“முப்பது ஏக்கர்கள்” – ரேங்கே’யின் பிரஞ்சுக் கனடியப் புதினம்

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

தேவமைந்தன்


“பிரஞ்சுக் கனடாவிலிருந்து வெளிவந்த மிகவும் உணர்வு தரும் புனைகதைகளுள் குறிப்பிடத்தக்க புதினம் ரேங்கே’யின் ‘முப்பது ஏக்கர்கள்’ என்ற இந்தப் புதினம். ஆழ்ந்த மெளனம் மற்றும் அமைதியின் ஒரு துன்பியல் படைப்பு” என்று மொழிந்தார் ராபர்ட் வீவர். இம் மதிப்பீடு சரியானதுதான் என்று 1938ஆம் ஆண்டில் பாரீசில் முதற் பதிப்பான ‘முப்பது ஏக்கர்கள்’ நாவலை ஈடுபட்டு வாசிப்பவர்கள் உணர்வர்.

வாசிப்பனுபவத்தில், இதன் மீதுள்ள ஆர்வம் தொடக்கத்திலிருந்து இறுதிவரை மேலெழுந்து உயர்ந்து கொண்டே செல்வது இதன் கட்டுமானத்திலுள்ள தனிச்சிறப்பு. ஆண்டுகள் பல கடந்தும் இந்த ஆர்வம் குன்றவில்லை; காரணங்கள், இப்புனைகதை ஆசிரியருக்கு உள்ள – மண்ணும் அதன்மேல் மனிதர் கொண்டுள்ள உறவும் பற்றிய ஆழமான புரிந்துணர்வும் அனுபவ சாத்தியப்பட்ட நுண்ணறிவும் மிகவுயர்ந்த புனைகதை சொல்லும் ஆற்றலுமே ஆவன.

இந்தப் புதினம் தேசிய, இனவாதங்களை அலட்சியமாகத் தாண்டி மேலெழும்பிச் செல்கிறது. நிலப்பகுப்புகளின் மேல் மனிதனுக்கு எழும் ஆரவாரமான அவாக்களைப் பகடி செய்து நீள்கிறது. பிரபஞ்ச வெளியில், தனது அற்ப அவாக்களையெல்லாம் கடந்து, மனிதனை மேல் எழும்பிச் சென்று நிலைத்திடுமாறு செய்கிறது. ஹெசியாதிலிருந்து வர்ஜில் வரை, ரமோஸிலிருந்து பார்[Barre`s]வரை இலக்கிய உலகில் உலாவி வலம் வந்த மிகப்பெரிய படைப்பாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரேங்கே. அவர்கள் என்ன செய்துவந்தார்கள்? மனிதனுக்கும் மண்ணுக்கும் இடையறாது நிலவி வந்த மண உறவினை ஆராதித்து வந்தார்கள். அந்தப் பாரம்பரியம் ரேங்கே’யில் நிலைகொண்டதில் வியப்படைய ஒன்றுமில்லை. என்ன வித்தியாசம்? இந்த முறை அந்த மனிதன் ஒரு பிரஞ்சுக் கனடியன்; நிலமோ கெபேக். அவ்வளவுதான்.

கதைக் கரு, எளியதுதான். எங்கும் கிடைக்கும் களிமண் போலத்தான். அதைப்பிசைந்து வண்டிச் சக்கரத்தில் அழுத்தி ஓரம் பிடித்து வனையும் குயக்கலைஞனின் செய்நேர்த்திதான் ரேங்கே’யினது… யுகாரீஸ்த் முவாஸான், பிரஞ்சுக் கனடிய உழவு விவசாயிகளுக்கு ஏற்றதொரு உரிய மாதிரி ஆனவர். மரபு, இரத்த உறவு ஆகிய தளைகளால் பந்தப்படுத்தப்பட்டுப் பண்படுத்தப்பெற்றவர். யுக்தியும் அனுபவத்தால் விளைந்த கூரறிவும் கொண்டவர். என்ன இருந்து என்ன புண்ணியம்? தனக்குள் விளைந்த ‘லாரென்ஷியன் சமாதான’த்துக்கு எதிராக உலகியல் சக்திகள் திரண்டெழுந்தபொழுது அவற்றைச் சமாளித்து தன் அமைதியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் திண்டாடுகிறார். அத்தகைய யுகாரீஸ்த் குறித்தும் அன்னார்தம் குடும்பம் பற்றியும் விவரிக்கும் புதினமே ‘முப்பது ஏக்கர்கள்.’ ஆனால், அதே நேரத்தில் நவீன பிரஞ்சுக் கனடாவானது எவ்வாறு தன் மரபூன்றிய நாட்டுப்புறப் பண்புகளைப் புதியனவும் உடனடியாக முன்செயல்பட்டுச் செல்வனவுமாகிய நவீன நிலைமைகளுக்கேற்ப தகவமைத்துக்கொள்ள முற்பட்டது என்ற வரலாற்றின் கதைப் பதிவே இந்தப் புதினம் என்றால் இன்னும் பொருந்தும்.

