வறுமை தின்ற கவிஞன் – சாரணபாஸ்கரன்

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

அப்துல் கையூம்


பினாங்கிலுள்ள இந்திய வர்த்தக மையத்தில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரை ஒன்றை அண்மையில் நான் படிக்க நேர்ந்தது. மலேசியா நாட்டில் தமிழ்மொழி அடைந்த வளர்ச்சியினைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை அது.

அந்நாட்டில் எழுத்துத் துறையில் குறிப்பாக பத்திரிக்கைத் துறையில் தமிழ்ப்பணி ஆற்றியவர்களின் பட்டியலில் கூத்தாநல்லூரைச் சேர்ந்த கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன் அவர்களுடைய பெயர் தலையாய வரிசையில் இடம்பெற்றுள்ளது.

சாரணபாஸ்கரனின் இயற்பெயர் டி.எம்.எம்.அஹ்மத் என்பதாகும். “சாந்தி சாரணர்” எனும் சபையில் தொண்டராக இருந்த அவருக்கு ‘பாஸ்கரன்’, ‘பாஸ்கரதாஸ்’ ஆகிய புலவர்களின் நினைவாக ‘சாரணபாஸ்கரன்’ என்ற புனைப்பெயரை (அவரது 15வது வயதில்) 1937-ஆம் ஆண்டு அவருக்குச் சூட்டியது ந.மு.வேங்கடசாமி நாட்டார் எனும் பெரியார்.

“தமிழோடு நிலைத்திருக்கப் பிறந்தவன் இக்கவிஞன்” என பாவேந்தர் பாரதிதாசனால் புகழாரம் சூட்டப்பட்டவர் சாரணபாஸ்கரன்.

பினாங்கிலிருந்து வெளிவந்த ‘தேசநேசன்’ (1947) நாளிதழ், மற்றும் “களஞ்சியம்” (1949) வார இதழின் ஆசிரியராக பொறுப்பேற்று, சிந்தனையைத் தூண்டும் வகையில் தலையங்கம், கவிதைகள், கட்டுரைகள் வெளியிட்டு வந்தார் நம் கவிஞர்.

1957-ஆம் ஆண்டில்வெளிவந்த “யூசுப்-ஜுலைகா” என்ற காதற் காவியம் தமிழ் இலக்கியத்தில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றதை பலரும் நன்கறிவர். பாரசீக மொழியில் மெளலானா ரூமி எழுதிய இந்நூலை அதன் சுவை குன்றாத வகையில் தீந்தமிழில் தீட்டியிவர் இவர். ‘ரோமியோ-ஜூலியட்’, ‘லைலா-மஜ்னு’, ‘அம்பிகாபதி-அமராவதி’, ‘சலீம்-அனார்கலி’ ஜோடிகளின் அமரக் காதலுக்கு இணையான ஒரு காப்பியம் இதுவென்றால் அது மிகையன்று.

இலங்கை அரசினால் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெருமை இந்நூலுக்கு உண்டு. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா போன்ற நாடுகள் மட்டுமில்லாது, தமிழ்க்கூறும் நல்லுலகில் பேரும், புகழும் பெற்றுத் திகழ்ந்த இம் மாபெரும் கவிஞனின் கடைசி கால வாழ்க்கை வறுமை நிறைந்ததாய் இருந்ததை நினைக்கும்போது நெஞ்சம் கனக்கிறது. ‘நல்லதோர் வீணையொன்று நலங்கெட புழுதி’யில் உழன்றதை எண்ணுகையில் மனம் பதைக்கிறது.

ஒரு அறிஞன் உயிரோடிருக்கையில் அவனது அருமை நமக்குத் தெரிவதில்லை. அவன் மரணித்துச் சென்றதும் அவனுக்காக மணிமண்டபம் கட்டுகிறோம்; நினைவுச்சின்னம் எழுப்புகிறோம்; அவனது குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்குகிறோம்; அவனது நூல்களை நாட்டுடமை ஆக்குகிறோம்; அவனது நினைவு நாளன்று அவனை போற்றிப் புகழ்ந்து கொண்டாடுகிறோம்.

கவிஞர்களுக்கு ஏழ்மை நிலை இங்கு மட்டுமல்ல. புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞன் ஜான் கீட்ஸ் போன்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. பசியிலும் பிணியிலும் உழன்று உயிர் துறந்த அவனது வாழ்க்கை பரிதாபதிற்குரியது.

