அன்பின் விளைச்சல் (எனது இந்தியா – ஜிம் கார்பெட் நூல் அறிமுகம்)

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

பாவண்ணன்


ஆங்கிலேயர் என்றதுமே நம் சமூகத்தின் பொதுமனத்தில் படிந்திருக்கும் முக்கியமான படிமம் நம்மை அடிமையாக்கி ஆட்சி செய்தவர்கள் என்பதாகும். அவர்களால் இந்தியப் பொதுமக்கள் அடைந்த துன்பங்கள் அளவற்றவை. சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடைந்த துயரங்களுக்கு எல்லையே இல்லை. மனிதர்களைச் செக்கிழுக்கவைப்பது என்பது சாதாரணமான கொடுமையல்ல. அவர்களால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்குக் கணக்கே இல்லை. அவர்களுடைய கொடுமைகளுக்கெல்லாம் உச்சமாக விளங்கும் இடமான அந்தமான் சிறையையும் அங்கே விதிக்கப்பட்ட தண்டனைமுறைகளையும் தூக்குத் தண்டனைகளை நிறைவேற்றக் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளையும் கண்ணால் பார்த்தவர்கள் ஆங்கிலேயர்களைப்பற்றிய மனப்படிமத்தை மாற்றிக்கொள்வது உண்மையிலேயே மிகவும் சிரமமானது. ஆனால் மனிதர்களை அப்படிக் கருப்பு வெள்ளையாகப் பிரித்துப் புரிந்துகொள்ளச் செய்யப்படும் முயற்சிகள் நமக்கே இழப்புகளைத் தரும்.

ஆங்கிலேயர்களிலும் அன்பு நிறைந்தவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு மனிதர்களை மதிக்கத் தெரிந்திருந்தது. நம் மொழிகள்மீதும் சமூக அமைப்புகள் மீதும் நாட்டம் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள். எளிய இந்தியர்களை நேசித்த ஆங்கிலேய அதிகாரிகளும் உண்டு. அரசு ஒதுக்கிய பணம் போதாத நிலையில் இங்கிலாந்தில் இருந்த தன் சொத்துகளை விற்றுப் பணமாக்கி எடுத்துவந்து பொதுமக்களுடைய பயன்பாட்டுக்காக முல்லைப் பெரியாரின் குறுக்கே அணைக்கட்டைக் கட்டிய பென்னி குயிக்கை யாராலும் மறக்கமுடியாது. இங்கே நிலவிய சாதிநடைமுறைகளைப் பொருட்படுத்தாமல் அனைவரும் ஒன்றாக ஒரே கூரையின்கீழே படிப்பதற்கு ஏதுவாக பள்ளிக்கூடங்களையும் பல்கலைக்கழகங்களையும் தொடங்கிய ஆங்கிலேயர்கள் என்றென்றும் நினைத்துப் போற்றத்தக்கவர்கள். இந்த வரிசையில் எளிய இந்தியப் பழங்குடியினரையும் மலைவாழ்மக்களையும் நேசித்து நெருக்கமாகப் பழகியவர் நைனிடாலில் பிறந்த ஆங்கிலேயரான ஜிம் கார்பெட்.