ரேங்கே’யின் புதினம், கடந்துவிட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து சென்ற இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பதுகள் வரையிலான லாரென்ஷியன் பண்ணை நிலத்தை உழுத விவசாயியின் வாழ்க்கையைப் பின்னலிட்டுக் கதைசொல்வதில் பெருவெற்றி பெறுகிறது. யதார்த்தம், கடினமான கதைப்பின்னலை
வெகு அலட்சியமாக நகர்த்திச் செல்லுகிறது. கதையின் காலகட்டம், உலகையே உலுக்கிய காலகட்டம் அல்லவா? முதல் உலகப் போர், பழைய இனவாத ரணங்களை கிளறித் திறந்து வெளிக்காட்டியது. பழிவாங்க வந்ததொரு நச்சுப் பாம்பே போல் கறுவிக்கொண்டு வெகுவேகமாக ஊர்ந்து வந்த தொழில்மயமாக்கல், பண்ணைகளிலிருந்து விவசாயிகளை இரக்கமில்லாமல் தூக்கி எறிந்தது. அவர்கள் வீசி எறியப்பட்ட இடங்கள், அவர்கள் இதுவரை சம்பந்தப்பட்டே அறியாத நகரங்கள். அவர்கள் இதுவரையிலும் வாழ்ந்தே பார்த்திராத செயற்கை வாழ்க்கையை வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். துல்லியமாகச் சொன்னால், அவர்கள் இதுவரை மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்துவந்த இயல்பான வேளாண்குடி வாழ்க்கை, முறட்டுத்தனமாகக் காயடிக்கப் பட்டது. நவீனமான மக்கள் தொடர்புக் கருவிகள், அகன்றதும் மக்கள் பெருக்கம் மிக்கதுமான பெருந்தேசத்தின் இயற்கையான கோட்பாடாக ‘தனிமைப்படுத்தப்படுதல் கொள்கை’யை நிலைப்படுத்த இடையறாது முயன்றுகொண்டே வந்த சக்திகளைத் தகர்த்தெறிந்தன. இந்த இடத்தில், ‘ஐசொலேஷனிஸம்’ குறித்தும் நாம் உணர வேண்டும். தேசிய சுயநிறைவு பெறுவது குறித்தும்; வெளிநாட்டு அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டாளிகளிடமிருந்து முற்றாக விடுதலை பெறுவது குறித்தும் விழிப்புணர்வூட்டும் கோட்பாடே ‘ஐசொலேஷனிஸம்’ எனப்படும் ‘தனிமைப்படுத்தல்கொள்கை’ ஆகும். தனிமைப்படுத்தல் என்பது ‘பிரைவஸி’ எனப்படும் அந்தரங்கம் அன்று. ஊடகங்களின் வருகைக்குப் பின்னும் அந்தரங்கம் தனிமனிதருக்குள் இருக்கவே இருக்கிறது. ஆனாலும் டென்மார்க் முதலிய ஐரோப்பிய தேசங்களிலும் ஊடக வெறுப்பு, குறிப்பாகத் தொலைக்காட்சியின் மேலும் செல்பேசிகளின் மேலும் கடும் வெறுப்பு, அறிவறிந்த மக்களிடம் இருக்கவே இருக்கிறது. இது ஒன்றும் புதியது அன்று.

தொடர்ந்து வந்த பொருளாதார அகவழுத்தம் எங்கும் மக்களிடையே கசப்புணர்வைத் தோற்றுவித்தது. தனிமனித நம்பிக்கைகள் எல்லாமும் தகர்ந்து போயின. இந்த லட்சணத்தில் அடுத்த உலகப் போர் பற்றிய வதந்திகளும் பரவத் தொடங்கி, அனைவரிடமும் பாதுகாப்பின்மையை அதிகரித்தது. இந்தப் புதிய முனைப்புகளும் நீரோட்டங்களும் கனடாவை முழுமையாகப் பாதித்தன என்றாலும் கெபேக்கின் மேல் அவற்றின் தாக்கம் அலைஅலையாகத் தொடர்ந்து தாக்குவதாய் அமைந்தது. இந்தத் தருணமே ரேங்கே’க்கு தன் புதினத்துக்குப் புதியதோர் வலுவந்தமான திருப்பம் தரவும் தன் சகல விதமான கதைசொல்லும் ஆற்றல்களைப் புலப்படுத்தவும் உதவியது.

சற்றே கதையின் விரிவைப் பார்ப்போம்.

