ரியாத் வாழ் தமிழர் விழா

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

அஹ்மத் ஜூபைத்


‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பார்கள். ‘வாய்விட்டும்,மனம்விட்டும் சிரித்த ஒரு அழகிய அனுபவம் தமிழ்ச்சுவையுடன் கடந்த வியாழன் (01 FEBRUARY 2007) அன்று இனிய மாலை நேரத்தில், இந்தியத் தூதரக கலையரங்கில் ரியாத் வாழ் தமிழர்களுக்கு வாய்த்தது.

ஆம். ‘மகிழ்ச்சியான மணவாழ்க்கையின் வெற்றிக்கு காரணம் – மனைவியே! கணவனே!’ என்ற தலைப்பில் தமிழ் கலை மனமகிழ் மன்றத்தார் (TAFAREG) ஏற்பாடு செய்திருந்த பட்டிமன்றத்தில் சிறப்புப் பேச்சாளராகவும், நடுவராகவும் நகைச்சுவைத் தென்றல், ஜெயா டி.வி புகழ், தமிழ்ப்பேராசிரியர் கலைமாமணி, திரு.கு.ஞானசம்பந்தன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

சவூதி அரேபியாவுக்கான இந்தியத்தூதர் திரு.எம்.ஓ.ஹெச்.ஃபரூக் அவர்கள் தலைமையில், இலங்கைத்தூதர் ஏ.எம்.ஜே.சாதிக் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்பட்டிமன்றத்தில், தலைமை உரை நிகழ்த்திய இந்தியத் தூதரின் பேச்சு அனைவர் மனதையும் உருக்குவதாக இருந்தது. வெற்றிகரமான மணவாழ்க்கைக்கு தன்னுடைய வாழ்க்கையையே நல்ல உதாரணமாகக் குறிப்பிட்ட திரு.ஃபரூக் மரைக்காயர், தன் கடந்த கால நினைவுகளில் மூழ்கி அவையினரை மனமுருக வைத்தார்.

‘கணவனே’ என்ற அணியில் திரு.ஷஜ்ஜாவுதீன், திருமதி மலர்ச்செல்வி சபாபதி, திருமதி பிரியாதிருமாவளவன், திரு. பஃக்ருத்தீன் ஆகியோரும், ‘மனைவியே’ என்ற அணியில் திருமதி மைதிலி சீனுவாசன், திருமதி ரேணுகா சுப்பையா, திரு.லக்கி ஷாஜஹான், திரு.சுவாமிநாதன் ஆகியோரும் தமது நகைச்சுவைமிக்க வாதத்தால் செவிக்கும் சிந்தைக்கும் விருந்து படைத்தனர். நடுவரின் இயல்பான, எளிதான, தொடர் நகைச்சுவை வெடிகளால் அரங்கம் அதிர்ந்தது!

இந்தியக்குடியரசின் 58ம் அகவையை முன்னிட்டும், இந்தியாவை தனது இரண்டாம் தாய்வீடு என்று சொன்ன சவூதி அரசர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் இந்திய வருகையின் முதலாண்டு நிறைவை முன்னிட்டும், மன்னர் சவூத் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானி பேராசிரியர் மாசிலாமணி அவர்களின் ‘மாசிலாவின் புற்றுநோய் பகுப்பாய்வு’ (Masila’s Cancer Diagnostics) கண்டுபிடிப்பின் வெற்றியை முன்னிட்டும் இந்நிகழ்ச்சியை கொண்டாடுவதாக தமிழ் கலை மனமகிழ் மன்றத்தினர் தெரிவித்தனர்.

மன்றத்தின் துணைத்தலைவர் திரு.ஹைதர் அலி அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, தலைவர் அஹமது இம்தியாஸ் வரவேற்புரையாற்றினார். செயலாளர் திரு. ஜாஃபர் சாதிக் நன்றி நவின்றார். நடுவர் பற்றிய அறிமுகத்தை திரு.சுபைர் செவ்வனே செய்தார்.

அன்றைய தினமே குடியரசுக்கொண்டாட்டத்தின் பொருட்டு இந்தியஅரசு சார்பில் நடைபெற்ற ‘கஜல்’ நிகழ்ச்சிக்கு செல்லவேண்டி இந்தியத்தூதர் விடைபெற்றுக்கொள்ள, கடைசிவரை பட்டிமன்றத்தை இரசித்து மகிழ்ந்தவர்களில் இலங்கைத்தூதருடன், முன்னணி பத்திரிக்கையாளர் திரு.ரசூல்தீன் (ARAB NEWS), ரியாத் தமிழ்ச்சங்கத்தின் முந்நாள், இந்நாள் தலைவர்கள், திரு. ஜெயசீலன், பேரா.ரஷீத் பாஷா, விஞ்ஞானியும் எழுத்தாளருமான பேரா. வ.மாசிலாமணி, லக்கி குழும நிறுவனத்தலைவர் திரு.காதர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். செம்மையாகவும், சீராகவும் விழா ஏற்பாடுகளை செய்த விழாக்குழுவினர் அனைவரது பாராட்டையும் பெற்றனர்.

வந்திருந்த அனைவருமே வயிறு குலுங்கச் சிரித்து மிகவும் திருப்தியுற்று செல்வதாகச் சொன்ன ஒரு நேயர், ” ‘மனைவியே’ என்ற தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே!” என்றார்.
“எப்படிச் சொல்றீங்க? ”
“அந்த அணில ஐந்துபேர் பேசினாங்களே! – இந்தியத்தூதரையும் சேர்த்து!”


ahamedzubair@gmail.com

Series Navigation

அஹ்மத் ஜூபைத்

அஹ்மத் ஜூபைத்