மொக்கமெகாட் வனப்பகுதியில் பிரிட்டானிய ரயில்வே ஒப்பந்தக்காரராக ஏறத்தாழ இருபத்தோரு ஆண்டுகள் கூலித்தொழிலாளிகளிடையே எந்த வித்தியாசமும் பாராட்டாமல் வசித்தவர் அவர். தன்னுடைய ஒப்பந்தத் தொழிலில் கிடைத்த லாபப்பணத்தில் மலைக்கிராமத்துக்குள் வனவிலங்குகள் புகுந்து தொல்லை தராதவகையில் ஏழெட்டு மைல் சுற்றளவுக்கு நல்ல உயரமான பாதுகாப்புச் சுற்றுச்சுவர்களைக் கட்டித் தந்தவர். தன்னுடைய ஒப்பந்த ஆட்கள் வசிப்பதற்குத் தன்னுடைய வசிப்பிடத்துக்கு அருகிலேயே குடியிருப்புகளைத் தாமாகவே மனமுவந்து கட்டித் தந்தவர். பார்ப்பதற்கே பலரும் அஞ்சக்கூடிய காலராநோயால் தாக்கப்பட்ட பலரை தன்னுடைய பாதுகாப்பில் வைத்து மருத்துவம் செய்வித்துக் குணப்படுத்தியவர். தனக்கு ஒப்பந்தத்தை வழங்கிய நிறுவனம் தனக்குரிய சம்பளப்பணத்தைத் தராமல் ஏறத்தாழ மூன்று மாதகாலம் தாமதப்படுத்திய சமயத்தில் தொழிலாளிகளின் துன்பத்தில் பங்கெடுத்துக்கொள்ளும்வகையில் அவர்களைப்போலவே தாமும் ஒருநாளைக்கு ஒருவேளைமட்டுமே உணவு உட்கொண்டவர். அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்துவிடக்கூடிய ஆட்கொல்லி வேங்கைகளையும் சிறுத்தைகளையும் தன் வேட்டைத் திறமையால் கொன்று எளியவர்களின் பாதுகாப்புக்கும் நிம்மதிக்கும் துணைநின்றவர்.
வேட்டை அனுபவங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து அவர் எழுதிய நூல்கள் அனைத்துமே படிக்கவேண்டியவை. அன்பும் எளிமையும் கொண்ட எளிய மக்களைப்பற்றிய அவருடைய மனப்பதிவுகள் இலக்கியத் தகுதி கொண்டவை. இவர்கள் வழியாக இந்தியாவைப் புரிந்துகொண்ட அனுபவங்களைத் தம் எல்லா நு¡ல்களிலும் அவர் பதிவு செய்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு தி.ஜ.ர. மொழிபெயர்ப்பில் “குமாவும் புலிகள்” என்னும் நூலைப் படித்த தமிழ் வாசகர்களுக்கு யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் எனது இந்தியா நூல் ஜிம் கார்பெட்டின் வாழ்வியல் பார்வையையும் இந்த மண்ணின்மீதும் எளிய மக்கள்மீதும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டைப் புரிந்துகொள்ளத் துணையாக இருக்கிறது.

