அண்ணா – ஒரு SWOT(சுவாட்) – அனாலிசிஸ்

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

கே ஆர் மணி


அண்ணாவின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கின்றன.

அண்ணா இறந்த பின் பிறந்த தலைமுறை நான். மிகப்பெரிய பாசமும், கொள்கைபிடிப்புகளும்
அற்று, தேர்தல் நேரத்தில் போஸ்டர்களில் காணப்படுகிற நிழலான ஓரு முகமாக, அன்னியனாக,
வெறும் நிழற்படமாக அண்ணாவை பார்க்கும் இளைய தலை முறை எங்களது. இந்தி
எதிர்ப்புகளும், தனித்தேசமும் மிகப்பெரிய குரலாக ஓலித்து, ஓய்ந்த போராட்டகளம் தாண்டிய பின்னான
அமைதியான திராவிட அரசியல் விளையாட்டுகளத்திலிருந்தும், புத்தகம் மற்றும் மற்ற மனிதர்கள் வாயிலாகவும்
அவரை வாசிக்க முயல்கிறது என் தலைமுறை. அப்பாவின் டைரியிலிருந்து பழுப்பு பக்கங்கள்
வழியாகப்போகி தாத்தாவை தெரிந்து கொள்வதுபோல அண்ணாவை அறிந்துகொள்ளமுயல்கிறோம்,
அடுத்த வந்த தம்பிகளிடமிருந்தும், இரத்தத்தின் இரத்தங்களிடமிருந்தும். இந்த தலைமுறையின்
அளவுகோல்கள் வித்தியாசமானவை.

பொதுவாய் இது நுகர்வோர்களின் காலம். சந்தை பொருளாதாரத்தின் காலம்.

(Survival of the fittest) சக்தியானது மட்டுமே சாகாமல் இருக்கும். இந்த கடினச்சந்தையில் வெற்றிகள்
குருட்டாம்போக்கில் நடந்துவிடுகிற விபத்துகளல்ல. அவைகள் உட்கார்ந்து யோசித்து செய்யும் சமையலறை
தளிகையுமல்ல. வெற்றி, தோல்விகள் சந்தை போட்டியின் பெரும் மோதலில் சிதறும் விளைபொருள்கள்.
எல்லா வெற்றிகளும் அதற்கான பொதுக்காரணிகளை தங்களுக்குள் மறக்காமல் புதைத்துவைத்திருக்கின்றன.
அந்த வெற்றிகளைவிட அந்தக்காரணிகளே, அதன் சாரம்சமே அடுத்த தலைமுறைக்கு பொக்கிஸங்கள்.

அந்த சாராம்சத்தின் சாறு எடுப்பது எப்படி ?

இந்த பகுத்தாய்வை செய்ய நிறைய மேலாண்மை அறிவியல், (Management Science) சமூக சூத்திரங்கள்
கொட்டிக்கிடக்கின்றன. 360 டிகிரியில் விருப்பு, வெறுப்பின்றி தேவையின்றி அணுகி ஒரு பிராண்டின்,
ஒரு நிறுவனத்தின், தலைவரின் பலம், பலவீனம் மற்றும் அவர்/அது இயங்கிய சூழலிருந்த வாய்ப்புகளும்,
சவால்களும் கண்டறிந்து, அதிலிருந்து வெற்றிக்கான, தோல்விக்கான கண்ணிகளை பகுத்தறிந்து கொள்ளும்
முயற்சிகள் புதிதான ஓன்றல்ல. இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து வளர்ந்து வரும் மேலாண்மை துறையின்
எல்லைகளை விரிவுபடுத்தின.

ஓவ்வொரு அரசியல் தலைவரும் எனக்கு என்ன செய்தார்கள், என் சமூகத்தால் எப்படி நுகரப்பட்டார்கள்
என்று பார்க்கும் கோணம். தன் விருப்பு வெறிப்பின்றி எதன்மீதும் – ஒரு நுகர்பொருள் மீதோ, அரசியல் சித்தாங்கள்
மீதோ, அரசியல் தலைவனின் மீதோ – செய்யப்படும் மேலாண்மை சூத்திரங்களில் ஓன்றாக, ஸ்வாட் – SWOT –
சோதனையை சொல்லலாம். மாற்றப்படமுடியாத அடிப்படை விதிகள் எல்லாத்துறைகளிலும் உண்டு.
அதுபோல மாற்றமில்ல மேலாண்மை விதிகளை கொண்டு அண்ணாவை கொஞ்சம் அலசலாம். அண்ணா என்கிற
தலைவனின் பலம், பலவீனம் மற்றும் அவர் வாழ்ந்த சூழலின் வாய்ப்புக்களையும், சவால்களையும்
பட்டியலிட முயற்சிக்கலாம். அவரது வெற்றிக்கும், தோல்விக்கும் உண்டான காரண, காரியங்களை அலசும் சுவாட்
அனாலிஸ் குடுவையில் அண்ணாவை ஒரு தடவை முக்கி எடுக்கலாம்.

