SR நினைவுகள்

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

வெ. அனந்த நாராயணன்


உதிரி எழுத்தாளர்களை ஒதுக்கி விட்டால், நான் சந்தித்த பிரபல எழுத்தாளர்கள் மொத்தம் நால்வர்தான். இந்தக் குறுகிய பட்டியலில், கடந்த வருடத்துக்குள் மூன்று பேர் இறந்து விட்டது (சு.ரா, லா.ச.ரா, சுஜாதா) பெரிய சோகம். நாலாவது யாரென்று தெரிவித்து அவர் வயிற்றில் புளியைக் கரைக்க விருப்பமில்லை. சந்திக்க விரும்பி முடியாமல் போனவர்கள் ஆதவன், க.நா.சு., தி.ஜா., நகுலன் போன்ற பலர். ‘No Country for Old Men’ தான் நினைவுக்கு வருகிறது.

கணையாழியின் கடைசிப் பக்கங்கள் காலத்திலிருந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜனைப் படித்திருக்கிறேன். அவரது நைலான் கயிறு, சொர்க்கத் தீவெல்லாம் படித்த போது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. அட, தமிழில் கூட இப்படியெல்லாம் எழுத ஆட்கள் இருக்கிறார்களா என்ற மலைப்பு. வயதாக ஆக, வாழ்க்கையில் இது போன்ற தருணங்கள் அரிதாகி வருவது இன்னொரு இழப்பு.

எழுத்தாளர் சுஜாதா பற்றிப் பலரும் எழுதி விட்டார்கள். புதிதாய்ச் சொல்ல எனக்கு ஒன்றுமில்லை. தமிழ் இலக்கியத்திற்கு சுஜாதா அளித்த பங்கைக் குறைத்து மதிப்பிடுபவர்களுக்குச் சாப விமோசனமே கிடையாதென்பது மாதிரி யாரோ எழுதிய நினைவு (வெ.சா?) இறந்தது சுஜாதா அல்ல ரெங்கராஜன்தான் என்று சில நாட்களுக்கு முன்பு எங்கோ படித்தேன்.

நானறிந்த, நாமிழந்த SR பற்றிச் சில வரிகள்:

சுஜாதாவை முதன்முதலில் நான் சந்தித்தது திருச்சி சங்கம் ஹோட்டலில். 1982 இல் என்று நினைக்கிறேன். யானையப் பார்த்த ப.கா. மாதிரி உணர்ந்தது (இந்த மாதிரி ‘க்ளீஷே’ க்களைச் சுருக்கி உபயோகிக்கும் பிரயோகம் சுஜாதாவின் தயவுதான்) நினைவு வருகிறது. எனது சில கதைகள், கவிதைகள் அப்போது கணையாழியில் வந்திருந்ததால் ஒரு சிறுபிள்ளைத்தனமான, முட்டாள்தனமான சக எழுத்தாளரென்ற ஹோதாவுடன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சில நிமிடங்கள் பேசிய நினைவு. என்ன பேசினேன் என்று நினைவில்லை அந்தத் தருணத்தின் பிரமிப்பில். சுஜாதா ‘லைட்டா ஹெவியா’ என்று சர்ச்சை கணையாழியில் நடந்து கொண்டிருந்த சமயம். நானும் என் பங்குக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தேன் கணையாழியில். அதைச் சுஜாதா படித்திருந்தாரா தெரியாது. சுஜாதா எந்த வித பந்தாவுமில்லாமல் அந்த்க் கூட்டத்தில், என்னிடம் சில வாக்கியங்கள் பேசியதைப் பாக்கியமாய்க் கருதினேன். (கணையாழியில் எழுதியிருக்கிறேன் என்றதால் என்னை மதித்திருக்கலாம்)

