அந்த ஒரு மாதம்…

This entry is part [part not set] of 22 in the series 20020714_Issue

ஆனந்தன்..


அந்த விமானத்தின்
இருக்கையில்
இருக்க மூடிய
இரு கண்கள் – என்
மனதை கனப்படுத்தின….

ஒரு வருடம் தவமிருந்து
ஒரு மாதம் பெற்ற விடுமுறை
ஒரு நொடியில் மறைந்தது…

சென்னை வாசம் நுகர்ந்த
செழிப்பான அந்த
முதல் நாள் – என்
முன் நின்றது, முத்தாக!

எல்லையிலாத மகிழ்ச்சியின்
எல்லையைத் தொட்ட
எழுச்சியான நாளது!

உதட்டோரம் பூக்கும்
ஊமைப் புன்னகையைக் கழுவி
உள்ளம் நெகுழும்
உண்மை புன்னகைக்கு
உயிர் தந்த நாளது…

ஆனந்தக் கண்ணீருடன் அன்னை..
அமைதியான பதட்டத்துடன் தந்தை..
ஆரவாரத்தின் பிடியில் நண்பர்கள்..!

மாசு படிந்த
காற்றிலும் கறைபடியாத
மனங்கள் அவை..!
இன்பத்தின் இமாலய
சிகரங்கள் அவை..!

கண் இமைக்கும் நேரத்தில்
மீண்டும்
பிரியா விடை கொடுக்க
கண்ணீருடன் அன்னை..!
நண்பர்களின் ஆரவாரத்துக்கு – இன்று
மெளன விரதம் போலும்!

சைவமா ? அசைவமா ?
எனும் ஆங்கிலக் குரல் கேட்டு
என் கன்னத்தைச் சூடாக்கிய
இரு துளிக் கண்ணீரையும்
துடைத்து விட்டு
‘சைவம் ‘ என்றேன்..!

***

Series Navigation

ஆனந்தன்

ஆனந்தன்