அடிப்படைகள் தகர்ந்த போது கிழக்கில் தெரிந்த ஒளிக்கீற்றுகள்

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

அரவிந்தன் நீலகண்டன்


அண்மையில் வெளியான பல பிரபல-இயற்பியல் நூல்களில் ஆசிய ஞான மரபுகளான வேதாந்தம், தாவோத்துவம், ஸென் பெளத்தம் ஆகியவற்றுக்கும் நவீன இயற்பியலுக்கும் சில இணைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இணைத்தன்மைகளை மையமாக கொண்டே நூல்களும் வெளிவந்துள்ளன. காரி ஸுகாவின் ‘நடனமாடும் வூலி ஆசான்கள் ‘ மற்றும் ப்ரிட்ஜாப் கேப்ராவின் ‘இயற்பியலின் தாவோ ‘ ஆகியன இவற்றில் பிரபலமானவை. காரி ஸுகாவ் இயற்பியலாளர் அல்லர். ப்ரிட்ஜாப் கேப்ரா அணுத்துகள் இயற்பியலாளர். எனவே இயல்பாகவே ஸுகாவின் நூலைவிட கேப்ராவின் நூல் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டாபன் காவ்கிங் இத்தகைய போக்குகளை கடுமையாக எதிர்க்கிறார். ‘Mysticism ‘ மற்றும் அறிவியலுக்கும் ‘மடத்தனமான ஒப்பீடு ‘ என்பது அவரது கருத்து. இதில் சுவாரசியமான விஷயமென்னவென்றால், ஹாவ்கிங்கின் புகழ்பெற்ற நூலான ‘காலத்தின் சுருக்கமான வரலாறு ‘ எனும் நூலின் முன்னுரையில் காலம் சென்ற கார்ல் சாகன் எழுதியுள்ள வாசகங்கள் அதே ‘mystic ‘ தன்மையுடன் விளங்குவதுதான். அந்நூலில் ஹாவ்கிங்கே கூட ‘கடவுளின் மனதை அறிதல் ‘ எனும் பதத்தை உருவகமாக பயன்படுத்தியிருப்பதை காணலாம். ஆனால் ஹாவ்கிங்கின் எதிர்ப்புக்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. போலி அறிவியல் போக்குகளை ‘Mysticism ‘ மற்றும் அறிவியலுக்குமான ஒப்பீடு உருவாக்கிவிடும் என்பது அதி முக்கிய காரணம். ஜோதிடம் முதல் திருட்டு குருக்களின் செப்படிவித்தைகள் வரைக்குமாக க்வாண்டம் இயற்பியல் விளக்கங்கள் அளிக்கப்படுவது அறிவியலின் மோசமான பயன்பாட்டிற்கு நல்ல உதாரணம். ஆனால் பொதுவாக ஆசிய ஞான மரபுகளும் குறிப்பாக பாரத ஞான மரபிற்கும் நவீன க்வாண்டம் இயற்பியலுக்குமான உண்மையான தொடர்பு என்ன ? ஒருவேளை தனிப்பட்ட ஒரு இயற்பியலாளர் – ஸ்க்ராட்டிஞ்சர்- தன் ‘பைத்தியக்கார ஈடுபாட்டினால் ‘ சில பழம் சமஸ்கிருத இலக்கிய கருத்துக்கள் மீது ஏற்றிக்கூறியவற்றை வைத்து நாம் பழம் பெருமை பேசித் திரிகிறோமா ?

முதலில் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். கேப்ராவின் நூலில் ஒரு ஓவியம் உள்ளது நடராஜ தாண்டவம் ஒரு குமிழறையில் அணுத்துகள்கள் ஏற்படுத்தும் மோதல்கள் மற்றும் சிதைவுகள் படப்பதிவின் மீது ‘superimpose ‘ செய்யப்பட்டு காட்டப்பட்டிருந்தது. இது மக்களை சென்றடைந்தபோது சிலர் இதனை ‘அணுத்துகள்கள் நடராஜ வடிவத்தில் தாண்டவமாடுவது ‘ கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறத்தயங்கவில்லை. கேப்ராவின் நூலை அடிப்படையாக வைத்து தமிழில் முதன்முதலில் பிரபல நூல் ஒன்றினை சுஜாதா எழுதினார். அதில் அவர் க்வாண்டம் இயற்பியலுக்கும் பாரத ஞான மரபிற்கும் இருக்கும் சில இணைத்தன்மைகளுக்கு பொருள் நம் முனிவர்கள் க்வாண்டம் இயற்பியலை அறிந்திருந்தனர் என்பதில்லை என கூறியிருந்தார். ஆக இந்த இரு நிலைபாடுகள் ஏற்கனவே தெளிவாக விலக்கப்பட வேண்டியவை. இந்த இணைத்தன்மைகளை பற்றி எழுதியவர்களில் நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது விழுக்காட்டினர் இந்த விஷயங்களில் கவனமாகவே உள்ளனர்.

