பொன் மொழிகள்

ஜி. நாகராஜன்.

சில எழுத்தாளர்கள் தங்கள் ‘பொன்மொழிகளை’ தங்கள் கதைகளிலேயே புகுத்திவிடுகின்றனர். என் கதைகளில் ‘பொன் மொழிகளே’ இல்லை என்று ஒரு நண்பர் குறைபட்டுக்கொண்டார். எனவே உதிரியாகவாவது சில ‘பொன் மொழிகளை’ உதிர்க்கிறேன்.

  1. உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்.
  2. மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்றுக் குறையும்.
  3. தன்மான உணர்வின் வெளிப்பாடாக விளங்கும் அளவுக்குத்தான் தேசபக்தியை பொறுத்துக்கொள்ளமுடிகிறது.
  4. தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்.
  5. மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்துகிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய்குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன.
  6. எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகள் அனுபவிக்கும் ஒரு சிறுகூட்டம் இருந்தேதீரும். இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்.
  7. ‘மனிதாபிமான’ உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனிதத்துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தை படைக்க வல்லது. இல்லையெனில் ‘மேக்பெத்’ என்ற நாடகமோ ‘கலிவரின் யாத்திரை’ என்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது.
  8. இயற்கையிலேயே பீறிட்டு வெடிக்கும் சமுதாயப் புரட்சியை வரவேற்க வேண்டிய நாம், கன தனவான்கள் பதவியில் இருந்துகொண்டு ‘புரட்சி’ பேசுவதைச் சகித்துக்கொண்டிருக்கிறோம்.
  9. தனது கலைப்படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினக்கும் கலைஞனுக்கு, பனம் பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச்சொல்லுங்கள்.
  10. மனிதனைப் பற்றி பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன். இன்னும் தேங்காய் துவையல், பெண்ணின் கற்பு, உலக அமைதி, எள்ளுருண்டை, ‘காலி சிந்த்’ புடவை, பல்லாங்குழி ஆட்டம், பொய்ப்பல், இத்யாதி இத்யாதி பற்றியும் ‘பொன் மொழிகள்’ தர முடியும். -ஞானரதம், மே 1972
  • ஜி-நாகராஜன் படைப்புகள் பக்கம் 347, காலச்சுவடு பதிப்பகம், உரிமை நா.கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *