ஒளிர்ந்து மறைந்த நிலா

This entry is part 1 of 2 in the series 19990902_Issue

பாவண்ணன்


நாடறிந்த மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் 2.8.99 அன்று இயற்கையெய்தினார். இறக்கும்போது அவருக்கு 76 வயது. அவருடைய மொழிபெயர்ப்புப்பணி அவரின் முப்பதாவது வயதையொட்டிய காலத்தில் தொடங்கியது. ஏறத்தாழ கடந்த 46 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ஈடுபட்டு இயங்கி வந்தார். எந்த ஒரு வேலையையும் ஒன்றிரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்ய நேர்ந்தாலே அலுத்துப் புலம்பி ஒதுங்கிச் செல்லும் இக்காலத்தில் தம் வாழ்நாளில் முன்றில் இரண்டு பங்கு காலத்தை மொழிபெயர்ப்புப் பணிகளில் சளைக்காமல் ஈடுபட்ட சரஸவதி ராம்னாத் அபூர்வமானவர். இறுதியில் மரணம் மட்டுமே குறுக்கிட்டு அவர் வேலைகளைத் தடுக்க முடிந்தது.

நான் 1987ல் திருப்பதியில் இருந்தபோது அவரிடமிருந்து எனக்கொரு மடல் வந்தது. அதுதான் எங்கள் தொடர்பின் ஆரம்பம். என் முகவரி எங்கும் கிடைக்காமல் பழைய இலக்கியச் சிந்தனைத் தொகுப்பொன்றில் பிரசுரமாகியிருந்த முகவரிக்கு அவர் எழுதிப் போட்ட மடல் நான் மாறி மாறிச் சென்ற ஆறேழு ஊர்களுக்கெல்லாம் பயணம்

செய்து இறுதியில் என் கைக்கு வந்தது. ஏதோ ஒரு கதையை மொழிபெயர்க்க அனுமதி கேட்டு வந்த கடிதம் அது. அக்கடிதத்தில் அவர் அந்தக் கதையை எப்படிச் சுவைத்தார் என்பதையும் மொழிபெயர்க்க விரும்புவதற்கான காரணங்களையும் சொல்லி எழுதியிருந்தார். அவர் உள்ளத்தைத் திறந்து காட்டிய வரிகள் அவை. அன்றிலிருந்து மாதத்துக்கு ஒன்றோ இரண்டோ கடிதங்கள் எழுதிக் கொண்டோம். பிரேம் சந்த்தின் வாழ்க்கை வரலாற்றை அவர் மொழிபெயர்ப்பில் படித்திருந்த நேரம் அது. அந்த வரலாற்று நாயகனை மொழிபெயர்த்த மனம் என் கதையை மொழிபெயர்ப்புக்காகப் பொருட்படுத்தியிருக்கிறது என்கிற சங்கதி என்னை மிகவும் களிப்புக்குள்ளாக்கியது. பிறகு 89ன் இறுதியில் நான் பெங்களுர் வந்து சேர்ந்தேன். அதற்கிடையே அவரும் சென்னையிலிருந்து பெங்களுருக்கு வந்துவிட்டிருந்தார். நிமான்ஸ் மருத்துவ மனையை ஒட்டி இருந்த குடியிருப்பு வளாகத்தில் அவரைச் சென்று பார்த்தேன். அன்றிலிருந்து அவர் இறக்கும் வரை மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறைகளோ பார்த்துக் கொண்டோம். பல விஷயங்களைப் பற்றிப் பேசி இருக்கிறோம். புதிய இலக்கிய விஷயங்கள் என்ன ? என்கிற கேள்வியிலிருந்துதான் ஒவ்வொரு முறையும் அவர் பேச்சு தொடங்கும். தமிழ்ச் சூழல் பற்றியும் இலக்கியப் போக்குகள் பற்றியும் பெரிதும் அறிய விரும்பினார் அவர். உடலளவில் தமிழ்ச்சூழலிலிருந்து விலகி இருந்தாலும் மனத்தளவில் அச்சூழலோடு உறவாட விழைவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இரண்டு முன்று மணிநேரம் வரைக்கும் எங்கள் பேச்சு நீடிக்கும். சீரான இடைவெளியில் தொடர்ந்து அவரைச் சந்தித்து வந்தேன். அவர் முன் சொல்ல, நான் இலக்கியச் சங்கதிகளை ஒருங்கிணைத்துக் கொள்ளும்போதும் புத்தகங்களைப் பற்றி விவாதிக்கும் போதும் என்னை நானே கூர்மைப் படுத்திக் கொள்வதாகவே உணர்வேன். பழக்கத்தின் காரணமாக உருவாகிய உறவின் விளைவாக நான் அவரை அம்மா என்றே அழைத்து வந்தேன். அவர் மனத்திலும் எனக்கென்று எப்போதும் தனிப்பட்ட இடம் இன்று இருப்பதாகத் தோன்றியது.

