அன்புள்ள திரு.வாசனுக்கு,

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

லக்ஷ்மி


1996-ல் அதிமுக ஒரு மக்கள் விரோத அரசு என்று சொல்லி திரு.மூப்பனார் திமுக கூட்டணி கண்டார்.

2001-ல் திமுக ஒரு மக்கள் விரோத அரசு என்று சொல்லி அதிமுக பக்கம் திரும்பினார்.

முந்தா நாள் திமுக-வும் நேற்று அதிமுக-வும் உங்களுடான கூட்டணி கணக்கில் வெற்றிப் பெற்றன..

இதோ 2006 வருகிறது. நீங்களும் அதிமுக மக்கள் விரோத அரசு என்று சொல்லி விட்டார்கள்.

கொஞ்சம் யோசியுங்கள்.

தேர்தல் தேதியில் எதிரி கட்சியை ஆதரித்தும், பின் ஒரிரு வருடங்கள் பின் ஆளும் கட்சியை (அதாவது நீங்கள் ஆளும் கட்சி ஆக்கிய எதிர் கட்சியை ) மக்கள் விரோத ஆட்சி என்பதும் தாண்டி உங்களுக்கும் காங்கிரஸிற்கும் மிகப் பெரிய கடமை உள்ளது.

மாறி மாறி கூட்டணி காணும் நீங்கள் ஒரு மாற்றத்திற்கு ஏன் வழிவகுக்கக் கூடாது… ?

அதிலும் பாமாக செய்யும் அராஜக அரசியல் கண்டு கண்டிக்காமல், கூட்டணி காண்ப்து ஏன்.. ?

2006-ல் நீங்கள் மறுபடியும் திமுக வரத் தான் துணை போகப் போகிறீர்களா.. ?

அது விடுத்து வேறு திட்ட வடிவு ஏதும் காங்கிரஸிடம் உள்ளதா… ?

ஏன் மத்தியில் காங்கிரஸ் தலைவி, கட்சிக்கு தானும் ஆட்சிக்கு திரு.சிங் அவர்களும் என்பது போல்,

நீங்கள் தமிழகத்திலும் நிலைப்பாடு எடுக்கக் கூடாது… ?

தமிழக காங்கிரஸ் கட்சியின் அதிகார மையத்தை நீங்கள் வைத்துக் கொண்டு, திரு.ப.சிதம்பரத்தை தமிழக அரசு நிர்வகிக்கும் முதன் மந்திரிக்கு ஏன் நிறுத்தக் கூடாது.

இன்றைய தமிழக அரசியலில், உலக தொழில் நிறுவனங்களுடன் சரியாக ஒப்பந்தம் போட்டு தமிழகத்திற்கு அந்த பலனை கொண்டு வருவதில் அவருக்கு நிகர் யாருண்டு… ?

நீண்ட அனுபவமும், ஆழ்ந்த அறிவும் உள்ள ஒரு காங்கிரஸ்காரர் அவர்.

திரு.ப.சி , சாமான்ய மக்களிடம் முகம் கொடுத்து பேச மாட்டார் , தொண்டர்களை அரவணைத்துச் செல்ல மாட்டார் என்பதில் இரண்டாவது கருத்துக் கிடையாது. அதனால், அந்தப் பொறுப்பை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். எப்படி தமிழக அரசிற்கு திரு.ப.சிதம்பரம் ஒரு நல்ல தீர்வோ அது போல் நீங்கள் தமிழக காங்கிரஸிற்கு.

தமிழக மக்களின் இதயமாய் நீங்களும் , மூளையாய் திரு. சிதம்பரமும் இருந்தால் ஒரு ஆரோக்கிய வாழ்வு நாங்கள் வாழ்வோம்.

அது மற்றுமின்றி, திரு.நல்லக்கண்ணு, திரு.வை.கோ, திரு.ரஜினி, திரு.விஜயகாந்த் இவர்களை அரவணைத்துக் களம் காணுங்கள்.

திமுக-விற்கு உண்மையில் மக்களின் மேல் அக்கறையிருந்தால் இந்த அணிக்கு ஆதரவு கொடுத்து களம் இறங்கட்டும். ஒரு முறை கூட்டணி ஆட்சியில் திமுக ஆதரவு நிலை எடுத்து, தலைமைப் பொறுப்பை காங்கிரஸிற்கு கொடுக்கட்டும்.

திமுக, அதிமுக ஆட்சிகளை பல பத்து வருடங்கள் கண்டு விட்டோம்.

காழ்ப்புணர்ச்சி, பழிகூறல், தவறான திட்ட வடிவுகள், தொழில் நிறுவன சொந்தக்காரர்களைச் சீண்டுதல் அல்லது அத் தொழில்களைத் தங்கள் வசம் ஆக்குதல் என பல அவதாரங்களை கழக ஆட்சிகளில் கண்டோம்.

உலகம் வேகமாக தொழில் புரட்சியில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதை ஆந்திரம், கர்நாடகம் அருமையாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது, மாலுமி இல்லாமல் தமிழகம் தத்தளிக்கும் நிலை மாற திரு.வாசன் – திரு. ப.சிதம்பரம் கைகள் இணைய வேண்டும் என்பது பல கோடி தமிழர்களின் அவா.

காமராஜ் ஆட்சி பற்றிய காங்கிரஸ் கனவு சத்தியமானதென்றால், அவரை மாதிரி சுயநலம் தாண்டி பொது சிந்தனைக்காக நீங்கள் இருவரும் உங்கள் கருத்து வேறுபாடுகள் களைந்து, தமிழகத்தில் பல சாமான்ய மனிதர்களின் வாழ்வில் சுபிட்சத்தைக் கொண்டுவர, ஒன்றிணைந்து தேர்தல் களம் புகுங்கள்.

வாழ்த்துக்கள்.

திரு.வாசன் அவர்களே நீங்கள் நினைத்தால் முடியும் அது.

பல பரிதாப தமிழக வாக்காளர் சார்பில்

லக்ஷ்மி

klakshmiprabha@yahoo.com.sg

Series Navigation

லக்ஷ்மி

லக்ஷ்மி