யுகாரீஸ்த் முவாஸானின் உயிர்மூச்செல்லாம் அவருடைய உடைமையான முப்பது ஏக்கர் நிலம்தான். அந்த நிலத்தின்மேல்தான் அவர் உரிமையுடன் பாதம் பரப்பி நடந்தார்; வாயாறப் பேசினார்; தான் ஒரு மாஸ்டராக அந்த மண்மேல்தான் கம்பீரம் கொண்டார். அதே சமயம் அவர் ஒரு அசிங்கமான விவசாயியாகவும் அவ்வப்பொழுது நடந்து கொண்டார். ஆனால் மிக எளிமையான, ஆனால் அபத்தங்களைக் கிஞ்சிற்றும் ஏற்றுக் கொள்ளாத மனிதராகவே அவர் திகழ்கிறார். கதை தொடங்கும்பொழுது அவருக்கு வயது இருபத்து மூன்று. எதையும் சரிவரத் தீர்மானிக்க முடியாமல் திணறுதல், இரண்டாட்டம், மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாமை என்னும் பின்னடைவுகளின் அரங்கில் யுகாரீஸ்த் முவாஸான் ஒரு பொம்மலாட்டப் பொம்மையானார். அவருடைய சின்னஞ்சிறு உலகில் அவருடைய ஆளுமைகூட அங்கதப் பொருளையே நல்கும் சிக்கல்வலைப் பின்னலாக அமைந்தது. அவருடைய பழைமையும் புதுமையும் பிணைந்த கோட்பாடு, அவரை மரபுக்கும் முன்னேற்றத்துக்கும் இடையில் வைத்து ஆட்டிப் படைத்தது. தன் இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் யுகாரீஸ்த் பொதுவில் சொந்தமானார். அவருக்குள் மரபும் முன்னேற்றமும் ஓயாது போரிட்டன. இந்தப் பின்னணியில்தான் யுகாரீஸ்த்தின் வாழ்க்கை நாடகம் நிகழ்வுற்றது.

தொடக்கம் முதலே, யுகாரீஸ்த் நவீன மனிதனின் முகமூடியைத்தான் அணிந்து கொண்டு வருகிறார். உஷார் மனிதராகத் திகழ்கிறார்; தந்திரமானவராக விளங்கவும் முயல்கிறார்; காரியார்த்தம் உடையவராக, பேராசை கொண்டவராக, வெற்றிக்கும் கெளரவத்துக்கும் அலைகிறவராகவும் இருக்கிறார். அபத்தங்கள் அறவே நீங்கிய தீவிரமான யதார்த்த ஞானம் உடையவராக விளங்கும் அவர், ஓயாது தன்முன்னேற்றத்தை வழிபடுபவராகவும் இருக்கிறார்.

ஓர் அனாதையாகவே வாழ்க்கையைத் தொடங்கும் யுகாரீஸ்த் , எஃபிரெம் என்ற தன் மாமாவுடனேயே தங்கி வாழ்கிறார். அவர்[மாமா] தாரம் இழந்தவர். குழந்தைகளில்லை. ஆறு நதி ஆகியவைகளில் இருக்கும் வண்டல் மண் சார்ந்த முப்பது ஏக்கருக்குச் சொந்தக்காரர். இருநூறு ஆண்டுகளாக நல்ல விளைச்சல் தந்துவந்த மண் அது. எஃபிரெம், எதிர்பாராமல் இறந்துவிடவே அந்த மண் யுகாரீஸ்த்’துக்குச் சொந்தமாகி விடுகிறது. குறுகிய காலத்தில் ஒரு பண்ணை, ஒரு துணை, ஒரு வாரிசு ஆகியவற்றுக்கு உடைமையாளர் ஆகிவிடுகிறார் யுகாரீஸ்த்.

யுகாரீஸ்த்’தின் மாமா இறக்கும்பொழுது யுகாரீஸ்த்’துக்கு அதுவரை இல்லாத அனுபவம் ஏற்படுகிறது. அதை ரேங்கே பின்வருமாறு சொல்லுகிறார்:

“மாமாவின் படுக்கையை நோக்கித் திரும்பினார் யுகாரீஸ்த். ஒருவகையான ஈர்ப்பு அவரை அங்கு இழுத்தது. அது ஒரு நூதன அனுபவம், அவருக்கு. பொதுவாக சாமான்யமான மனிதர்களுக்கு அது எவ்வித ஈர்ப்பையும் நல்காது. அவர்களை அச்சுறுத்தவும் அச்சுறுத்தாது. எல்லாவற்றைக் காட்டிலும் தப்பிக்கவே முடியாத மருமம் — முகத்துக்கெதிராக வந்து, கால்களைப் பரப்பிக்கொண்டு உறுதியாக நிற்பதுவே அது. தன் நீண்ட கைகள் பக்கவாட்டில் தொங்கி அலைய, தனக்குள் உறுதியாக ஒரு புதிய எண்ணம் உருக்கொள்வதை நிதானமாக உணரத் தலைப்பட்டார் யுகாரீஸ்த்.. எஃபிரெம் மாமா செத்து விட்டார்.. செத்துப் போயே போய்விட்டார்.. அவர் இனிமேல் மரம் வெட்ட மாட்டார்.. மறுபடியும் உணவுண்ண மாட்டார்.. இனி எப்பொழுதும் பேசவே பேச மாட்டார். இப்பொழுது மாமாவின் வீடு பூதாகரமாகத் தெரிகிறது யுகாரீஸ்த்’துக்கு.
அல்ஃபோன்சின்!…..
தொடர்ந்து வாழும் உயிர்களின் மேல் யுகாரீஸ்த்’தின் எண்ணங்கள் திரும்பின. காத்திருக்கும் பண்ணை விலங்குகள்.. அவற்றுக்கு எசமானனின் மரணம் உறைத்திருக்குமா என்ன? அமைதியாகத் தவமிருக்கும் அந்த நிலம்.. யாரை அது வசதியும் வளமும் பெறச் செய்ததோ, அவர் மரணம் குறித்து நிச்சலனமாய் முகந்திருப்பிக் கொண்டுள்ளதே.. இனி தன்னை யார் கூடிச்சுகித்து வளநலம் பெறப் போகிறார்கள் என்று திட்டமிடத் தலைப்பட்டு விட்டது போலும்!
யுகாரீஸ்த்’தின் சிந்தனை, கபடமாக அந்த அறையை விட்டே நழுவப் பார்த்தது. ஆனால் உடனடியாக அது ஒரு கறுப்புச் சுவர்மேல் மோதி, சட்டெனத் திரும்பியது.