நான் அம்மாவோடு பேசிப் பழகத் தொடங்கிய தருணத்தில் அவருடைய நூல்கள் நாற்பதுக்கும்மேல் வந்துவிட்டிருந்தன. அவரிடமிருந்தே பல புத்தகங்களை வாங்கிச் சென்று படித்தேன். குஜராத்தியில் ராமச்சந்திர தாகூர் எழுதிய ‘ராஜ நர்த்தகி ‘ நாவலும் கே.எம்.முன்ஷியின் ‘ஜெய சோம்நாத் ‘ நாவலும் மராத்திய நாவலாசிரியர் ஜய்வந்த் தள்வியின் ‘மகாநந்தி ‘ நாவலும் கிருஷண கட்வாணி என்னும் சிந்தி எழுத்தாளரின் ‘நந்தினி ‘ நாவலும் லால் சுக்லாவின் ‘தர்பாரி ராகம் ‘ நாவலும் அம்ரிதா ப்ரீதம் என்னும் பஞ்சாபி எழுத்தாளரின் ‘ராதையுமில்லை ருக்மணியுமில்லை ‘ என்னும் நாவலும் தாராசங்கர் பானர்ஜியின் ‘சப்தபதி ‘ என்னும் வங்க நாவலும் முக்கியமான படைப்புகளாகப் பட்டன. இந்த வரிசையை மீண்டும் ஒரு முறை வாசிக்கும்போது அநேக இந்திய மொழிகளிலிருந்தும் தமிழக்கு அவர் படைப்புகளைக் கொண்டு வந்திருப்பதைக் காணலாம். இந்திய மொழிப் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்தி மொழி வழியாக மட்டுமே இப்பணிகளை அவரால் செய்ய இயலும் என்பதால் இந்தியில் வரும் முக்கியமான இலக்கியப் பத்திரிகைகளையெல்லாம் படிப்பதில் ஆர்வத்தோடு இருந்தார். ஏதாவது புதிய முகவரியில் புதிய தகவல் கிடைக்கிற சமயத்தில் அவர்களோடு எழுதித் தொடர்பு கொண்டு அப்பத்திரிகைளைப் பெற்றுப் படிப்பதில் அவர் காட்டுகிற ஆர்வமும் ஊக்கமும் ஆச்சரியமாக இருக்கும். சலிப்பு என்பது ஒரு விழுக்காடு கூட அவர் வாழ்வில் இருந்ததில்லை. முதுமையும் நோயும் அவர் உடலைத் தான் வரட்டியதே தவிர மனத்தில் எப்போது இளமைத் துடிப்பும் வேகமும் நிரம்பியே இருந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்தில் கூட குணமானதும் செய்ய வேண்டிய மொழிபெயர்ப்புப் பணிகள் என்று ஒரு பட்டியலையே வைத்திருந்தார். தமிழ் எழுத்துலகைப் பற்றி நெடுநேரம் விவாதிக்கிற அளவுக்கு அவரது குடும்பச்சூழல் நல்ல முறையில் இருந்தது. அவர் கணவருக்கும் இலக்கிய ஆர்வம் இருந்தது. அவர் மகன் மருத்துவராக இருப்பினும் கடசதபற , நடை காலத்திலிருந்து இலக்கிய வளர்ச்சியைக் கவனித்து ஊக்கமுடன் படித்து வருபவர்.

