அன்புள்ள ஆண்டவனுக்கு

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

ரேணுகா விசுவலிங்கம்


“அன்புள்ள ஆண்டவனுக்கு…” மீரா கண்ணீருடன் தனது நாட்குறிப்புப் புத்தகத்தில் எழுத தொடங்கினாள். அவள் கண்களில் இருந்து வடிந்து கொண்டிருந்த நீரை வேகத்துடன் துடைத்துக் கொண்டு அதே வேகத்துடன் பேனாவினால் அவள் புத்தகத்தைத் தாக்கினாள். அவள் மனம் மிகவும் வேதனை அல்லது சந்தோஷம் படும் போதெல்லாம் ஆண்டவனுக்கு இவ்வாறு எழுதிக் கொண்டு அவளது சந்தோஷம்,சோகம்,கோபம், வேதனை அனைத்தும் கொட்டித் தீர்த்துக் கொள்வாள்.

“நான் இப்படி அவமானம் படுவதற்கா என்னைப் படைத்தாய் ? என்னிடம் என்ன இருக்கிறது ? அழகிருக்கிறதா ? அறிவிருக்கிறதா ? என்ன இருக்கிறது ? என் அக்காவைப் போல என்னால் கல்வியில் சிறந்து விளங்க முடிகிறதா ? ஆண்டவா!! சரி கல்வியை விடு. எப்போழுதாவது நான் அவமானப் படாமல் தடுக்கி விழாமல் நடந்திருக்கின்றேனா ? சிரிக்காதே. நான் இப்படி வேதனை படுவதில் உனக்கு என்னத்தான் அவ்வளவு சந்தோஷம் என்று எனக்குத் தெரியவில்லை.” மீண்டும் மீராவின் கண்களில் நீர் தழும்பியது. சற்று முன்னர் நடந்த சம்பவத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது அவளது மனம்.

மீரா. இருபத்தொன்றை எட்டியவள்.பார்க்கச் சுமாராகத்தான் இருப்பாள் ஆனால் படுச் சுட்டி.பேச்சிலும் வல்லமை பெற்றிருந்தவள்.பேச்சுகளில் அவளை யாரும் வென்றதாகச் சரித்திரமே இல்லை.கல்லூரியில் பொருளியல் படித்துக்கொண்டிருந்தாள்.இவளின் அக்காத்தான் லீலா.மீராவிற்கு நேர் எதிர்மாற்றமானக் குணநலங்கள் கொண்டவள்.மீரா சுமார் என்றாள் லீலா பேரழகி.அமைதியானப் பெண்.மிக கெட்டிக்காரியும் கூட.வெளியூரில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தாள்.அக்காவை எண்ணி என்றைக்கும் மீரா பெருமை பட்டிருக்கிறாள் தவிர பொறாமை என்ற உணர்வு சிறிதளவும் ஏற்பட்டதில்லை அவளின் கள்ளங்கபடமற்ற உள்ளத்தில்.இன்றிரவு வரை.

லீலா தன் மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்துச் சிங்கை திரும்பியுள்ளாள்.அவளின் தேர்ச்சியை முன்னிட்டு அவர்களின் பெற்றோர் ஒரு சிறிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.அவர்களின் குடும்பத்தின் நெருங்கிய உற்றார் உறவினர்கள் அனைவரும் அவ்விருந்தில் கலந்துகொண்டனர்.இந்த விருந்தில் அவனும் கலந்து கொண்டான்.இந்தியாவில் பட்டபடிப்பு முடித்துவிட்டு இங்கு மேல் படிப்பிற்காக வந்துள்ளான்.அவன் பார்க்க வாட்டச் சாட்டமாக இருப்பான்.அவனைப் பார்த்ததும் அவளின் மனதில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டது.இன்பம் கலந்த கலக்கம்.அடிக்கடி அவள் கண்கள் அவளறியாமலே அவன் பக்கம் சென்றன. ஓரிருமுறை அவர்களின் கண்கள் சந்திக்கையில் மீரா நெஞ்சம் படபடக்க கண்ணங்கள் சிவந்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.இருந்தாளும் அவள் மனம் அவனையே சுற்றி வந்தது.மறுபடியும் பார்க்கமாட்டானா என மனம் ஏங்கி போனாள்.அவனுடன் பேச வாய்ப்பு கிட்டாதோ என உள்ளம் துடித்தது.

