அணுவும் ஆன்மீகமும்

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

அ. ஸநத்குமார்


அணுவும் ஆன்மீகமும் என்ற தலைப்பே கொஞ்சம் விசித்திரமாகவும் பொருத்தமற்றதாகவும் சிலருக்குத் தோன்றலாம். வேறு சிலர் அணுவில் ஆன்மீகம் எங்கு வந்தது என்றும் யோசிக்கலாம். எனினும் அணு என்பது ஆன்மீகத்திற்கு புதிதான ஒரு சொல்லல்ல. மேலும் ஊன்றிப் பார்க்கையில் ஆன்மீகத்திற்கு அணு வேறு பட்டதல்ல என்பது தெரியவரும். நம் முன்னோர்கள் இறைவனை அணுவிலும் காணலாம் அண்டத்திலும் காணலாம் என்றே உணர்ந்து வந்துள்ளார்கள். அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது நாம் நன்கறிந்த பழமொழி. நமது சங்கீத மும்மூர்த்திகளுக்கும் முற்பட்டவரான புரந்தரதாசரின் ‘அணோரணீயான் மகதோமகீயான் ‘ என்ற வரிகள் சங்கீதமறிந்தவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. அதற்கு அணுவிற்குள்ளும் ஓர் அணுவாகவும், மிகப்பெரியது என்பதைவிட மிகமிகப் பெரியதாகவும் இருப்பவன் என்று பொருள்.

பல ஆயிர ஆண்டுகளுக்கு முன்பே அணுவைப் பற்றி சிந்தனை மூலமாகவே அறிந்து வர்ணித்தார்கள் நமது முன்னோர்கள்.

அணுவைப் பற்றித் தெரிந்திருந்தாலும், விஞ்ஞானரீதியான கருத்துகளைக் (theoretical concepts) கொண்டும், பரிசோதனைகள் (experiments) மூலமாகவும் அணுவைப் பிளப்பதைப் பற்றி ஆராய்ந்து, அதிலிருந்து கிடைக்கும் வெப்பசக்தியை நாம் தினந்தோறும் உபயோகிக்கும் மின் சக்தியாக மாற்றக்கூடிய அணுமின் உலைகளை (atomic power reactors) நிர்மாணித்திருப்பது தற்கால மானிட சமுதாயத்தின் சாதனை என்று பெருமைப்படலாம்.

அணு உலை மிகச் சமீப காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும் பல யுகங்களுக்கு முன்பே இயற்கையாகவே எப்படி புராதனமான அணுஉலைகள் இருந்தன என்பதைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. 

Gabon

அணு உலைகளில் எரிபொருளாகப் (nuclear reactor fuel) பயன்படும் யுரேனிய தாது (Uranium ore), ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் கேபான் (Gabon) நாட்டில், ஓக்லோ (Oklo) பிரதேசத்தில் உள்ள சுரங்கங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு – முக்கியமாக பிரான்ஸ் (France) தேசத்திற்கு – ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்ற இடங்களிலும் இந்த கனிமப்பொருள் கிடைக்கிறது எனினும் ஓக்லோ சுரங்கங்களில் மட்டும் சில அதிசயமான சம்பவங்கன் நிகழ்ந்தன.

ஓக்லோவில் நடந்த அந்த அதிசய நிகழ்ச்சிகள் யாவை ?

1972-ஆம் வருடம், மே மாதம். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியேர்லாட் (Pierrelatte) நகரில் உள்ள, யுரேனியத்தை செழிப்பூட்டும் தொழிற்சாலையில் (Uranium enrichment plant), வழக்கம்போல், கேபான் சுரங்கத்திலிருந்து வந்த ஒரு யுரேனிய-மாதிரியை (Uranium sample), மாஸ் ஸ்பெக்ட்ராமெட்ரி (mass spectrometry) மூலமாக செய்த பரிசோதனையின் முடிவு மிக ஆச்சரியகரமாக இருந்தது மட்டுமின்றி இவ்வளவுநாள் பலர் கொண்டிருந்த கருத்துக்களுக்கு மாறாகவும் இருந்தது.

இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தில் (Natural Uranium), யு-235 (U-235) என்ற ஐஸோடோப்பின் (isotope) எண்ணிக்கை, ஒரு லட்சத்தில் 720.7 (0.7207%) என்ற விகிதத்தில் இருந்திருக்கவேண்டும். (மீதி, முக்கியமாக, யு-238 ஐஸோடோப்.) ஆனால் கேபானிலிருந்து வந்த மேல் குறிப்பிட்ட மாதிரியிலோ யு-235, லட்சத்தில் 717.1 (0.7171%) என்ற விகிதத்தில் தான் இருந்தது. ஒரு லட்சம் பேர் அடங்கிய சமுதாயத்தில் மூன்றோ நான்கோ நபர்கள் மட்டும் குறைந்தாலென்ன ? குறைவு மிகச்சிறிய அளவாக இருக்கிறதே! ஒருவேளை பரிசோதனை முறையின் உள்ளுறைப்பிழையாக (inherent error) இந்த வித்தியாசம் இருந்திருக்கக் கூடுமோ என்று நீங்கள் நினைக்கலாம்.

ஒரு அணு உலையில் தொடற்சியாக அணுப்பிளவை நிகழச்செய்து அதலிருந்து உபயோகப்படக்கூடிய அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு, எரிபொருளில் இருக்கும் யு-235-இன் எண்ணிக்கை மிக மிக முக்கியமானது.


Fission

 1. 143 நியூட்ரான்களும் 92 புரோட்டான்களும் கொண்ட யு-235 அணுக்கரு.

 2. குறைவேக (Slow) நியூட்ரான்.

 3. ஸ்திரமற்ற அணுக்கரு (Unstable Nucleus).

 4. பிளவுத்துண்டம், உதாரணமாக பேரியம் (Barium).

 5. பிளவுத்துண்டம், உதாரணமாக கிரிப்டான் (Krypton).

 6. ஒரு அணுப்பிளவிலிருந்து சராசரி 2 – 3 வேகநியூட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவற்றில் ஒரு நியூட்ரானாவது அக்கம்பக்த்திலிருக்கும் தணிப்பான் மூலக்கூறுகளுடன் மோதி, (வேகத்தில் குறைவு ஏற்பட்டு) குறைவேக நியூட்ரானாகி, அடுத்தத் தலைமுறை அணுப்பிளவில் பங்கு கொண்டால், தொடர் கிரியை நடைபெறும்.

 7. 1 கிராம் யு-235 முழுவதும் பிளப்பதால் கிடைக்கக்கூடிய வெப்பசக்தி 1 மெகாவாட்-நாளாகும் (Megawatt-day). இதே அளவான வெப்பசக்தியைப் பெற வேண்டுமானால் சுமார் 3 டன் நிலக்கரி தேவைப்படும்.


அணு உலை பெளதீகத்தில் (reactor physics) நுட்பமாக நுழையாமல், மேலெழுந்தவாரியாக, நாம் பின் வருவதை ஏற்றுக்கொள்வோம்.

அணு உலையை ஓட்டுவதற்கு பல்வேறு இயந்திர அமைப்புக்களைத் (systems) தவிர, மிக முக்கியமாக மூன்று பொருட்கள் தேவை. அவை:

 • எரிபொருள் (Fuel) – பிரதானமாக, யுரேனியத்தில் இருக்கும் யு-235 ஐஸோடோப்.

 • ஆற்றி (Coolant) – அணுப்பிளவினால் கிடைக்கும் வெப்ப சக்தியை எரிபொருளிலிருந்து பெற்றுக்கொண்டு, அதன் வெப்பநிலையைக் குறைப்பதற்கு ஆற்றி பயன்படுத்தப் படுகிறது. பிறகு, ஆற்றியிலிருக்கும் வெப்பசக்தியிலிருந்து நீராவி ஜனனியில் (Steam Generator) நீராவி உண்டாக்கப்படுகிறது. இந்த நீராவியைக்கொண்டு டர்பைன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

 • தணிப்பான் (Moderator) – ஒரு அணுப்பிளவில் பிறக்கும் அபரிமித சக்திவாய்ந்த வேகநியூட்ரான்களின் (fast neutrons) வேகத்தைத் தணித்து, தொடர்ந்து அடுத்த அணுப்பிளவில் பங்குபெற செய்யப் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண நீர் (light water), கன நீர் (heavy water), கிராபைட் (graphite) என்ற மூன்று பொருட்களும் பொதுவாக மூன்றுவித ரியாக்டர் டிசைன்களில் (reactor designs) உபயோகிக்கப் படுகின்றன.

