அதீதப் புள்ளி

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

நரேந்திரன்


காரை விட்டிறங்கி ஆர்-2 காவல் நிலையத்தினுள் நுழையும் போது இருட்டத் துவங்கியிருந்தது. கட்டைத் துப்பாக்கியுடன் பாரா நின்ற போலிஸ்காரர் என் சூட்டையும், கோட்டையும் கண்டு ஒரு கணம் குழம்பி, எதற்கும் இருக்கட்டுமே என்று மளாரென ஒரு சல்யூட் வைத்தார். முன்னறையில் கால்களை மேசையின் மீது வைத்துக் கொண்டு கதையளந்து கொண்டிருந்த இரண்டு போலிஸ்காரர்கள் தொப்பியைச் சரி செய்து கொண்_ ce வேகமாக எழுந்து நின்றார்கள்.

‘என்ன வேணும் சார் ? ‘ என்று கேட்டவர் ஹெட் கான்ஸ்டபிளாக இருக்க வேண்டும்.

‘எம்மாரெல் கம்பெனியிலேர்ந்து வர்றேன். எங்களோட ஆஃபிசர் ஒர்த்தரை இந்த ஸ்டேஷன்ல பிடிச்சு வச்சிருக்கிறதா தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் இருக்கிறாரா ? ‘ என்றேன்.

‘அப்பிடிங்களா சார்! ஒங்க ஆளுதானா அது! ரொம்ப பேஜார் புட்ச்ச கேசு சார் அவுரு! உள்ளார போங்க சார். ஐயாவாண்ட ஒக்காந்துகிணு கீறாரு! ‘ என்றார் என்னை மேலும் கீழும் அளந்து கொண்டே.

ஆர்-2 காவல் நிலையம் இருந்தது ஒரு பழைய பிரிட்டிஷ் காலக் கட்டிடத்தில். மியூசியத்திலிருந்து கடத்தி வரப்பட்டவை போன்ற மேசை, நாற்காலிகள். யாரோ ஒருவர் அதன் மீது குனிந்து மும்முரமாக எழுதிக் கொண்டிருக்க, மேலே ‘இப்பவோ அப்பவோ ‘ ஃபேன் ஒன்று ‘ரண்டக்கு, ரண்டக்கு ‘ என்று ஓடிக்கொண்டிருந்தது. ‘தெ. பெரியாண்டி, துணை ஆய்வாளர் ‘ என்ற போர்டு மாட்டியிருந்த அறைக்குள் நுழைந்தேன். மங்கலான அறைக்குள் புகை மூட்டம் பரவி அதனை இன்னும் மங்கலாக்கி இருந்தது. ஐயா பெரியாண்டி ஒரு செயின் ஸ்மோக்கிங் ஆசாமியாக இருக்க வேண்டும்!

கன்னம் வரை நீண்டிருந்த பெருமீசை வைத்து, கறுத்துப் பருத்த து.ஆ., தெ. பெ. ஆண்டியவர்கள் தொலை பேசியில் எச்சில் தெறிக்கக் கெட்ட வார்த்தையில் முழங்கிக் கொண்டிருந்தார். மாமூலான பிரச்சினையாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். எதிர்முனை ஆசாமியின் பிறப்பு, வளர்ப்பு ஜாதகம் நார் நாராய்க் கிழிபட்டுக் கொண்டிருக்க, வலது கையை நீட்டி எனனை உட்காரும்படி சைகை காட்டினார் து.ஆ., _ a6த.பெ.

நாற்காலியில் உட்கார எத்தனிக்கையில் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த உருவத்தைக் கண்டதும் என் அடிவயிறு சுருண்டது. தலை கலைந்து, கிழிசல் சட்டை பேண்டுடன், முகம் வீங்கி, உதட்டில் ரத்தம் வழிய உட்கார்ந்திருப்பவர்தான் எம்மாரெல்லின் சீனியர் டைரக்டர்களில் ஒருவனான ராம்நாயக் என்று வேறொரு சந்தர்ப்பத்தில் சத்தியம் செய்தாலும் நம்பி இருக்க மாட்ே டன். அடடா! ராம்நாயக்தான் எத்தனை அழகாக, டாக்காக உடையணிவான் ? கத்தி போலச் சலவை செய்யப்பட்ட வெள்ளைச் சட்டையும், கருப்பு பேண்டும், கண்ணாடி போல பாலிஷ் செய்யப்பட்ட பள பளா ஷூவும் அணிந்து ஸ்டைலாக அவன் நடந்து வருவது நினைவிற்கு வர, இப்படிக் கிழிசல் உடையில் ராம்நாயக்கை பார்ப்பது என்னைச் சிறிது சங்கடப்படுத்தியது.