எஃபிரெம் மாமா இறந்துபோய் விட்டார்.
இறந்துபோன மனிதரின் முகம் யுகாரீஸ்த்’தின் கண்களுக்குள் தெரிகிறது.
அவர் முகத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட சிவப்புக் கைக்குட்டை, யுகாரீஸ்த்’துக்குக் கடும் பல்வலியின் ஞாபகம் தந்தது.
ஒரே நம்பிக்கை, தகனத்துக்கு முன் மிக அதிகமாக உருமாறிவிட மாட்டார்…
இல்லை..இல்லை..அது இலையுதிர்காலம் அல்லவா?
அல்ஃபோன்சின்!..
வசந்த காலத்துக்கு முன் அவளும் தானும் மணந்து கொண்டுவிட்டால் போதும்.
மாமா எஃபிரெமின் பரம்பரை மீண்டும் உயிர்த்து விடுமல்லவா!
ஜனவரியில் அது நிகழ்ந்தாலும் வியப்பில்லை.
ஊர்ப்பாதிரியிடம் அது குறித்துப் பேச வேண்டும்..
பாவம், வயதானவர்.. பரிதாபம்..அவர் இப்படி இறந்து போவார் என்று யாருக்குத்தான் தெரியும்!
—————————————————
அதிருஷ்டக்காரர்தான் அவர். திருமணம் கூட நடைமுறைக்குட்பட்ட ஏற்பாடாக அவர் எதிர்பாராமல் அவரை எதிர்ப்பட்டது. ஏனெனில் சில மாதங்களுக்கு முன் ஒன்றுமே இல்லாதவராய், அனாதையாய் இருந்த அவர், ஓர் இரத்த சொந்தம் பெற்றதனாலேயே கிட்டத்தட்ட நிலச்சுவான்தாரராக ஆகிவிட்டார். பணக்காரராக விளங்கவும் முடிந்தது. மண் – பணம். அவை இரண்டும் அவருக்கு ஒன்றுதான். புறத்தே அவர் நிலத்தில், அவ்வப்பொழுது கொஞ்சம் மண்ணை நாசூக்காகத் தன் கைகளில் அள்ளிக் கொள்வார்; தன் வியர்வையுடன் கூடிய கைச்சதைக்குள் அதைக் கரைத்துக்கொள்ளப் பார்ப்பார். ஓ!..மண்ணுடன் தேக சம்பந்தம்! பெருவிரலுக்கும் பிறவிரல்களுக்கும் இடையில் அந்தத் தனது மண்ணைப் பிடித்துப் பிடித்து உருட்டி நாணயங்களாக்கக்கூட யுகாரீஸ்த் முயன்றதுண்டு. முப்பது ஏக்கர்கள் அவருக்கு வள்ளல்களாகத் திகழ்ந்து, கேட்டதெல்லாம் கொடுத்தன. ஒவ்வோர் ஆண்டும் தன் சேமிப்பை அவர் அதிகமாக்கினார்; அதன்மேல் கிராம நோட்டரி ஐந்து விழுக்காடு யுகாரீஸ்த்’துக்கு நல்கினார். ஆண்டுகள் நகர நகர, அவர்தம் சதை, அவர்தம் நிலம், அவர் சேர்த்த பணம் எல்லாம் கூட்டாக இணைந்து அவருடைய வெகுதீவிரமான நோக்கத்தைக் கட்டமைக்க உதவின. அவருடைய அப்படிப்பட்ட தீவிரமான வாழ்க்கை நோக்கம்தான் எது? யுகாரீஸ்த் முவாஸானின் பெயர்.. அதாவது புகழ். அவரது பேரவா அவரை மதத்தினிடமும் கொண்டுபோய் விட்டது. ஓகினாஸ், தன் மூத்த மகன், பாதிரிப்படிப்பு படிக்க வேண்டுமா, வேண்டாமா? யுகாரீஸ்த்’துக்கு எந்த விதமான எதிர்ப்புகளுமில்லை. ஆனால் பாரிஷ் பாதிரி, அதற்கான செலவில் பாதியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் அவர் விதித்த நிபந்தனை. யுகாரீஸ்த் ஒன்றும் பக்திமான் அல்லர். இருந்தாலும் பாதிரிப்பட்டம் அவரை ஈர்க்கிறது. ஏன்? மிக உயர்ந்ததும் நீடித்திருப்பதுமான கெளரவத்தை அது அவர் குடும்பத்துக்குக் கொடுக்கும் அல்லவா? அதனால்தான். அடிக்கடி அவர் பிரியமாகச் சொல்வதுண்டு: “நாம் அறிவதைக் காட்டிலும் உலகம் இரண்டு விஷயங்களில் அதீத ஆர்வம் கொண்டுள்ளது. ஒன்று – பாதிரியார். அடுத்தது – நிலம்.” யார் கண்டார்? கடவுளிடமிருந்து ‘சிறந்த விளைச்சல் தரும் கதிர்கள்’ என்ற வடிவத்தில் சிறப்புக் கவனமும் கிடைத்தாலும் கிடைக்கலாமல்லவா!