வாய்ப்பு கிட்டியது.அவளுக்கல்ல.அவளின் அக்கா லீலாவுக்கு.நேரமாகிவிட்டதால் விருந்துக்கு வந்திருந்தவர்கள் கிளம்பி விட்டனர்.ஒரு சிலரைத் தவிர.இடத்தைச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்த மீரா எதார்த்தமாக அவன் பக்கம் திரும்பினாள்.அவளின் முகம் வாடியது.அவன் லீலாவுடன் மும்மரமாக எதையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.மீராவோ தன் காதைத் தீட்டிக்கொண்டு கேட்க முயன்றாள் ஆனால் பயனில்லை. “ப்ச்” என்று சலித்துக்கொண்டு அவர்களையே கவனித்துக்கொண்டிருந்தாள்.

“அவர்கள் எதைப்பற்றித் தான் இப்படி அளக்கிறார்கள்.சே…மடையன்! என்னிடம் வந்து பேசினால் என்ன, குறைந்தா போவான் ? இவனும் அழகான பெண்களைக் கண்டால் ஈன்னு இளிப்பான் போல.இந்த ஆண் வர்கமே இப்படித்தானோ.” தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டாள்.

“என்ன டா சுத்தம் செய்யாமல் நின்றுகிட்டு முணுமுணுக்கிறே ? ம்ம்ம்…”

அவள் தாயின் குரல் பின்னாலிலிருந்து ஒலித்தது.

“ஆ…எல்லாம் உங்கள் மூத்த உத்தம புத்திரியின் பெருமையைப் பற்றித் தான்.” தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

“என்ன சொல்லுறே ? சொல்வதைக் காதில் ஒழுங்கா விழுகிற மாதிரி சொல்லு.”

“ஒன்றும் இல்லை.என்னை அறுக்காமல் இருங்க.” என்று சலித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு வேகமாக நடந்தாள்.நடந்தவள் தான் திடாரென்று “அம்மா!” என்று அலறிக்கொண்டு விழுந்தாள்.

ஏதோ கவனத்தில் நடந்ததால் கீழே யாரோ கொட்டி விட்ட பழச்சாரைக் கவனிக்காமல் வழுக்கி விழுந்து விட்டாள்.உடனே அவள் பெற்றோரும்,லீலாவும் அவனும் அங்கு விரைந்தோடினர்.மிகுந்த வேதனையுடன் மீரா தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்திள்.அவளின் முகம் ரோஜா மலரை விட அவமானத்தால் இன்னும் அதிகமாக சிவந்து போனது.இதயம் டிக் டிக் டிக் என்று படு வேகத்தில் அடித்துக்கொண்டிருந்தது.

“மீரா…என்னம்மா.ஏதாச்சும் அடி பட்டிருச்சா.பார்த்து வர வேண்டாமா ?” பரிவுடன் தந்தை வாசு கேட்க “எனக்கு ஒன்றும் ஆகவில்லை.சின்ன சுளுக்குத்தான். ஐ அம் ஒகே.நிஜம்மா பா.” என்றாள்.தன் தந்தையின் கரங்களைப் பற்றிக்கொண்டு எழுந்தாள்.

“என்ன டா.இன்னிக்கும் உன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டியா ? நீ எந்த வேலையைத் தான் உருப்படியா செய்திருக்கிறே.இன்றைக்கு பரவாயில்லை நாங்கள் தான் இருந்தோம்.நாளைக்கு ? எங்க மானத்தை கப்பல் ஏற்றவே வந்து பிறந்திருக்கே.

“செல்வி! சற்று சும்மா இருக்க மாட்டே.அவளே வலியில் இருக்கிறா,நீ வேறே வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுறே!” மனைவியை அதட்டினார் வாசு.

“ஆமாம்.இப்படியே எதையாவது சொல்லி என் வாயை அடக்கிருங்க.நீங்களாச்சு அவளாச்சு.”

“அம்மா ப்ளிஸ்.இப்போது என்ன ஆகிப்போச்சுன்னு இப்படி புலம்புரிங்க.சரியா கவனிக்காமல் வந்ததால் விழுந்தேன்.இப்போது அதன் பலனை அனுபவிக்கிறேன்.இது பெரிய குற்றமா ?என்னமோ உலகத்தில் நடக்காத மாதிரி பேசுறீங்க.” உள்ளத்தில் பொங்கிய கோபத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டு வீட்டை நோக்கி நடக்கலானாள்.கெளதமின் பக்கத்தையே திரும்பி பாராமல் நொண்டி நொண்டி நடந்தாள் தன் தந்தையின் கரங்களைப் பற்றிக்கொண்டு.அவன் முகத்தைப் பார்க்க வெட்கமாக இருந்தது அவளுக்கு.