அவன் பார்வையைத் தவிர்க்கச் சுவற்றில் மாட்டியிருந்த காந்தியைப் பார்த்துக் கொண்டிருப்பதாக பாவ்லா செய்து கொண்டிருந்தேன்.

ராம்நாயக் விடுவதாக இல்லை. ‘ழேய் ப்ரேம்…என்னை இப்பிடி ஆக்கிட்டியேடா…நீ வெழங்குவியா ? ‘ என்றான் அழும் குரலில்.

ரிசீவரை வைத்து விட்டு நிமிர்ந்த ஆய்வாளருக்கு இது கேட்டிருக்க வேண்டும். அமர்ந்தவாறே ராம் நாயக்கின் கன்னத்தில் சுளீரென அறைய, சிவந்திருந்த கன்னம் இன்னும் ரத்தச் சிவப்புக்கு மாறியது. ‘ஐயோ! ‘ என்று சொல்வதாக நினைத்துக் கொண்டு ‘அழ்ழோ! ‘ என்றான். எனக்குச் சர்வாங்கமும் நடுங்கியது.

‘போடா வாடான்னா பேசறே ? அப்பிடியே சொவத்தோட வச்சு அப்பிப்பிடுவேன் அப்பி! மரியாத தெரியாத நாயே! ‘ என்று அவர் போட்ட கர்ஜனையில் முன்னறையில் இருந்த போலிஸ்காரர்கள் ஓடிவந்தார்கள். பாய்ந்து சென்று அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.

‘சார்…வேணாம்…நல்ல மரியாதைப்பட்ட பதவியில இருக்கிறவரு சார்…அடிக்காதீங்க ப்ளீஸ்.. ‘ என்றேன் கெஞ்சும் குரலில். படக்கூடாத இடத்தில் பட்டு ஏதேனும் ஆகிவிட்டால் நஷ்டம் எனக்கல்லவா ? ராம்நாயக்கின் தேவை பற்றி எனக்கு மட்டும்தானே தெரியும் ?

‘பெரிய மசுரு மரியாதை!…அண்ணாமலபுரத்துல சுவரேறி குதிச்சிருக்கான் சார் இந்தாளு! அதோடயா ? ஒரு அறுவது வயசுக் கெழவி கையப்புடிச்சு இழுத்திருக்கான். கேட்டா என் பொண்டாட்டிங்கிறான்…மிதிக்க வேண்டாமா தாயோளிய… ?! ‘

‘கொஞ்ச நாளா மனநிலை சரியில்லாம இருக்கிறாரு சார்…எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்…கேஸ் ஒண்ணும் போட்டுடாதீங்க…ப்ளீஸ்!…எங்களோட கம்பெனி பேர்தான் கெட்டுப்போகும்…! ‘ என்றபடி ஃபிரீப் கேஸைத் திறந்து ஒரு கட்டுப்பணத்தை மேசையில் வைத்தேன். எல்லாம் புத்தம் புதிய ஐநூறு ரூபாய்த்தாள்கள். து.ஆ.வின் விழிகள் வியப்பால் விரிய, போலிஸ்காரர்கள் ஆவென்று வாய்பிளந்தார்கள்.

அதன் பின் சகலமும் தலைகீழாய் மாறிப்போனது. நான் வந்ததையோ, ராம்நாயக்கை அழைத்துச் சென்ற விவரத்தையோ வெளியில் ஒருவருக்கும் சொல்ல மாட்டோம் என்று சத்தியம் செய்து கொடுத்தார்கள் அத்தனை பேரும். பாதாளம் வரை பாயும் பணம், போலிஸ் ஸ்டேஷன் வரை பாயாதா என்ன ? பாய்ந்ததே! இல்லாவிட்டால் ராம் நாயக் இப்படி அல்வா போல என்னிடம் வந்து மாட்டியிருப்பானா ? அவனைத் தேடி இரண் டு நாட்களாக பைத்தியம் பிடித்தவனைப் போல அலைந்தது எனக்குத்தானே தெரியும் ? போலிஸ் ஸ்டேஷனிலிருந்து அலுவலகத்திற்கு போன் வந்த போது அங்கிருந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று ?