நம் நாட்டில், ராவத்பாடா (ராஜஸ்தான்), கல்பாக்கம் (தமிழ்நாடு), நரோரா (உத்திரபிரதேசம்), கக்ரபார் (குஜராத்), கைகா (கர்நாடகா) என்ற இடங்களில் நடைமுறையில் இருக்கும் அணு மின் நிலையங்களும், மற்றும் தாராப்பூர்-3, 4 (மஹாராஷ்ட்ரா), கைகா, ராவத்பாடாவில் கட்டப்பட்டுவரும் அணு மின் நிலையங்களும், இந்திய என்ஜினீயர்கள், விஞ்ஞானிகளுடைய சுயமுயற்சியின் பெருமைக்குரிய சாதனைகள். இந்த அணு உலைகள் பயன்படுத்துவது: இயற்கை யுரேனியம் எரிபொருள், கன நீர் ஆற்றி, கன நீர் தணிப்பான். யுரேனிய செழிப்பூட்டு தேவை இல்லை. அதற்கு மாறாக, அமெரிக்கா தேசத்து நிபுணர்களால் கட்டப்பட்டு நடைமுறையில் இருக்கும் தாராப்பூர்-1, 2 அணு உலைகளிலும், ரஷ்யாவினால் கூடங்குளத்தில் (தமிழ்நாடு) கட்டப்பட்டுவரும் அணு உலைகளிலும் இருப்பது செழிப்பிக்கப்பட்ட யுரேனியம் எரிபொருள் (enriched Uranium fuel), மற்றும் சாதாரண நீர் ஆற்றியும் தணிப்பானும். பிரான்ஸ் நாட்டிலுள்ள ரியாக்டர்களும் இதேமாதிரிதான்.

செழிப்பிக்கப்பட்ட யுரேனியம் (enriched Uranium) என்றால் என்ன ? முன்கண்ட பத்தியிலிருந்து நீங்கள் ஊகித்திருக்கலாம். சாதாரண நீரை உபயோகிக்கும் ரியாக்டர்களுக்கு எரிபொருளாக செழிப்பிக்கப்பட்ட யுரேனியம் தேவை. இயற்கை யுரேனியம் பயனேபடாது. இயற்கை யுரேனியத்தில் யு-235 ஐஸோடோப் 0.7207 சதவிகிதத்தில் இருக்கும் என்று கண்டோம். இதிலிருந்து, கிட்டத்தட்ட அணு அணுவாக, யு-235 அணுக்களை ஒதுக்கிச் சேர்ப்பதே யுரேனிய செழிப்பூட்டு (Uranium enrichment).

செழிப்பூட்டும் செயல் முறை (process) மிகக் கடினமானது. அதிக அளவில் மின் சக்தி தேவைப்படும். இதற்கென்று சிறப்பாக (special) விஸ்தாரமான தொழிற்சாலை கட்டப்படவேண்டும். சாதாரண நீர் ரியாக்டர்களுக்கு (light-water reactors), டிசைனுக்குத் தகுந்தவாறு, 1.5 சதவிகிதத்திலிருந்து 4.5 சதவிகிதம் வரை யு-235 செழிப்பூட்டப்படுகிறது. அணுகுண்டு தயார் செய்ய குறைந்தபக்ஷம் 90 சதவிகிதம் யு-235 என்ரிச்மெண்ட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.