“கால என் கண்முன்னே வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்” என்று சூளுரைத்த மகாகவி மரணிக்கையில் அவனுக்கு 39 வயதுகூட நிரம்பியிருக்கவில்லை. வறுமையில் வாடிய இந்த கவிராஜனின் உடல் தீக்கிரையானபோது அவனது உடலின் எடை வெறும் அறுபது இறாத்தல்தானாம். குவளைக் கண்ணன், லட்சுமண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா, நெல்லையப்பர் இவர்களுடன் பாரதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாகவே இருந்தது.

எட்டையபுரத்தில் இருக்கும் பாரதி பிறந்த வீட்டின் அழகான முன்தோற்றத்தை ஒரு வலைப்பதிவில் கண்டபோது வைரமுத்து 1977-ஆம் ஆண்டில் எழுதிய ஒரு கவிதைதான் என் நினைவுக்கு வந்தது.

ஏழைக்கவிஞன் ஒருவன் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுகிறான்:

“வாடகை தரமுடியாமல்
வருகிற சண்டையால்
இப்போது நானிருப்பது
இருபத்தேழாவது வீடு
இன்றோ
நாளையோ
நான் இருமிச் செத்ததும்
நீங்கள் எனக்கு
‘நினைவகம்’ அமைக்க
எத்தனை வீட்டைத்தான்
வாங்கித் தொலைப்பீர்கள்”

இந்த நிலை இதை எழுதிய கவிஞருக்கு இல்லை என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். எல்லோருமா வைரமுத்துவைப்போல் அதிருஷ்டசாலிகள்? பெரும்பான்மையான கவிஞர்கள் சோற்றுக்கே திண்டாட்டம் அடித்தவர்களாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

பல ஆண்டுகட்கு முன்னர், எங்கள் நண்பர் குழாமைச் சேர்ந்த கவிஞன் ஒருவனை என் நண்பனொருவன் தன் தந்தையிடத்தில் அறிமுகம் செய்தான்.

“வாப்பா! இவர்தான் கவிஞர் ‘ஸோ அண்டு ஸோ’. (நாகரிகம் கருதி கவிஞரின் பெயரை இங்கே நான் குறிப்பிடவில்லை)

“அப்பிடியா? ரொம்ப சந்தோஷம். தம்பி என்ன செய்யிறாரு?” – இது வாப்பா.

“அதுதான் சொன்னேனே வாப்பா, இவரு கவிஞரா இருக்காருன்னு” – மகன் சொன்ன பதில்.

“அது தெரியுது. ‘பூவா’க்கு என்ன செய்யிறாருன்னு கேட்டேன்?”

இந்த உரையாடலின் போது உடன் இருந்த எனக்கு, நண்பனுடைய தகப்பனின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட ஆதங்கத்தை என்னால் உணர முடிந்தது. பிழைப்புக்கு வழியில்லாத ஒரு தொழிலை இந்த வாலிபன் தேர்ந்தெடுத்து இருக்கின்றானே என்ற வருத்தம் அவரது தொனியில் பிரதிபலித்தது.

தன் பிள்ளை டாக்டர் ஆகவேண்டும், இன்ஜீனியர் ஆகவேண்டும் என்றுதான் எல்லா தகப்பனும் கனவு காண்கிறானே ஒழிய, தன் மகன் கவிஞனாக வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பது கிடையாது.

“எமக்குத் தொழில் கவிதை; நாட்டுக் குழைத்தல்; இமைப் பொழுதும் சோராதிருத்தல்” என்று மார்தட்டிச் சொல்கின்ற மனோபாவம் நம்மில் எத்தனைப் பேர்களுக்குத்தான் உண்டு?

கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன் ஏழ்மையின் காரணமாக பிறருடைய தயவை எதிர்பார்த்து நிற்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார் என்பது கொடுமையிலும் கொடுமை. ஒருபுறம் ‘கெளரவம்’ குறுக்கே நின்றாலும் பெரும்பான்மையான நேரத்தில் இவரது விஷயத்தில் ‘இயலாமை’தான் வெற்றி கண்டது.

‘ஏழ்மை என்பது சூழ்நிலை ஏற்படுத்துகின்ற ஒரு தற்காலிக கொடுமையே அன்றி அது நிரந்தரமல்ல’ எனும் கருத்தை கவிஞர் தன்னைப் போன்று வறுமையின் பிடியில் உழல்பவர்களுக்கு ஆறுதலாகக் கூறுகின்றார். ‘காலங்கள் மாறும்; காட்சிகள் மாறும்; கலங்காதிரு மனமே!’ என்று தனக்குத்தானே நம்பிக்கையூட்டிக் கொள்கிறார்.