அறுபது வயது கிழவனைப்போல தளர் நடை நடந்து வந்த ராம்நாயக்கை, கைத்தாங்கலாக அழைத்து வந்து காரின் பின் சீட்டில் படுக்க வைத்தேன். கணுக்காலின் பேண்ட் கிழிசலையும் மீறி ரத்தக்குதறல் அப்பட்டமாகத் தெரிந்தது. காரின் கறுப்புக் கண்ணாடிகளை ஏற்றி விட்டு, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தேன். ராம்நாயக்கை யாரேனும் பார்த்து விட்டால் என் அத்தனை திட்டமும் தவிடு பொடியாகிவிடுமே என்ப 8 எச்சரிக்கை உணர்வுடன். நல்லவேளையாகச் சாலையில் அத்தனை நடமாட்டமில்லை.

‘எம் பொண்டாட்டிக்குத்தான் என்னை அடையாளம் தெரியலே…நான் ஆசையா வளத்த டிங்கி (அன்னாரின் நாய்!) கூடவா என்னை மறந்து போகும் ?…என்னை வெரட்டி வெரட்டி கடிச்சுதே!…கடவுளே எனக்கு ஏன் இந்த நிலைமை ? ‘ பின் சீட்டில் விசும்பிக் கொண்டிருந்தான் ராம் நாயக்.

சாலையில் கார் முன்னோக்கி நகர, என் மனம் கடந்த சில தினங்களை நினைத்துப் பின்னோக்கி நகர ஆரம்பித்தது.

இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான டாக்டர் மாத்தூர் ரிசர்ச் லேபரெட்டரி (சுருக்கமாக எம்மாரெல்) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மனித மூளையின் செயல்பாடுகள் பற்றிய பல வெற்றிகர ஆராய்ச்சிகளை செய்திருக்கிறது எம்மாரெல். சென்ற வார ஒலிமுரசின் சினிமாக் குப்பைகளுக்கு மத்தியில் வந்த, ‘பக்கவாதம் தாக்கியவர்களை முழுமையாக குணப்படுத்தி இந்திய மருத்துவ கம்பெனி சாதனை ‘ என்ற செய்தியைப் படித்தவர்கள் அசாதரணர்கள். அப்படியாகப்பட்ட எம்மாரெல்லின் அனைத்து ஆய்வுகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சீஃப் ரிசர்ச் டைரக்டர் நான். அதாவது, நானாகிய ப்ரேம்குமார். எம்மாரெல்லின் நம்பர் டூ (அல்லது த்ரீயா ?).

பக்கவாதம் பாதித்த மூளைப்பகுதியில் பொருத்தப்பட்ட ஒரு சிறிய கம்ப்யூட்டர் சிப் மூலம் மின்னதிர்வுகளை ஏற்படுத்தி, செயலிழந்த மூளை செல்களை உயிர்ப்பிக்க முடியும் என்று கண்டுபிடித்ததுதான் எம்மாரெல்லின் சாதனை. அந்தச் சாதனையின் பின்னனியில் எனது பல தூக்கமில்லா இரவுகளும், பல விவாகரத்து மிரட்டல்களும் (என் மனைவியிடமிருந்துதான்!), விடுபட்டுப் போன பல சந்தோஷங்களும், வெளுத்த ரோமக்கற்றைகளும், M வடிவ முன் வழுக்கையும் இருந்தன என்பதனை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.

டாக்டர் மாத்தூர் ஒரு ஜீனியஸ். எம்மாரெல் இந்தியா முழுவதும் வேர் விட்டு, கிளை விட்டு, காய் விட்டு இன்னும் பல விட்டு பல்கிப் பரவி இருந்தது. டாக்டர் மாத்தூரின் சொத்து எவ்வளவு என்ற கணக்கு அவருக்கே தெரியாது என்பார்கள். அந்த அளவிற்கு ஸ்டிங்கிங் ரிச். குழந்தை, குட்டி எதுவும் இல்லை. மனைவியுடன் அவர் வசித்தது மாளிகை போன்ற அண்ணாமலைபுரத்து பங்களா ஒன்றில். அவருக்கு வலதுகரமாக நான். கட ந்த இருபது வருடங்களுக்கும் மேலாக உயிரைக் கொடுத்து உழைத்துக் கொண்டிருந்தேன். என்றாவது ஒருநாள் எம்மாரெல் சாம்ராஜ்யம் என் கைக்குள் வந்து விழும் என்ற கனவுடன்.

வெல், சாம்ராஜ்யக் கனவுகள் எப்போதும் பலிப்பதில்லை. இல்லையா ? அப்படித்தான் எனக்கும் நடந்தது. ஒரு கான்ஃபரன்ஸிற்காக பெங்களூர் சென்ற டாக்டர் மாத்தூர் எதோச்சையாக ராம் நாயக்கைச் சந்திக்க, எனது சாம்ராஜ்யக் கனவின் அஸ்திவாரம் தகர்ந்து போனது.