“சாதரண மனிதர்களை ஒரு குறிக்கோளின் பொருட்டு ஒரு தலைமையின் கீழ் இயங்கி அசாதரண செயல்களை
செய்வதே – நிறுவனமாகும் ” என்கிறார் மேலாண்மை குரு பீட்டர் ட்ரக்கர். ஒரு நிறுவனத்தின், தலைவனின்
கீழ் குறிக்கோளோடு இயங்கி சந்தைப்படுத்தபடும் சித்தாந்தமோ, நுகர்பொருளோ அதீத வீரியத்தோடு மக்களிடையே
கொண்டுசென்று அதன் நுகர்வோர்களின் எண்ணிக்கையை பெருக்கி அதன் சந்தையின் பலத்தை பெருக்குகிறது.
அதனால் நிறுவன கொள்கைகளும், அதனை நுகர்வோர்களும் துய்த்து பயனடைகிறார்கள் என்பதை சொல்லவும்
தேவையில்லை. நுகர்வோர்களின் எண்ணிக்கை அது செயல் செய்யும் சந்தை, அதன் போட்டியாளார்கள்
நுகர்பொருட்கள் மற்றும் மாறும் புற,அக காரணிகளால் மாறாது மாற்றம் அடைந்துகொண்டேயிருக்கிறது
என்பது அடிப்படை புரிதல்.

பொதுவான படிப்பினைகளை கற்றுக்கொள்ளும் பொருட்டும், மேலாண்மை தத்துவங்களை மற்ற துறைகளில் பொருத்தி
சோதிக்கும் முயற்சியே இது.

60களின் தென்னிந்திய ஓபமா :

ஓபமாவின் ஆட்சி மாற்றம் – உலகம் முழுவதும் ஒரு விதமான கிளர்ச்சியை தந்தது. அரசியல்
எதிராளிகளுக்கும் கூட.

மாற்றம் – அது ஒரு கிளர்ச்சியான அநுபவம். பழையன கழிந்து, பதவி இறங்கி, புதியன
அரசு ஏறும் கனவு எளிதானது. அதற்கான செயல்கள் வலி நிரம்பியவை. மக்கள் மனதினூடான
மாற்றமும் அதனால் விழையும் அரசியல் திருப்பங்களும் புரட்சியை இல்லாவிட்டாலும்
ஒருவித மாற்றத்தை கொடுக்கிற நம்பிக்கையை கொடுக்கின்றது.

மிகப்பெரிய பிரம்ம ராட்சனாய் இருந்த காங்கிரசு அரசை அசைத்தது, அதை எதிர்த்து
வீழ்த்தி மாபெரும் பெரும்பான்மையை ஒரு இளைஞர் பட்டாளம் மூலம் நிகழ்த்தி காட்டியது
ஒரு மகிழ்ச்சி மின்னூட்டத்தை ஓட்டு மொத்த சமூகத்திற்கே கொடுத்திருக்கலாம்.
அதை எப்படி எனது முந்தைய தலைமுறை கொண்டாடியிருக்கலாம் என்பதை இப்போது
ஓபாமாவை கொண்டாடும் என் தலைமுறையிலிருந்து நான் அறிந்துகொள்ளமுடிகிறது.

இருவருமே கீழ்தட்டு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். தனது பேச்சு, எழுத்து, மக்களை
கவரும் தன்மை, ஊடகங்களை பயன்படுத்துதல் என்பதன் மூலமாக வெகுஜன மக்களை
கண்டடைந்தவர்கள். மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு நிறைந்த நம்பிக்கையை வோட்டாக
மாற்றமுடிந்தது.

