அறிவு ஜீவிகள்………?!

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

ஹமீது ஜா·பர்.


“பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்” என்று அவர்களிடம் கூறப்படும்போது “நாங்கள் சீர்திருத்தம்செய்வோரே” என்று கூறுகின்றனர். (அல் குர்ஆன் 2: 11)

பெட்ரோல் வளம் மிகுந்த அரேபிய வளைகுடா நாடுகளில் வேலைத் தேடி வரும் இஸ்லாமியர்கள் தன்னுடைய படிப்புக்குப் பொருத்தமில்லாத வேலையில் அமர்ந்து ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரத்துக்குக் குறையாமல் வேலை செய்து தான் விட்ட காசை (இங்கு வருவதற்காக கப்பம் கட்டியது) எடுப்பதற்காகப் படாத பாடுபட்டுக்கொண்டிருக்கும் பெரும்பாலான அன்பர்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரம் ஆறு அல்லது எட்டு மணி நேரம். இதில் தனக்கு, அன்றைய இரவுக்கும் மறு நாளுக்கும் வேண்டிய உணவை தயார் செய்துகொள்ளவேண்டும். அதன் பிறகு சிறிது நேரம் டி. வி. அப்புறம் உறக்கம். இப்படி மெஷின் மாதிரி லை·ப் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்லாத்தை கரைத்துக் குடித்துவிட்ட மாதிரி பேச்சு. இது இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் export ஆகிக்கொண்டிருக்கிறது பெட்ரோல் ரியாலுக்கு மாரடிக்கும் மதனி, மக்கி(மதினா, மற்றும் மக்காவில் கல்வி பயின்ற வர்)களால், ஒரு சிலரைத் தவிர.

அந்த காலத்தில் சினிமா மோகத்தில் சிவாஜி மாதிரி, எம்.ஜி.ஆர். மாதிரி சட்டைப் போட்டுக்கொள்வது, கிராப் வெட்டிக்கொள்வது (இப்போது பெயர் தெரியாத நிறைய ஹீரோக்கள் இருப்பதால் ஒரே கன்·ப்யூஷன்) போன்ற ஒரு வித மயக்கத்தில் இருந்ததுபோல் இவர்கள் இஸ்லாம் என்றால் என்ன பொருள் என்றே தெரியாமல் வெறும் ஏட்டறிவை அதையும் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் தனக்குத் தோன்றியபடி விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருந்தால்கூட பரவாயில்லை, ஆனால் தன் வாழ் நாள் முழுவதையும் இஸ்லாத்திற்காக அற்பணித்த மாபெரும் அறிஞர்களை, (அறி)வீணர்கள் என்று சொல்வது வேதனையாக இருக்கிறது.

———————————————————————————————————————————————————————

வஹ்ஹாபி=வஹ்ஹாபு+அல்லாஹ்

திண்ணை வாசகர்கள் எல்லாம் மாங்கா மடையன்கள் என்று நினைத்துக்கொண்டார் போலும் ஜனாப் வஹாபி. தன்னுடைய இஸத்திற்கு சப்பைக் கட்டாக எதிர்மறைகள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் http://www.thinnai.com/?module=displaystory&story_id=806042111&format=html இறை நாமத்தையே திரித்துக் கூறி இருக்கிறார். எந்த டிக்ஷனரியில் இருக்கிறது வஹ்ஹாப் என்றால் இறைவன்/அல்லாஹ் என்று?

இதிலிருந்து என்ன தெரிகிறது? வஹ்ஹாபிக்கு இஸ்லாமும் தெரியவில்லை, அல்லாஹ்வையும் தெரியவில்லை, வஹ்ஹாபையும் தெரியவில்லை, அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைத் தவிர. ஐயா, இறைவன் என்று சொன்னால், எந்த எல்லைக்கும்; எந்த திக்குக்கும்; எந்த பொருளுக்கும் கட்டுப்படாதவன். வேறு வார்த்தையில் சொன்னால் படைக்கப்பட்ட எந்த பொருளுக்கும் கட்டுப்படுத்த முடியாதெது எதுவோ அது இறைவன். அந்த இறைவனுக்கு அரபியில் பெயர் அல்லாஹ்; வட மொழியில் பகவான்; ஆங்கிலத்தில் GOD.