 

அவர் தன் இலக்கிய வாழ்வைப் படைப்பாளியாகத்தான் தொடங்கியிருக்கிறார். முதலில் ஒருசில கதைகளையும் கவிதைகளையும் கூட எழுதி வெளியிட்டிருக்கிறார். துரதிருஷ்டவசமாக ஏதோ ஒரு கணத்தில் எடுத்த முடிவின்படி சொந்தமாய்ப்ப படைக்கும் முயச்சிகளைக் கைவிட்டு மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இந்தியா முழுவதும் சுற்றி கங்கை, யமுனை, காவேரி, கோதாவரி ஆகிய எல்லா நதிகளைப் பற்றியும் ஏகப்பட்ட தகவல்களைத் திரட்டிச் சிறுவர்களுக்கு உதவும் வகையில் தனித்தனி நூல்களாகக் கொண்டு வந்தார். இவை தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் வெளிவந்தன. ஆந்திரம கருநாடகம், கேரளம், மகாராஷ்டிரம், ஒரிஸா, தமிழகம் ஆகிய மாநிலங்களைப் பற்றியும் விவர நூல்களை எழுதியிருக்கிறார்.

பெரும்பாலும் என் ரசனையும் அவர் ரசனையும் ஒத்திருந்தது. எனக்குப் படித்த புத்தகங்கள் அவருக்கும் பிடித்திருந்தன. பிடித்ததற்கான காரணங்களையொட்டிப் பேச்சை அவர் பெரிதும் நிகழ்த்துவார். விதிவிலக்காக அவருக்குப் பிடிக்காத புத்தகங்கள் எனக்குப் பிடித்திருந்ததெனில், அதற்கான காரணங்களைக் காது கொடுத்து கேட்கிற அளவுக்கு பொறுமையும் சகஜமாக எடுக்கொள்ளும் அளவுக்கு பக்குவமும் அவரது நெஞ்சில் இருந்தன. அப்படிப்பட்ட தருணங்களில் எல்லாம் ‘ஓ..அப்படி இருக்குமோ, யோசிக்கணும் ? ‘ என்று சொல்லி முடிப்பார்.

என்னை மொழிபெயர்ப்புத்துறையில் இறக்கிவிடப் பெரிதும் ஆசைப்பட்டார் அவர். நான் பிடிகொடுக்காமல் நழுவி நழுவிப்போனேன். கன்னடத்தில் படிப்பதே போதும் என்று அமைதியாக இருந்தேன். சமயம் பார்த்து அவர் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். இந்தியமொழி நாடகத் தொகுப்பை தான் தயாரிக்க இருப்பதாகவும் வட இந்திய நாடகங்களை இந்தி வழி மொழிபெயர்த்துவிட்டதாகவும் தென் இந்திய மொழிகளின் நாடகங்களை அந்தந்த மொழி வழியாகவே செய்ய ஆவல் கொண்டிருப்பதாகவும் கன்னடத்திலிருந்து நல்ல நாடகமொன்றை நான் செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நான் பார்த்த நாடகத்தை அவரிடம் விவரித்தேன். அவருக்கு அது பிடித்துவிட்டது. அதையே மொழிபெயர்த்துக் கொடுங்கள் என்றார். அவருக்காக என் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு சந்திரசேகர் பாட்டால் என்னும் நாடக ஆசிரியரின் ‘அப்பா ‘ என்கிற நாடகத்தை மொழிபெயர்த்துக் கொடுத்தேன். என்ன துரதிருஷடம் ? இன்று வரை அந்தப் புத்தகம் வரவில்லை. இன்று அதைத் தொடர்ந்து பல நூல்களை வரிசையாக மொழிபெயர்த்து வந்ததைக் கண்டு அவர் தன் மகிழ்ச்சியைப் பலமுறை தெரிவித்தார்.