உண்மைச்சந்தை – தெருக்களில்தான் :
(Market is not in ivory towers, but in street)

உண்மையான நுகர்வோர்கள் மக்களே. கோட்டையிலும், குளிர் அறைகளிலும் சந்தைகளை உருவாக்கப்படும்
திட்டங்கள் செயிப்பதில்லை. அதற்கென்ற கட்டாய வெற்றி சூத்திரங்கள் இல்லை. குறுக்கு வழி சூத்திரங்கள்
நிரந்தர வெற்றி தருவதில்லை. மக்கள் ரசனை அறிதலும், அதற்கேற்ப வழங்கப்படும் நுகர்பொருள்களும்,
எப்போதும் நுகர்வோர்களிக்கிடையான தொடர்பும் கொண்ட நிறுவனங்களே முதிர்ந்த போட்டி நிறைந்த
சந்தைகளில் தங்களது பங்கை தக்கவைத்துக்கொண்டு உயிரோடிக்கின்றன. மாபெரும் திட்டங்களைவிட
புத்தகங்களை விட, அதிர்ஸ்டத்தைவிட உண்மையான வெற்றிக்கான சூத்திரங்கள் நிறுவனங்களின்
சந்தையுடன் கூடிய நெடுந்தொடர்பினால் மட்டுமே வளர்ந்து உயிர்பெறுகிறது.

அரசாங்களின் மாற்றங்கள் புத்தகங்களில் மட்டுமே உருவாக்கபடுவதில்லை. ஓவ்வொரு தெருத்தெருவாய் கால்
தேய்த்து செய்யப்படும் தலைவனின் பிரச்சாரத்தாலும் அவனை நம்பி தனது மனம், உடல் அனைத்தும் தரத்தயாராய்
நிற்கிற நிறுவனர்களாலும், ஓவ்வொரு துளியாய் சேரும் தொண்டானாலுமே பெரிய அரசுகள் கட்டப்படுகின்றன.
அப்படி கட்டப்படுகின்ற அரசுகளின் தலைவர்கள் தங்களோடு மக்களையும்,

மிகப்பெரிய போட்டியாளனிடம் மோது செயிப்பதும், சந்தையில் ஒரு போட்டியாளனாய் நிலைநிற்பதும் – அதற்கான
நம்பகமான, நுகர்பொருளின் மீது உணர்வுப்பூர்வமான தொடுப்பு கொண்ட வாடிக்கையாளார் அமைந்தாலும் மட்டுமே
சாத்தியம். சுருங்கக்கூறின், உண்மையான சந்தை ஏற்படுத்தப்பட்டு, கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே முடியும்.

கொள்கைகள் – கோவணங்களா ? :
(Strategy, policies are not to be carried for all segments)

வளரும் சந்தைகள், மாறும் நுகர்வோர் ரசனைகள், நிறுவனத்தின் தற்போதய
நிலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லல் என்கிறதான நிலமையில், திட்டங்களும்,
செயல்களும் பெருமளவோ, சிறிதளவோ மாறுதலுக்குட்படுகின்றன. மேலே பறக்கும் விண்கலங்கள்
அது உயர, உயர வெவ்வேறு உயரத்தில் அது உயர – உதவிய சக்திக்கலங்களை உதிர்த்துவிட்டுதான்
அடுத்தகட்டத்திற்கு நகரமுடிகிறது. கொள்கைகள் ஆட்சியை நோக்கி நகரும் காய் நகர்த்தலில்
மாறுபடலும், நழுவுதலும், கொஞ்சம் சுயமிழத்தலும் நியாயமானவையே. தேவையான நேரத்தில்
தேவையற்ற கொள்கைகள் மற்றும் அதன் தேவைகள் குறைந்த கொள்கைகள் சுமையாகவும்,
சிலுவையாகவும் அமையும். அதனை கடந்து செல்வதும், அதற்கான படிப்பினைகளை உள்வாங்கி
முன்செல்வதுமே கட்சியையோ, நிறுவனத்தையோ உயிர்வுடன் நிலைநிறுத்தும்.