PHWR

எரிபொருள் (Fuel) இயற்கை யுரேனியம் (Natural Uranium)
ஆற்றி (Coolant) கன நீர் (Heavy Water)
தணிப்பான் (Moderator) –  கன நீர் (Heavy Water)

 1. அணு உலை (Reactor)

 2. ஆற்றி பம்பு (Coolant Pump)

 3. நீராவி ஜனனி (Steam Generator)

 4. அழுத்தமூட்டி (Pressurizer)

 5. கட்டிடத்தின் அழுத்தத்தைக் குறைக்க நீர்த்தேக்கம் (Pressure Suppression Pool)

 6. நீராவி (Steam)

 7. டர்பைன் (Turbine)

 8. மின் ஜனனி (Generator)

 9. கண்டென்ஸர் (Condenser)

 10. தணிப்பான் பம்பு (Moderator Pump)

 11. இரட்டை உள்ளடக்கிக் கட்டிடம் (Double Containment Building)

 12. எரிபொருளூட்டும் இயந்திரங்கள் (Fuelling Machines)


ஓக்லோ யுரேனியத்தின் கதைக்குத் திரும்புவோம். சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட யுரேனியத்தில் யு-235 ஐஸோடோப்பின் சதவிகிதம் மிக மிக நுட்பமான அளவில் தான் குறைந்திருந்தது என்றாலும் அதன் காரணம் தெரியவேண்டியது அவசியமாயிற்று. யு-235 வேறு எந்த தவறான வழியிலும், ஆயுதங்கள் செய்ய உபயோகப்பட்டு விடக்கூடாதென்ற கவலை ஏற்பட்டதனால் அதன் குறைவின் காரணத்தைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்யப்பட்டது.

அப்பொழுது தான் 200 கோடி வருடங்களுக்கு முன்னதாகவே இயற்கை, ஓக்லோ யுரேனியம் சுரங்கங்களில், அணு உலைகளை உருவாக்கி, தானாகவே செயல்படச் செய்தது பற்றி தெரியவந்தது.

இப்பொழுது விஞ்ஞான ரீதியில் இந்த விசித்திர நிகழ்ச்சியை ஆராயப்புகுந்தால் எங்கு, ஏன், எதனால், எதற்காக, இதனால் என்ன உபயோகம் என்ற பல கேள்விகள் எழலாம். இந்தக் கேள்விகளில், ‘ஏன் ‘ என்ற கேள்வி ஒன்றைத்தவிர, மற்ற எல்லாவற்றிற்கும் விடையளிக்க முடியும். ‘ஏன் ‘ என்பதற்கு விடையளிக்கப் புகுந்தால், நாம் சுற்றி வளைத்து ஆன்மீகப்பாதைக்கு வந்து சேருவோம். அதைப்பற்றி பிறகு பார்க்கலாம். இப்பொழுது ஒவ்வொன்றாக மற்ற வினாக்களை ஆராயலாம்.

ஓக்லோ சுரங்கங்களின் உருவெடுப்பை, ஒரு விதத்தில் பரிணாம வளர்ச்சி (evolutionary development) என்றும் கூறலாம். சுமார் 450 கோடி வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு நட்சத்திரத்தின் இறுதி கால வெடிப்பின் மூலம் (supernova explosion) சூரிய மண்டலமும், அதில் நமது கிரகமாகிய பூமியும் உருபெற்றன. அச்சமயம் இரும்பு, தாமிரம், வெள்ளி, தங்கம், முதலிய பல்வேறு மூலகங்களில் (elements) ஒன்றாக யுரேனியமும் பூமியில் வந்தடைந்தது. ஆதியில் பிராணவாயு (Oxygen) பிரபஞ்ச சூழ்நிலையில் இல்லை. கிட்டத்தட்ட 300 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் பசுமை படரத்தொடங்கிய பிறகே பிராணவாயுவின் சலனம் ஏற்படத்தொடங்கியது. இந்தச் சலனம் பூமியில்படிந்திருந்த யுரேனியத்தை எப்படி பாதித்தது என்று பார்க்கலாம்.

யுரேனியம் சாதாரணமாக பிராணவாயு இல்லாத சூழ்நிலையில் தண்ணீரில் கரையாது. ஆனால் சூழ்நிலையில் பிராணவாயு இருந்தால் கரையும். சூழ்நிலையில் பிராணவாயுவின் பாதிப்பு அதிகரிக்கும்பொழுது நிலத்தடி தண்ணீரில் யுரேனியம் கரையத்தொடங்கி பூமிக்கடியில் ஓடும் கால்வாய்களில், மிகக்குறைந்த அளவில் பெயருக்கு மட்டுமே தென்படும் பற்பல தாதுக்களில் ஒன்றாயிற்று. இவ்வாறு பல கோடி வருடங்களாக யுரேனியம் மற்ற தாதுக்களுடனும் மண் சகதியுடனும் வண்டலாக நிலத்தடியில் ஒதுக்கப்பட்டது.