வஹ்ஹாப் என்றால் யார்? இறைவனுக்கு 99 திரு நாமங்கள் உள்ளன, அல்லாஹ் என்ற பெயரையும் சேர்த்து 100 திருப்பெயர்கள். அதற்கு “அஸ்மாவுல் ஹ¤ஸ்னா” என்று அரபியில் சொல்வார்கள். அழகிய திரு நாமங்கள் என்று பொருள். அல்லாஹ் என்ற பெயருக்குப் பிறகு அடுத்து வருவது அற் றஹ்மான்; அதற்கடுத்தது அற் ரஹீம். இப்படியாக 16 வதாக வருவது அல் வஹ்ஹாப் என்ற பெயர். அதற்குப் பொருள் வாரி வழங்குபவன்; மா பெரும் கொடை வள்ளல் என்பதாகும்.

முஸ்லிம்கள் எந்த ஒன்றையும் தொடங்கும்போது “பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்” என்றுதான் சொல்வார்கள். பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்… இதையே அரபு கிருஸ்தவர்கள் “பிஸ்மில்லாஹி வல் இபுனு வர்ரூஹில் குதுஸ்” என்பார்கள். பொருள்: In the name of God and the Son and the Holy Ghost. யாரும் “பிஸ்மில் வஹ்ஹாபிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று சொல்வதுமில்லை; சொல்லக் கேள்விப்பட்டதுமில்லை. ஒரு வேளை நீங்கள் சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை, அதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

அவாருடைய வாதப்படி இனி யாரும் இறைவணக்கத்தின்போது அல்லாஹ¤ அக்பர் என்று சொல்லக் கூடாது. “வஹ்ஹாபு அக்பர்” என்றே சொல்லவேண்டும்; இஸ்லாத்தின் மூல மந்திரமாகிய லா இலாஹா இல்லல்லாஹ¤…. என்பதை “லா இலாஹா அல்வஹ்ஹாபு……” என்று மாற்றி சொல்லும்படி உத்திரவிடுவது நல்லது; அப்போதுதான் மக்களுக்குத் தெளிவும் ஞானமும் பிறக்கும்.

வஹாபி சொல்வதுபோல் வஹ்ஹாப் – இறைவன்/அல்லாஹ் என்றால்

“மாலிக்(அரசன்)” = அல்லாஹ்;

“கஹ்ஹார்(அடக்கி ஆள்பவன்)” = அல்லாஹ்:

“ரஹ்மான்(அருளாளன்) = அல்லாஹ்;

ஸபூர்(பொறுமை உள்ளவன்) = அல்லாஹ் . ஆக 99 அல்லாஹ் இருக்கிறார்கள். எல்லாப் பண்புகளையும் தன்னுள் அடக்கி அனைத்துக்கும் மூலமான “அல்லாஹ்” OUT; இல்லை, அவரை ஓரங்கட்டியாச்சு.

இந்து பெருங்குடி மக்களிடம் பெரும்பாலான குடும்பங்களில் குடும்பத்துக்கு ஒரு குல தெய்வம் உண்டு. சிலர் தங்கள் குல தெய்வப் பெயரை தம் குழந்தைகளுக்கு சூட்டிக்கொள்வார்கள். அதுபோல் வஹாபிக்கு குல தெய்வம் வஹ்ஹாப். எனவே இவர் பெயரும் வஹாபி.