நாத்திக கருத்திலிருந்து விடுபட்டு, ‘ஓன்றே குலம், ஒருவனே தேவன்’ மற்றும் ‘திராவிட நாடு
இல்லையேல் சுடுகாடு ‘ வாசகத்திலிருந்து விடுபட்டு ‘அதை கைவிட்டுவிட்டோம், அதற்கான
காரணங்கள் அப்படியேயிருக்கின்றன ‘ என்ற கொள்கை மாற்றமும், சேவை செய்கிற சந்தைக்கேற்பவும்,
மற்ற புறகாரணங்களாலும் ஏற்பட்ட தேவையான கருத்து வளர்ச்சி மற்றும் மாற்றங்கள். உற்று நோக்கினால்
அவர் வளர்ந்த அடிப்படையான(core) சித்தாந்தங்களிலிருந்து முற்றிலும் முரணான, தொடர்பற்ற
கொம்பை பிடித்துக்கொண்டு ஆற்றைக்கடந்தார் என்றால் மிகையாகாது. இப்படிப்பட்ட
மாற்றங்களின்றி அடுத்த கட்ட வளர்ச்சிக்கோ, மற்ற சந்தைகளுக்கோ கட்சியோ, நுகர்பொருளோ
செல்லாது. ஒரு பிரிவினைவாதம் பேசும், நாத்திக கட்சியாக அது குறுகி, அழிந்திருக்கும் நிலையிலிருந்து
இந்த மாற்றத்தை எவ்வாறு தலைவன் வழிநடத்தி சென்றார் என்பதிலேயே நீண்டகால வெற்றியின் சில
இரகசியங்கள் புதைந்திருக்கின்றன. சந்தையின் கட்டாயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப விலை, தரம், கொள்கைகள்,
செயற்திட்டங்கள், கூட்டணிகள் மாற்றிகொள்வது மேலாண்மை விதிகளில் ஓன்று.

பிரிவினைவாதமும், மத எதிர்ப்பு குரலும் – இந்திய அரசியல், சமூக சந்தையில் எப்போதும் விற்பனை
சரக்குகள் அல்ல. அவை ஏற்கனவே இருக்கிற நுகர்பொருட்களுக்கு சில மாற்றத்திற்கான அழுத்தங்களை தரலாமேயொழிய
அவை பெருவாரியாக நுகரும்பொருளாகாது.

“But electroral alliances or electoral adjustments have got nothing to do with ideologies ” …… we were not acting in accordance
with ideologies but only with a view to getting political alliances ” Anna’s Rajya Sabha Speech
25.01.1963

மாற்றம் – நல்ல விற்பனைபொருள் : (Change – Good Selling Commodity)

மற்ற பொருட்களின் போதமையை அறிதல், அதற்கான தீர்வாக தங்களது நுகர்பொருளையோ,
சேவையையோ முன்னுறுத்துதல், அதை சொல்லியே வாடிக்கையாளர்களை தம் பக்கம் இழுத்தல்,
மிகப்பெரிய மாற்றங்களை அது ஏற்படுத்திவிடும், மற்றும் இதுவரைக்குமான வலிக்கான ஒரு
நிவாரணமாகும் என்கிற எதிர்பார்ப்பை விற்று காசாக்குதல் (வோட்டாக்குதல்) ஒரு அடிப்படையான
சந்தைவிதிகளில் ஓன்று. உன் நுகர்பொருளை விற்பனை செய். மாற்றுப்பொருள் வாங்குபவனை குழப்பு.
குழம்பிய குட்டையில் மீன்பிடி. நிறைய சிக்கும். சிக்கியவரை லாபம். அதே மீன். அதே நறுமணம்.
ஆனாலும் மனதளவில் புதிதாயிருக்கிறதான தோற்றம்(மாயை) மனநிறைவை விளைவிக்கலாம்.

[Limitation of Other product should be your selling point ]

அண்ணாவால் மிகப்பெரிய மாற்றத்தை திராவிடயியக்கம் கொடுக்கமுடியும் என்று பெரும்பாலனவர்களை
நம்பவைக்கமுடிந்தது. அதன் முகங்களாய் முதல் தலைமுறை படித்து எழுந்துவந்த தலைமுறையையும்,
ஏற்கனவே படித்த இளந் தலைமுறையையும் மற்றும் படிப்பறிவில்லாத கீழ்த்தட்டு மக்களையையும் அவரால்
நம்பவைக்கமுடிந்ததற்கு காரணம், எல்லா தொகுப்பினரோடும்(Segment) அவர்கள் விரும்பும் ஒரு பகுதியை
தனது நுகர்பொருளில்(அரசியல் கொள்கை) கொண்டிருந்ததேயாகும்.