“ஏழ்மையினால் தலைகுனிந்து இருக்கின்றோம்
—என்பதனால் இகழ்தல் வேண்டாம் !
தாழ்வுணர்ச்சி மிஞ்சியதாற் செயலிழந்தோம்
—என்பதனால் தாக்கல் வேண்டாம்
வாழ்வுரிமை உங்களுக்கே என்றெண்ணி
—எங்களையே வதைக்க வேண்டாம் !
சூழ்நிலையும் மாறிவிடும், சூரியனும்
—மறைந்துவிடும் துடுக்கொழிப்பீர் !”

என்று வறியோர்களை எள்ளி நகையாடும் பணம் படைத்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றார். ‘ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்’ என்று சொல்வதில்லையா?

கவிஞரின் இறுதிக் காலங்களில் பல்வேறு தருணங்களில் பல்வேறு செல்வந்தர்களுக்கு ‘சீட்டுக்கவி’ எழுதி உதவி கேட்டு தன் வறுமைத்துயர் நீக்க பாடுபட்டிருக்கிறார். சீட்டுக்கவி என்பது தமிழ்மொழியில் உள்ள 96 வகை பிரபந்தங்களில் ஒன்றாகும். வாரிவழங்கும் வள்ளல்களைச் சிறப்பித்து “ஓலைத்தூக்கு” எழுதுவதும் பண்டைய காலத்தில் புலவர்களின் வழக்கமாக இருந்தது.

எட்டையபுரத்து ஜமீந்தார் வெங்கடேசுவர எட்டப்ப பூபதிக்கு, (1919) பாரதி எழுதிய இதுபோன்ற சீட்டுக்கவிகள் நமக்கு காணக் கிடைக்கிறது.

இதே பாணியை பின்பற்றி கூத்தாநல்லூரைச் சேர்ந்த ஏ.வி.எம்.ஜாபர்தீன் என்ற செல்வந்தருக்கு (1975-ஆம் ஆண்டு) ஒரு சீட்டுக்கவி எழுதியனுப்பி தன் சோகத்தை தீர்க்கக் கோருகிறார் கவிஞர் சாரணபாஸ்கரன்.

பாட்டுத் திறனறியும் பண்பாட்டுப் புகழ்க் கொடியை
—நாட்டும் ஜாபருத்தீன் நல்லன்புத் திருச்சமூகம்
சீட்டுக் கவியெழுதித் தீராத என்துயரை
—ஓட்டத் துணிந்திட்டேன் இறையவனே உன் துணையால்!
சீட்டெழுதிப் பட்டகடன் தீராத காரணத்தால்
—பாட்டெழுதிக் கடன் தீர்க்கப் பாடாய்ப் படுகின்றேன்
கண்ணூறும் நீரில் கவியூற மாட்டாமல்
—என் ஊறு வாட்டுவதை எவ்வா றியம்பிடுவேன்?
என்னூறு தீரப்பல எண்ணூறு தேவையதில்
—இந்நாளில் ஐனூறு எனக்களித்துக் கடன் தீர்க்கப்
பொன்னூறும் உன்னில்லம் புகுந்திட்டேன், எனதுஇரு
—கண்ணூறும் நீர்துடைக்கக் கருணைசெய்ய வேண்டுகிறேன்!

இதைப் படிக்கையில் நம் கண்களிலும் கண்ணீர்ப் பெருக்கெடுக்கின்றது. தமிழ்ப்பணிக்கும், சமுதாய நலனுக்காகவும் பயன்பட வேண்டிய புலமை, கடன் கேட்பதற்கான கருவியானதை நினைக்கையில் நம்மைச் சோகம் கவ்விக் கொள்கிறது.

காசுக்காக கால்பிடிக்கும் வர்க்கம் அல்ல கவிஞர் கூட்டம். தகுதி உடையவர்களை மாத்திரமே இவர்கள் தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். சுயபுராணம் என்ற வரிசையில் “கவிஞன்” என்ற தலைப்பில் கவிஞர் சாரணபாஸ்கரன் அனைத்துக் கவிஞர்கள் சார்பாகவும் வாதாடுகிறார்.