ராம் நாயக் பற்றி நிறைய எழுதலாம். எம்மாரெல்லின் உச்சநிலைக்கு எனது நேரடி போட்டியாளன். இளவயதினன். இரண்டு பி.ஹெச்.டிக்களுடன் மிகக் குறுகிய காலத்தில் எம்மாரெல்லின் உச்சிக்குப் போனவன். டாக்டர் மாத்தூரின் தற்போதைய blue eyed boy…போதுமா ?

எம்மாரெல்லில் எனது முக்கியத்துவம் சிறிது சிறிதாக குறைந்து கொண்டு போவதாக நினைத்துப் பொருமிக் கொண்டிருந்தேன். டாக்டர் மாத்தூர் வாய்க்கு வாய் ராம் நாயக்க்கின் புகழைப் பாடிக் கொண்டிருந்தார். கோபமும், பொறாமையும், இயலாமையும் என்னைத் தீயாய் எரித்துக் கொண்டிருந்தன. ஆறு மாத காலத்திற்குள் அனைத்துப் பொறுப்புகளையும் ராம் நாயக் வசம் விட்டு விட்டு, டாக்டர் மாத்தூர் ஓய்வு பெறப் போவதாக உலவிய வதந்தி என் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. எனது சாம்ராஜ்யக் கனவுகளை என்றைக்கும், யாரிடமும் நான் மறைத்ததில்லை. எனவே, என் எதிரில் வரும் அத்தனை பேரும் இதழ்க்கடையில் புன்னகையுடன் செய்வதாக நினைத்து நினைத்துக் குமைந்து கொண்டிருந்தேன். என் சப்ராஸி வைக்கும் சாதாரண சலாமில் கூட சந்தேகம் கொண்டு, அவன் என்னைக் கேலி செய்வதாக நினைத்து எரிந்து வி ழுந்தேன்.

இதற்கெல்லாம் உச்சமாக நடந்த ஒரு நிகழ்ச்சி என்னை ஆத்திரத்தின் சிகரத்தில் கொண்டு போய் நிறுத்தியது.

‘இன்டெலிஜன்ஸ் ட்ரான்ஸ்பர் இன்டர்ஃபேஸ் ‘ என்ற எம்மாரெல்லின் படு ரகசியப் ப்ராஜெக்ட் என் தலைமையில் கடந்த நான்கு வருடங்களாக நடந்து வருகிறது. இ.டி.இ. பற்றி ஏற்கனவே நீங்கள் கேள்விப்பட்டிருந்தீர்கள் என்றால், ஒன்று நீங்கள் நானாக இருக்க வேண்டும். அல்லது டாக்டர் மாத்தூராக இருக்க வேண்டும் அல்லது ராம்நாயக்காக இருக்க வேண்டும். உலகின் வேறு எந்த ஜீவராசியும் அதனைப்பற்றி அறிந்திருக் கவே முடியாது. அந்த அளவிற்கு எம்மாரெல்லின் படு ரகசியமான ப்ராஜெக்ட் அது. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ப்ராஜெக்ட்டின் பல துண்டுகளில் வேலை செய்து கொண்டிருந்தாலும், அதன் அத்தனை செயல்பாடுகளைப் பற்றிய விவரங்கள் எங்கள் மூவருக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். நிற்க,

முதலில் இ.டி.இ பற்றிய டெக்னிகல் சமாச்சாரங்களை கொஞ்சம் விளக்கி விடுவது நல்லது என நினைக்கிறேன்.

இ.டி.இ.யின் முக்கிய நோக்கம் உலகின் அனைத்து மனிதர்களையும் அறிவாளிகளாக்குவது!

மனித மூளையின் அளவு, இயக்கம், செயல்பாடு அத்தனையும் உலகின் மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியானதுதான். இல்லையா ? இருப்பினும் எல்லோரும் ஐன்ஸ்ட்டான் ஆகவோ, ராமானுஜனாகவோ, சி.வி.ராமனாகவோ ஆகிவிடுவதில்லை. எனவே, சாதாரண ஒரு மனிதனின் மூளையில் உள்ள தகவல்களை அழித்து விட்டு, அதன் மீது மேற்கண்ட அறிவாளிகள் என்று அறியப்பட்டவர்களின் தகவல்களை இ.டி.இ. மூலம் ஏற்றுவதுதான் இந்த ஆராய்ச்சி.

ஒரு மனிதனின் அறிவை, எண்ணங்களை, நுண்ணுணர்வுகளை, வாசனைகளை, நினைவுகளை இன்னொரு மனிதருக்கு மாற்றுவது சாத்தியமா என்று நீங்கள் நினைக்கக் கூடும். நம்புங்கள். எம்மாரெல் கண்டுபிடித்த நவீன டெக்னாலஜி மூலம் இது 100% சாத்தியம். சத்தியம்.