படிக்காத கீழ்த்தட்டு மக்களின் இனமான, தமிழ் உணர்வை மூலதனமாக்கியும், முதல் தலைமுறை படித்து
எழுந்துவரும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வளமான எதிர்காலக் கனவை மூலதனமாக்கியும் – உயர்சாதி
இந்துக்களின் இடமான காங்கிரசு எதிர்ப்பை மூலதனமாக்கியும் – அண்ணாவின் நுகர்பொருள், சந்தையில்
ஏற்கனவே பெரும்பான்மை பெற்றிருந்த சித்தாந்தங்களின் படகுகளில் ஓட்டைபோட்டது. அவரது நுண்மான்
நுழைபுலம், ஆங்கில மேதமை படித்தவர்களிடமும் மாற்றத்தின் பதற்றத்தை குறைத்தது.

ஆகவே சரியான மூலதனங்களோடு கூடவே மாற்றம் ஓன்றே மாறாதது என்ற விற்பனைவசனமும்
– நல்ல விற்பனை சந்தை தந்திரமானது. மாற்றம் – இப்போதே மாற்றம் [ Change now ] – அது எப்போதும்
எந்த சந்தையிலும் நன்றாக விற்கும் சரக்கு.

அதுவும் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிலைக்கும் ? எவை வேகமாக விற்கும் ?

இருப்பதையெல்லாம் துடைத்து எறிந்துவிடுகிற மாற்றங்கள் (distriptive innovation) எந்த சமூக சந்தையிலும்
நீண்டநாள் நிற்பதில்லை. மாறாக இருக்கிற நிலையிலிருந்து ஏற்படுகிற படிப்படியான முன்னேற்றங்களே
( incremental innvoation ) நீடித்து நிற்கின்றன. இவை தெரிந்தாலும், நுகர்வோர்கள் அறிந்தாலும்
விற்பனையாளர்கள் தங்களது செய்திகளில் இந்த மாற்றம் பூமியை புரட்டக்கூடிய நெம்புகோல் என்று தான்
கூவிக்கூவி விற்கவேண்டும். வெண்ணெயும், தேனும் நிறைய தடவின வாசகங்கள் நுகர்வோர்களின் மனதை
தைத்து, நெஞ்சில் நிரம்பி நாக்கை ஈரமாக்கவேண்டும். பொருட்கள் வாங்கப்படும்போதும், தேர்தலில் கையை
ஈரமாக்கிகொள்ளும்போது மூளையிலிருந்து எடுக்கப்படும் முடிவைவிட இதயத்திலிருந்துதான் (impulsive)
அநேகமாய் தீர்மானிக்கப்படுகின்றன. நுகர்பொருளோ, அரசியல் தலைவனோ இதயம் புகுதல் அவசியம்.
இங்குதான் விளம்பரங்களும், தலைவனின் ஆளுமைகளும், பேச்சும் எழுத்தும் தேவைப்படுகின்றன. அது
இதயத்தில் புகுந்து உணர்வாய் தொடல் வேண்டும்.
(Emotional touch)

மனிதவளம் (தொண்டர்கள்) – விலைமதிப்பிடமுடியாத சொத்து :
(Talking along the people is vital success for Good to Great Companies)

நல்ல தலைவன், நல்ல தரம், நல்ல குறிக்கோள் என்பதால் இணைந்து அவனுடன் உழைக்கும் மாறுபட்ட
திறன் கொண்ட நிறுவன ஊழியர்கள்(தொண்டர்கள்) ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்து. மனதாலும்,
உடலாலும் இணைந்த நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கைப்பலம் வெறும் கணக்குகள் அல்ல. ஓன்றும்
ஓன்றும் இரண்டு என்கிற கணக்கிலல்ல, ஓன்றும், ஓன்றும் பதினொன்றாக வீரியம் பெறும் மனிதவள
சூத்திரங்கள். ( 1+ 1 #2 ; 1+ 1 =11 ). அவைகள் நெருக்கி கட்டப்பட்ட குச்சிகள். உடைக்கமுடியாத
விறகுகள். பிரிந்த எருதுகளல்ல. அளவிடமுடியாத, தொடமுடியாத, உணரமுடியாத (intangable) ஆத்மார்த்தமான பலத்தை,
எழுச்சியை அடைந்து செயல்திட்டத்தை நோக்கி அவர்களை நகர்த்துகிறது. கையில் வரைபடமின்றி வெற்றி இலக்கை
வெறும் திசைகாட்டும் கருவியாக மட்டுமே கொண்டு மாபெரும் கடலில் முன்னேறும் மாலுமிக்கு நல்ல மனிதவளம் –
சோர்வடையாமல் காக்கும் ஊற்சாக காற்று, கலங்கரை விளக்கங்கள்.