போற்றுவதும் தூற்றுவதும் பொருளுக்கே
—என்ற சொலைப் பொசுக்கி விட்டு
சாற்றுவதும் ஏற்றுவதும் தகுதிக்கே
—என்பதையாம் தழைக்க வைப்போம் !
கூற்றுவனே வந்தாலும் கொள்கையினை
—மாற்றுவமோ? குற்றங் கண்டால்
சீற்றமொடு சாடிடுவோம் ஆற்றலினைத்
—திரட்டிடுவோம், சாவை வெல்வோம்!

முடிவுச் சொல் முற்றிலும் உண்மை. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்றான் கவியரசு கண்ணதாசன். காலத்தை கடந்து நிற்கின்றது ஒரு நல்ல படைப்பாளியின் நல்ல படைப்பு. இந்த எண்ணம்தான் அக்கவிஞனை “படைப்பதினால் என் பெயர் இறைவன்” என்று இறுமாப்புடன் பாட வைத்தது.

ஏறக்குறைய எல்லாக் கவிஞர்களுடைய வாழ்க்கையும் ஏழ்மையும் ஏமாற்றமும் நிறைந்ததாகத்தான் இருந்திருக்கின்றது. “சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்” என்ற சொற்றொடர் ‘திருவிளையாடல்’ படத்தில் தருமி பேசுவதற்காக மட்டும் எழுதப்பட்ட வசனம் அன்று. நிஜவாழ்க்கையிலும் புலமை பெற்ற அறிஞர்களின் வாழ்வில், வறுமை வாட்டி வதைப்பதைக் காணுகையில் நாம் மனமுடைந்துப் போக நேருகின்றது.

இன்னொரு தருணத்தில் வேளுக்குடி வி.கே.சிவராம கிருஷ்ணன் அவர்களுக்கு சீட்டுக்கவி எழுதி தன் துயர் துடைக்க மடல்தூது விடுகின்றார் நம் கவிஞர்.

இனப்பேதம் குணப்பேதம் கட்சிப் பேதம்
—இல்லாமல் எல்லார்க்கும் நண்ப ராகி
கணப்போதும் மெய்யன்பர் கலங்கி டாமல்
—கரம்தந்து கடன்தந்து கொடையும் தந்து
தினங்காக்கும் மனம்பெற்ற உனது இல்லம்
—சிலநாளில் வந்திடுவேன், நினது வாழ்வில்
எனக்கென்று ஒருபங்கு வைக்க வேண்டும்
—என்மீது நின்னோக்கைத் திருப்ப வேண்டும்!

மு.மேத்தாவின் பாஷையில் சொல்ல வேண்டுமெனில் “ஆமா எவர்க்கும் போடாத அரிமா” அவர். பாரதி ஆங்கிலேயர்களுக்கு ஆமாம் போட நினைத்திருந்தால் “ராவ் பகதூர்” பட்டம் அவன் வீடு தேடி வந்திருக்கும்; அனைத்து வசதிகளோடு ராஜபோக வாழ்க்கை வாழ்ந்திருப்பான். இந்த பாழாய்ப்போன (?) விட்டுக் கொடுக்கத் தெரியாத மனப்பான்மையும், கொள்கைப்பிடிப்பும் இந்த கவிஞர்களை ஆட்கொண்டு விடுவதால்தானோ என்னவோ சமுதாயத்தின் நிராகரிப்புக்கும் ஆளாகி விடுகின்றனர் அவர்கள்.

கால்வருடிக் கைவருடிக் காணுந் தோறும்
—கண்வருடிப் பிழைக்கத்தான் கற்றி டாமல்
நால்வருடன் ஒருவனாய் ‘ஆமாம்!’ போட்டு
—நகைகாட்டித் தொகைகூட்டப் பயின்றி டாமல்
தோல்விகண்ட என்வாழ்வுச் சுமையை நீக்கித்
—துணைவேண்டி அலைகின்றேன் நெடுநாள் முன்னே
பால்கொடுக்கும் பசுவுக்கு வைக்கோல் தந்து
—பசிதீர்த்த நீ என்றன் பசியும் தீர்ப்பாய்!

என்று சிவராம கிருஷ்ணனுக்கு எழுதிய கவிதையில் தனக்கு கால்வருடிப் பிழைக்கத்தெரியாத கலையை எடுத்தியம்பி புலம்புகிறார்.