எம்மாரெல்லின் இ.டி.இ டெக்னாலஜி மூலம் மனித மூளையை ஒரு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கைப் போல உபயோகப்படுத்த முடியும். ஆம். செக்டர் பை செக்டர், பைட் பை பைட் ஆக மனித மூளையின் செல்களில் ஒளிந்திருக்கும் அனைத்துத் தகவல்களை அழிக்கவும் முடியும். இன்ன பிற சங்கதிகளை எழுதவும் முடியும். மொத்தத்தில் என்னை அவனாகவும், அவனை நானாகவும் எளிதில் மாற்ற முடியும். மனதளவில். இன்னும் எளிமையாஊ 8ச் சொல்வதன்றால், உடலால் கோவிந்தன் உள்ளத்தால் அப்துல் காதர்.

உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கடந்த நான்கு வருடங்களின் பெரும்பகுதி அந்த ஆராய்ச்சியில் கழிந்து கொண்டிருந்தது.

அறிவாளிகள் என்று அறியப்பட்டவர்களின் அறிவு முழுவதும் எம்மாரெல்லின் ப்ரெய்ன் டேட்டாபேஸில் சேமித்து, பின்னர் தேவைப்படுகையில் அந்த அறிவை இன்னொருவருக்கு ட்ரான்ஸ்பர் செய்வது என்பது எம்மாரெல்லின் எதிர்காலத் திட்டம். பண மழை வந்து கொட்டப் போகிறது என்று எல்லோரும் சப்புக் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.

இ.டி.இ டெக்னாலஜியில் பல குறைபாடுகளும் இருந்தன. உதாரணமாக, பத்து வயது குழந்தைக்கு, எண்பது வயது ஐன்ஸ்டானின் மூளையை ட்ரான்ஸ்பர் செய்தால், அந்த பத்து வயதுக் குழந்தையின் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் எண்பது வயது ஐன்ஸ்டானைப் போலத்தான் இருக்கும். இதனைச் சரி செய்ய ‘ப்ரெய்ன் ப்ரொளசிங் ‘ டெக்னாலஜி, ‘டாக்ரிப்டிங் மெதடாலஜி ‘ போன்றவைகளும் தேவைப்பட்டன. அதன் மூலம் கம்ப்யூட்டர் ஹார்ட் டி ஸ்கில் உள்ள சங்கதிகளை ப்ரவுஸ் செய்வது போல, மனித மூளைக்குள் உள்ள சங்கதிகளை ப்ரவுஸ் செய்து தேவையானவற்றை மாற்றியும், அழித்தும் செய்வதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருந்தேன்.

டெக்னிகல் மீட்டிங்கில், ‘இன்னும் இரண்டு கோடி ரூபாய்கள் தேவைப்படலாம் ‘ என்றேன் டாக்டர் மாத்தூரிடம்.

‘புல் ஷிட். இதுவரைக்கும் பதினெட்டு கோடி செலவாகி இருக்கிறது. இதற்கு மேல் ஒரு பைசா கொடுக்க மாட்டேன். எல்லாவற்றையும் மூட்டை கட்டி ராம் நாயக்கிடம் கொடுத்து விடு. ஆன வரை எல்லாவற்றையும் வேறு கம்பெனிக்கு விற்று விடலாம்… ‘ என்றார் எரிச்சலுடன். எல்லோரும் என் பார்வையைத் தவிர்த்தார்கள். ராம் நாயக் இளித்தான்.

காத்திருந்தவன் பெண்டாட்டியை, நேற்று வந்தவன் கொண்டு போனது மாதிரியல்லவா ஆகி விட்டது என் கதை!

எல்லாவற்றையும் ராம் நாயக்கிடம் ஒப்படைத்து விட்டு, பொருமலுடன் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன்.

பழிவாங்க வேறு வழிகளா இல்லை ? இருக்கவே இருக்கின்றன வெளிநாட்டுக் கம்பெனிகள். ரகசியமாக சில வெளிநாட்டுக் கம்பெனிகளைத் தொடர்பு கொண்டேன். விலை ? அதிகமில்லை ஜென்டில்மேன்! இரண்டு மில்லியன் யு.எஸ் டாலர்களும், ஏதேனும் ஒரு மேற்கத்திய நாட்டின் நிரந்தரக் குடியுரிமையும். இரண்டே மணி நேரத்தில், நான்கு வெளிநாட்டுக் கம்பெனிகளிடமிருந்து ரெஸ்பான்ஸ் வந்தது என்றால் நம்புவ தற்குச் சிறிது கடினமாக இருக்கலாம் உங்களுக்கு. எல்லோரும் சொல்லி வைத்தது போல இ.டி.இ கருவியின் ப்ளூ ப்ரிண்ட்களைக் கேட்க, சிக்கல் அங்கிருந்துதான் ஆரம்பமானது. அத்தனை ப்ளூ பிரிண்ட்களும் டாக்டர் மாத்தூரின் அறையிலிருக்கும் லாக்கரில் அல்லவா மாட்டிக் கொண்டிருக்கின்றன ?