இந்தி வழியாக தமிழுக்கு அயல்மொழி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியதைப் போலவே தமிழ்ப் படைப்பாளிகள் பலரையும் இந்தி மொழிக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சு.ரா. , கி.ரா., தி.ஜா. அகிலன், ஆதவன், பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோரின் கதைகள் பலவற்றை இந்திக்கு மொழிபெயர்த்திருக்கிறார். எழுபதுகள், எண்பதுகளில் புதுசாக எழுதத்தொடங்கி நிலைபெற்ற படைப்பாளிகள் பலருடைய படைப்புகளில் எழுத்தாளருக்கு ஒரு கதை என்கிற குறைந்தபட்ச வீதத்தில் எல்லாரையுமே அவர் இந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார் என்றே சொல்ல வெண்டும். அகிலன் , ஜெயகாந்தன், ஆதவன் ஆகியோரின் கதைகள் இந்தியில் தனிப்பட்ட தொகுப்புகளாகவே வந்துள்ளன. மனத்தளவில் அவருக்கு அசோகமித்திரன், சு.ரா., அகிலன் ஆகிய முத்த எழுத்தாளர்களின் படைப்புகள் மீது ஒருவித ஈடுபாடு இருந்தது. அவர்களின் படைப்புகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவள் மனம் உற்சாகம் கொள்வதைக் கண்டிருக்கிறேன்.

ஏற்கனவெ மொழிபெயர்த்த பல நூல்கள் புத்தக உருவம் பெறாமல் இருப்பதை நினைத்து அவர் மனம் மிகவும் வேதனைப் பட்டது. உற்சாகத்தைக் குலைக்கிற வேதனையாக அதை நினைக்க முடியாது. மாறாக ஏன் இப்படி ஆனது ? என்று சூழலைப் புரிந்து கொள்ள முடியாத வேதனையாகச் சொல்ல முடியும். தம் வாழ்நாள் சாதனையாக இருக்கப்போவதாக இரண்டு முக்கிய மொழிபெயர்ப்புகளைப் பற்றி அவர் அடிக்கடி சொல்வதுண்டு. பிரேம் சந்த்தின் ‘கோதான் ‘ நாவலை மொழிபெயர்ப்பதில் சிரத்தையோடு ஆறேழு மாதங்களைச் செலவழித்தார். அக்காலகட்டத்தில் அவர் மனத்தில் பிரேம் சந்த்தின் பாத்திரங்கள் உலவிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வது மிகையாகாது. ஏறத்தாழ 600 பக்கங்ளக் கொண்ட மொழிபெயர்ப்புத் தாட்களை நானும் அவரும் பக்கவாரியாகச் சரிபார்த்தோம். ‘இது வெளிவரும்போதுதான் என் மிகப்பெரிய கனவு நிறைவேறும் ‘ என்று சொன்னார். அப்போது அவர் கண்களில் கண்ட மின்னல் இன்னும் என் நினைவில் பசுமையாகத் தங்கியுள்ளது. புத்தகம் வெளிவருவது தாமதமாகத் தாமதமாக ‘பிரேம் சந்துக்கும் இதுதான் கடைச்ிப் புத்தகம். எனக்கும் இதுதான் கடைசிப் புத்தகமாக இருக்குமோ, என்னமோ ‘ என்று கசப்புடன் சிரித்தார். அவர் காண விரும்பி மொழிபெயர்த்த இன்னொரு புத்தகம் ‘இந்தியக் கதைகள் ‘ என்னும் பன்மொழிக் கதைத் தொகுப்பு. சாகித்திய அகாதெமிக்காக இதை மொழிபெயர்த்திருந்தார். இவை அல்லாமல் நோய்வாய்ப்பட்ட நிலையில் கூட அயராது உட்கார்ந்து தமிழிலிருந்து இந்தியில் மொழிபெயர்த்த கு.சின்னப்ப பாரதியின் நாவலொன்றும் சிவசங்கரியின் நாவலொன்றும் கூட வெளிவரவில்லை. சுபமங்களா, புதிய பார்வை நின்று போன பின்னர் சின்னச் சின்னக் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட பத்திரிகை இல்லாத நிலை அவரைப் பெரிதும் திகைப்புக்குள்ளாக்கியது. இந்த நினைவுகள் பெரிதும் மனத்தை அழுத்திக் கொண்டிருந்தாலும் அவற்றை மறந்து தொடர்ந்து படிப்பதிலும் எழுதுவதிலும் கவனத்தைத் திருப்பினார். படுத்த படுக்கையாக இருந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் எழுத்துவேலை நின்றது. எனினும் படிப்பதை நிறுத்தவில்லை. அவர் உடலில் ஏகப்பட்ட நோய்கள். எல்லாவற்றுக்கும் மருந்து மாத்திரைகள். மாத்திரையின் மயக்கம் . வலியின் வேதனை. மயக்கம் தெளிந்த நேரத்தில் அவர் இளைப்பாறப் புத்தகங்களைத் தான் தேடினார். துயரம் தரும் வியாதிகளைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை. படிக்க முடியவில்லையே என்றுதான் மனம் உருகி துக்கத்திலாழ்ந்தார். இதனாலேயே மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று இரண்டு கண்களிலும் அறுவைச் சிகிச்சைசெய்து கொண்டார். பார்வை சரியானதுமே லென்ஸ் வைத்துப் படிக்கத் தொடங்கினார். . இறுதியாய் சு.ரா.வின் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் நாவலைப் படித்துவிட்டுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அந்நாவல் அவர் மனத்தில் புதைந்திருந்த அவரது இளமை நினைவுகளைக் கிளறிவிட்டதைக் கண்டேன்.