வெற்றியிலும், தோல்வியிலும் தன்னோடு தன் மக்களை சேர்த்து கொண்டு செல்லுதலே மிகக்கடினமான
செயல். கத்திமேலே சிலுவையை சுமந்து நடப்பது போல.

கூட்டணிகள் :
(Strategic partnership and field partners )

நுகர்பொருள் சந்தையில் தங்களது நிலைக்கேற்ப போட்டியாளரையையும், தங்களது சக கூட்டணிகளையும்
அமைத்துக்கொள்வது ஒருமுகப்படாத(Homogenous) சந்தையில் முக்கியமானது மட்டுமின்றி, இன்றிமையாததும்
கூட. ஒரு புதிய சந்தையை கவரப்போகும் நுகர்பொருளோ, சித்தாந்தமோ, நிறுவனமோ, மதமோ அரசியலோ
அது காலுன்றிக்கொள்ளும் பொருட்டு சில உட்செறிமானங்களை, தழுவல்களை, மாறுதல்களை செய்தாக
வேண்டியிருக்கிறது. அதன் பொருட்டு தானே காலுன்றி, தனக்கான கட்டமைப்புகளை, நுகர்வோர்களை
உருவாக்கிக்கொள்ளும் வரை களத்திலும், கருத்தியலிலும் வெவ்வேறான கூட்டணிகள் தேவைப்படுகின்றன.

திராவிட தாய்க்கழகத்திலிருந்து பிரிந்தபோதும் அது தனது எதிர்நிலையாகமல், தனது கருத்தியல் ஓட்டு
வங்கியை கவனமாக தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு தனது கட்சியின் தலைவர் பதவியை நிரப்பாமலேயிருந்தது
– கருத்தியல் ரீதியான சாதுரியமான காய்நகர்த்தல்.

கவர்ந்திழுக்கும் வசனங்கள் :
(Catchy slogans – are vital for brand promotions)

எந்த நிறுவனத்திற்கும், நுகர்பொருளுக்கும்(பிராண்டுக்கும்) ஒரு குறிக்கோளும், சேரவேண்டிய இலக்கும்,
அதற்கு செய்ய வேண்டிய செயல்களும் அடிப்படையாக கொண்ட ஒரு சொல், ஒரு மகாவாக்கியம், சூத்திரம்
தேவைப்படுகிறது. எல்லா வெற்றிகளுக்கு பின்னாலும் அப்படியொரு சொல் இருக்கத்தான் செய்கிறது.
ஒரு வாக்கியம் காவியத்தின் தூண்டுகோலாகிறது. ஒரு வாக்கியம் மாபெரும் சிந்தானவாதியின் தத்துவசிடுக்கை
அவிழ்த்து கொடுக்கிறது. ஒரு வாக்கியம் ஒரு தேசத்தந்தையின் ஆயுதமாகிறது. ஒரு வாக்கியம் ஒரு நிறுவனத்தின்
உயிரையே, குறிக்கோளேயே தாங்கி காலம் காலமாக உயிர்வாழ்கிறது. அவைகள் வெறும் வாக்கியமல்ல.
வார்த்தைகளல்ல. எழுத்துகளல்ல. பலம், உயிர் பெற்ற வார்த்தைகள். அவைகள் மந்திரங்கள்.

தேவைக்கேற்ப, காலத்திற்கேற்ப அந்த வசனங்களின் வீச்சும், வேகமும் மிகப்பெருவாரியான மக்களிடம்
தலைவனையோ, நுகர்பொருளையோ கொண்டுசெல்கிறது. அவை வெற்றுவார்த்தைகளல்ல. அது சொல்பவனுக்கும்,
கேட்பவனுக்குமான உணர்வுப்பாலமாக அமைந்து, ஒரு உணர்வு தொடர்பு சங்கலியால் இருவரையும்
இணைக்கிறது.

அண்ணாவிற்கு ஏராளமான வசனங்கள் கை கொடுத்தது.
“திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு” ,
“கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ”
“வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது ”

SWOT – அனாலிசிஸிஸ் :

இதில் பலம், பலவினம் என்பது நுகர்பொருள்/நிறுவனம் சார்ந்தது. சூழலின் பலம், மற்றும் சவால்கள் அது
இயங்கிய சந்தை, காலம், மற்ற போட்டியாளர்கள் போன்ற புறக்காரணிகளால் ஆனது.