அதற்கான சந்தர்ப்பம் தானாக வந்து வாய்த்தது.

‘இதுவரை செய்து முடிக்கப் பட்டிருக்கும் இ.டி.இ. பற்றிய டெமோ ஒன்றை எனக்கும், ராம் நாயக்கிற்கும் காட்ட வேண்டும் ‘ என்றார் டாக்டர் மாத்தூர்.

மனதில் திட்டங்களுடன், ஒரு வெள்ளிக்கிழமை மாலையைத் தேர்ந்தெடுத்தேன். அப்போதுதான் ஆஃபிஸ் வெறிச்சோடி இருக்கும். நடமாட்டமற்ற புறநகரப்பகுதியிலிருந்த டாக்டர் மாத்தூரின் ஒரு வீடு இ.டி.இ ஆராய்ச்சிக் கூடமாக செயல்பட்டதும் எனக்கு வசதியாக இருந்தது. வாட்ச் மேனைத் தவிர ஒருவரும் இருக்க மாட்டார்கள் அங்கே.

இ.டி.இ. கருவியின் செயல்பாடுகளை இருவருக்கும் விளக்கிக் கொண்டிருந்தேன். தீவிர காஃபி பிரியரான டாக்டர் மாத்தூருக்கு காஃபி எப்போது தயாராக ஒரு ப்ளாஸ்கில் தயாராக அவரருகே வைக்கப்பட்டிருக்கும். ஒரு சரியான சந்தர்ப்பத்தில் ஸ்லோ டிஸ்ஸால்விங் பாய்சனை ப்ளாஸ்கில் கலந்து வைத்தேன். ஒரு மனிதனை ஆறு மணி நேரத்த்திற்குள் சிறுகச் சிறுக, மெல்லக் கொல்லும் விஷம் அது. தடயங்கள் எதுவும் இல்லாமல், செயற்கையான இயற்கை மரணம். கியாரண்டாட்.

மருந்தின் வேகத்தில் சிறிது, சிறிதாக நினைவை இழந்து கொண்டிருந்த டாக்டர் மாத்தூர் நாற்காலியில் சரிந்து விழுந்தார். அவரை பிடிக்கப் போன ராம் நாயக்கின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேயரால் தொடர்ந்து பிஸ்ஸ்ஸினேன். முகத்தில் ஆச்சரியம் தேங்க, மயங்கிக் கார்பெட்டில் விழுந்தான் அவன்.

இ.டி.இ. மூலம் ராம் நாயக்கின் மூளையின் அத்தனை சமாச்சாரங்களையும் வெறியுடன் அழித்தேன். அவனின் இரட்டை பி.ஹெச்டிக்களும், ஐடியாக்களும், சிந்தனைகளும் காற்றோடு கரைந்து போயின. நான் நினைத்திருந்தால் அவற்றை ஒரு டேட்டா பேசில் சேமித்து வைத்திருக்க முடியும். ராம் நாயக் என்ற மனிதனை என் வாழ்க்கை விட்டு விரட்டுவதல்லவா என் இலட்சியம் ? அவனுடைய அறிவைச் சேமித்து வைத்தால் என்றேனும் ஒரு நாள் என் வாழ்க்கையில் குறுக்கிட நேராது என்பது என்ன நிச்சயம் ? வேறு யாரேனும் ராம் நாயக்கின் எண்ணங்களை டவுன் லோட் செய்து கொண்டால் என்னாவது ?

டாக்டர் மாத்தூர் சிறுகச் சிறுக இறந்து கொண்டிருந்தார். இ.டி.இ மூலம் அவரின் நினைவலைகளை ராம் நாயக்கிற்குள் ஏற்றினேன்.

இப்போது டாக்டர் மாத்தூர்தான் ராம் நாயக்! இல்லையிலை…ராம் நாயக்தான் டாக்டர் மாத்தூர்!

ராம் நாயக்கின் கைகளைக் கட்டி, ஒரு இருட்டான அறைக்குள் அவனைத் தள்ளினேன்.