யுகாரீஸ்த்’துக்கு ஒழுக்க விதிகளில் நம்பிக்கை அறவே கிடையாது. தன் திருமணத்துக்கு முன்னர் ஃபோன்சீன் என்ற ஃபான்சின் பெண்ணைக் காதலிப்பதாகக் காட்டிக் கொண்டு மெய்யாகக் காமுற்றுத் திரிந்தார்; ஏன், வாய்ப்பு என்ற பெயரில் அவளை உடலுறவுக்கும் உள்ளாக்கினார்.

ஆனால் தந்தை என்ற ஸ்தானத்தில் யுகாரீஸ்த் வித்தியாசமாக நடந்து கொண்டார். பிரச்சினை எதிலும் மாட்டிக்கொள்ளாமல் இருந்து விடுகிறார். அவருடைய மூன்றாம் மகன் எஃபிரெம், ஒரு முரட்டுத்தனமான இளைஞன்; உள்ளூர் முரடன் என்ற பெயரெடுத்தவன். அடிக்கடி சண்டை போடுபவன்; வகைவகையான சபதங்களை வாரி வீசுபவன்; குடிகாரன். யுகாரீஸ்த்’துக்கு அதிலெல்லாம் வருத்தமில்லை; மாறாக இரகசியமானதோர் பெருமிதம் இருந்தது. தன் மகள் லுசிந்தா பற்றி எவ்வளவோ கீழ்த்தரமாகக் கேள்வியுற்றபொழுதும் யுகாரீஸ்த் லுசிந்தாவை வெறுமனே கடிந்துகொண்டதும் கூடக் கிடையாது. சுருங்கக் கூறினால், தன் குறுகலான வழியில், யுகாரீஸ்த்’துக்கு எல்லாப் பேராசையும் எல்லாப் பெருமிதமும் புதிய பட்டமான ‘பொருளாதாரப் புள்ளி’ என்பதன்மேல் இடையறாக் காமமும் இருந்து வந்தன.

யுகாரீஸ்த் , இன்பதுன்பங்களில் நடுநிலைக் கோட்பாடும் விதித் தத்துவத்தின்மேல் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவராக விளங்கியவர். ‘முப்பது ஏக்கர்கள்’ புதினம், நான்கு பகுதிகளாகப் பகுக்கப் பட்டுள்ளது. இயற்கையின் நான்கு பருவங்களின் பெயர்களே அவற்றுக்குச் சூட்டப் பெற்றுள்ளன. மெய்ம்மையாகவும் குறியீட்டு நிலையிலும் ஒரு விவசாயியின் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் இயற்கையின் நான்கு கூறுகளாகப் பிரிக்கப் பட்டிருப்பதும் இயற்கையே!

மண்ணுக்கும் யுகாரீஸ்த்துக்கும் உள்ள உறவும் அவரின் வாழ்க்கைக்கும் ஊழ்வினைக்கும் உள்ள தொடர்பும்
1. இளவேனில்[பக்கம் 15-72]
2. முதுவேனில்[பக்கம் 73-134]
3. இலையுதிர்காலம்[பக்கம் 135-196]
4. பனிக்காலம்[பக்கம் 197-249]
என்ற நான்கு பெரும் பிரிவுகளாக ரேங்கே’யினால் பிரிக்கப் பெற்றிருப்பது இதன் சிறப்புக்களுள் ஒன்று.

இதை உணர்த்தும் சில பகுதிகள்:
“ பகல்களும் இரவுகளுமாக ஆண்டுகள் உருண்டோடுகின்றன. பருவகாலங்கள் நான்கும் ஒன்றை ஒன்று பற்றியவாறே சுழன்று, ஒன்று அடுத்தவற்றுக்கு வழிவிடுகின்றன. மண்ணின் செழித்து வளரும் பயிர்களுக்கு ஒரு விவசாயி எப்படிப் பருவங்கள் தோறும் பார்வையில் பட்டுத் தெரிவானோ, அப்படிப் படிப்படியாக அந்த உழவு விவசாயியின் வாழ்க்கையும் இளவேனிலில் சுகமாகி, முதுவேனிலில் தீவிரப்பட்டு இலையுதிர்காலத்தில் எல்லாமும் மாறி பனிக்காலத்தில் படாத பாடு படுகிறது..”

நாள்கள், வாரங்கள், மாதங்கள், பருவங்கள் மற்றும் ஆண்டுகள் உருளுகின்றன. ஆனாலும் அவற்றுக்குள்ளாக அந்த விவசாயியின் வாழ்க்கை மாறுதலற்று ஒரே மாதிரித்தான் நிலவுகிறது. “காலையில் படுக்கையிலிருந்து எழுகிறார்; நிலத்துக்குப் போய் உடலாற வேலை செய்கிறார்; காலை உணவு உட்கொள்கிறார்; மீண்டும் வேலை, வேலைதான்; பிறகு மதிய உணவு.. மறுநாள், மறுநாளுக்கு மறுநாள், காலையில் படுக்கையிலிருந்து எழுகிறார்; நிலத்துக்குப் போய் உடலாற வேலை செய்கிறார்; காலை உணவு உட்கொள்கிறார்; மீண்டும் வேலை, வேலைதான்; பிறகு மதிய உணவு.. இப்படியே ஒரே தன்மை வாய்ந்த சுழற்சி அந்த விவசாயியை அலுப்படையச் செய்ய வேண்டுமல்லவா? இல்லை.. இல்லவே இல்லை. அவர் அந்த சுழற்சிக்கு இயற்கையைப் போலவே தானும் பழகியிருக்கிறார். யுகாரீஸ்த், இந்த சுழற்சி எனும் ‘ரிதம்’மை வெகு இயல்பாகவும் தப்பிக்க முடியாத விதியில் அவருக்கு என்று உள்ள பகுதியாகவும் ஏற்றுக் கொள்கிறார். ஆனால், விதி அவருக்கு நல்லனவே இயற்றுகின்றது. தன் பேரவாக்களை முதலில் அவர் அடைந்து இன்புறச் செய்கின்றது. `காரீஸ்த் முவாஸான் போல அதிருஷ்டசாலி’ என்ற தொடர் அந்த மாவட்டத்தில் புழக்கத்துக்கு வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்தப் புதினத்தில் வரும் முதல் இரண்டு பருவ காலங்கள், இளவேனில் மற்றும் முதுவேனில் என்பவை, அவருடைய இளமைக் காலம் மற்றும் முதிர் இளைஞனான காலகட்டம் ஆகியவற்றை முறையே பிரதிபலிக்கின்றன. முன்னேற்றமும் வெற்றியும் அந்தப் பருவங்களில் அவரை வந்து தழுவிக் கொள்கின்றன; நவீன மனிதனாகிய யுகாரீஸ்த் முவாஸான் என்ற அடையாளத்தின்கீழ், இளவேனில் முதுவேனிலை நோக்கி அடியெடுத்து வைக்கிறது.

பிறகுதான் கதை துன்பியலை நோக்கித் திரும்புகிறது. புதினத்தின் குறியீட்டு ரீதியிலான இலையுதிர்காலத்தில் ‘அதிருஷ்டக்கார `காரீஸ்த்’தின் பெருமித உலகம் மெதுமெதுவாக நொறுங்குகிறது. துரதிர்ஷ்டம் என்றெல்லாம் இதற்கு நாம் அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டியதில்லை. யுகாரீஸ்த் தன் முன்னெடுப்புக்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புறந்தள்ளி, பின்னடைவுகளாக மாற்றிக் கொள்ளத் தொடங்குகிறார். அவ்வளவே. இதுவரை அழுத்தப்பட்டிருந்த யுகாரீஸ்த்’தின் இரண்டாவது ‘தான்’ – அதாவது அவர்தம் ஆன்மா உணர்வுற்றெழுகிறது. ஒருகாலத்தில் எஃபிரெம் மாமாவை அடுத்து ஆகிருதியுடன் எழுந்து மண்மோகத்தில் திளைத்து மரபை ஒதுக்கி முன்னேற்றத்தை மட்டுமே வரித்துக் கொண்டு, ஒழுக்கவிதிகளையெல்லாம் அலட்சியம் செய்து, ஒரு பொருளாதார மனிதனாய் விசுவரூபமெடுத்தவர் — இப்பொழுது, புதினத்தின் இலையுதிர்காலத்தில் மரபின் பக்கம் சாய்ந்து முன்னேற்றத்தையே புறந்தள்ளி விடுகிறார்.. முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல – தன் மகன் எஃபிரெமுக்கும் எதிர்ப்பாகிறார். ஆம். தன் பழைய ரத்தம், தன் பழைய சதை, தன் பழைய இறுமாப்பு எல்லாவற்றுக்கும் தானே எதிர்ப்பாகி விடுகிறார் யுகாரீஸ்த். அதற்குத் தக்கவாறு, புறச்சூழல்களும் வரிந்து ஒடித்துக்கொண்டு காலவளைவில் திரும்புகிறன. அமெரிக்க உரிமங்களுடனான கார்கள் புழுதி எழுப்பிக் கொண்டு யுகாரீஸ்த்தின் கிராமத்துக்குள் சீறிப்பாய்கின்றன. யுகாரீஸ்த்தின் இளைய பரம்பரையான எஃபிரெம் முதலானவர்களுக்கு அவை இலேசையும் சொகுசையும் குறியாளப்படுத்துகின்றன. ஆனால், யுகாரீஸ்த் போன்ற பழைய தலைமுறையினர் அச்சத்துடனும் கடும் வெறுப்புடனும் அந்த மாற்றத்தை நோக்கினார்கள். ஓ! அந்த நகர்ப்புறமல்லாத மரபுகளின்வழி வந்த சிக்கனம், கடின உழைப்பு, அதிகாரத்துக்கு மரியாதை.. எல்லாமே பாழாகப் போகின்றன. யுகாரீஸ்த்தின் சித்தமோ ஊமை அழுகை அழத் தொடங்கியது. ஓ! பழைய கடவுள்களெல்லாரும் தம் ஆற்றலைத் திடுமென்று இழந்துவிட்டனரே? இது என்ன விந்தை? இளைய எஃபிரெம், டிராக்டர் ஒன்று வாங்குவது என்று தீர்மானித்துவிட்டான். அதற்கு யுகாரீஸ்த்தின் மறுமொழி ‘வேண்டாம்!’; “ஒரு காராவது?”.. அதற்கும் யுகாரீஸ்த்தின் பதில் ‘வேண்டாம்!”.. விளைவு..மோசமானது.. யுகாரீஸ்த்தின் அதுநாள்வரையிலான வாழ்க்கையில் நிகழமுடியாதது நிகழ்கிறது. எஃபிரெம், கிளர்ந்து எழுகிறான்; தந்தையை எதிர்க்கிறான்; மரபான மண்ணை எதிர்க்கிறான்; ஏன்,பாதிரியைக்கூட எதிர்க்கிறான். அப்படி அவர் என்ன சொல்லி விட்டார்? “எஃபிரெம்! நீ நம் மண்ணைச் சீரழிக்க முற்படுவாயானால், நரகம் தன் வாசலை நிச்சயமாக உனக்குத் திறந்தே தீரும்!” என்றுதான் சொன்னார். சொல்லலாமா? இளைய தலைமுறை என்ன வெங்காயமா? இளித்தவாயனா எஃபிரெம்? அவனுக்கு எல்லாம் தெரியும்.. அப்பனுக்குத் தெரியாததெல்லாம் தெரியும்; பாதிரிக்குத் தெரியாததெல்லாமும் கூடத் தெரியும்.

