அண்ணாவின் வாழ்க்கையில் 1962

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

மலர்மன்னன்



அண்ணா அவர்களின் வாழ்க்கையில் 1962 ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டு. அந்த ஆண்டிலிருந்துதான் அண்ணா அவர்களின் குரல் தமிழ் நாட்டில், தமிழ் தெரிந்தவர்களின் செவிகளில் மட்டுமே பாய்ந்து மகிழ்வித்துக் கொண்டிருந்த நிலைக்கு அடுத்த கட்டமாக, நாட்டின் தலை நகரில் ஓர் அதிகாரப் பூர்வமான அவையிலிருந்து ஹிந்துஸ்தானம் முழுவதும் கேட்கலாயிற்று.

தேசப் பிரிவினையை வலியுறுத்தும் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் கட்சியின் தலைவரே பாராளுமன்றத்திற்கு வந்திருப்பதால் அவர் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சொல்லுமே அவரது கட்சியின் அதிகாரப் பூர்வமான அறிக்கையாகவும் பிரகடனமாகவும் இருக்குமாதலால் அவர் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும் என்கிற ஆர்வம், வட நாட்டுத் தலைவர்களுக்கு மட்டுமின்றி, தில்லியில் குவிந்துள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கும் தோன்றி, அண்ணா மாநிலங்களவையில் பேசுகின்ற தினங்களை எல்லாம் முன்னதாகவே விசாரித்துத் தெரிந்துகொண்டு அவர்கள் வரத் தொடங்கியதால் பார்வையாளர்கள் மாடத்தில் கூட்டம் நிரம்பலாயிற்று. அவையிலோ, நிலைமையைச் சொல்லவே வேண்டாம்; அண்ணாவின் முதல் பேச்சைக் கேட்கத் தவறிய உறுப்பினர்கள், கேட்கும் வாய்ப்பினைப் பெற்ற உறுப்பினர்களின் வாயிலாக அண்ணாவின் பேச்சில் இருந்த மொழி ஆளுமையினையும் பொருட்சுவையினையும் கேள்வியுற்று, அதனைக் கேட்கும் வாய்ப்பினை இழந்து விட்டமைக்காக வருந்தி, அதன் பிறகு அவரது பேச்சைக் கேட்கும் வாய்ப்பினை இழக்கவே கூடாது என்று சங்கற்பித்துக் கொண்டுவிட்டிருந்தார்கள். பிரதமராக இரு ந்த ஜவஹர்லால் நேருவுக்குக் கூட தேசப் பிரிவினை கோரும் கட்சியின் தலைவர் முகத்தைப் பார்க்கும் ஆர்வம் மிகுந்து, தமது அமைச்சரவை சகாவாகியிருந்த சி. சுப்பிரமணியத்திடமும், துணைக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடமும் அண்ணாவைப் பற்றி விசாரித்தார். “இவர் எங்கள் மாநிலத்தின் டிஸ்ரேலி’ என்று ராதாகிருஷ்ணன் நேருவிடம் சொன்னாராம் (1800 களின் மையப்பகுதியிலிருந்து ஏறத் தாழ இறுதிக் கட்டம் வரை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் நட்சத்திரமாக ஜ்வலித்தவர் பெஞ்சமின் டிஸ்ரேலி. கன்சர்வேடிவ் எனப்பட்டும் மிதவாதக்கட்சியின் பிதாமகரான டிஸ்ரேலி, மூன்று முறை பிரதமராகவும் இடையில் எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்து, தமது வாதத் திறமையினாலும் பேச்சாற்றலாலும் கீர்த்திபெற்று விளங்கினார்).

மாநிலங்களவையில் அண்ணாவின் முதல் பேச்சைக் கேட்கும் வாய்ப்பபினைப் பெற்ற ஜன சங்கத் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாயி, “அண்ணாவின் பேச்சு அவையில் இருந்த அனைவரையுமே கவர்ந்தது. தமது முதல் பேச்சாலேயே அவர் அனைவரையும் தம்பால் ஈர்த்துக் கொண்டார்’ என்று சொன்னார். அதன் பிறகு அண்ணாவுடன் நெருக்கமாகப் பழகவும் தொடங்கி, அண்ணாவின் அபிமானிகளுள் ஒருவராகிவிட்டார். அண்ணாவும் வாஜ்பாயியிடம் மிகவும் நெருங்கிப் பழகி, அவரது பேச்சாற்றலைப் பாராட்டினார்கள் (“மா நிலங்களையில் ஜன சங்கத்தைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாயி என்ற உறுப்பினர் ஒருவர் இருக்கிறார். அவர் ஹிந்தியில்தான் பெரும்பாலும் பேசுகிறார். அவர் பேசுவது புரியவில்லை என்றாலும் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. அவர் பேசுவதை பிரதமர் நேருவிலிருந்து அனைவருமே மிகவும் சுவாரசியமாகக் கேட்கிறார்கள்’ என்று அண்ணா அவர்கள் ஒருமுறை சொன்னார்கள்).