டாக்டர் மாத்தூர் மறுதினம் அவரின் அண்ணாமலைபுர வீட்டில் மரணமடைந்தார். தூங்கும் போதே ஆவி பிரிந்தது!

செய்திப் பத்திரிகையில் வந்ததே சார்! நீங்கள் படிக்கவில்லையா என்ன ?!

இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி இருந்தது. ராம் நாயக் என்ற டாக்டர் மாத்தூரை சித்திரவதை செய்து, எம்மாரெல்லை என் பெயருக்கு எழுதி வைக்கச் சொல்வது. அதன் பிறகு எம்மாரெல் சாம்ராஜ்யம் என் கையில்! டாக்டர் மாத்தூரின் அறையில் ஒளிந்திருக்கும் புளூ பிரிண்டை எடுத்து வெளிநாட்டிற்கு விற்ற பிறகு, வங்கிக் கணக்குகளையும், ரகசிய குறியீட்டு எண்களையும் அறிந்து கொண்டான பின் ராம் நாபக் என்ற டாக்டர் மாத்தூரை காணாமல் போகச் செய்து விடலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

நான் ஒன்று நினைக்க, தெய்வம் வேறொன்று நினைத்திருந்தது.

அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து, ராம் நாயக் காணாமல் போயிருந்தான்.

காரின் டிஜிட்டல் கடிகாரம் மணி பதினொன்று:முப்பத்து மூன்று என்றது. எச்சரிக்கையுடன் காரை ஓட்டிக் கொண்டு, எம்மாரெல்லின் தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தேன். டாக்டர் மாத்தூரின் அறைக்கு இட்டுச் செல்லும், அவர் மட்டுமே உபயோகிக்கும் பிரத்யோக லிஃட் வழியாக ராம் நாயக்கை அழைத்துக் கொண்டு, அறையை வந்தடைந்தேன்.

கடலைப் போல பரந்து, விரிந்திருந்தது டாக்டர் மாத்தூரின் தனியறை. அறை மத்தியிலிருந்த பள பள மேசையின் மீது புத்தம் புதிய தொலைத் தொடர்பு சாதனங்களும், கம்ப்யூட்டரும், இதமான ஏ.சி. குளிரும், திரைச்சீலைகளும்… பார்க்கப் பார்க்க என் மனம் குதூகலத்தில் துள்ளியது. இன்னும் சிறிது நேரத்தில் அத்தனையும் எனக்கே எனக்குதான். சாம்ராஜ்யம் வென்ற சாம்ராட் அசோகருக்குக் கூட இத்தனை சந்தோஷம் கிடைத்திருக்குமோ என்னவோ ?

ராம் நாயக் (எ) டாக்டர் மாத்தூர், மேசையில் கிடந்த நியூஸ் பேப்பரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். டாக்டர் மாத்தூரின் மரணச் செய்தி புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. தன் மரணச் செய்தியை தானே பார்க்கும் பாக்கியவானல்லவா டாக்டர் மாத்தூர் ? எத்தனை பேருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம் ?

அவரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். லெட் ஹிம் டைஜஸ்ட் இட்….டாக்டர் மாத்தூர் புத்திசாலி. இப்போது அவருக்கு எல்லாம் புரிந்திருக்கும்.

‘ப்ரேம்…எதற்காக இந்தக் காரியத்தைச் செய்தாய் ? உன்னை என் மகன் போலல்லவா நடத்தினேன்… ‘ என்றார் நாத்தழுதழுக்க.

‘லுக்…அனாவசிய சென்டிமென்டெல்லாம் வேண்டாம். எம்மாரெல்லைக் கைப்பற்றுவது என் கனவு. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். என் வழியில் குறுக்கிடுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை அழிக்கத் தயங்க மாட்டேன் ‘

‘பேராசைப்படாதே ப்ரேம். நான் உனக்கு ஒத்துழைக்க மறுத்தால் என்ன செய்வாய் ? ‘

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இந்தக் கிழட்டு பாஸ்டர்ட் ?

‘ராம் நாயக்கின் மனைவியும், மகளும் என் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்கள். நான் நினைத்தால் அவர்கள் நாளைச் சூரியோதயத்தைப் பார்க்க முடியாதபடி செய்ய முடியும். நாளை மட்டுமென்ன ? என்றுமே…. ‘ எனக் கோபத்துடன் நற நறத்தேன்.

டாக்டர் மாத்தூரின் முகம் இருண்டது. அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘ஆல்ரைட்…என்னை என்ன செய்யச் சொல்கிறாய் ? ‘ என்றார் பெருமூச்சுடன்.