புவிபடைக்கும் செல்வத்தைப் படைத்தி டாமல்
—பொன்படைக்கப் பொருள்படைக்கப் புரிந்திடாமல்
கவிபடைத்துச் செவிபடைத்தோர் சிந்தையெல்லாம்
—கவர்ந்திடலாம் எனநம்பித் தமிழில் தோய்ந்து
தவிதவித்துத் துடிக்கவைக்கும் வறுமைத் தீயால்
—தாக்குண்டு உழல்கின்றேன், எனினும் வாழ்வில்
கவிதைதரும் காப்பியங்கள் படைத் தளித்துக்
—காலமெலாம் நிலைத்திருக்கும் நினைவு கொண்டேன்

“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை” என்ற ஆன்றோர் வாக்கு எத்தனை பொருள் நிறைந்தது! இதன் உள்ளர்த்தத்தை நன்கு உணர்ந்ததால்தான் சுஜாதாவைப் போன்ற படைப்பாளிகள் எழுத்துத் தொழிலை ஒரு உபதொழிலாக மட்டுமே வைத்திருந்தனர்.

திரைகடல் ஓடி திரவியம் தேடி, பொன்னும் பொருளும் பெருமளவில் ஈட்டி வந்த கூத்தாநல்லூர் வணிகர்களுக்கு மத்தியில், சரியான தருணத்தில் அயல்நாடு சென்றும், பெயரையும் புகழையும் மாத்திரம் சம்பாதித்து வந்து, தனது பிற்கால வாழ்க்கைக்கு போதிய அளவில் பொருள் சேர்க்க மறந்த இந்த புண்ணியவானை என்னவென்றுச் சொல்வது?

காயல் மாநகரைச் சேர்ந்த ஹாஜி எஸ்.ஓ.ஹபீப் முகம்மது அவர்களை கவிஞர் ஒரு பள்ளிவாயிலில் வைத்து காண நேரிடுகின்றது. வறுமை நிலை வாட்டி எடுக்க அவரிடம் உதவி கேட்பதற்கு மனம் நாடுகிறது. அதேசமயம் வாய்விட்டுக் கேட்க தன்மானம் தடுக்கிறது. சூசகமாக தனது எண்ணத்தை தெரிவித்து விடுகின்றார். கடைசியில் வேறு வழி அறியாது ‘சீட்டுக்கவி’ அனுப்பி பொருளுதவி செய்யும்படி கோரிக்கையும் விடுகிறார்.

எண்ணம் கேட்டீர் இயம்பிட்டேன்
—இல்லம் வரவே பணித்திட்டீர்!
பின்னர் ஒருநாள் மெய்யன்பைப்
—பிணைக்க வருவேன் என்றிட்டேன்
இன்னம் ஓரிரு திங்களிலே
—இல்லம் தேடி வருகின்றேன்!
என்றன் பணிக்கு உம்பங்கும்
—ஈந்தே ஏற்றம் பெறுவீரே!

சிந்தனையிலும் அறிவாற்றலிலும் சிகரமாகத் திகழும் அறிஞர்களின் வாழ்வு கசப்பான அனுபவம் நிறைந்த போராட்டக்களமாக இருப்பதைக் காண்கையில் இந்த சமுதாயத்தின் மீதே நமக்கு ஆத்திரம் ஏற்படுகின்றது. கற்பனையுலகில் இறக்கைக் கட்டி உல்லாசமாக திரியும் அந்த கணப்பொழுதில் அவர்கள் அடையும் ஆனந்தம் மட்டுமே அவர்களது மனதுக்கு ஆறுதல் ஒத்தடம் அளிக்கிறது.

நாகூரில் வாழ்ந்த அமரர் ஆசுகவி ஆபிதீன் அவர்கள் ஒரு ‘பிளேட்’ கொத்துப் புரோட்டாவுக்காக அக்கணமே மடைதிறந்த வெள்ளமென ‘கிடுகிடு’வென்று கவிதைகள் எழுதித் தள்ளுவதை நேரில் பார்த்தவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ‘பசி’ என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் தன் அரிய ஞானத்தை, அற்ப விஷயத்திற்கும், சொற்ப கிரயத்துக்கு புலவர் பெருமக்கள் விற்றிருக்க மாட்டார்கள்.

கணக்கெடுத்துப் பார்த்தால் வறுமையை வென்ற கவிஞர்களை விட வறுமைத் தின்ற கவிஞர்கள்தான் அதிகம்.

vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்