தன் அறையை அடைந்ததும் கட்டிலில் உட்கார்ந்து காயப்பட்ட காலை தடவிக்கொண்டிருந்தாள்.”எனக்குத் தான்.எனக்குத் தான் இப்படி எல்லாம் நடக்கும்.வேறு யாருக்குமே நடக்காது.எனக்கு மட்டும் தான்.ஆண்டவா இது உனக்கே அடுக்குமா ? நீ செய்வது தான் சரியா ?” புலம்பினாள் மீரா.துக்கம் தாளாமல் ஆண்டவனுக்கு எழுத தொடங்கினாள்.

அவ்விடத்தை விட்டு மீரா அகன்றதும் லீலா கெளதமிடம், “ஓ,என் தங்கை எப்போதும் இப்படித்தான்.எதையாவது போட்டு உடைத்துக்கொண்டிருப்பாள் அல்ல இப்படி கவனக்குறைவால் வழுக்கி விழுவாள்.” சிரித்துக் கொண்டே மழுப்பினாள்.கெளதமோ அவள் கூறியதைக் கேளாமல் ஏதோ சிந்தனையில் மீரா சென்ற திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மருநாள் காலை எல்லோரும் காலை உணவு சாப்பிடும் போது லீலா வேண்டும் என்றே மீராவை வம்புக்கு இழுத்தாள்.

“ஏன் மீரா,வீட்டில் தான் நீ ஒழுங்கா எதையும் இடிகுகாம்ல் தள்ளாமல் நொறுக்காமல் உடைக்காமல் நடக்க முடியாது;வெளியிலுமா அப்படி செய்ய வேண்டும் ? அதுவும் அந்த கெளதமுக்கு முன்னால்.என் மானமே போச்சு தெரியுமா.எப்படியோ மழுப்பி சமாளித்துக் கொண்டேன்.”

“ஆமாம்.இவளுக்கு மட்டும் தான் மானம் இருக்கிற மாதிரி பேசுகிறாள்” என மீரா எண்ணிக்கொண்டாள்.

“ஏய் மீரா! என்ன உனக்குள்ளே நீ பேசிக்கிட்டு இருக்குறே.மனதில் பட்டதைச் சொல்லித் தொலையேன்.எப்போதும் படபடன்னு எதையாச்சும் பற்றி பேசிக்கிட்டு இருப்பே.இன்னிக்கு ஏன் இந்த அமைதி.ஓ..ஐ நோ.அவமானமா இருக்கா உனக்கு ?”

மீரா அமைதியாகவே இருந்தாள்.மறுபேச்சு பேச அவள் விரும்பவில்லை.லீலா தொடர்ந்தாள். “இன்றிரவு கெளதமின் தந்தை அவர் வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.நான்,அப்பா,அம்மா மூன்று பேரும் மட்டும் செல்கிறோம்.நீ வீட்டில் இரு.அங்கு வந்து இருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கினாலும் வாங்குவாய்.உனக்கு ஒன்று சொல்லட்டுமா ?நேற்று நீ விழுந்தது ஒரு வகையில் நல்லது தான்.ஏன் தெரியுமா ?” மீரா திடுக்கிட்டு லீலாவை ஏறிட்டுப் பார்த்தாள்.

மெல்லிய குரலில்,அவர்களின் பெற்றோர்களின் காதில் விழாத படி லீலா, “அப்போது தானே உன்னை விட நான் எவ்வளவு உயர்ந்தவள் என்று.அழகிலும்,அறிவிலும் குணங்களிலும் சரி.அவனும் மிகவும் அழகாக இருக்கிறான்.புத்திசாலியாவும் இருக்கிறான்.அவனுக்கு என் மேலே ஒரு கண் இருக்கிறது என்று நினைக்கிறேன்.அவன் எனக்கு ஏற்றவன் தானே ?” என்றாள்.

இவ்வளவு நேரம் லீலா பேசியதைக் கேட்ட மீரா கஷ்டப்பட்டுத் தன் மெளனத்தைக் கடைபிடித்தாள்.உள்ளுக்குள்ளே ஆயிரம் ஆயிரம் கேள்விகள் தோன்றிற்று.அதில் முக்கால்வாசி கேள்விக்கனைகள் இறைவனுக்குத் தொடுக்கப்பட்டன.என்னவோ எல்லாம் சொல்ல நினைத்தாள் ஆனால் எந்த முகத்தை வைத்துச் சொல்வது.முகத்தில் அறைந்தாற் போல லீலா அத்தனையும் சொல்லி விட்டாளே.அழகிருக்கா ?அறிவிருக்கா ? “அவள் டாக்டர்.நான் வெறும் பொருளியல் தானே படிக்கிறேன்.” என நினைத்தவள் அந்த இடத்தில் இருக்க பிடிக்காமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.ஆண்டவன் மீது ஆத்திரம் வந்தது.தன் மீது வெறுப்பு ஏற்பட்டது.இந்த ஜென்மத்தில் இவள் கொடுத்துவைத்து அவ்வளவுதான்.இனி அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக இப்படி பிறக்கக் கூடாது.