‘எம்மாரெல்லை என் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுக்க வேண்டும் ‘ என்று தயாராக வைத்திருந்த டாக்குமெண்ட்களை மேசையில் எறிந்தேன். ‘அதற்கு முன் லாக்கரில் வைத்திருக்கும் இ.டி.இ. ப்ளூ ப்ரிண்ட்களை எடுத்துக் கொடுங்கள் ‘ என்றேன்.

டாக்டர் மாத்தூர் எதுவும் பேசாமல் லாக்கரின் டயல்களைத் திருகி, ப்ளூ ப்ரிண்ட்களை வெளியே எடுத்தார். பாய்ந்து சென்று அவரிடமிருந்து அவற்றைப் பிடுங்கி அவற்றை மேசையில் பரப்பினேன். இ.டி.இ குறித்த ப்ளூ பிரிண்ட்களை பர பரப்புடன் தேட, ‘என் பொக்கிஷங்கள்!…என் பொக்கிஷங்கள்!! ‘ என்று மனம் குதியாளம் போட்டது.

டாக்டர் மாத்தூரிடமிருந்து மெல்லிய சிரிப்பொலி எழுந்தது. உக்கிரமாக அவரை நோக்கித் திரும்பினேன்.

‘உன் கனவு நிறைவேறப் போவதில்லை ப்ரேம். யூ ஆர் எ லூசர்! அதை மீண்டுமொருமுறை நிரூபித்து விட்டாய்! ‘ என்றார்.

‘வாட் டூ யூ மீன் ? எனது திட்டம் நிறைவேறியே தீரும். இங்கு நடந்ததை நீங்கள் வெளியில் சொன்னாலும் யாரும் நம்பப் போவதில்லை. அப்படியே சொல்வதற்கும் நீங்கள் உயிருடன் இருக்கப் போவதில்லை…ஜஸ்ட் வெயிட் அண்ட் ஸீ… ‘ என்றேன் ஆங்காரமாய்.

‘உன் திட்டம் ஓட்டைகள் நிறைந்தது ப்ரேம். எம்மாரெல்லின் பல புராஜெக்ட்களை சொதப்பியது போலவே இதனையும் சொதப்பி விட்டிருக்கிறாய்…இரண்டு விஷயங்களைக் கோட்டை விட்டு விட்டாய்…உன் தோல்வி அங்குதான் துவங்கி இருக்கிறது! ‘ என்றார் பலத்த சிரிப்புக்கிடையில்.

கிழவன் ஏதோ கோபத்தில் உளருகிறான் என்று பதில் பேசாமல் மெளனமாக நின்றிருந்தேன்.

‘எந்த இரண்டு விஷயங்கள் என்று நீ தெரிந்து கொள்ள வேண்டாமா ப்ரேம் ? நீ விரும்பாவிட்டாலும் நானே சொல்லி விடுகிறேன். ஒன்று, ராம் நாயக்கிற்கு தமிழ் தெரியாது. அவரைத் தெரிந்த எவருக்கும் இந்தச் சரளமான தமிழ் பேச்சு சந்தேகத்தை உண்டு பண்ணவே செய்யும். இரண்டு, டி.ஐ.ஜி. கோபால் ராவ் என் பால்ய நண்பர். பள்ளித் தோழர். எங்கள் இருவருக்கென இருக்கும் பல பிரத்யோக நினைவுகள் வேறு ஒரு_ c5ருக்கும் தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. அவரை நம்பச் செய்வது ஒன்றும் எனக்குக் கடினமாக இருக்கவில்லை… ‘ என்றார் டாக்டர் மாத்தூர் என்ற ராம் நாயக் புன்னகையுடன்.

என் கால்களில் யாரோ இரும்புக் குண்டுகளைக் கட்டிப் போட்டது போல கனக்க ஆரம்பித்தன. நா வறண்டு ஒருவித நடுக்கம் ஆரம்பமானது.

‘இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். இந்த அறையில் பொருத்தப் பட்டிருக்கும் ரகசிய வீடியோ கேமரா மூலம் நடந்தவை அனைத்தையும் சி.பி.ஐ முதற் கொண்டு, லோக்கல் போலிஸ் வரை அத்தனை பேரும் அடுத்த அறையிலிருந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். யூ ஆர் trapped மை ஃபிரண்ட்! ‘ என்றார் பலத்த சிரிப்புக்கிடையில்.

கதவுக்கருகில் காலடியோசைகள் கேட்க ஆரம்பிக்க, எனக்குத் தலை சுற்றி நினைவு தப்ப ஆரம்பித்தது.

#### முற்றும் ####

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்