அண்ணா அவர்கள் ஓர் உறுப்பினராக மா நிலங்களவைக்கு வந்ததே ஒரு விபத்துதான். ஆனால் அந்த விபத்து நன்மை விளைவிக்கும் விபத்தாக, அவரை அகில பாரத அளவில் ஒரு முக்கியத் தலைவராக உயர்த்தியது. அந்த நல்விபத்தை 1962 ல் நடந்த பொதுத் தேர்தல் உருவாக்கித் தந்தது. அந்தத் தேர்தலின்போது தமிழக சட்டமன்றத்தில் இடம் பெறுவதற்குத்தான் அண்ணா போட்டியிட்டார்கள்.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 1962 பிப்ரவரி மாதம் 24 ஆம் நாள் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1957ல் தமது சொந்தத் தொகுதியான காஞ்சிபுரத்திலிருந்து சட்டமன்றத்திற்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா அவர்கள் இரண்டாம் முறையும் அங்குதான் போட்டியிட்டார்கள்.

அந்தச் சமயத்தில் சென்னை மாநகரம் தி.மு.க.வின் கோட்டையாகவே மாறிவிட்டிருந்தது. சென்னையில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தமக்கு வெற்றி நிச்சயம் என்பது கண் கூடாகத் தெரிந்த போதிலும், அண்ணா அவர்கள் தமது சொந்த ஊரான காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்ட சட்டமன்றத் தொகுதியிலேயே போட்டியிட முடிவு செய்தார்கள். மாநிலத்தின் தலைநகரமான சென்னையைச் சேர்ந்த ஒரு தொகுதியிலிருந்து மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது அண்ணாவின் ஆளுமைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று சிலர் சொல்லியும்கூட அண்ணா அவர்கள் அதற்கு ஒப்பவில்லை. தொகுதி மாறி நிற்பதே மக்களிடையே செல்வாக்கை இழந்து, தோல்வியை ஒப்புக் கொள்வது போலாகிவிடும் என்று அண்ணா கருதினார்கள். ஒருவரே கூடுதலான தொகுதிகளில் நிற்பதையும் அண்ணா நெறிமுறைக்குப் புறம்பானதாகவே எண்ணினார்கள். மக்களின் ஆதரவு குறித்துச் சந்தேகப்படுவதன் அறிகுறி என்று அதனை அண்ணா கருதினார்கள். விரும்பியிருந்தால் அண்ணா சென்னையில் ஒரு தொகுதியிலும் காஞ்சியிலுமாகக் கூடப் போட்டியிட்டு, எப்படியும் தமிழக சட்டமன்றத்திற்குச் சென்றுவிட்டிருக்க முடியும்.

இவ்வளவுக்கும் காஞ்சியில் தம்மைத் தோற்கடிக்கக் காமராஜர் மிகப் பெரிய வியூகம் வகுத்திருப்பதை அண்ணா அறியாமல் இல்லை. அன்றைய கால கட்டத்தில் தி.மு.க ஆதரவாளர்கள் இல்லாத துறையே தமிழ் நாட்டில் இல்லை என்னும் நிலை இருந்தது. உளவுத் துறையில் கூட அண்ணாவின் அபிமானிகள் இருந்தனர். முந்தைய தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற பதினைந்து தொகுதிகளிலும் தி.மு.க. வைத் தோற்கடித்து அதனைப் பூண்டோடு கெல்லி எறிந்துவிடக் காமராஜர் சங்கற்பம் செய்திருக்கும் தகவல் அங்கிருந்து முன்னதாகவே கசிந்து வரத் தவறவில்லை. எனினும் காஞ்சிபுரம் தொகுதி மக்கள் தம்மைக் கைவிட மாட்டார்கள் என்று அண்ணா உறுதியாக நம்பினார்கள்.

தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் பொதுவாக வாக்காளர்களிடம் தங்களுக்கு வாக்களிக்குமாறுதான் வேண்டுவார்கள். அண்ணாவோ அதற்கு நேர்மாறாகத் தமக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தமது தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் கூறி வந்தார்கள்.
“எனக்கு வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்க வெட்கமாயிருக்கிறது’ என்று சொன்னார்கள். குறிப்பாகச் சொல்லப் போனால் 1962 தேர்தலின்போது அண்ணா அவர்கள் மற்ற தொகுதிகளில் பேசுவதற்குத்தான் அதிக தினங்களைச் செலவிட்டார்கள். 1957ல் முழு மூச்சாகத் தமது தொகுதி முழுவதும் சுற்றி வந்ததுபோல 1962 தேர்தலின்போது தமது தொகுதியில் அவர் கவனம் செலுத்தாமல் தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார்கள். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் சென்னை மாநகரத் தொகுதிகளில்தான் அண்ணா அதிக கூட்டங்களில் பேசினார்கள். போதாக்குறைக்கு மற்ற தம்பிமார்களும் அவரவர் பகுதிகளுக்கென ஆளுக்கொரு பக்கமாய் இழுத்து அலைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்.
கலியாண வீட்டுத் தாம்பூலத் தட்டு மாதிரி அண்ணா அவர்களால் இழுபடுகிற பக்கமெல்லாம் போய்க் கொண்டிருந்தர்கள். தமது தொகுதியில் பேசுகின்ற வாய்ப்பு கிட்டியபோதோ, “மற்ற ஊர்களில் எல்லாம் மக்கள் என்னை மாலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணி வரையிலும்தான் அறிவார்கள். ஆனால் காஞ்சிபுரத்து மக்களான நீங்களோ என்னைக் கடந்த 53 ஆண்டுகளாக அறிவீர்கள் (அப்போது அண்ணாவுக்க்கு வயது 53). நான் தெருவில் விளையாடிய நாட்களிலிருந்து, பள்ளிக் கூடம் சேன்று வந்த காலத்திலிருந்து என்னை அறிவீர்கள். இந்த 53 ஆண்டுகளில் நான் ஏதாவது கேடான செயலில் ஈடுபட்டதாக ஒரு தடவையேனும் நீங்கள் கேள்விப் பட்டிருந்தால், மனதாலும் எவருக்காவது தீங்கிழைக்க நான் எண்ணியிருப்பேன் என்று கருதினால் நீங்கள் எனக்கு வாக்களிக்காதீர்கள். எனக்கு வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்பதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது’ என்று கூறி வந்தார்கள். காஞ்சிபுரத்து மக்கள் தம் மீது அபரிமிதமான அன்பு வைத்திருப்பவர்கள், தமக்கு வாக்களிப்பதில் அவர்களுக்குத் துளியளவும் ஆட்சேபம் இருக்க வாய்ப்பில்லை என்று அண்ணா நம்பியிருந்தார்கள்.

தம்முடைய சட்ட மன்றக் கடமைகளைத் தாம் சரிவர நிறைவேற்றியிருப்பதால் தமக்கு வாக்குகள் விழாமல் போகக் காரணமில்லை என்று அண்ணா கருதினார்கள். முந்தைய தேர்தலிலாவது காஞ்சிபுரத்து மக்களின் மரியாதைக்கும் அன்புக்கும் பாத்திரமான, காங்கிரஸ் கட்சியில் வைரம் பாய்ந்த டாக்டர் ஸ்ரீநிவாசனை எதிர்த்துப் போட்டியிட வேண்டியிருந்தது. அவரையே தோற்கடித்து வெற்றியும் பெற முடிந்தது. இம்முறை அரசியலுக்கே சம்பந்தமில்லாத, மக்கள் தொடர்பு ஏதுமில்லாத ஒரு பஸ் கம்பனி முதலாளியைத்தான், அவரிடம் பண பலம் இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காகத் தமக்கு எதிராகக் காமராஜர் நிறுத்தி வைத்திருப்பதால் வாக்காளர்கள் தராதரம் பார்த்துத்தான் வாக்களிப்பார்கள் என்று அண்ணா அவர்கள் நம்பினார்கள். ஆனால் போகப் போகத்தான் பிரத்தியட்ச நிலவரம் புரியத் தொடங்கியது. ஆனாலும் அபிமன்யுவைப் போல காமராஜரின் வியூகத்திற்குள் நுழைந்து களப்பலியாகி விட்டார்கள்.

