அக்கா பையன் சுந்தரம்

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

கே.பாலமுருகன்


யாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து வெளியே பார்த்தேன். என் அக்கா பையன் சுந்தரம் வெளிக்கதவில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான்.

“யேண்டா?”
“அத்தெ இருக்காங்களா?”
“உள்ளே வா”

அவன் உள்ளே வந்ததும் உடல் முழுவதும் பரவியிருந்த வியர்வை நெடியைச் சுவாசிக்க முடிந்தது. முகம் கறுத்து, வெகுநேரம் வெயிலில் நடந்தே வந்திருக்க வேண்டும். கமலாவைப் பார்த்ததும் “அத்தே தண்ணீ வேணும்” என்று கேட்டுவிட்டுத் தலையைத் தொங்க போட்டுக் கொண்டான். எப்பொழுதாவது முக்கியமான நிகழ்ச்சி என்றால்தான் சுந்தரம் என் வீட்டிற்கு வருவான். கடைசியாக மூன்று மாதத்திற்கு முன் மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்திருந்தான்.
அவனிடம் ஏதும் கேட்க முடியாதவனாய் அமர்ந்திருந்தேன். எனக்கே என் இறுக்கம் வெறுப்பை உண்டாக்கியது. கால்களைச் சுருக்கிக் கொண்டு கமலா கொடுத்த தண்ணீரை சிறிது நேரத்தில் உறிஞ்சி உள்ளே விழுங்கிக் கொண்டான். தண்ணீர் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்துகொண்டு வெளியே பார்த்தான்.

“ஏய்! யேன் வந்துருக்கான்னு போய் கேளு நைசா”

கமலா அவனுக்கு எதிராக அமர்ந்து கொண்டு சொல் தூண்டியலைத் தயார்ப்படுத்தினாள். சுந்தரம் எதிலும் அக்கறையில்லாதவன் போல அமர்ந்திருந்தான். ஒருவேளை அவனுடைய கவனம் வேறெங்காவது போயிருக்கலாம். அவனிடம் சொற்கள் இல்லாததைப் போல அல்லது முற்றிலும் சொற்களை வேறு எங்கோ தூக்கி வீசிவிட்டு இங்கே வெறும் உடலாக அவன் வந்திருக்கலாம்.

“அக்கா எப்டி இருக்காங்கய்யா? ஏதாவது முக்கியமா சொல்ல வந்தியா?”

கமலாவிற்கு எந்தவித சாமர்த்தியமும் இல்லாததை இப்படித் தொடக்கத்திலேயே ஒப்புக் கொண்டிருக்கிறாள். அவள் கேட்ட கேள்விகள் அவனை எந்தவகையிலும் தூண்டியிருக்காது. உடலை மட்டும் அசைத்துவிட்டு கமலாவை ஒருமுறை பார்த்தான். அவனிடம் பதில் இல்லை என்பதைப் போல இருந்தது அந்தக் கணநேர பார்வை.

“சும்மாதான் வந்தீயா? கூட்டாளி பாக்கயா? சரி இரு தே களக்குறேன், குடிச்சிட்டுப் போ”

கமலா நல்லவள் போல என்னிடம் வந்தாள்.

“கேள்வி கேக்கறா பாரு. எதுக்கு வந்துருக்கேனு கொஞ்சம் அதட்டற மாதிரி கேட்டுருக்கலாம், சொல்லியிருப்பான். அவன் மூஞ்சே பாத்தயா? ஏதோ சண்டெ போல அவன் அம்மாகூட. ஏற்கனவே சொல்லியிருக்கான், மாமா வீட்டுல போய் தங்கனும்னு. போய் தண்ணீ கொடுத்து எப்படியாவது அனுப்பி வச்சிறு சொல்லிட்டேன்”

கமலா தேநீர் களக்குவதில் தீவிரமடைந்தாள். வீட்டு ஹாலை எக்கிப் பார்த்தேன். சுந்தரம் எழுந்து வெளியே போய்க் கொண்டிருந்தான். முன்வாசல் கதவை மிக அழகாகத் திறந்து, மீண்டும் அழகாக சாத்திவிட்டு பெரிய சாலையில் இறங்கி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation