அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


எதிர் பாராமல் வந்த சுஜாதாவின் மரணச் சேதியில் கனத்த மனசு கொஞ்ச நேரம் முடங்கிப்போனது.
கோடை காலம்வரை அவர் வாழ்ந்திருந்தால் இப்படித் துன்பப் பட்டிருக்க மாட்டேன். நினைவில் முள்ளாகச் சஞ்சலப் படுத்தும் ஒரு கணக்கு தீர்க்கப் பட்டிருக்கும்.

1981 தைமாத ஆரம்பத்தில் மதுரை தமிழாராட்சி மாநாட்டு மண்டபத்தில் என்னைச் சந்திததில் இருந்து 1999ல் எனது அவசர புத்தியால் முரண்பட்டதுவரை நமது நட்ப்பு எப்போதாவது நேரிலும் எப்போதும் இணையத்திலும் செளித்தபடியே இருந்தது. நட்பு மனசுக்கு பல்லாயிரம் கிலோ மீட்டரும் நடந்து போகிற தூரம்தானே.

மைதொட்டு எழுதுகிற பேனாக்குச்சிக் காலத்தில் இருந்து அதி நவீனக் கணனிக் காலம்வரைக்கும் சுஜாதா விஞ்ஞானத் தொழில் நுப்பத்தாலும் மனசாலும் மீண்டும் மீண்டும் பிறந்து காலத்தை வென்றுகொண்டிருந்தார். என்னை கனனியில் எழுதவைத்ததில் சுஜாதாவுக்குத்தான் முதல் மரியாதை. அடுத்த மரியாதைகள் அவுஸ்திரேலிய பாலப்பிள்ளைக்கும் சிங்கப்பூர் முத்துநெடுமாறனுக்குமே சேரும். என்னைப்போலவே வேறு பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் அவரது கைவிரலலைப் பற்றித்தான் கணனித் தமிழ் உலலகினுள் காலடி எடுத்து வைத்தார்கள் என்று பின்னர் அறிந்தேன். மாறும் உலகோடு மீண்டும் மீண்டும் பிறந்து தலைமுறைகளைக் கடந்து செல்கிற கலை கைவர அமரர் சுஜாதாவின் நட்பும் எனக்கு உதவியிருக்கிறது. அவரைப்போலவே நானும் இளைய கலைஞர்களது படைப்புகளை தேடி தேடி வாசிக்கவும் மனம் திறந்து பாராட்டவும் பழகிக் கொண்டேன்.

கால் நூற்றாண்டுகளின் முன்னம் 1981ம் ஆண்டு தைமாதம் மதுரைத் தமிழாராட்ச்சி மாநாட்டு மண்டபதில்தான் நாங்கள் முதன் முதலாகச் சந்தித்தோம். கோமல் சுவாமிநாதந்தாதான் சுஜாதாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். கோமல் சுவாம்நாதனை தலித் இலக்கிய முன்னொடியும் எனது ஆதர்சமுமான கே.டானியல் அண்ணாதான் எனக்கு அறிமுகப் படுத்திவைத்தார். அந்த பயணம் முழுவதிலும் எங்களோடு டானியல் அண்ணாவும் இருந்தார்.

ஆச்சரியப் படும்வகையில் பிரபல எழுத்தாளரான சுஜாத்தா என்னுடைய கவிதைகளை அறிந்து வைத்திருந்தார். 1970பதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் வந்திருந்த எழுத்தாளர் அசோக மித்திரனூடாக என்னுடைய ஆரம்ப காலக் கவிதைகள் சில ஏற்க்கனவே தமிழ் நாட்டை எட்டியிருந்தது. அசோகமித்திரன் கணையாழியிலும் வேறு சிறு பத்திரிகைகளிலும் அவற்றை வெளியிட்டிருந்தார். எனது முதல்கப் படைப்பான பாலியாறு நகர்கிறது கவிதையும் மூன்றாவது படைப்பான இளவேனிலும் உளவனும் கவிதையில் வருகிற “காட்டை வகுடு பிரிக்கும் காலச்சுவடான ஒற்றையடிப் பாதை” என்கிற அடியும் பலருக்குப் பிடித்திருந்தது.