“சிவப்பு நாடாவுக்கு முந்தைய நாட்கள்” என்னும் பகுதியில் ஒரு பஞ்சாயத்துக் காட்சி இடம்பெறுகிறது. தெராய் மற்றும் பாபர் பிரதேசங்களின் ஆட்சியாளரான ஆண்டர்சன் முன்னிலையல் அந்தப் பஞ்சாயத்து நடைபெறுகிறது. வழக்கு விவரம் இதுதான். பொக்ஸார் என்னும் கிராமத்திலிருந்து ஒரு கால்வாய் ஓடிவந்து அடுத்த கிராமத்தைநோக்கிப் பாய்கிறது. இரண்டு கிராமங்களின் விவசாயத்துக்கும் அந்த ஒரே கால்வாய்தான் வாழ்வாதாரம். பொக்ஸார் மேட்டுப்பகுதியில் இருக்கும் கிராமம். இன்னொன்று தாழ்வான பகுதியில் இருக்கும் கிராமம். அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் பருவமழை பொய்த்துவிடுகிறது. தாழ்வுப்பகுதிக் கிராமத்துக்கு தண்ணீர் செல்லும் வழியை அடைத்துவிடுகிறார்கள் மேட்டுப் பகுதியினர். மொத்தத் தண்ணீரையும் அக்கிராமத்தவர்களே பயன்படுத்திக் கொள்கிறார்கள். தண்ணீர் வராததால் தாழ்வுப் பகுதியில் விளைந்த பயிர்கள் கருகி மடிந்துவிடுகின்றன. ஆண்டர்சன் பொறுமையாக இரு கிராமத்தவர்களின் வாதங்களையும் பொறுமையாகக் கேட்கிறார். தண்ணீர் செல்லும் வழியைத் தடுத்தவர்கள் தாமே என்று மேட்டுக் கிராமத்தவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தண்ணீரைப் பகிர்ந்துகொண்டிருந்தால் இருப்புக் குறைவான நீரால் இரண்டு கிராமங்களின் பயிர்களும் கருகி நாசமடைந்தருக்கும் என்பது அவருடைய வாதம். இரண்டு தரப்பு நியாயங்களையும் கேட்ட பிறகு, விளைந்த நெல்லை இரண்டு கிராமங்களும் தம்மிடம் உள்ள விவசாய நிலங்களின் பரப்பளவு அடிப்படையில் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறார் ஆண்டர்சன். இரண்டு கிராமங்களும் அந்த முடிவை ஏற்று உடன்படுகிறார்கள். இப்படி ஒரு உடன்பாடு நம் நாட்டில்தான் அரைநு¡ற்றாண்டுக்கு முன்னர் நடந்தது என்பதை இப்போது யாராவது நம்புவார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. நாடெங்கும் பல இடங்களில் நதிநீர்ப் பிரச்சனை தீராத துயரமாகப் படர்ந்திருக்கிறது. விவசாயிகளின் வாழ்க்கைப் பிரச்சனை இது என்னும் பரிவின்றி மொழி, இனம், மாநில உணர்வு என எத்தனைஎத்தனை நிறங்களை அதன்மீது ஏற்றமுடியுமோ அத்தனையும் ஏற்றி ஒவ்வொருவரையும் சண்டைக்காரர்களாகவும் பகைவர்களாகவும் மாற்றுகிறார்கள் அரசியல் தலைவர்கள். ஓர் ஆற்றின் மேட்டுப் பகுதியில் வாழும் மக்கள் மற்ற பகுதியினர்மீது உமிழும் வெறுப்புக்கும் கசப்புக்கும் அளவே இல்லை. ஓர் ஆங்கிலேய அதிகாரியால் கண்டடையமுடிந்த உடன்படிக்கையை இன்று நாட்டின் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளால்கூட காணமுடியவில்லை. மீண்டும்மீண்டும் வழக்குத் தகவல்களோடு நீதிமன்றங்களின் வாசல்களில் காத்துக்கிடக்கிறோம்.