1957ல் காஞ்சியில் தாம் சந்தித்த தேர்தலுக்கும் 1962ல் தாம் சந்திக்கும் தேர்தலுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்து, அதனை மேடைகளில் வெளியிடவும் அண்ணா தவறவில்லை.

“1957ல் விவாதத்திற்கு விவாதம், புள்ளி விவரத்திற்குப் புள்ளி விவரம் என்றுதான் போட்டி இருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், தேர்தல் சமயத்தில் ஒரு நாள் இரவு வயிற்று வலி தாங்காமல் டாக்டர் ஸ்ரீநிவாசன் அவர்களைத்தான் ஃபோனில் அழைத்தேன். அவர் உடனே வந்து பார்த்து மருந்து கொடுத்து, முதுகில் இரண்டு தட்டுத் தட்டி, “அதிகம் கத்திப் பேசாதே’ என்று சொல்லிவிட்டுப் போனார். அப்படித்தான் நடந்தது அந்தத் தேர்தல். இன்றோ ஒரு சாதாரண அரசியல் கட்சிக்காரனான என்னை எதிர்ப்பதற்காக ஏழுமலைகள் தாண்டி இருக்கிற வெங்கடாசலபதி பெருமாளை அழைத்து வந்து தட்டில் ஐந்து ரூபாய் பணம் வைத்து, அவரையும் வைத்து காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு கற்பூரத்தில் சத்தியம் வாங்கிக் கொள்வதாக இருக்கிறது” என்று அண்ணா அவர்கள் வருந்தினார்கள்.

“ஒரு அதர்மமான காரியத்திற்கு அந்த தெய்வத்தை அழைத்து வருவது “கோவிந்தனாவது, கோபாலனாவது’ என்று சொல்கிறவர்களைவிட துரோகமான செயல்’ என்று அண்ணா சொன்னார்கள். “அப்படியொரு அதர்மத்திற்கு அந்த தெய்வம் துணை போகுமா?” என்றும் அண்ணா கேட்டார்கள்.

அண்ணா அவர்கள் அவ்வாறெல்லாம் நியாயம் கேட்டுங்கூட, காஞ்சிபுரம் சட்ட மன்றத் தேர்தலில் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியுற நேர்ந்தது.

காஞ்சி தொகுதியின் பிரதிநிதியாக சட்ட மன்றத்தில் பணியாற்றியபோது அண்ணா அப்படியொன்றும் தொகுதி நலனைக் கவனிக்காமல் இருந்து விடவில்லை. தண்டலம் என்ற இடத்தில் ஒரு ஆட்சியாளர்அதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, முதல்வர் காமராஜரையே அழைத்து வந்து, தமது தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நலத் திட்டங்கள் குறித்துப் பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கும் வழிசெய்தார். ஆனால் ஒப்புதல்களை அரசாங்கம் வெறும் சம்பிரதாயமான தலை அசைப்புகளோடு விட்டு விட்டது. காஞ்சியில் நெசவாளர்களுக்கான கூட்டுறவு சங்கம் ஒன்று அமைய அரசின் ஒப்புதலைப் பெறவும் அண்ணா முயற்சி மேற்கொண்டார். அதுவும் கைகூடவில்லை. மேலும், தொகுதியைச் சேர்ந்த கிராமப் புறங்களின் மீது போதிய கவனம் செலுத்த அண்ணா தவறிவிட்டிருந்தார்கள். ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் மாநில நலன் முழுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை இருந்ததால், தமது தொகுதியின் நலன்களைக் குறிவைத்து அதே நினைவாக அண்ணாவால் செயல்பட இயலவில்லை.

