கடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

ஜடாயு


அன்புள்ள நாகூர் ரூமி அவர்களுக்கு,

தங்களது சில கட்டுரைகளையும், கவிதைகளளையும் வாசித்திருக்கிறேன். இப்போது

திண்ணையில் தங்களது ‘இஸ்லாம் – ஓர் எளிய அறிமுகம் ‘ என்ற நூல் தொடர்பான

விவாதங்கள், விமரிசனங்களுக்கு மத்தியில் ஒரு வாசகன் என்ற முறையில் இதை

எழுதுகிறேன். தங்களது மேற்படி நூலை நான் இன்னும் படிக்கவில்லை, ஆனால்

நூலைப் படித்துவர்கள் நேரிலும், இணையம் மூலமும் கூறிய கருத்துக்களின் அடிப்படையிலேயே

இந்த மடல்.

‘அரபி மொழி, அரபி இனம், அரபுக் கலாசாரம், இஸ்லாபிய மதம் இவற்றின் உலகள்ளாவிய உன்னதம்

இவற்றோடு வெட்கமில்லாமல் பிற மதத் தாக்குதல்களை வெளிப்படையாகவும், பிற பண்பாடுகள், கலாச்சாரங்கள்

(பாரதப் பண்பாடு, தமிழ் மரபு உட்பட) கீழானவை என்பதை மறைமுகமாகவும் சொல்லியிருக்கிறார் – மொழி

மட்டும் தான் தமிழே தவிர வேறு எந்த தமிழ்த்தன்மையும் இல்லை ‘ என்று ஒரு நண்பர் சொன்னார்.

தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து தமிழில் இலக்கியமும் படைத்து வரும் நீங்கள் தமிழ் சமய, சமூக,

இலக்கிய மரபுகளை அறிந்திருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். திருக்குறள், சைவத் திருமுறைகள்,

திவ்வியப் பிரபந்தம், கம்ப ராமாயணம், ஐம்பெரும் காப்பியங்கள் தொடங்கி பாரதியின் கவிதைகள் வரை –

இந்நூல்கள் எல்லாத் தமிழரின் நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்றவை. இவை உணர்த்தும் வாழ்வியல்

தத்ததுவங்கள், பேருண்மைகள், ஆன்மிகத் தேடல்கள் இவற்றின் மேன்மையை நீங்கள் ஒப்புக்

கொள்கிறீர்களா ? சைவம், வைணவம், பெளத்தம், சமணம் மேலும் பல்வேறு வகைப் பட்ட இந்து ஞான,

யோக, தத்துவ, பக்தி மரபுகள் அன்றோ இவற்றை உருவாக்கியது ?

இத்தகைய மரபு சார்ந்த ஒரு இலக்கிய, சமூக சூழலில் இவற்றைப் பற்றிய சிறு பிரக்ஞை கூட இல்லாமல்

முழுக்க முழுக்க அரபு மொழி, அரபுப் பழக்கங்கள் இவற்றை வானளாவப் புகழ்ந்து உங்கள் புத்தகத்தில் எப்படி

எழுத முடிந்தது ? இஸ்லாமிய மதரஸாப் பள்ளிகளில் நீங்கள் கற்ற கல்வியும், சமயப் பயிற்சியும் இந்த அளவுக்கா

உங்களை ஆக்கி விட்டது ? ஆச்சரியமாக இருக்கிறது !

இப்படித் தான், தமிழ் நாட்டின் ஒவ்வொரு முஸ்லீமும் இருக்க வேண்டும் என்று நீங்கள் வரையறை

செய்வதை நினைக்கவே பெரும் கலக்கம் ஏற்படுகிறது! இதே சந்தேகம், ஏராளமான இந்து சகோதர்களுக்கு

இருக்கிறது .. உங்கள் ‘எளிய அறிமுகம் ‘ இந்த சந்தேகத்தை உறுதி செய்கிறதோ என்றே தோன்றுகிறது !

‘பாரத நாடு, தமிழ்ப் பண்பாடு இவை பற்றிய சிறிதளவு பெருமிதம் கூட இல்லாமல் இப்படி ஒரு எழுத்தாளர்

இருப்பாரா ? ‘ என்று இன்னொரு நண்பர் கேட்டார். இதுவே நான் உங்களுக்கு விடுக்கும் வேண்டுகோளின்

அடிப்படை – அரபி மொழியில் இவ்வளவு புலமையும், அறிவும் பெற்றிருக்கும் தாங்கள் தமிழ்ச் சான்றோர்களின்

மேலாம் சிந்தனைகளை அரபி மொழியில் எழுதுவீர்களா ? அரபிக் கலாசாரத்தின் பெருமைகளை மதம் என்ற

பெயரில் தமிழர்களிடையே பரப்பும் நீங்கள், குறள், திருவாசகம், திருவாய்மொழி, பாரதி பாடல்கள் போன்றவற்றை

அரபு மக்களுக்கு இதே பெருமித உணர்வுடன் எடுத்துிரைப்பீர்களா ? அதை அரபு உலகம் வரவேற்கும் என்று

நம்புகிறீர்களா ? உலகெங்கும் வாழும் முஸ்லீம்களின் கலாசார மொழியாக அரபி மொழி இருக்கிறது.

எனவே, இந்தப் படைப்புக்களை உலகம் முழுதும் அரபி மொழி அறிந்த எத்தனை முஸ்லீம்கள் படிப்பார்கள் ?

பழம்பெருமை வாய்ந்த தமிழ் மொழிக்கு நீங்கள் செய்யும் பெரும் தொண்டாக இது இருக்குமல்லவா ?

இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும்.. இதனால் அரபு உலகம், முஸ்லீம் உலகம் முழுதும் தமிழர்

காட்டுமிராண்டிகள், உருவ வழிபாட்டுக் காப்பிர்கள், அவர்கள் பண்பாடும், சமயமும், மரபும் கீழ்த்தரமானது,

என்று காலம் காலமாக உலாவும் மனப் பாங்கு சிறிதளவாவது மாற்றம் அல்லவா ? நம் கலாச்சாரம் பற்றிய

நல்லெண்ணத்தை உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் சமுதாயத்திடம் உண்டாக்க வேண்டும் என்ற

எண்ணம் சிறிதளவாவது உங்களிடம் இருக்கிறதா ?

இதற்கான நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,

ஜடாயு (jataayu_b@yahoo.com)

Series Navigation

ஜடாயு

ஜடாயு