சுல்தானா என்னும் கொள்ளைக்காரனைப்பற்றி எழுதப்பட்டிருக்கும் கட்டுரை நுட்பமான சில மனித உணர்வுகளைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு கட்டத்தில் கொள்ளைக்காரனுக்கும் காவல்துறை அதிகாரிக்கும் இடையே பேச்சுவார்த்தைக்காக ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. அச்சந்திப்பில் கொள்ளைக்காரன் அதிகாரியைச் சந்திக்க ஒரு தர்பூசணிப்பழத்தோடு வருகிறான். அவன் கையிலோ இடுப்பிலோ எவ்விதமான ஆயுதமும் இல்லை. சந்திப்பு சில மணிநேரங்கள் நீடிக்கிறது. அதிகாரியும் அக்கொள்ளைக்காரனைப் பிடிக்க எவ்விதமான தந்திரங்களையும் மேற்கொள்வதில்லை. தோல்வியில் முடிந்தாலும் மிகவும் கெளரவமான வகையிலும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலும் அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இப்படி ஒரு பேச்சுவார்த்தை இப்போது நிகழ்வதற்குச் சாத்தியமுண்டா என்று நினைத்தப் பார்க்கத் தோன்றுகிறது. இது மட்டுமல்ல, நினைத்துப் பார்க்க இன்னும் பல விஷயங்கள் உண்டு. கொள்ளைக்காரனுடைய இருப்பிடத்தைக் கண்டறிய காட்டுப்பகுதியில் அலைந்துஅலைந்து இறுதியாகக் கண்டுபிடிக்கிற சமயத்தில் அவர்கள் வெளியேறிவிட்டிருக்கிறார்கள். சுற்றுப்புறத்தில் இன்னும் கொஞ்சம் அலைந்து தேடுகிறார்கள் காவலர்கள். அக்குழுவில் ஜிம் கார்பெட்டும் உண்டு. ஒரு கால்வாயில் இறங்கி மறுகரையில் தேடச் செல்கிறார். மறுகரைக்குச் சென்றாலும் எதற்காகவோ ஒரு கணத்தில் மனம்மாறி திரும்பிவிடுகிறார். உண்மையில் அங்கே கொள்ளையர்கள் மரங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கிறார்கள். சுடுவதற்கு அவர்கள் கைகளில் துப்பாக்கிகளும் உண்டு. ஆனால் நெருங்கிவந்து தாக்காத வரையில் தாக்கக்கூடாது என்னும் மனநெறிக்குக் கட்டுப்பட்டு தன்னைக் கொல்லவந்தவர் என்று தெரிந்தும் திரும்பிச் செல்வதை வேடிக்கை பார்த்தபடி இருக்கிறார்கள். இதேபோல தொலைவில் தப்பித்துச் செல்லும் கொள்ளையர்களைச் சுடும்படி மற்றவர்கள் தூண்டும்போது தன்வசம் துப்பாக்கி இருந்தும்கூட கொள்ளையர்களைப் பிடிப்பதுதான் தன் நோக்கமே தவிர சுட்டுக்கொல்வது அல்ல என்று சொல்லிச் சுடமறுக்கிறார் கார்பெட். இறுதியில் காவலர்களிடம் பிடிபடும் கொள்ளைக்காரன் தன் குடும்பத்தவர்களைப் பாதுகாக்கும் வேண்டுகோளைக் காவல் அதிகாரியிடமே முன்வைக்கிறான். அக்கோரிக்கையை ஏற்று அவரும் பாதுகாக்கிறார். இப்படி வெவ்வேறு முனைகளில் வாழ்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு நெறிமுறைக்கு இணங்க அவர்கள் வாழ்ந்த விதம் மிகவும் முக்கியமாகப் படுகிறது.

தன் முகாமில் இருநூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரிந்தாலும் அவர்கள் பல்வேறு சாதிப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எவ்விதமான பிணக்குகளும் இன்றி ஒற்றுமையாகவே வாழ்ந்ததாக பல இடங்களில் குறிப்பிடுகிறார் ஜிம் கார்பெட். அவர் குறிப்பிடும் ஒரு சம்பவம் மிகவும் முக்கியமாகப் படுகிறது. இரண்டு மற்றும் மூன்று வயதுடைய இரு குழந்தைகள் ஒருமுறை வழிதவறி காட்டுக்குள் காணாமல் போய்விடுகிறார்கள். சாதிநிலையில் தாழ்ந்தவர்கள் அவர்கள். வேலைக்குச் சென்று திரும்பிவரும் பெற்றோர்கள் குழந்தையைக் காணாமல் பரிதவிக்கிறார்கள். அவர்களுக்காக இரங்கி மற்றவர்களும் காட்டுக்குள் சென்று தேடுகிறார்கள். குழந்தைகளைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஏறத்தாழ எழுபத்தேழு மணிநேரங்கள் கடந்த நிலையில் குழந்தைகள் இனிமேல் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணமே எல்லாருடைய மனத்திலும் மேலோங்கி இருக்கிறது. அப்போது தற்செயலாக காட்டின் வேறொரு பகுதியிலிருந்து ன் குடியிருப்பைநோக்கித் திரும்பிவரும் ஒரு பிராமணன் ஆடையின்றி பிரக்ஞை தப்பி தரையில் விழுந்து கிடந்த இரு குழந்தைகளையும் தோளில் து¡க்கிவைத்துக்கொண்டு வந்து அக்கிராமத்தவரிடம் ஒப்படைக்கிறான். சாதி ஒரு தடையாக அவனிடம் செயல்படவில்லை. அது மட்டுமல்ல, அவனுடைய செயலுக்கு நன்றி தெரிவித்து அவர்கள் வழங்கும் எந்தப் பரிசையும் அவன் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை.