அன்றைய பொருளாதார நிபுணர்கள் பலருக்கும் இருந்த எண்ணப் போக்கே அண்ணாவுக்
கும் இருந்தது இன்னொரு துரதிருஷ்டம் என்று கூற வேண்டும். சுற்றுப் புறச் சூழல் என்கிற கருதுகோள் அன்று மையம் கொள்ளவில்லை. பொருளாதார வளத்திற்கு விவசாயத்தை நம்பிப் பிரயோசனம் இல்லை என்பது போலவும், பெரிய தொழில்கள் நிறுவப்படுவதன் மூலமாகத்தான் மக்களின் வருவாயும் வாழ்க்கைத் தரமும் உயரும் என்றும் ஓர் எண்ணம் வலுவாக இருந்தது. அண்ணாவும் நிலம் என்பது வளர்ந்து பெருகக் கூடியது அல்ல
வாதலால் ஒரு அளவுக்குமேல் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி காண இயலாது என்று கருதினார்கள். ஆகவே தமது தொகுதியில் புதிய பெருந் தொழில்கள் தொடங்கப் படுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி யோசிப்பதிலேயே அண்ணாவின் எண்ண ஓட்டம் இருந்தது. அந்த மாயமான் வேட்டையிலேயே அண்ணாவுக்கும் கவனம் சென்றது. தமது தொகுதியில் விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களும் அமைவதில் அண்ணா ஈடுபாடு கொண்டிருந்தால், தொகுதியின் கிராமப் புறங்களிலும் அண்ணாவுக்கு அசைக்க முடியாத ஆதரவு வேரூன்றியிருக்கும். வெங்கடாசலபதி பெருமாளுக்கு முன்பான ஐந்து ரூபாய்த் தாளுக்காக வாக்குச் சீட்டுகள் விலை போயிருக்காது.

இது தவிர, புறநகர்ப் பகுதிகளிலும் கிராமப் புறக்களிலும் அதிகாரிகள் மூலமாகப் பல ஆசை காட்டுதல்களும் காங்கிரஸ் தூண்டுதலில் நடைபெற்றன. ஆனால் இவற்றையெல்லாம் மீறித் தாம் வெற்றி பெற்றிருக்கவேண்டாமா என்றுதான் அண்ணா கேட்டார்கள். தம்மிடம்தான் குறை இருப்பதாக வெளிப்படையாகக் கூறினார்கள். மக்களுக்கு என் மீது அன்பும் நம்பிக்கையும் முழுமையாக இருக்குமானால் எத்தகைய தூண்டுதல்களுக்கும் இலக்காகிவிடாமல் வாக்காளர்கள் தம்மைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்கள் அல்லவா என்று அண்ணா எழுதவும் பேசவும் செய்தார்கள்.

அண்ணாவின் தோல்வியால் அவருடைய கட்சியினர் மாத்திரமல்லாமல் ஆரோக்கியமான ஜனநாயகத்தை விரும்பிய அனைவருமே வருந்தினார்கள். அண்ணாதான் அவர்களை
யெல்லாம் தேற்றினார்கள்.

முந்தைய தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதிகளில் முனைந்து வேலை செய்து அதனைத் தோற்கடிப்பதில் காமராஜர் வெற்றியடைந்த போதிலும் ஐம்பது தொகுதிகளில் அது வெற்றி பெற்றுவிட்டது. ஒரு சிறு ஓட்டையை அடைக்கப் போய் பெரும் பிளவையே எதிர்கொள்ள நேர்ந்தது கண்டு காமராஜர் திகைத்தார்.

ஆனால் காங்கிரஸ் ஆதரவு இதழ்கள், தலையில்லாத முண்டமாக தி.மு.க. சட்டமன்றத்தினுள் நுழைந்திருப்பதாக ஏளனம் செய்தன. தளகர்த்தன் தனது படையினை இழந்து தான் மட்டும் கோட்டைக்குள் நுழைய நேரிட்டால்தான் நகைப்புக்
கிடமாகும்; மாறாக, படைத் தலைவன் வெளியே நிற்க, அவனது படை கோட்டைக்குள் அணிவகுத்துச் செல்வது படைத் தலைவனுக்குப் பெருமையே யாகும் என்று சொன்ன அண்ணா, அதற்கு எடுத்துக் காட்டாக ஒரு சரித்திரச் சம்பவத்தை அழகாக நினைவூட்டினார்கள். உலக சரித்திரத்தையே கரைத்துக் குடித்திருந்த அண்ணா அவர்கள் ஐரோப்பிய வரலாற்றின் மிக முக்கிய ஏடுகளான சிலுவைப் போர்களிலிருந்து ஒரு பகுதியை இதன் பொருட்டு எடுத்துச் சொன்னார்கள்.