யுகாரீஸ்த் தன் எல்லா அதிகாரங்களையும் இழக்கிறார். அப்படி அவர் அவற்றை இழந்தது கூட அவருக்குக்குத் தெரியாது போவதுதான் அவர் வாழ்வின் மகத்தான சோகம். அண்டை நிலத்தவரான ஃபிதிம் ரேமோவின் மேல் முட்டாள்தனமாக வழக்குப் போட்டு தன் மூக்கைத் தானே உடைத்துக் கொள்கிறார். தான் இழந்து போனதை அறியாத பழைய தோரணை, தன்னை ஆகக் கேவலமாகக் கொச்சைப்படுத்தி விட்டதை அவர் உணர நேரும் பொழுது கிராமத்தில் அவருக்கு எஞ்சி இருந்த எச்சசொச்ச மரியாதையும் அகன்று போய்விடுகிறது. “ஃபிதிம் ரேமோவைப் பாரப்பா! என்ன தகுதியுள்ளவராகவுள்ளார்! எந்த வம்புக்கும் வராத அவரையே கோர்ட்டுக்கு இழுக்கிறான் இந்த யுகாரீஸ்த் என்றால் என்ன கொழுப்பு, பாருங்கள்! மனுஷனுக்கு மூளையும் கெட்டுப் போய்விட்டது.. அவனிடம் இனிமேல் எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது..!” என்று அண்டை அயல் திருவாய் மொழியத் தொடங்கிற்று. மரபு ரீதியான வீழ்ச்சி அதைவிட வேறென்ன இருக்கப் போகிறது யுகாரீஸ்த்துக்கு..?

அத்தோடு போயிற்றா? இல்லை. பாங்க் நேசியோனால் என்ற வைப்பகம் தன் கிளையை யுகாரீஸ்த்’தின் கிராமத்தில் தொடங்கியது. யுகாரீஸ்த் என்ன செய்திருக்க வேண்டும்? தன் எஞ்சிய சேமிப்புக்களை அதில்தானே போட்டிருக்க வேண்டும்? ஆனால் எல்லாவற்றிலும் சறுக்கிக் கீழிறங்கிக்கொண்டிருந்த யுகாரீஸ்த்’தின் புத்தி வேறு விதமாகவே கணக்குப் போட்டது. நவீன வைப்பகத்தில் எதற்காகத் தன் சேமிப்புக்களைப் போட வேண்டும்? நாம் நம் ஊரில் ஒரு புள்ளி அல்லவா? அந்தத் தோரணையை எப்படிக் காண்பிப்பது என்று யோசித்தார். அந்த அவரது பலவீனத்தை நன்கு புரிந்து வைத்துக் கொண்டிருந்த ஓர் இளம் நோட்டரி அவரிடம் வந்து நைச்சியமாகப் பேசவே, அவனிடம் தன் எஞ்சியதும் வாணாள் முழுதும் சேமித்ததுமான சேமிப்புக்களையெல்லாம் ஒப்படைத்தார். அவனும் ஒருநாள் அவற்றையெல்லாம் சுருட்டிக்கொண்டு எங்கோ தலைமறைவாக ஓடியே போனான். அத்துடன் யுகாரீஸ்த்’தின் இளமை, பெருமிதம், ஆற்றல் எல்லாமும் போயே போயின.