அன்றிரவு லீலா கெளதமின் வீட்டிற்குச் செல்ல அலங்காரம் பண்ணிக்கொண்டிருந்தாள்.நீல வண்ண ஜெர்ஜட் புடவையில் மிகவும் அழகாகத் தோன்றினாள்.வசீயம் செய்ய போகும் வசீயக்காரி போல காட்சியளித்தாள்.மீரா பொறாமையுடன் உள்ளுக்குள்ளே வெந்துகிட்டு இருந்தாள்.

லீலா மீராவை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே மீண்டும் ஒரு முறை அவளின் முன் நின்று பாவனை செய்தாள்.அவர்கள் விடைபெற்றவுடன் மீரா எரிச்சலுடன் தன் அறைக்குள் சென்று பொருள்கள் எல்லாம் தூக்கி எறிந்தாள்.முதலில் தலையணைகள் பறந்தன.அவற்றைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக சிறகுகள் இல்லாமல் நன்றாகவே பறந்தன.அவளின் கோபம் தீரும் வரை.பிறகு கட்டில் மீது களைத்து உட்கார்ந்தாள்.கண்களை மூடிக்கொண்டு அப்படியே படுக்கையில் சாய்ந்துகொண்டாள்.திடாரென்று வாயில் மணி ஒசை அழைத்தது.லீலா கண்விழித்துக் கடிகாரத்தைப் பார்த்தாள்.மணி ஒன்பதைக் காட்டியது.

“அப்பா வர மணி பத்தாகிவிடும் என்றாரே.இந்த நேரத்தில் யாராக இருக்கக் கூடும் ?நான் தனித்து இருப்பது எவனாவது அறிந்துவிட்டானா ?” மனதில் அச்சம் ஏற்பட்டது.மீண்டும் மணி ஒலித்து.

களைந்திருந்த முடியைச் சீர் செய்து கொண்டாள்.தன் மேசையின் அருகில் நின்ற கிரிக்கெட் கம்பைப் பார்த்தாள். “எதற்கும் பாதுகாப்பிற்கு இதைக் கொண்டு போகலாம்.” எண்ணியவாறே கீழே சென்றாள்.மெதுவாகக் கதவைத் திறந்தாள்.அதிர்ச்சியில் அப்படியே சிலையாக நின்றாள்.கையில் இருந்த மட்டை கீழே விழுந்தது.அவன் தான்! அவனே தான்.இவன் எங்கே இங்கே ? குழப்பத்துடன் ஒன்றும் செய்வதறியாது திரு திருவென விழித்தாள்.

தொண்டையை இலேசாக உறுமிவிட்டு, “நான் உள்ளே வரலாமா ?” எனக் கேட்டான்.ஆட்டி வைத்த தலையாட்டி பொம்மை பொல தலையசைத்தாள்.கெளதம் உள்ளே வரும் போது கீழ் விழுந்த மட்டையை எடுத்துப் பார்த்தான். “ஹ்ம்ம்…வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை இதைக் கொண்டுதான் வரவேற்பீர்களா ? இதைக் கொண்டு வந்ததற்கான அவசியத்தை யாம் அறியலாமோ ?” எனக் கிண்டலாகக் கேட்டான்.மீராவின் கண்ணங்கள் சிவந்தன.

அதைக் கவனித்து விட்டான். “உங்களுக்கு ஒன்று சொல்லவா ? நீங்கள் இப்படி வெட்கப்பட்டு நிற்கும்போது எவ்வளவு அழகாக இருக்கீங்க தெரியுமா ? பெண்மைக்கு அழகே வெட்கம் தான்.” என்றான் கண்களைச் சிமிட்டிக்கொண்டு.மீராவிற்கு ஒன்றும் புரியவில்லை. “நான் அழகா ? போதையில் உளறுகிறானா ?” அவனை உற்றுக் கூர்ந்து கவனித்தாள்.போதையில் இருப்பவன் போல அவன் தோன்றவில்லையே.வாடை ஏதும் அடிக்கவில்லை.

“எல்லோரும் உங்கள் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள்.நீங்கள்…” தயக்கத்துடன் பேசத் தொடங்கினாள்.