ஜெருசலேம் நகரம் யூதர்கள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள் ஆகிய மூன்று சமயப் பிரிவினருக்குமே புனிதமான தலம். அதனை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த முகமதியர்கள், சமரச மனப்பான்மையின்றி, மற்ற மதத்தினருக்கு அதன் மீதுள்ள உரிமையை மறுத்தனர். உண்மையில், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்தான் ஜெருசலேம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தலம். அதனை மீட்பதற்காகக் கிறிஸ்தவ அரசுகள் சலிக்காமல் போரிட்டன. இங்கிலாந்து மன்னன் ரிச்சர்டு அநத் முயற்சியில் இறங்கியபோது, சுல்தான் சலாவுதீன் இயன்ற மட்டும் அதனைத் தடுத்தான். இறுதியில் இரு தரப்பினரும் ஒரு சமாதானத்திற்கு வர வேண்டியதாயிற்று. ரிச்சர்டு மன்னனின் படை ஜெருசலேமுக்குள் நுழைய சலாவுதீன் இணங்கினான். ஆனால் ரிச்சர்டு வெளியேதான் நிற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். ஜெருசலேமுக்குள் கிறிஸ்தவப் படைகள் நுழைவதுதான் தனது நோக்கமாதலால் ரிச்சர்டு தனது படையை ஜெருசலேம் நகருக்குள் செல்லுமாறு பணித்துவிட்டுத் தான் மட்டும் வெளியே நின்றான். எவரும் அதற்காக அவனை ஏளனம் செய்யவில்லை. மாறாகப் பாராட்டவே செய்தனர். அந்த நிகழ்ச்சியைத்தான் அண்ணா அவர்கள் ஞாபகப் படுத்தினார்கள்>

காஞ்சிபுரம் தேர்தலில் அண்ணா தோல்வியடைந்ததானது பெருமாள் அதர்மத்திற்குத் துணை போய் விட்டதாகத் தோன்றியிருக்கும். ஆனால் அண்ணாவை அங்கு தோல்வியுறச் செய்ததன் மூலம் பெருமாள் மிக நல்லதே செய்தார். அண்ணா காஞ்சியில் வெற்றி பெற்றிருந்தால் மிஞ்சி மிஞ்சிப் போனால் தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகியிருந்திருப்பார். ஆனால் முந்தைய அவையில் அவருடன் சரிக்குச் சரியாக வாதிட்டுத் தோற்றுக் கொண்டிருந்த நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று மத்தியில் அமைச்சராகிவிட்டிருந்த நிலையில் அண்ணாவுக்கும் சட்ட மன்ற விவாதங்களில் சுவாரசியம் குன்றிப் போய் விட்டிருக்கும். மாறாக, காஞ்சிபுரத்துத் தோல்வி, அண்ணாவை தேசத்தின் தலைநகரில், தேசம் முழுவதையும் நகர்த்திக் கொண்டிருந்த கேந்திர ஸ்தானத்தில், பாராளுமன்றத்தின் மறு அங்கமான மாநிலங்களவையில் கொண்டுபோய் அமர்த்தியது.

அண்ணாவின் பரம்பரை, விஷ்ணு காஞ்சியில் கொலுவிருக்கும் வரதராஜப் பெருமாளுக்குத் தலைமுறை தலைமுறையாகத் தொண்டூழியம் செய்யும் பாக்கியம் பெற்ற பரம்பரை. அண்ணாவை வரத ராஜர் மேலும் மேலும் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்வாரேயன்றி, இருந்த இடத்திலேயேவா இருக்கச் செய்வார்?

1962 சட்ட மன்றத் தேர்தல் முடிவடைந்த சூட்டோடு சூடாக மாநிலங்களவையில் சில உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்து, புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வந்தது. சட்ட மன்றத்தில் தி.மு.க.வுக்கு ஐம்பது உறுப்பினர்கள் இருந்ததால் அது தனது சார்பில் மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் சாத்தியக் கூறு உருவாயிற்று. அந்தத் தேர்தலில் மக்களவை உறுப்பினர்களாக ஏழு தி.மு.க. வினர் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களை அரவணைத்துச் செல்லும் தலைமகனாக அண்ணா மாநிலங்களைவைக்குச் செல்ல வேண்டும் என்ற யோசனை எழுந்தது. முக்கியமாக தருமலிங்கம் என்ற உறுப்பினர்தான் அதனை மிகவும் வற்புறுத்தினார். அண்ணா அரைமனதுடன்தான் அதற்குச் சம்மதித்தார்கள். மாநிலங்களைக்குத் தேர்வும் பெற்றார்கள்.