ஆனால் இதில் விசேஷம் என்னவெனில், தற்சமயம் ஓக்லோ என்று சொல்லப்படும் இடத்தில் ஓடிய கால்வாய்களில் 250 கோடி வருடங்களுக்கு முன்பு வசித்து வந்த ஒருவிதமான பாக்டாரியா, யுரேனியம் அணுக்களை பிரத்யேகமாகச் சேகரித்து வைக்கத்தொடங்கியது. இந்த வேலை திறனாகச் செயல்பட்டதினால் அங்கு, 200 கோடி வருடங்களுக்கு முன்பு, அணுஉலைகள் ஏற்படுவதற்கு மிக சாதகமான சூழநிலை உருவாயிற்று

நாம் எல்லோரும் விஞ்ஞானத்தின் நவீன முன்னேற்றமெனவும் நிறுவுவதற்கு மிகமிக சிரமசாத்தியமானதென்றும் கருதப்படும் அணு உலை (nuclear reactor) பல யுகங்களுக்கு முன்னரே செயல்பட்டு வந்தது என்று அறியும்போது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா ?

முன்பே கூறியது போல், ஒக்லோ அணு உலைகள் இயற்கையிலேயே தானாக நிகழ்ந்தன என்றும் கூறலாம். அப்படி நிகழ்வதற்கு வேண்டிய சூழ்நிலை என்ன என்பதையும் சற்று பார்க்கலாம்.

செழிப்பூட்டப்பட்ட யுரேனியமால்தான் சாதாரணத் தண்ணீருடன் கூடி, அணுஉலையைச் செயல்பட வைக்கமுடியுமென முன்பே கண்டோம். அப்படியானால் மனிதனின் தலையீடு இல்லாமலேயே இயற்கையிலேயே யுரேனியத்தில் யு-235 ஐஸோடோப் 0.72 சதவிகிதத்தைவிட அதிகமாக இருந்ததா ? ஆமாம். அப்படிதான் இருந்தது!

யு-235, மற்றும் யு-238, இவைகளின் விகிதாசாரம் சூரிய மண்டலத்தின் பிறப்பு முதல் இன்று வரை ஒரேவிதமாக இருந்ததாக சரித்திரம் இல்லை. இயற்கையில் உள்ள பல மூலகங்களின் ஐஸோடோப்புகளைப்போல் யுரேனியம் ஐஸோடோப்புகளும் நிலையாக (stable) இல்லாமல் தானாகவே கதிரியக்கச் சிதைவடைகின்றன (radioactive decay). யு-238 கதிரியிக்கச் சிதைவினால் முதலில் தோரியம் (Thorium) என்ற மூலகமாக மாறும். பிறகு படிப்படியாக ரேடியம் (Radium), ரேடான் (Radon), பொலோனியம் (Polonium) என்ற மூலகங்களாக மாறி கடைசியில் காரீயமாக (Lead) ஸ்திர நிலையை அடையும். ஒரு யு-238 மாதிரியில் (sample) உள்ள அணுக்களின் எண்ணிக்கை கதிரியிக்கச் சிதைவினால் (தோரியம் ஆகி) பாதியாக குறைவதற்கு 447 கோடி வருடங்கள் ஆகும். இதை, யு-238இன் அரை ஆயுட்காலம் (half life) என்று கூறப்படுகிறது. இதேபோல் யு-235 அணுக்ளும் தோரியம் வழியாக படிப்படியாக கடைசியில் காரீயமாக ஆகின்றன. ஆனால் யு-235-இன் அரை ஆயுட்காலம் 70 கோடி வருடங்கள்தான் என்று நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