வஹ்ஹாப் என்ற பெயருக்கு யார் சொல்லியோ பொருள் தெரிந்துக்கொண்டது வரை பாராட்டுக்குறியது….! அப்துல்வஹ்ஹாப் என்பது இரண்டு பெயர்கள் அல்ல; ஒரு பெயர்தான். அப்த்+அல்லாஹ்=அப்துல்லாஹ் – அல்லாஹ்வின் அடிமை; அப்து+அல்வஹ்ஹாப்=அப்துல் வஹ்ஹாப் – பெருங்கொடையாளனின் அடிமை. இப்படி மிக சரியாக ஆராய்ந்து சொல்லியிருப்பதற்கு பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80605196&format=html

அல்லாஹ் வேறு அடிமை வேறல்ல, இரண்டும் ஒன்றே; கொடையாளன் வேறு அடிமை வேறல்ல, இருவரும் ஒருவரே.

ஆகவே நமது வஹாபுடைய ஆராய்ச்சிபடி அப்துல்லாஹ்; அப்துல்காதிர்; அப்துர்ரஹ்மான்; அப்துல் கலாம் இவைகள் ஒரு பெயரே இரண்டல்ல. எனவே இவர்கள் அனைவரும் சந்தேகமில்லாமல் அல்லாஹ்வே! எங்கள் ஊரில் வஹாப் என்ற சமையல்காரன் ஒருவன் இருக்கிறான். அவனை “பண்டாரி(சமயல்காரன்) வஹாபு” என்றால் அந்த ஏரியா பூராவும் தெரியும், அவ்வளவு ·பேமஸ். இனிமேல் பண்டாரி அல்லாஹ் என்றுதான் கூப்பிடவேண்டும், வஹாபுடைய டிக்ஷனரிப்படி.

முடிவாக நீங்கள் கொடுத்த கலைச் சொற்களில் ஒரு சிறிய திருத்தம் செய்யவேண்டும்.

வஹ்ஹாபிஸம் – வஹ்ஹாபினால் வழங்கப்பட்ட வாழ்க்கை நெறி/ இஸ்லாம்.

திருத்தம்: அப்துல் வஹ்ஹாப் நஜ்தியினால் வழங்கப்பட்ட வாழ்க்கை நெறி/ இஸ்லாம்………….?

வஹ்ஹாபி என்பதற்கும் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி என்பதை சேர்த்துக்கொண்டால் கலைச் சொல் முழுமைப் பெற்றுவிடும்.

“உள்ளெழுத்தை ஓதறியா மூடரே! ஊமை கண்ட,
வெள்ளெழுத்தைப் போல் விளம்புகிறீர்.
உள்ளெழுத்தை மாற்றிபிடிக்க வகையறியா மாந்தர்
செயலாற்றில் கரைத்த புளிபோலாம்” — ஞானி செய்யது அப்துல் காதிர் (ரஹ்)

———————————————-000000000000000000000000000000000000000——————————————————————-

தமிழ் தொழுகை

தமிழில் தொழுகை நடத்த மறுப்புத் தெரிவிக்கும் வஹாபியை காரணம் கேட்டிருக்கிறார் சூபி முகமது. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80605129&format=html நீங்கள் யார் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியா? சூபி முகமது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும். சூரியனையும் சந்திரனையும் பார்த்து இதுதான் என் இறைவன் என்று நபி இபுறாஹிம் சொன்னார்களாம்; அதுபோல் இவர் அல்லாஹ்வின் உண்டியகலயத்தை இறைவன் என்று சொல்லும்போது இத்தகைய சிக்கலான பிரச்சினயைக் கொண்டுபோனால் ……?