மநிலங்களவையில் அண்ணா அவர்கள் தமது கட்சியான தி.மு.க.வின் சார்பில் ஒரேயொரு உறுப்பினராகத் தனந்தனியே அமர்ந்தார்கள். ஆனால் இம்முறை அபிமன்யு தன்னைச் சூழ்ந்து நின்று தாக்கியவர்களைச் சுழன்று சுழன்று எதிர் கொண்டு ஒவ்வொரு முறையும் வெற்றியுடன் மீண்டு, பெருமிதம் மிக்கவனாய் முகாமுக்குத் திரும்பலானான்.

1962 மே மாதம் முதல் தேதி அண்ணா அவர்களின் குரல் முதல் தடவையாக மாநிலங்களவையில் ஒலித்தது. குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமது கட்சியின் சார்பில் பேச அவருக்கு வாய்ப்பளிக்கப்படது.

அண்ணாவுக்கு அன்று காலையிலேயே பேசுவதற்கு நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. தேசப் பிரிவைனை கேட்கும் கட்சியை நடத்துகிறவன் வந்திருக்கிறான், என்னதான் பேசுகிறான் கேட்போம் என்று மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் மிகப் பெரும்பாலாகவும், பிற கட்சி உறுப்பினர்களும் அண்ணாவின் பேச்சைக் கேட்கக் குழுமியிருந்தனர். பார்வையாளர் மாடத்தில் பல வெளிநாட்டு தூதுவரகப் பிரதிநிதி
களுங்கூடக் காணப்பட்டார்கள்.

பொதுவாக நேரம் செல்லச் செல்லத்தான் அவையில் இருக்கைகள் நிரம்பும். அன்றோ, அதற்கு விதி விலக்காக அவையே ஒரு பொதுக் கூட்டத்தில் பேச்சாளர்களுக்காகக் காத்திருக்கும் ஜனத் திரள் போலக் காட்சியளித்தது.

முதல் பேச்சிலேயே திராவிட நாடு பிரிவினையை வலியுறுத்திப் பேச வேண்டாம் என்றுதான் அண்ணா கருதினார்களாம் (இதனை அண்ணாவே பதிவு செய்திருக்கிறார்கள்). ஆனால் குடியரசுத் தலைவர் உரையில் தேச ஒற்றுமையை வலியுறுத்துவதாக ஒரு பகுதி அமைந்து விட்டது அண்ணாவுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று. அண்ணா அவர்கள் பிரிவினை கோருவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார்கள். அதன் பிறகு பேசிய உறுப்பினர்கள் அனைவரும் அண்ணாவின் பேச்சையொட்டியே தத்தம் கருத்துகளைக் கூறத் தொடங்கினார்கள். விவாதம் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்திற்கானது என்பதே அனைவருக்கும் மறந்துவிட்டது!

மறுநாள் நாட்டில் உள்ள நாளிதழ்கள் எல்லாம் மாநிலங்களைவையில் அண்ணா நிகழ்த்திய உரையைத்தான் பிரதானப்படுத்திச் செய்தி வெளியிட்டன. தமிழ் நாட்டைச் சேர்ந்த “தி ஹிந்து’ நாளிதழ், ” திரு. அண்ணாதுரை பேசிய பிறகு விவாதத்தின் போக்கே திசை மாறிவிட்டது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் என்பதற்குப் பதிலாக, அண்ணாதுரையின் உரை மீதான விவாதமாக அது மாறிவிட்டது’ என்று எழுதியது (1962 மே 2 ஆம் தேதி “தி ஹிந்து’ நாளிதழ் ).

மா நிலங்களைவையில் பேசிவிட்டு வந்த அன்றே அண்ணா அவர்கள் விமானம் மூலமாக சென்னை திரும்பி விட்டார்கள். முன்னதாகவே மே 3 ஆம் தேதி முதல் தமிழ் நாட்டில் பல கூட்டங்களுக்குத் தேதி கொடுத்து விட்டிருந்ததுதான் அதற்குக் காரணம். ஆனால் தமது பேச்சுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பும், அதற்குத் தம்மால் பதில் சொல்ல முடியாது என்றுதான் அண்ணா கோழைத்தனமாக அவசரம் அவசரமாய் விமானம் ஏறி ஊர் திரும்பி விட்டார் என்று சுப்பிரமணியம் உள்ளிட்ட பல காங்கிரஸ்கார்கள் கேலி செய்தனர்.