மொழிபெயர்ப்புத்துறையைத் தமிழ்ச்சூழல் எதிர்கொள்ளும் விதங்கள் பற்றி அவர் மனத்தில் ஏமாற்றங்கள் இருந்தன. பத்திரிகைகள் மொழிபெயர்ப்பாளர்களை பொருட்படுத்தாமல் ஒதுக்குவதை அவரால் சகித்துக் கொள்ள இயலவில்லை.

தம் வாழ்நாளில் அவர் பெற்ற விருதுகள் ஏராளம். வானதிப் பதிப்பகம் வழியாக வந்த ‘இந்திய நாடகங்கள் ‘ என்னும் நூலுக்கு சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது கிடைத்தது. மத்திய அரசாலும் மத்திய அமைச்சகத்தின் கல்வித்துறை மற்றும் சமுகநலத்துறையாலும் பலமுறை விருதுகள் பெற்றார். இந்தி மொழிக்குச் செய்த சேவைக்காக குடியரசுத் தலைவர் விருதையும் பெற்றார். தில்லியில் உள்ள பாரதீய அனுவாத பரீஷத் தன் த்வாரகீஷ் விருதை அவருக்களித்துக் கெளரவித்தது. 1992ல் தமிழகத்தின் அக்னி அமைப்பும் விருதளித்துப் பாராட்டியது. பீகார், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் விருதளித்தன. கல்கத்தாவின் சாந்தி நிகேதன் பல்கலைக் கழகம் அவரை அழைத்து விருதளித்தது.

மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரும் நிலவைப் போன்றவர்கள் என்பார் அம்மா. சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்றுப் பொழிகிறது நிலா. நிலவின் குளுமையையும் அழகையும் பாராட்டுபவர்கள் சிலர் இருக்கலாம். ஆனால் அவர்கள் மிகவும் குறைவானவர்கள். கூரைக்குமேல் நிலவு எரிகிறது என்றபோதும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குகிறவர்கள்தானே அதிகம். யாரும் அண்ணாந்து பாரக்காத வானில் இரவு முழுக்க ஒளிர்ந்துவிட்டு மறைந்து விடும் நிலா. மொழிபெயர்ப்பாளனும் அப்படித்தான் என்று சொல்லிட்டுச் சிரிப்பார். இன்று அந்தச் சிரிப்பொலி இல்லை. வானில் மறைந்துவிட்டது.

– திண்ணை, 1999, செப்டெம்பர் 2.

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigationஇறைவனின் எல்லாக் குழந்தைகளுக்கும் அப்போது சிறகுகள் இருந்தன >>

பாவண்ணன்

பாவண்ணன்