எனக்கு தமிழில் தொழ ஆசைதான், ஆனால் எந்த தமிழ் என்று விளங்கவில்லை. செந்தமிழா? தீந்தமிழா? பைந்தமிழா? ஆய்தமிழா? அல்லது சங்கத் தமிழா? யார் எழுதிய மொழி பெயர்ப்பு? அ. கா. அப்துல் ஹமீது பாக்கவி எழுதியதா? இல்லை M. அப்துல் வஹ்ஹாப் M.A., B.Th., எழுதியதா? இல்லை ஜான் டிரஸ்ட் வெளியிட்ட மொழி பெயர்ப்பா? அல்லது ஆதம் டிரஸ்ட் வெளியிட்ட மொழி பெயர்ப்பா? அல்லது இக்பால் மதனி எழுதிய மொழி பெயர்ப்பா? இல்லை உலக மேதாவி P.J. எழுதிய மொழி பெயர்ப்பா? என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு விளங்கவில்லை. அதையும் தெளிவாக எழுதினால் அல்லாஹ் உங்களுக்கு பெரிய பரக்கத்து செய்வான்.

உச்சரித்தல் + உணர்த்துதல் என்ற இரண்டு கருத்தாக்கங்களும் தமிழில் நன்றாகவே நடக்கும் என்பது உறுதி. ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக அல்லவா மொழி பெயர்த்துள்ளார்கள். எதை சரி என்று எடுத்துக்கொள்வது? உதாரணமாக………அத்தியாயம் 2. வசனம் 223,

“உங்கள் மனைவிகள், உங்களுக்குரிய பண்ணை. ஆகவே, உங்கள் பண்ணைக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று உங்களுக்கு(வேண்டிய சந்ததியையும் நன்மைகளையும் தேடி) முற்படுத்திக்கொள்ளுங்கள்…..” – இது அ. கா. அப்துல் ஹமீது பாக்கவியுடைய மொழிபெயர்ப்பு.

“உங்கள் மனைவியர் உங்களுக்கு விளை நிலங்கள்(ஆவார்கள்); உங்களுடைய விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள்; உங்களுக்காக (நற் செயல்களை) முற்படுத்தி வையுங்கள்….” – இது M. அப்துல் வஹ்ஹாப் M.A., B.Th., உடைய மொழிபெயர்ப்பு.

“உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்…..” – இது முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு.

“உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலங்கள். ஆகவே, உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள். உங்களுக்காக(நன்மைகளை) முற்படுத்திக்கொள்ளுங்கள்; இன்னும்……” – இது சவுதி மன்னர் ·பஹத் பின் அப்துல் அஜீஸ் வெளியீடு.

இந்த நான்கு மொழிபெயர்ப்புகளும் படிப்பதற்கு ஒன்றுபோல் தோன்றினாலும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன. உதாரணமாக ‘விரும்பியவாறு வாருங்கள்’ இது அழைப்பு. ‘விளை நிளங்களுக்குச் செல்லுங்கள்’ இது உத்திரவு. அதுபோல் ‘முற்படுத்தி வையுங்கள்’ என்பது வேறு, இது சேமித்தல்; ‘முற்கூட்டியே அனுப்புங்கள்’ என்பது வேறு, இது செலவு. எது சரியானது ?

சூபி விளக்கவேண்டும்.

தொழுதால் அல்லாஹ் சொர்க்கத்தைத் தருவான் அங்கு போனால் பாலாறு ஓடும், தேனாறு ஓடும் என்றெல்லாம் ஆலிம்சாக்கள் சொல்கிறார்கள், எனக்கும் ஆசைதான். அரபியில் தொழுது அரபி சொர்க்கத்திற்குப் போய் அங்கு “பேக்க பேக்க” என்று முழிப்பதைவிட தமிழில் தொழுதால் தமிழ் சொர்க்கம் கிடைக்கும். என்னை மாதிரி பள்ளிக்கூடப்பக்கம் மழைக்குக்கூட ஒதுங்காதவர்களுக்கு மொழி பிரச்சினை இருக்காது.

நாம் தமிழ் வாசனையுடன் தொழுதால் சிறப்புதானே..!

இவண்,
ஹமீது ஜா·பர்.

email: maricar@eim.ae

Series Navigation