நடைபெற்றது குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்தானே யன்றி, திராவிட நாடு பிரிவினை வேண்டுமா வேண்டாமா என்ற தீர்மானம் மீதானது அல்ல என்று அண்ணா அவர்கள் அதற்கு பதிலளித்தார்கள். பாராளுமன்றத்தில் பேசும் பலரும் தாம் பேசியான பிறகு தத்தம் ஊர் திரும்புவது வழக்கம்தான் என்பதையும் நினைவூட்டிய அண்ணா, “என்ன இருந்தாலும் உனது பேச்சின் விளைவு எப்படியிருக்கிறது என்று பார்த்திருக்க வேண்டாமா என்று கேட்பீர்களேயானால், திராவிட நாடு பிரிவினை ஒரு முக்கியமான விஷயம் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?’ என்று திருப்பிக் கேட்டார்கள். “வா, வா, திராவிட நாடு பற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வருவோம்’ என்று தில்லியில் தம்மை யாரும் அழைக்கவில்லை என்பதையும் அண்ணா சுட்டிக் காட்டினார்கள்.

இதுபற்றி மேலும் கூறுகையில் அண்ணா அவர்கள் மிகச் சிறந்த உண்மையினை நினைவூட்டினார்கள். அதனை அண்ணாவின் வாக்கிலேயே தருகிறேன்:

“”மக்கள் சபையாகட்டும், ராஜ்ய சபையாகட்டும், அல்லது சட்ட சபைகளாகட்டும், வழக்கு மன்றங்கள் அல்ல. அங்கு பலரும் வழக்கினை எடுத்துரைப்பதுபோலத் தத்தமக்குச் சரியென்று பட்ட கருத்துகளை ஒழுங்குமுறைப்படி எடுத்துக் கூறுவர். ஆனால் வாதங்களைக் கேட்டு, இரு தரப்புக் கருத்துகளையும் கேட்டுத் தீர்ப்பு அளிக்க அங்கு ஒருவர் கிடையாது. தீர்ப்பு என்று எதையாவது கூறுவது என்றால் ஓட்டெடுப்பினைத்தான் குறிப்பிடலாம். அந்த ஓட்டெடுப்பு கட்சிகளின் எண்ணிக்கை பலத்தைப் பொறுத்தது என்பது அரசியல் அரிச்சுவடி விளக்கத் தேவையில்லை. மக்கள் சபையில் நமக்கு ஏழு ஓட்டுகள், ராஜ்ய சபையிலே ஒன்று!

ஏன் இதனைக் கூறுகிறேன் என்றால் சிலர் இங்கு நான் ஏதோ தில்லிக்கு வழக்காடச் சென்று, வழக்காடி, என் வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்படாமல் வழக்கு தோற்றுவிட்டதுபோல ஒரு பேச்சுப் பேசுகிறார்களே அது எவ்வளவு பொருளற்றது என்பதை எடுத்துக் காட்டத்தான்.”

அண்ணாவிடம் வாயைக் கொடுத்துவிட்டு ஒருவர் மீள முடியுமா, அவரிடம் பேசி ஒருவர் ஜயித்ததாக சரித்திரம் ஏது என்று கேட்டுச் சிரிக்கும்படியாக முடிந்து போனது இந்த விவகாரம்.

மாநிலங்களவையில் நிகழ்த்திய முதல் உரையே அண்ணாவை பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மிகப் பிரபலம் வாய்ந்த பிரமுகராக்கிவிட்டது. எல்லா மாநிலங்களையும் சேர்ந்த, எல்லா அரசியல் கட்சிகளையும் சார்ந்த உறுப்பினர்கள், மைய மண்டபத்தில் அண்ணா அமர்ந்திருக்கக் கண்டால் அவரைச் சூழ்ந்துகொள்வது வழக்கமாயிற்று.

அண்ணாவின் வாழ்க்கையில் 1962 இன்னொரு விதத்திலும் முக்கியத்துவம் பெற்றது. ராஜாஜியிடம் மிகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அந்த ஆண்டுதான் அவருக்கு அளித்தது. ராஜாஜி தொடங்கிய சுதந்திரக் கட்சியுடன் தி.மு.க. தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்துகொள்ளும் அளவுக்கு அண்ணாவை ராஜாஜியுடன் பிணைத்து வைத்தது, 1962.


malarmannan79@rediffmail.com

Series Navigation