பலம் : 3C’s

“Communicate, Connect, Character ”

ஒரு தலைவனின் சொல்லுக்கும் அவரது செயலுக்குமான அதீத வெளிப்படையான வேறுபாடு
மனிதவளப்பெருக்கத்தில் விரிசலை உருவாக்கும். சமூக, அரசியல் மற்றும் நிறுவனத்தலைவர்களிடம்
நுகர்வோர்கள் ஆளுமைச்சுத்தத்தை கொஞ்சம் அதிகமாகவே எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்களின்
செயல், சிந்தனை திறந்த புத்தகமாகவேயிருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். அதுவே தங்களின்
அளவிடமுடியாத நம்பிக்கையையோடு தலைவர்களிடமும், நுகர்பொருளிடமும் இணைத்துக்கொள்ள
காரணமாகிறது என்கிறது மேலாண்மை ஆராய்ச்சி. அதன்மூலம் மட்டுமே தலைவரின்/நுகர்பொருளின்
நம்பகமான, மாறாத நீண்டநாள் -தொண்டனாய்/நுகர்பவனாய் நீடிக்கமுடிகிறது என்பது உள்ளங்கை
நெல்லிக்கனி.
அண்ணாவின் தனிப்பட்ட ஆளுமை எளிமையாகவும், நேர்மையாகவும், அறிவுப்பூர்வமாகவும்,
தன்னலமற்றதாகவும் அமைந்தது அவர் சொன்னவைகள் சில வெறும் வெற்று வாக்கியங்களாக இல்லாமல்
அவரின் வாழ்க்கை கோட்பாடகவேயிருந்தது என்கிறார்கள் அவரது ஆளுமையை அருகிலிருந்து அநுபவித்த
அன்பர்கள். அவருக்கு உண்மையிலேயே கட்சியே குடும்பமாகயிருந்தது. (Party is the family)

சுருங்கக் கூறல், இனியது கூறல், இன்னாது கூறல், மாற்றார் கருத்துக்கு மதிப்புக்கொடுத்தல்,
பன்முக ஆளுமை ஜனநாயக முறைமீதான அதீத நம்பிக்கை – போன்றவை தனிப்பட்ட நபரின் – மீதான
நன்மதிப்பு, நம்பகத்தன்மையும் கூடுவதற்கான காரணிகளாக, மூலதனங்களாக அமைந்தன. தனிப்பட்ட
வாழ்க்கையில் சொன்னதை செய்தார், செய்ததை சொன்னார்.

ஊடகங்களை பயன்படுத்துதல் – மேடைப்பேச்சு, எழுத்து, நாடகம், வானொலி, திரை என எல்லா
ஊடகங்களையையும் பயன்படுத்தி அதன் மூலம் மக்களிடம் தனது நுகர்பொருளை கொண்டுசென்றதல்
அபார வெற்றி பெற்றது உலக அரசியல் அரங்கில் நடந்த சில மிகப்பெரிய ஊடக வெற்றிகளில்
ஓன்றாக கருதப்படுகிறது.

சந்தை தொடு, எல்லா ஊடகத் தொடர்பு கொள், மாறு, மாற்று , விசாலப்பார்வையால் நுகர்வோர் சந்தையை விழுங்கு,

பலவீனம்:

மாற்றம் வந்துவிட்டது என்பதான அதீத எதிர்பார்ப்பு இருந்தது. அது ஈடுசெய்ய முடியாதது என்று
தெரிந்ததுதான் என்றாலும் ஓரளவாவது பூர்த்தி செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் எதிர்பார்த்ததை கொடுப்பதற்கான
நேரமின்மை, குறைந்த காலமே அரசாண்டது, நோயினால் இறந்தது என்பது அண்ணா என்கிற ஆளுமையின்
பலவீனமாக போனது துரதிருஸ்டம்.

இரண்டாவது கட்ட தலைவர்களை சரியாக முன்னிறுத்தாதது. நுணுக்கி பார்க்கையில் தியாகமும், அறிவும்,
பெரும்பான்மை மக்கள் வசீகரமும் கொண்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாதது மற்றும் வளர்வதற்கான
சூழல் அமையாததும் பலவீனத்தின் முக்கிய திரிகள்.

அரசியல் தலைவருக்கான கண்டிப்பு தேவையான நேரத்தில் இல்லாதது.

தொடராத கன்னிகள், அலங்கார முன்னுரையோடு வேகமாய் ஆரம்பிக்கப்பட்டு அவசரமாய் நின்றுபோன அத்தியாயம்,
இன்னும் அஸ்திவாரத்திலே கொட்டிக்கிடக்கிறது கல்லோடு நிற்கிறது முளியான மாளிகைகள்.