450 கோடி வருடங்களுக்கு முன் உலகம் உண்டான பொழுது இயற்கை யுரேனியத்தில் யு-235 அணுக்களின் எண்ணிக்கை சுமார் 17 சதவிகிதமாக இருந்தது. ஆனால் அவை யு-238 அணுக்களை விட சீக்கிரம் சிதைந்து விடுவதால் விகிதாசாரம் மிகக்குறைந்து 200 கோடி வருடங்களுக்கு முன் 3 சதவிகிதமாகி விட்டது. ஆனாலும் அந்த விகிதாசாரம், நாம் முனபே பார்த்தபடி, யு-235 அணுக்களும் சாதாரண நீரும் சேர்ந்திருக்கும் சூழ்நலையில், அணு உலை செயல்பட மிகப் பொருத்தமான ஒன்று. (தற்சமயம் இயற்கையாக கிடைக்கும் யுரேனியம் தாதுவில், கோடிக்கணக்கான வருடங்களாக நடந்து வரும் கதிரியிக்கச் சிதைவின் பலனாக, யு-235-இன் எண்ணிக்கை 0.72 சதவிகிதம்தான். ஆகவே இப்பொழுது இருக்கும் சுரங்கங்களில் இயற்கை அணுஉலை செயல்பட முடியாது.)

எரிபொருள் (யு-235), தணிப்பான் (நிலத்தடியிலிருக்கும் நீர்) இவைகளைத்தவிர, சங்கிலித்தொடர் போன்ற அணுப்பிளவு இயக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு யுரேனியம் மொத்தமாக ஒரே பாறையாக இருக்கவேண்டும். அதில் யுரேனிய கனிமத்தின் திரட்டு (concentration) 10 சதவிகிதமாவது இருக்கவேண்டும்.

யு-235 அணு பிளவுபடும்பொழுது வெளிப்படும் நியூட்ரான்களில் சில, எரிபொருளைச் சுற்றி தணிப்பானாக இருக்கும் தண்ணீரின் மூலக்கூறுகளுடன் (molecules) மோதி, வேகத்தை இழக்கின்றன. இதனால், இந்த நியூட்ரான்கள், மறுபடியும் பக்கத்தில் உள்ள யு-235 அணுக்களுடன் சேர்ந்து அவற்றை மேலும் பிளவுபடச் செய்கின்றன. இதற்கு மாறாக, வேறு சில நியூட்ரான்கள், அணுப்பிளவில் மேலும் பங்குபெறாமல் அணுஉலையிலிருந்து வெளிப்படலாம். எரிபொருள் அடங்கிய பாறையின் படிமம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளக்கவ்வளவு, வெளிப்பட்டு நழுவிவிடும் (escaping) நியூட்ரான்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். வெளிப்பட்டு நழுவிவிடும் நியூட்ரான்களின் எண்ணிக்கை, உற்பத்தியாகும் நியூட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமாகவோ அல்லது குறைந்தோ காணப்படும் பொழுது அணுஉலை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஓக்லோவில் அச்சமயம் இருந்த சூழ்நிலைக்கு ஏற்றபடி, எரிபொருள் நிறைந்த பாறைகளின் படிமம் 1/2 மீடராவது கனமுள்ளதாக இருந்திருக்க வேண்டும்.

இன்னும் ஒரு முக்கியமான நிலைமையும் அனுகூலமாக இருக்க வேண்டும். அணு உலையில் போரான் (Boron) முதலிய மூலகங்கள் இருந்தால் அவை, நியூட்ரான்களை அணுப்பிளவில் பங்குபெற விடாமல், தாமே அவற்றை அபகரித்துக் கொண்டுவிடும். இவ்வித மூலகங்கள், நியூட்ரான்களுக்கு விஷம் (neutron poison) என்று கருதப்படுகின்றன. ஓக்லோவில் விஷ மூலகங்கள் மிகக்குறைவாகவே இருந்தன. ஆகவே அணுப்பிளவுகள் தடையின்றி நிகழ்ந்தன.

ஓக்லோ சுரங்கங்களில், 200 கோடி ஆண்டுகளுக்குமுன், அணுவியலைச் சார்ந்த மேற்கண்ட நிபந்தனைகள் நிரைவேற்றப்பட்டதால் இயற்கையாகவே பூமிக்கடியில் அணுஉலைகள் செயல்படத் தொடங்கின.

அணுஉலையின் விதிகளில் ஏதாவது ஒன்று மாறுபடும்பொழுது, தொடர்கிரியை (chain reaction) தடைபட்டு, நின்றுவிடுகிறது. அதுதான் ஓக்லோவிலும் நடந்தது.

