அசையும் நிழல்கள்

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


W H A T is paradise for a stray dog ?

– roadful of trees and bagful of urine

ஆமாம் நண்பா. கலை என்பதே முடிக்கப்படாத ஓவியம். வாசகனால் அது முழுமைப்பட வேண்டும்.

அழுகை என்றாலும் யாரும் கண்டு கொள்ளாவிட்டால் அலுப்பாகி விடுகிறது. அதை நினைத்தே ஏமாற்றமாய் அழுகையாய் வருகிறது.

மனசைப் புதுப்பிக்கிற எந்தக் கணமும் கவிதைக் கணம்தான். மனசைப் புதுப்பிக்க வேண்டியிருக்கிறது. மனம் தானே முன்வந்து வாழ்க்கையின், இயற்கையின் புதிய பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிறது அவ்வப்போது. பாதிரிமார்கள் பைபிளில் கைதிருப்பிய பக்கத்தை வாசிப்பதைப் போல.

சிக்கலாகி, பிடிபடாத வாழ்க்கையைக் கட்டுக்குள் கொணர ஆவேசமுறும் மனம். எதையோ தேடப்போய் தொலைத்த வேறு பொருள் கைகிட்டுவதும் உண்டு.

காற்று வாங்கப் போனவன் கவிதை வாங்கி வந்த கதை.

சிலாட்கள் என்னா வாழ்க்கை… என்பான் பெருஞ்சலிப்புடன். விட்டால் தன் பாடையைத் தானே கட்டிக்குவான் போல. தாலி கட்டிய நாள் தொடக்கம் ஒரே சச்சரவு. பூதக் குடுவையைத் திறந்துட்டானா ? ஏடாகூடமான உற்சாகத்தில் தாலியை இற்றுக்கிக் கட்டித் தொலைச்சிட்டானா ? இல்லத்தாள் உரலில் போட்டு இடிக்கிறாள் தலையை. இந்த லச்சணத்தில் அவள் பேரே செல்லம். அதை நம்பிக் கல்யாணங் கட்டியவன். திண்டாட்டமாகிப் போச்சு. இவன் வீரமணி. வேடிக்கை அதுவல்ல- ஒத்துமையாய் வாழும் தம்பதிக்குக் குழந்தை இல்லை. வீரமணி குழுவினர் புத்தாண்டு காலண்டர் போல குழந்தைகள் வெளியிடுகிறார்கள். பிரஷர் குக்கர்கள்.

க வி ஆ த க் க ண ங் க ள்.

கவிதை வற்றாத அருவி. சிலர் அதை உள்ளங்கையில் பிடித்து ஒருவாய் அருந்தி கொப்பளித்துத் துப்புகிறார்கள். சிலர் கவிஞர்கள்.

ம ன சி ன் எ ச் சி ல்.

எழுத வந்தபின் எழுதாமல் முடியாது என்றாகிப் போகிறது. எதை எப்போது எப்படி எழுதுவது… தீர்மான சங்கல்பங்கள் பயனில. எழுத்தின் முதல் உச்சிவருடல், துீங்கும் குழந்தையை எழுப்பும் மெல்லிய உசுப்பல், எப்போது நிகழும் தெரியாது. திடுதிப்பென்று என்னவோ ஆகிறது. அதுவரை துீங்கிக் கொண்டிருந்தாப் போல ஒரு பிரமை. ஒரு திடுக். நட்டு சுழல்கிறதா ?… ரயில் அசைவு. வெளிப் பரபரப்பு. உள்ளேயும். ஒரு பூ மடல்விரிகிறது.

மன்னவன் வந்தானடி – பாடல் காட்சி. கதவு கதவாய்த் திறக்கிறது. ஏண்டா பாவி இத்தனை கதவு. அரண்மனையிலேயே திருட்டு பயமா ? பூட்டிக் கிடந்தாப் போலவும் இல்லை. காத்தடிச்சாப் போல, காபரே பெண்ணாட்டம், தானே திறக்கிற கதவுகள்.

உள்ளேயிருந்து நடையில், ராஜநடையில் ஒரு கவிதை.

துவங்குகிறது நாடகம். சூரியனும், பிரபஞ்சமே கூட பொம்மைகள் ஆகின்றன. நிலா என்னும் மின்ட், பெப்பர்மின்ட். செஸ் ஆட்டத்தில் போல காய்களை நகர்த்தி சுவாரஸ்யம் காணும் மனம். அசையாத் தேர் அசைகிறது. கடல் அப்படியே நிற்கிறது. பஸ்சில் போகிற பெண்ணை அடிச்சான்யா முத்தம் இங்கிருந்தே. பறவைகள் பேசுகின்றன ஜோராய் – குறி பார்த்துச் சுடத் தெரியாத மாப்ளை துப்பாக்கி பிடிக்கலாமா ?… எனக் கிண்டல் செய்கின்றன பறவைகள்.

வார்த்தைகள் குதிரைகள் ஆகின்றன. காட்சித் திரிபு. புது விளக்கம். புதிதாய்ப் பிறந்தோம்.

யாம் பெறா இன்பம் பெறுக இவ்வையகம்.

பேக்கரியில் வெட்டிய பன் போல ஜன்னல் கம்பி வழியே நிலா.

படித்துறையில் குளிக்கிறார்கள் ஸ்திரீகள். முதுகு தேச்சி விடுட்டி… எனக் குரல் கேட்டு ஒத்தாசைக்கு மரத்தில் இருந்து இறங்கி வரும் குரங்கு. சீழ்க்கை யடிக்கிறது நாணல்.

ஊரெல்லையில் விபத்து – நன்றி மீண்டும் வருக, பலகையின் அருகே.

பிணத்தின் பின்னால் அழுதபடி வரும் மனைவி. உதிர்வது அவள் கூந்தல் மலர்களா ?

அபார்ஷனாகி வீடு திரும்பும் பெண்ணுக்கு பஸ்சிலிருந்து டாடா காட்டும் குழந்தை.

எழுதுகோல் கண்டவன் வாழ்க.

—-

முன்னுரைப் பகுதி

எஸ். ஷங்கரநாராயணனின்

ஊர்வலத்தில் கடைசி மனிதன் /கவிதாஸ்திரம்/

storysankar@rediffmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்