ஆனால் இயற்பியலின் உண்மைத்தேடலுக்கு தத்துவ நிலைபாடு முக்கியமானதோர் உந்து சக்தியாகும். ‘தத்துவதன்மையற்ற அறிவியல் காட்டுமிராண்டித் தன்மையுடையது ‘ என்பார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். அவரது அறிவியலின் தத்துவ நிலைபாடானது ஒரு அழகிய கணித ஒழுங்கின் வெளிப்பாடாக இப்பிரபஞ்சத்தை கண்டது. அவர் ஸ்பினோசாவின் இறைவனை தன் கணிதச் சமன்பாடுகளிலும் பிரபஞ்ச ஒழுங்கிலும் கண்டவர். இங்கு மற்றொரு முக்கிய வேறுபாட்டினை நாம் உணரவேண்டும். சில அறிவியலாளர்கள் தீவிர சமய நம்பிக்கை கொண்டவர்கள்.வேறு சிலரோ வேறுவித ஈடுபாடுகள் கொண்டவர்களாயிருப்பர். அவர்களது அறிவியலுக்கு சம்பந்தமற்றவை அந்த நம்பிக்கைகள். ஆனால் ஐன்ஸ்டைனின் தத்துவநிலைபாடு என்பது அத்தகையதன்று. அவரது அறிவியல் பார்வையினை, அணுகுமுறையினை அது மிகவும் தெளிவாக பாதித்தது. ஐன்ஸ்டைனின் அறிவியலின் பிரபஞ்சவியல் தன்மை அவரது தத்துவநிலைபாட்டிலிருந்து வெட்டப்பட்டு ஆராயப்படுமெனில் அது குறைபாடுடையதாகவே இருக்கும். ஒருவிதத்தில் ஐன்ஸ்டைனின் நிலைபாடு ஒரு அதிஉச்ச டெஸ்கார்ட்டேயிசம் எனலாம். புற உலகின் சத்தியத்தை கேள்விக்குள்ளாக்காத ஒரு தத்துவ நிலைபாட்டின் மீது அவர் தன் கால்களை நன்கு ஊன்றி நின்றுகொண்டிருந்தார். அவரது அறிவியல் அடித்தளம் அத்தத்துவநிலைபாடு. அப்போது வரையான இயற்பியலின் தத்துவபடுகையும் அதுவாகவே இருந்தது. மேற்கிற்கு -குறிப்பாக யூத சமுதாயத்திற்கு- செழிப்பான ஆன்மிக மார்க்கங்கள் இருந்தன. ஆயின் அவை எவற்றிலும் புறத்தின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. மேற்கின் தத்துவ பரிணாமத்தில் அத்தகையதோர் மரபு மையத்தன்மையுடன் இருக்கவில்லை. ( ‘I refute it thus ‘ என பிஷப் பெர்க்லி முன் கொடுக்கப்பட்ட உதை அதன் காரணமாக இருக்கலாம்.) அதிலும் பிரக்ஞையின் கலப்பால் உருவாகும் பிரகிருதி என்பது நிச்சயமாக மேற்கத்திய மரபில் காணப்படவில்லை. ஷோபனரின் ‘பிரபஞ்சம் ஒரு சங்கல்பமாக ‘ என்பன போன்ற எண்ணங்கள் கிழக்கிலிருந்து பெறப்பட்டவை எனினும் அவை அறிவியலின் தத்துவ அடிமானமாக இருப்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று.