பாறைகளில், யு-235 அணுக்கள் மிக அடர்த்தியாக இல்லாமல், வேண்டிய அளவில், பரவலாகவே இருந்தன. அதனால் அணுப்பிளவுகளிலிருந்து ஒரு சில கிலோவாட் (kilo watt) அளவில் மட்டுமே வெப்ப சக்தி வெளிப்பட்டது. (ஓக்லோவில் இயற்கையால் நிர்மாணிக்கப்பட்ட அணுஉலைகள் அணுகுண்டுபோல் வெடித்திருக்கவே முடியாது என்பதற்கு யு-235 அணுக்களின் அடர்த்தியின்மை ஒரு முக்கிய காரணம்.) அணுப்பிளவில் உண்டான வெப்ப சக்தி குறைந்த அளவாக இருந்தாலும், நிலத்தடி நீர், கொஞ்சம் கொஞ்சமாக சூடுபெற்று, ஆவியாகி பாறையிலிருந்து வெளியேறிற்று. பாறையிலிருந்த தணிப்பான் குறைந்ததும் அணுஉலையில் தொடர்கிரியையின் செயல்பாடும் நின்றுவிட்டது. இதனால் பாறையின் வெப்பம் குறைந்து நிலத்தடி நீர் திரும்பவும் பாறையில் சேரத்தொடங்கியது. ஆகவே, அடுத்த தலைமுறை தொடர்கிரியை மறுபடியும் ஆரம்பித்தது. இவ்வாறு அணுஉலைகளை மாறிமாறி சலனம்படச் செய்தும் நிற்கச் செய்தும், இயற்கை, பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு விளையாடி மகிழ்ந்தது.

ஒவ்வொரு தலைமுறையிலும் தொடர்கிரியையின் காரணமாக, எரிபொருளின் (அதாவது யு-235 அணுக்களின்) எண்ணிக்கை குறைந்து கொண்டேவந்தது. யுரேனிய அணுக்களின் எண்ணிக்கை தேவையான அளவைவிடக் குறைந்ததும் ஓக்லோவில் இயற்கை அணுஉலைகள் முழுதாக நின்றுவிட்டன.

யுரேனியம் அணு, பிளவடைவதால், பொதுவாக இரண்டு பிளவுத்துண்டங்களாக (fission fragments) மாறிவிடுகிறது. இவற்றில் சில, பலத்த கதிரியிக்கச் சிதைவுக்கு உட்படுகின்றன. சிதைவில் அணுவிலிருந்து வெளிப்படும் கதிர்களில் (rays) ஆல்ஃபா (alpha), பீட்டா (beta), காமா (gamma), எக்ஸ் (X-rays) என்ற கதிர்கள் முக்கியமானவை. கண்காணிப்பு இல்லாமலும், அளவுக்கு மீறியும் இருந்தால் இத்தகைய கதிர்வீச்சு உயிரினங்களை பாதிக்கலாம். (ஆனால் சரியான முறையில், பாதுகாப்புடன் உபயோகம் செய்வதில் நமக்கு கணக்கில்லா நன்மைகளும் உண்டு. பல உதாரணங்களில் ஒன்றாக, கதிர்வீச்சு சிகிச்சை (radiation therapy) மூலம் புற்றுநோய்க்கு (cancer) எக்ஸ் அல்லது காமா கதிர்களை உபயோகித்து குணம் காணுவதைச் சுட்டிக் காட்டலாம்.)

ஓக்லோ உலைகளில் உண்டாகிய அணுப்பிளவுத்துண்டங்கள் அடங்கிய ‘சாம்பல் ‘, பாறைகளில் மிக்க அழுத்தமாக, அங்கிருந்து வேறெங்கும் பரவாமல் படிந்து விட்டன. அணுஉலைகளின் செயல்பாடு நின்று கோடிக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டதால், உச்சமான அரை ஆயுட்காலமுடைய அணுப்பிளவுத் துண்டங்கள்கூட (உதாகரணமாக அயோடின்-129, அரை ஆயுட்காலம் 1.7 கோடி ஆண்டுகள்) கதிரியிக்கச் சிதைவினால் குறைந்து கொண்டே வந்து, தற்சமயம் அங்கு காணப்படவில்லை. இப்பொழுது ஒக்லோ பாறைகளில் இருக்கும் பிளவுத்துண்ட அணுக்கள் பெரும்பாலும் ஸ்திர நிலையை அடைந்த ஐஸோடோப்புகள். இந்த ஐஸோடோப்புகள், யு-235-இன் முற்கால அணுப்பிளவுகளின் தனிப்பட்ட முத்திரைகள். இவை ஓக்லோ சுரங்கங்களில் அணுஉலைகள் செயல்பட்டுத்தான் இருந்திருக்கின்றன என்று சந்தேகமற நமக்குச் சான்றளிக்கின்றன.