குன்வர்சிங், மோதி, புத்து, லாலாஜி, சமாரி என ஏராளமான மனிதர்கள் ஜிம் கார்பெட் வாழ்வில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரைப் பற்றியும் தாராளமாக இந்த நூலில் அவர் பகிர்ந்துகொள்கிறார். ரயில் நிலையத்தில் ஒரு பெஞ்சில் சுருண்டு படுத்துக்கொண்டிருப்பவரை ரயிலுக்காகக் காத்திருப்பவர் என்கிற எண்ணத்தில் எழுப்பிவிடுகிறார் கார்பெட். எழுப்பியபிறகுதான் அவர் காலரா காய்ச்சலால் தாக்கப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. உடனடியாக அவரைத் தன்னுடைய வேலையாட்களின் குடியிருப்புகளில் ஒன்றுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்து மருத்துவத்துக்கு ஏற்பாடு செய்கிறார். அவர் நன்றாகத் தேறியபிறகு பெரிய வியாபாரியாக இருந்து நண்பரின் மோசடியால் அனைத்தையும் இழந்து இன்னொரு வியாபாரியிடம் வேலைக்காரனாகப் பணிபுரியும் கதையை அறிந்துகொள்கிறார். அவர் புறப்பட்டுச் செல்லும் தருணத்தில் அவரே நினைத்துப் பார்க்காத வகையில் ஐந்நு¡று ரூபாய் பணத்தைத் தந்து மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கும்படி சொல்லி அனுப்பி வைக்கிறார். திரும்பிவரும் அல்லது வராது என்கிற எந்த எண்ணமும் இல்லாமல் தன்னிச்சையாக உதவவேண்டும் என்கிற அகத்தாண்டுதலின்படி இயங்குகிறவராகக் காணப்படுகிறார் கார்பெட். மிகவும் குறுகிய காலத்தில் மீண்டும் வியாபாரியாகி நேர்மையான வகையில் லாபமீட்டிய தொகையில் வாங்கிய பணத்தைக் கொண்டுவந்து திருப்பித் தருகிறார் அவர். இரண்டு தலைமுறையாக உழைத்தும் அடைக்கமுடியாத கடனை தன் தொழிலாளிக்காக அடைத்து அவனைக் கொத்தடிமைத்தனத்திலிருந்து மீட்ட சம்பவத்தைப்பற்றி இன்னொரு இடத்தில் குறிப்பிடுகிறார். இந்தியாவில் வாழ்ந்த நாட்களில் ஒரு சின்ன மனக்கசப்பான சம்பவம்கூட நிகழ்ந்ததில்லை என்று குறிப்பிடும் கார்பெட் தன் வாழ்நாளில் புரிந்துகொண்ட ஒரு சின்ன உண்மையைச் சொல்லி இப்புத்தகத்தை முடிக்கிறார். இந்தியாவின் வறியவர்களிடையே பரஸ்பர விரோதம் என்றும் இல்லை என்பதுதான் அந்த உண்மை. ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்காலம் ஏழை எளியவர்களிடையேயே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட ஜிம் கார்பெட்டுக்குக் கிடைத்த தரிசனத்தை நாம் எப்போதாவது அடைந்திருக்கிறோமா என்பது நமக்குநாமே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி.

( எனது இந்தியா – ஜிம் கார்பெட். தமிழில்: யுவன் சந்திரசேகர். காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை. நாகர்கோயில், விலை ரூ.125)


paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்