அவன் சிரித்துக்கொண்டே ஆமாம் என்றான். “அவர்களைப் பார்த்துப் பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.” அவளின் குழப்பம் நிறைந்த முகத்தைக் கண்டு புன்னகைத்தான். “அப்பா தானே அழைத்தார்.நான் இல்லையே.சோ…மரியாதைக்கு அவர்களிடம் சற்று உரையாடிவிட்டு முக்கியமான ஃபிரண்ட் பார்க்ச் செல்கிறேன் என்று சொல்லி இங்கே வந்திருக்கின்றேன்.” அவள் அருகில் வந்து அவள் கையைப் பற்றிக்கொண்டு பக்கத்திலிருந்த நாற்காலியில் அவளை அமர்த்தினான்.அவள் எதிரே அவனும் உட்கார்ந்தான்.அவளின் கையைத் தன் பிடியிலே சிறை வைத்துக்கொண்டான்.

“மீரா.எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது.என் கண்ணுக்கு நீ தான் அழகாகத் தென்படுகிறாய் உன் அகந்தை மிக்க அக்கா லீலா அல்ல.அதில்ம் நேற்று ஒவ்வொரு முறையும் நம் கண்கள் சந்தித்த போது நீ வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாயே; அந்த வெட்கம் எனக்குப் பிடித்திருந்தது.நீ மற்றவர்களிடம் பேசியதைக் கேட்டேன் பார்த்தேன்.அந்த பேச்சு எனக்குப் பிடித்திருக்கிறது.எனக்கு உன்னைத் தான் பிடித்திருக்கிறது.உன்னைத் தான் விரும்புகிறேன்.உன்னைத் தான் மணப்பேன்.உனக்காக என்றும் காத்துக்கொண்டிருப்பேன்.

இவ்வளவு நேரம் அவன் படபடன்னு பேசியதைக் கேட்ட மீராவிற்கு உண்மையில் இது ஒரு இன்ப அதிர்ச்சி. “கெளதம் என்னை விரும்புகிறாரா ? என்னை விரும்புகிறார் லீலாவை அல்ல. என்னை; மீராவை விரும்புகிறார்.” நானும் உங்களை விரும்புமிறேன் என அவள் சொல்லத் துடித்தாள்.நாணம் தடுத்தது.சில வினாடிகளுக்கு அங்கு ஒரு இனிமையான மெளனம் நிலவியது. இருவரும் வேறு என்ன பேசுவது எனத் தெரியாமல் விழித்தார்கள்.நிமிடங்கள் கழித்து கெளதம் எழுந்தான்.அவள் நெற்றியில் இதமான முத்தம் ஒன்று தந்தான்.

“உன் மெளனத்திலிருந்து உன் சம்மதத்தைப் புரிந்து கொண்டுவிட்டேன்.நேரம் ஆகிவிட்டது.நான் நாளை சாயங்காலம் மீண்டும் வருவேன்.உன் பெற்றோர்களைப் பார்த்துப் பெண் கேட்க.” மீரா திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். அவன் குறும்புத்தனமாகக் கண் சிமிட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டினான். “நான் உன்னைப் பார்க்க வருவேன்.உன்னை மட்டும் தான்.நம் திருமணம் உன் படிப்பு முடிந்து கண்டிப்பாக எல்லோரின் ஆசிகளுடன் நடக்கும்.” சொல்லி புன்னகைத்தான். மீராவும் இலேசாகப் புன்னகைத்து அவனுக்கு விடை கொடுத்தாள்.அவன் சென்றதும் கதவை மூடி அதன் மீது சாய்ந்து கொண்டாள்.

சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும் போன்றிருந்தது.ஆண்டவா.உடனே அவள் மேலே சென்று தனது நாட்குறிப்பை எடுத்தாள்.

“அன்புள்ள ஆண்டவனுக்கு,

உனக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை.அழகும் அறிவும் தான் மிக மிக முக்கியம் எனத் தவறாக எண்ணிவிட்டேன்.உன்னைக் காயப்படுத்திவிட்டேன்.என்னை மன்னித்துவிடு.என் அக்காவைப் போல பேரழகியாகவோ மெட்டிக்காரியாகவோ இல்லாமல் இருந்தாலும் எனக்கு ஒரு நல்ல அருமையான கணவனை அளித்திருக்கிறாய்.உன்னை நான் என்றென்றும் மறவேன்.நன்றி ஆண்டவா.

மீரா”

என முடித்துக் கொண்டு கண்கள் மூடி இனி வரும் இன்பமான நாட்களை நினைத்து இன்ப வெள்ளத்தில் மூழ்கினாள்.

—-

ரேணுகா விசுவலிங்கம்,சிங்கப்பூர்

Series Navigation