவித்தது அமெரிக்காவின் ரீகனும் மூத்த புஷ்ஷும்தான். அப்போது ஈரானுக்கெதிராக இராக்கை தூண்டி விட்டது அமெரிக்கா. இன்று இராக்குக்கு எதிராக நிற்கிறது. ஒரே நோக்கம், அந்தப் பகுதியில் உள்ள எல்லா எண்ணெய் வளங்களும் தன் கட்டுப்பாட்டில் வரவேண்டும் எனப்து மட்டும்தான்.

வரலாறைத் திரும்பிப் பார்த்தால், எப்போதுமே இராக், அமெரிக்க- பிரிட்டிஷ் பேராசைகளுக்கு எதிராக இருந்து வந்திருக்கிறது என்பதை உணரலாம். இங்கிலாந்தின் காலனிச் சுரண்டல்களுக்கு எதிராக இராக் உலக யுத்தங்களில் ஜெர்மனியை ஆதரித்தது. சூயஸ் கால்வாய்மீது எகிப்து உரிமை கொண்ட போது அதை பிரிட்டன் எதிர்த்தது. அப்போதும் இராக் எகிப்து சார்பாக நின்றது. குவெய்த் பிரச்சினையில் கூட, வரலாறு என்ன ? இராக்கை கட்டாயமாக பிரித்து குவெய்த்தை உருவாக்கியது பிரிட்டன்தான். இஸ்ரேல்-அரபு போர்களின் போது இராக் மேலை நாடுகளுக்கு எண்ணெய் வழங்க மறுத்தது. காரணம் இஸ்ரேலை மேலை நாடுகள் ஆதரித்ததுதான்.

இப்போது இராக்கில் பயங்கர ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஜெர்மனியின் பசுமைக் கட்சி கூட இதை உறுதிப்படுத்துகிறது.

ஆனால் அமெரிக்காவோ மேற்கு ஆசியாவில் தனக்கு எந்த எதிர்ப்பும் இருக்கவே கூடாது என்பதற்காக அடுத்து இராக்கை காலி செய்ய விரும்புகிறது.

இதற்கு நாம் உடன்போக வேண்டுமா ?

தவிர, இராக் பெட் ரோலில் இருந்து சம்பாதிக்கும் பணத்தில் தன் பொதுத்துறையை வளப்படுத்திய நாடு. மற்ற அரபு நாடுகளைப் போல தன் பணத்தை அமெரிக்க வங்கிகளில் போட்டு வைக்க அது மறுத்துவிட்டது. கல்விக்கும் சுகாதாரத்துக்கும் செலவு செய்துவந்திருக்கிறது. அதன் அரசாங்கக் கல்வித் திட்டம் யுனெஸ்கோவின் விருது பெற்ற திட்டம். பெண்களுக்கு சம உரிமை வழங்கிய முஸ்லிம் நாடுகளில் அதுவும் ஒன்று. சதாம் ஹுசேன் சர்வாதிகாரியென்றால் அதை எதிர்க்க வேண்டியது இராக் மக்களே தவிர அமெரிக்காவோ இந்தியாவோ அல்ல. இந்திரா சர்வாதிகாரி என்பதற்காக 1976ல் இந்தியாமீது அமெரிக்கா படையெடுக்க நீங்கள் சம்மதித்திருப்பீர்களா ?

நேரு காலத்தில் வளரும் நாடுகளுக்கு தலைமை தாங்கியது இந்தியா. இன்று அந்த நிலைக்கு மறுபடியும் இந்தியாவை அழைத்துச் செல்லும் அரிய வாய்ப்பு உங்களுக்குக் கிட்டியிருக்கிறது. இராக் மீது யுத்தம் நடத்துவதை இந்தியா ஆதரிக்காது என்று பகிரங்கமாக அறிவியுங்கள். அமெரிக்காவிடம் நட்பாக இருப்பது என்பது அதன் அராஜகங்களுக்கெல்லாம் உடன்போவது என்பது அல்ல என்று தைரியமாகச் சொல்லுங்கள். அமெரிக்காவிலேயே அதன் அரசின் யுத்த வெறிக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுப் பெற்று வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களுக்கு எதிராக எதையும் சொல்ல முடியாத நிலையில் இருக்கும் உங்களுக்கு இதுவே சுலபமான தீர்வு. உலக அரங்கில் உங்கள் மரியாதை உயரும். முன்னாள் பிரதமரான பிறகும் இந்தியா உங்களை நன்றியுடன் நினைவு கூரும்.

இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளாமல், அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா இராக்கை தாக்கித் தரை மட்டமாக்கினால் அதை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிறகு இராக்கில் மறு சீரமைப்பு காண்ட்ராக்ட் வேலைகள் இந்தியாவுக்குக் கிட்டாதா என்று அலைந்தீர்களானால், நீங்கள் சரித்திரத்தின் அனாதையாகிவிடுவீர்கள்.

ஏற்கனவே சங்கப் பரிவாரத்தினால் கருவேப்பிலையாகப் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நிலையில் உள்ள நீங்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இந்தியத்தலைவராக உயர்வதற்கு இதுவே கடைசி வாய்ப்பு.

அப்புறம் உங்கள் இஷ்டம். பின்னால் புலம்பல் கவிதைகள் எழுதி எங்களை தொல்லை செய்ய வேண்டாம் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

அன்புடன்

ஞாநி

***

தீம்தரிகிட ஜனவரி 2003 இதழிலிருந்து

***

Series Navigation

ஞாநி

ஞாநி