அமெரிக்கா வந்த பிறகு ‘டெக்ஸன்’ என்ற பெயரில் ‘அமெரிக்கா சென்றால் தப்ப முடியாது’ என்று கணையாழியில் சில கட்டுரைகள் எழுதினேன். (தலைப்பு அசோகமித்திரனின் தயவு) என் உறவினர்கள், நண்பர்களைத் தவிர, யாரும் டெக்ஸனைப் படித்திருக்கமாட்டார்கள் என்று உறுதியாய் இருந்தேன். சுஜாதா படித்திருக்கிறாரென்று தெரியவந்த போது ஏற்பட்ட பிரமிப்பிற்கு அளவே இல்லை. 1985 இல் (1986 ?) டெக்ஸஸில் டால்லஸ் நகர் வந்திருந்த சுஜாதா, டெக்ஸனைப் பற்றி விசாரித்தைப் பற்றி எனது நண்பன் மூலமாக அறிந்தேன். அப்போது நான் கனெக்டிகட் வாசியாகியிருந்தேன். பொன்னான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விட்டோமே என்று வருந்திய போது, சுஜாதா நியூயார்க்கில் ஸ்டாடன் தீவிற்கு, தனது மச்சினி (நிஜ சுஜாதாவின் சகோதரி) வீட்டிற்கு வரப்போகிறாரென்று தெரியவந்தது.

மான்ஹாட்டனிலிருந்து படகைப் பிடித்து, ஸ்டாடன் தீவில் இறங்கி, அந்த வீட்டைத் தேடிக்கண்டுபிடித்து, சுஜாதாவைச் சந்தித்த அந்தக் கணத்தில் பிறவிப் பயனை அடைந்தது போல் உணர்ந்தேன். தனது ‘பை-பாஸ்’ சர்ஜரிக்காக அமெரிக்கா வந்திருந்தார் என்பதே அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. அன்று சில மணி நேரங்கள் சுஜாதாவுடன் மனதுவிட்டுப் பேச முடிந்தது. அவருடன் வாக் போனேன். சுஜாதா நல்ல உயரமென்பது அப்போதுதான் தெரிந்தது. மற்ற எழுத்தாளர்கள் போலல்லாமல் சக தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தீவிரமாகப் படித்தவர் சுஜாதா. அசோகமித்திரன், ஆதவனிலிருந்து, ஆங்கில ஆசிரியர்கள் வரை எல்லாரைப் பற்றிய அபிப்ராயங்களையும் தாரளமாக என்னிடம் தெரிவித்தார் அன்று. மிக சுவாரசியாமாகப் பேசக்கூடியர். இதைப் பற்றி எதுவும் எழுதி விடாதே என்று மட்டும் கேட்டுக் கொண்டார் நான் விடை பெறும்போது. அந்தச் சில மணி நேரங்கள் என்னால் இன்றும் மறக்க முடியாடவை.

இப்போது நினைக்கையில் சற்று வெட்கமாய் இருந்தாலும், அன்று எனது கவிதை நோட்டுப்புத்தகத்தை அவரிடம் நீட்டாமலிருக்க முடியவில்லை. எனது எல்லாக் கவிதைகளையும் பொறுமையாகப் படித்தார். சில அறிவுரைகளும் கூறினார். அடுத்த வைத்தீஸ்வரனாகும் வாய்ப்பு இல்லை எனக்கு என்று உணரவைத்தார்!

பல வருடங்கள் கழித்து, அந்த நோட்டுப்புத்தகத்தைத் தற்செயலாய்ப் புரட்டிப் பார்த்த போது, சில கவிதைகளில் – நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயன்றிருந்த சிலவற்றில் உட்பட – சுஜாதா செய்திருந்த திருத்தங்களைக் கவனித்தேன்!

அப்போது சுஜாதா சினிமாவிக்கெல்லாம் எழுதத் தொடங்கவில்லை என்று நினைக்கிறேன். கமல், ரஜினி மாதிரி அடையாளங்கண்டு கொள்ளப்படவில்லை. எனவேதான், என்னை மாதிரி சாமான்யர்களுக்கும் அவரைச் சந்திக்க முடிந்தது க்யூவில் நின்று தரிசிக்க அவசியமில்ல்லாமல். அமெரிக்காவில் இருந்தது ஒரு செளகரியம்.

அதன் பிறகு, அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது கவிதையொன்றை, ‘எனக்குப் பிடித்த கவிதை’ யாக ஆனந்தவிகடனில் சில வருடங்கள்முன்பு தேர்ந்தெடுத்திருந்தார். அதற்கு, நன்றி சொல்லி இரண்டு வரி ஈமெயில் அனுப்ப எண்ணியது இது வரை நடைபெறவில்லை. வழக்கம்போல் சோம்பேறித்தனம்.

மதிப்பிற்குரிய SR,

சற்றுத் தாமதமாக: எல்லாவற்றுக்கும் என் நன்றி.


Series Navigation