இந்நிலையில் க்வாண்டம் இயற்பியல் – குறிப்பாக அதன் கோபன்ஹேகன் வியாக்கியானம் -எத்தகைய விளைவினை உருவாக்கிற்று ? பிரக்ஞை-பிரகிருதி கலப்பால் எழும் பிரபஞ்சமே அறியப்படுகிறது என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு எவ்வித விளைவினை ஏற்படுத்திற்று ? அவரது வார்த்தைகளில் ‘ஒருவரது கால்களின் கீழிலிருந்து திடாரென நிலம் காணாமல் போய்விட்டது போன்ற நிலை ஏற்பட்டது. ஸ்திரமான அஸ்திவாரமற்று போய் எதையும் உருவாக்க முடியுமென்பதே இல்லாமலாகிவிட்டது. ‘ க்வாண்டம் இயற்பியலை உருவாக்கியவர்களுக்கும் இந்நிலை தெளிவாக தெரிந்தது.. வெர்னர் ஹெய்ஸன்பர்க்கின் வார்த்தைகளில், ‘இன்று க்வாண்டம் இயற்பியலுக்கு எதிராக கூறப்படும் வாதங்களுக்கான காரணங்களை அறிவியலின் அஸ்திவாரம் நகர ஆரம்பித்துவிட்டது என்பதை உணர்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்நகர்தல் அறிவியலின் நிற்கும் நிலமே இல்லாததாகிவிட்டது போன்றதோர் நிலையினை ஏற்படுத்திவிட்டது. ‘

இந்த சூழலில்தான் க்வாண்டம் இயற்பியல் தரும் பிரபஞ்சவியலுக்கு இணைத்தன்மை கொண்ட தத்துவ மரபுகள் ஏற்கனவே இருப்பதனை க்வாண்டம் இயற்பியலின் பிதாமகர்கள் சுட்டிக்காட்டினர். நெய்ல்ஸ் போர் கூறினார், ‘ஏற்கனவே புத்தரும் லாவோட்ஸும் இருத்தலெனும் பெரும் நாடகத்தில் பங்குபெறுவோர் மற்றும் பார்வையாளர்கள் எனும் நிலைபாடுகளை இயைவுபடுத்த சந்தித்த அறிவியக்கவியல் பிரச்சனைகள் நவீன அணுக்கோட்பாடு தரும் பாடத்திற்கு இணையானவையே. ‘ வெர்னர் ஹெய்ஸன்பர்க்கும் ‘கிழக்கத்திய தத்துவ எண்ணங்களுக்கும் க்வாண்டம் இயற்பியலின் தத்துவ உள்ளீட்டிற்கும் தொடர்பிருப்பதன் குறியீடுகள் ‘ குறித்து பேசினார். ஓப்பன்கைமர் க்வாண்டம் இயற்பியல் நம் சாமானிய அறிதலுக்கு முரணாயிருப்பதை குறித்து கூறுகையில், க்வாண்டம் இயற்பியல் காட்டும் பிரபஞ்சவியலுக்கு ‘பெளத்த ஹிந்து சிந்தனை மரபில் நம் (மேற்கத்திய) மரபிலிருப்பதைக் காட்டிலும் ஒரு மைய இடம் இருக்கிறது. நாம் காண்பது அப்பழம் ஞானத்தின் சீர்படுத்தப்பட்ட ஊக்கமான உதாரணம். ‘ என்கிறார்.

எனவே ஸ்க்ராட்டிஞ்சர் தன் சமஸ்கிருத ‘கிறுக்கினால் ‘ பாரத ஞான மரபிற்கும் க்வாண்டம் இயற்பியலுக்கும் முடிச்சு போடவில்லை. அவரது ‘உயிர் என்றால் என்ன ? ‘ வில் காட்டப்படும் உபநிஷத மேற்கோள்களிலும் சரி, சூஃபி மேற்கோள்களிலும் சரி அல்லது அவரது ‘பூனை பரிசோதனை ‘ நவீனப்படுத்தப்பட்ட சாங்கிய விவாத உதாரணம் என்பதிலும் வெளிப்படுவது, மேற்கின் மைய தத்துவபடுகையிலிருந்து க்வாண்டம் இயற்பியலின் அஸ்திவாரம் நகர்ந்ததைதான்.

பயன்படுத்தப்பட்ட நூல்கள் :

ஃ ‘The Web of Life ‘ – Fritjof Capra

ஃ ‘Tao of Physics ‘ – Fritjof Capra

ஃ ‘Science and Common Understanding ‘ – Julius. R. Oppenheimer

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்