ஒல்லி உடலும் குறுந்தாடியும் தோழில் புரழும் தலைமுடியும் தொங்கும் ஜொல்னாப் பையுமாக மதுரை உலகத் தமிழர் மாநாட்டரங்கில் அலைந்த என்னை சுஜாத்தாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இப்படித்தான் எங்கள் கதை ஆரம்பமானது. பிரபலமில்லாத இளையவர்களின் எழுத்துக்களை சலிக்காமல் படிக்கிறது உலகறியப் பாராட்டுகிறது என்று அவர் எல்லோரையும் ஆச்சரியப் படுத்துகிற மனிதராக இருந்தார். அதுதான் அவரது காயகல்பமாகவும் இளமையின் இரகசியமாகவும் இருந்தது. அந்த பயனத்தில் என்னைக் கவர்ந்த கலைஞர்களுள் கோமல் சுவாமிநாதனும் சுஜாதாவும் முக்கியமானவர்கள். பின்னர் நான் இலங்கைக்குத் திரும்பிவிட்டேன். அதேவருடம் ஜூன் மாதம் எங்கள் யாழ்ப்பாணம் நூலகம் ஒரு லட்சம் புத்தகங்களோடு எரியூட்டப் பட்டது. நாங்கள் கூட்டம் கூட்டமாகப்போய் எங்கள் நூலத்தின் வெந்து தணியாத சாம்பரில் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தோம். சற்றுத் தள்ளி துரயப்பா மைதானத்தில் எங்கள் நூலகத்தை எரித்த சிங்கள படை கிண்டலாகக் கூச்சலிட்டபடியே பைலா பாட்டுக்கு நடனமாடிக் கொண்டிருந்தது. அன்றுதான் எங்களில் பலர் இதற்க்கு ஆயுதப் போராட்டத்தின்மூலம்தான் பதில் சொல்ல முடியுமென்கிற தீர்னமானத்துக்கு வந்தோம். நாங்கள் ஆயுதத்தை எடுத்ததுபோலவே அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர் சுஜாதா பேனாவை எடுத்திருக்கிறார். எனினும் என்னுடைய தமிழக நண்பர்கள் சிலர் அவர் பிராமணர் என்ற காரணத்தால் அவரது பங்களிப்பை கண்டு கொள்ள மறுத்தார்கள். ஆனால் கோமல் சுவாமி நாதன் அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதியில் இருந்து மங்கை கிருஸ்னாடாவின்சி வரை பல தலைமுறைகளைச் சேர்ந்த எனது கலைத்துறை நண்பர்கள் பலரின் பிராமண பின்னணி பிறப்பின் விபத்து மட்டுமே என்பதை என்பதை நான் அறிந்திருந்தேன். ராமானுஜரைப் போலவே நண்பர் சுஜாதாவுக்கும் வரித்துக்கொண்ட நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ்க் கலாச்சாரத்தைத் தவிர மற்ற எல்லா அடையாளங்களும் பிறப்பின் விபத்துத்தான்.

சுஜாதா ஈழத் தமிழ்க் கலைஞர்களின் உண்மையான நண்பர். தனது வன்னிப் பயணத்தின்போது பிரபாகரன் தன்னிடம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ எங்களைச் சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டிதாகத் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் குறிப்பிட்டிருக்கிறார். சுஜாதாவின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்பட சுவடி என்னைப்போன்ற ஈழத்து நண்பர்களது ஆலோசனைகளோடு செம்மையும் செழுமையும் படுத்தப் பட்டிருக்கலாம். அந்த திரைப்படம் பற்றி எனக்கும் விமர்சமனம் இருந்தாலும் சுஜாதாவின் நன்நோக்கத்தை நான் ஒருபோதும் சந்தேகப் படவில்லை. அமரர் ரஜீவ் காந்தியின் மரணத்தை தொடர்ந்து இறங்கிய கொடிய இருள் நாட்களிலும்கூட தொடர்ந்து ஈழத்து இலக்கிய முயற்ச்சிகளை குறிப்பாகக் கவிதைகளை ஆதரித்து தனது கடைசிப் பக்கத்தில் எழுதியதை அத்தனை சுலபமாக மறந்துவிடமுடியாது.