சூழலின் பலம் : (Opportunity)

ஆளும் கட்சியான காங்கிரசிற்கு எதிராக கிளம்பிய அலை எல்லா மாநிலங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக
வெவ்வேறு காரணங்களால் மெல்ல திடப்பட்டுக்கொண்டிருந்தது.

வடநாட்டில் இருந்ததுபோல தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி அறவே தமிழக சூழலில் 50,60களில் இல்லை.
உணர்ச்சி தொடாமல் அறிவுப்பூர்வமாக பேசியும், களங்களில் உண்மையாக உழைக்கவும் செய்யும் சிவப்பு
நிறத்தோழர்கள் திராவிடநாட்டை எதிர்த்து செய்த தேசியம் கோசம் வலுவற்றிருந்தது.

வித்தியசமான, புரட்சிகரமான, கிளர்ச்சியூட்டக்கூடிய இந்திய தேசத்திற்கு எதிரான கற்பனையில் கட்டப்பட்ட
திராவிடநாடு கோசம், இளைஞர்களை இழுத்தது. தங்களது காலம் காலமான அடிமைத்தனத்திற்கு ஓரே பதில்
திராவிடநாட்டு விடுதலையில்தானிருக்கும் என்று நம்பவைக்க போதுமான தளம் ஈ.வே.ராவால் ஏற்கனவே
எழுப்பப்பட்டிருந்தது.

குறுகிய இனவாத மாற்றம் விளைவித்த கிளர்ச்சி, வலுவிழந்த போட்டியாளர்கள்

சூழல் சவால்கள்/ சிக்கல்கள் :(Threat)

சின்ன சந்தை- தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பாகிவிட்ட சின்ன நுகர்வோர் சந்தை. இந்திய சந்தையில் வெறும் 5%.

உலகமயமாக்கவோ, தேசியமயமாக்கவோ இயலாதவாறு வளர்ச்சியின் சொத்தாக (Asset) அமைந்த அதீத இன உணர்ச்சியே
சிலுவையாக(Liability) மாறிய யதார்த்தம். ஆகவே ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட சிந்தாந்த எல்லைக்கோடுகளால் வெளி இனத்திற்கோ,
இடத்திற்கோ முன்னேறமுடியாது மறுபடியும் உள்ளூர் சந்தையை மட்டும் பாதுகாப்பதோடு அது முடிந்துபோய்விடுகிறது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அண்ணாவின் இருமொழி கொள்கேற்ப ஆங்கிலத்திலும் இதன் சுருக்கம் பதிவு செய்யப்படுகிறது.

ஆங்கிலத்தில் :

Oboma of South in 60’s
From low middle class family
Used great marketing skills – Speak, Write ,
Used all media – Reach2Every1 – Mass marketing
built up a bond of trust with people
& – Convert the sympathy in to vote

Drop pockets when you move to other orbit – policies

Make under dogs win – Black Swan
Be in street and not in ivory tower
Build brick by brick
Take people along with you

Strategic tie-ups are important for Short term gains ( Rajaji)

Create Catchy Brand Slogan
Kadamai, kanniyam, kaddupaadu
Adinthal drivada nadu, illayeal sudu kadu

Karma yogi
– work with goal but not with attachment
– Balance success and failure in the same rate

SWOT ANALYSIS :

3 C’s – Strength
Communicate, Connect, Character
Communication Skill
through multi media platform
(ie., writing, speaking, motivating young cadres etc)
Connect with all stake holders, always
Best Alliances and JVS
Character
Efficient and effective
Strong Brand/ Leader
Kind words, space for other views
Multi dimensional personality:
purely democratic
Simple, Humble and Sample
Humble but intelligent too
Smart, Good but not crocked
Clean – party is family in true sense

Preach and practice the same
Weakness
Lack of strategic direction in governance
Delivery is less than perceived
Less time to perform
Poor succession planning
No second Best brands
No senior Level Stock Holder with expected calibar
Too Good to be tough Statesman l
Opportunity
Make Bold Vision –
Innovation voice for Dravida nadu to have early adopters to party
Base of justice party & EVR
Lack of Dalit wave unlike north
Upcoming Anti congress wave
Change strategy and policies when market demands ( separate nation issue, Anti-god etc.,)
Swim on Anti incumbency wave
Threat
Small market size
Lack to scale up
Dominating regional values

Series Navigation