இந்தப் புதினம் இதன் கடைசிப் பருவமான பனிக்காலத்தை நோக்கி நகரும்பொழுது, முன்னேற்றத்தின் உந்துசக்திகள் எல்லாம் யுகாரீஸ்த்தை அப்பால் நகர்த்தின. புத்திசாலித்தனம் என்று நம்பி, யுகாரீஸ்த் தன் மூன்றாவது மகனான எஃபிரெமைச் சந்தித்து அவனுடன் வாழ ஸ்டேட்ஸுக்குக் கிளம்பினார். அவன் அங்கே மசாஸுஸெட்ஸில் வெற்றிகரமாகக் குடியேறியிருந்தான். எத்தியேன் நன்றாக யோசித்து யுகாரீஸ்த்’துக்கு ஒருவழிப் பயணச் சீட்டையே தந்தார். ஓர் இரவு தாண்டியதும், தனக்கு வித்தியாசமானதும் வினோதமானதுமானதோர் உலகத்துக்கு யுகாரீஸ்த் போய்ச் சேர்ந்தார். மசாஸுஸெட்ஸில் மக்கள் பேசிய மொழியை யுகாரீஸ்த்’தால் விளங்கிக் கொள்ள இயலவில்லை; அதைப் பேசவும் முடியவில்லை.

விளைவு, முப்பது ஏக்கர்களுக்குச் சொந்தக்காரரும் பன்னிரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையுமான யுகாரீஸ்த் முவாஸான் இருந்திருந்தாற்போல ஒன்றுமில்லாதவராய்ப் போனார். வெறும் உடைப்பெடுத்த – தேய்ந்துபோன கிழட்டு மனிதராகிப் போனார். தன் மருமகளாலேயே வெறுத்து ஒதுக்கவும் பட்டார். சொல்லொணா அதிர்ச்சி அவரை நிலைகுலைய வைத்தது. இறுதியில், நவீன மனிதனின் கோயிலாகத் திகழ்கின்ற கராஜ்[garage] ஒன்றில், இரவுநேரக் காவலாளி ஆனார். அமைதியாகவும், முழுதும் தனிமையாகவும் அவ்வப்பொழுது அமர்ந்து, தான் இழந்த முப்பது ஏக்கர்களைக் கனவு காணுகிறார். வரப்போகும் மரணத்துக்காக ஒவ்வொரு கணமும் விழைவுடன் காத்துக் கொண்டிருக்கிறார்…

சராசரி மனிதனின் சொந்த ஆன்மாவை அவன் மட்டிலுமாக அல்லாமல், வாசிப்பவர்கள் அனைவரையும் தேடவைக்கிற இந்த ‘முப்பது ஏக்கர்கள்’ என்ற பிரஞ்சுக் கனடிய கலை இலக்கியப் புதினத்தைப் படைத்த ரேங்கே அவர்களின் இயற்பெயர் ஃபிலிப் பானதோ(ன்)[Philippe Panneton]. 1895இல் கெபேக்கில், த்ருவா ரிவியர் என்ற பெயருடைய மாநிலத்தில் பிறந்தார். லவால் பல்கலைக் கழகத்திலும் மோ(ன்)ரெயால் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். தன் கல்லூரிப் பருவத்தில், நிகாக்[Nigog] என்ற இளம் பிரஞ்சுக் கனடிய அறிவுஜீவிகளின் குழுவில் தம்மை இணைத்துக் கொண்டார். 1920இல் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பிறகு, பாரீஸில் முதுகலைப் பணித்திட்டம் தொடர்பாகச் சில ஆண்டுகளைச் செலவழித்தார். மீண்டும் மாண்ட்ரீல் பல்கலைக் கழகத்துக்குத் திரும்பி மருத்துவத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பிரஞ்சுக் கனடிய அகாதெமியின் நிறுவனர்களுள் ஒருவராகவும் அதன் தலைவராகச் சில ஆண்டுகளும் இருந்தார். 1956இல் போர்ச்சுகலுக்கு கனடியத் தூதராக நியமிக்கப் பெற்றார். உள்ளபடியே இவருக்குப் பெயரும் புகழும் ஏற்படக் காரணமாக இருந்த ‘முப்பது ஏக்கர்கள்’ என்ற இப் புதினத்தின் மூலத்தலைப்பு, ‘Trente Arpents’ என்பதேயாகும். இதுதான் பாரீசில் 1938இல் இதன் முதற்பதிப்பாக வெளியானது. 1939ஆம் ஆண்டின் ‘Grand Prix’ முதலான பரிசுகள் பலவற்றை இப்புதினம் வென்றது. மேலும் இப்புதினம் ஜெர்மனி, டச்சு, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழியாக்கங்களும் பெற்றது.

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்