நாங்கள் நண்பர்களாய் இருந்தபோதும் பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்தோம். அடிக்கடி சந்திததில்லை. இணையம் அறிமுகமானபின்னர் அடிக்கடிசந்திக்காமல் இருந்ததுமில்லை. ஒருமுறை எப்படி கணனியில் தமிழ் எழுதுவது என்று ஒரு தாயிடம் கேட்பதுபோல கேட்டு அவருக்கு மின்னஞ்சல் எழுதினேன். மணலில் அம்மா அனா ஆவன்னா எழுதப் பழக்கியதுபோல கணனியின் மாயத் திரையில் அவர்தான் எனக்குத் தமிழ் அரிச்சுவடி தொடக்கி வைத்தார். 1999ல்தான் நான் அவரை கடைசியாகச் சந்தித்தேன். அவருடைய வீட்டில் விருந்து சாப்பிட்டேன். என்னோடு மிகவும் அன்பு பாராட்டினார். ஒரு மாலைப் பொழுதில் தனது குலதெய்வமான பார்த்தசாரதி கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்த சேதிகளைச் சொன்னபடி சென்னைச் சுவர்க் காட்டுக்குள் நடந்த சுஜாதாவைத் தொடர்ந்த என்னோடு கதை கேட்டபடி மஞ்சள் சூரியனும் வந்தது. பாரதியார் பற்றியும் நிறையச் சொன்னார். பாரதியாரை யானை மிதித்த இடத்தைச் எனக்குச் சுட்டிக் காட்டினார். அவர் வாழ்ந்த வீட்டையும் எனக்குக் காட்டினார். திரும்பிச் சென்றபோது சூரியன் போய்விட்டிருந்தான். எனினும் நிலா எங்களோடு துணை வந்தது. இரவுச் சாப்பாட்டு மேலசையில் அவரது அன்பான வவார்த்தைகளில் அவரது இல்லத் தோழியின் உபசரிப்பில் திழைதிருந்தோம். பேச்சினிடையே மறுநாள் தனது திரைஉலக நண்பர்களைச் சந்திக்கவருமாறு அழைத்தார். எனினும் அந்த இரவு கொடிய விதி எங்கள் நட்பின்மீது இறங்கியது. உண்மையில் வானத்தில் போன சனியனை ஏணிகட்டி இறக்கியது நான்தான். சின்னப் பிரச்சினைக்காக அவரது மனசு புண்பட நடந்துகொண்டேன். அதன்பின்னர் அந்த உயர்ந்த ஆழுமையை நான் சந்திக்கவில்லை. வருகிற கோடை விடுமுறையில் அவரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்கிற தீர்மானத்தில் இருந்தேன்.

என்னை அசாத்திய துணிச்சல் உள்ளவன் என்று சொல்லுவார்கள். நீழும் துப்பாக்கிகளை புறம்கையால் தட்டி விட்டு நடந்துவசெல்கிற எனக்கு அவரை நேரில் சந்திக்கவும் மன்னிக்க வேண்டுகிறேன் என்று சொல்லவும் துணிச்சல் ஏற்ப்படவில்லை. பின்னர் என் கவலையை கவிஞர் இந்திரனிடமும் பிறரிடமும் சொல்லி அனுப்பினேன். 2002ல் எனது கவிதை தொகுப்பு பெருந்தொகை வெளிவந்தபோது மன்னிக்க வேண்டுகிறேன் என எழுதி அவருக்கு அனுப்பி வைத்தேன். கிடைத்ததா என்பதும் தெரியவில்லை. கோடை காலம் வரைக்குமாவது இருந்திருக்கலாம். குற்ற உணர்வாம் சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போய்விட்டார்.

ஈழத் தமிழரைப் பொறுத்து இந்த வருடம் பெப்ருவரி மாதம் மிகக் கொடுமையானது. எழுத்தாளர் சுயாதா ஓவியர் ஆதிமூலம் முன்னைநாள் அமைச்சர் ராசாராம் உட்பட எங்களது தமிழக நண்பர்கள் மூவரை அது காவு கொண்டுவிட்டது. சுயாத்தாவுக்கும் ஆதிமூலத்துக்கும் இன்னொரு ஒற்றுமையுமுண்டு ஆதிமூலத்தின் கோடுகளும் சுயத்தாவின் வசனங்களும் ஒன்றுதான். அவற்றின் நடையும் சக்தியும் ஒன்றுதான். ஆதிமூலமும் சுஜாதாவும் இராசாராமும் வேறு வேறு வழிகளில் பயணித்தபோதும் ஈழத்தமிழர்களை நேசித்ததிலும் விருந்தோம்பலிலும் ஒன்றுபோலவே இருந்தார்கள். இவர்களது மரணம் ஈழத் தமிழ் நண்பர்கள் வட்டத்தில் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது சுயாதா ஆதிமூலம் இருவரது மரனமும் கலைத் தமிழுக்குப் பெரிய இழப்பாகும்..

என் வாழ்நாளில் அமரர் சுஜதாபோல தமிழ் நடையால் பல்துறை விடயங்களையும் இலக்கியத்தையும் ஜனரங்சகப் படுத்திய இன்னொருவரை சந்திததில்லை. அவரது துணைவிக்கும் பிள்ளைகளுக்கும் தேசிகன்போன்ற அவரது ஆப்த நண்பர்களுக்கும் எனது அனுதாப அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்.
.


Series Navigation