பூமியில் ஓக்லோ ஓரிடத்தில் மட்டும் தான் இயற்கை அணுஉலை இருந்திருக்குமா ? மற்ற இடங்களில் இந்தமாதிரி நிகழ்ச்சி நடைபெறவில்லயா ? மற்றொரு இயற்கை அணு உலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையானாலும், நிபுணர்கள், ஓக்லோவின் அதே நிகழ் காலத்தில் (அதாவது சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்) வேறு இடங்களிலும் இம்மாதிரி அணுஉலைகள் நடைமுறையில் இருந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

இதிலிருந்து முக்கியமாக நாம் அறிந்து கொள்ளும் உண்மையும் குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். அதாவது ஓக்லோ சுரங்கங்களில் அணுஉலைகள் செயல்பட்டுத்தான் இருந்திருக்கின்றன என்று சந்தேகமற நமக்குத்தெரிகிறது. சூழ்நிலைக்கு எந்த பாதிப்பும் அதன் கதிர் வீச்சுகளினால் ஏற்படவில்லை என்பதையும் கண்டோம்.

இந்துமதக்கோட்பாடுகளின் படி நாம் திருமாலின் பத்து அவதாரங்களையும் ஆதிசிவனின் திருவிளையாடல்களையும் போற்றுகிறோம். சிருஷ்டிக்கு பிரும்மாவையும், காக்கும் தெய்வமாக விஷ்ணுவையும், அழிவிற்கு சிவனையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நீர், நெருப்பு காற்று இவை யாதுமாகி நின்று பரவெளியில் கிரகங்களாகவும், விண்மீன்களாகவும் மேகங்களாகவும், பூமிக்குள் கனிமங்களாகவும், வைரம் மாணிக்கம் முதலிய விலைமதிப்பற்ற கற்களாகவும், கடல் நீருக்குள் முத்து பவழம் முதலியவையாகவும், இனிய தென்றலாகவும் சுழன்றடிக்கும் சூறாவளியாகவும், கடும் கானல் நீராகவும், இறுகிய பனிப்பாறைகளாகவும், எரிமலையாகவும் கரைகளை விழுங்கும் ‘சுனாமி ‘ யாகவும் உருவெடுப்பதும் அவன்தானே ? சுருங்கச்சொன்னால் இயற்கையும் அவனுடைய திருவடிவம் தானே ? இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் பலபுதிர்கள் தானாக அவிழ்ந்துவிடும்.

அவனுடைய சொரூபமாகிய இயற்கை, ஓக்லோ ரியாக்டர்களை உருவாக்கி, பரிபாலித்து, ஓடச்செய்து, வேடிக்கை பார்த்து மகிழ்ந்து, இறுதியில் உயிரினங்களுக்கு ஒருவித தீமையும் ஏற்படாதவாறு கண்காணித்து அவற்றை மூடியும் வைத்து விட்டது. இது இறைவனின் திருவிளையாடல்களின் நிரூபணம் தானே ?

மனிதனுக்கு, இயற்கையின் ரகசியங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள, இன்னும், எத்தனை யுகங்களாகுமோ, யாருக்குத் தெரியும் ?

(திருமதி மங்களம் ராமமூர்த்தி இந்த கட்டுரையை தமிழில் எழுத உதவி செய்ததுமட்டுமன்றி ஊக்கமுமளித்து வழியும் காட்டினார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.)

****

lsk2007@hotmail.com

அ. ஸநத்குமார் படைப்புகள்

Series Navigation

அ. ஸநத்குமார்

அ. ஸநத்குமார்