விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகளின் தன்வரலாறு: மு.இளங்கோவன் பதிப்பு

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

தேவமைந்தன்



12. 05. 1891 முதல் 05. 01. 1973 வரை வாழ்ந்த துரையனார் அடிகள், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமான பங்கு கொண்டவர். தமிழ்நாட்டில் இந்தியச் சுதந்திரப் போரின் பெருமைதரும் பங்கேற்புகளும் மெய்யான செயற்பாடுகளும் அவருடைய தன் வரலாற்று ஆவணப் பதிவால் தெரியவந்துள்ளன. தற்செயலாகத் தன் பேராசிரியரின் இல்லத்தில் தான் சந்திக்க வாய்த்த திரு கோமான் என்ற துரையனார் அடிகளின் பேரனால் இந்த அரிய ஆவணத்தின் கைப்பிரதி பற்றிக் கேள்வியுற்று, அதைத் தேடிச் சென்று, துரையனார் அடிகளின் மூன்று பிள்ளைகளுள் ஒருவரான அருணந்தி சிவத்திடம் இதன் பிரதியை [1964 அளவில் எழுதப்பெற்றது] பார்த்து, மூன்றாண்டுகள் தொடர்ந்து அவரில்லம் சென்று அவர் நம்பிக்கையைப் பெற்று, பின்னும் தொடர்ந்த முயற்சிகளினால் இந்த ஆவணத்தை எப்படி இவ்வடிவில் பதிப்பாசிரியர் வெளியிட்டார் என்ற சுவையான முயற்சியின் கதை, இந்நூலுக்கு ம.இலெ.தங்கப்பா தந்துள்ள ஆங்கில அறிமுகவுரையில்[பக்கம் 12-18] இடம் பெற்றிருக்கிறது. ஏனெனில் தங்களின் ஆராய்ச்சிக்கான அடிப்படை நூல்களைக்கூட விலைக்கு வாங்காமல் அவை யார் யாரிடம் இருக்கின்றன என்ற தரவு[!] திரட்டி அங்கங்கு சென்று எப்படியாவது பேசி, அவற்றை அவர்களிடமிருந்து பெற்று வந்து, பின்னர் அவர்களைத் திரும்பியும் பாராமல் தங்கள் ஆய்வுரைகளில் அவர்களுக்கு நன்றியும் பாராட்டாமல் விட்டு விடும் முனைவர்களிடையில் மு. இளங்கோவன், மிகவும் வியப்புடன் நோக்கப்பெறத் தக்கவர். 1995ஆம் ஆண்டு அண்ணல் காந்தியார் பிறந்த நாளில் இதை இவர் வெளியிட்டதும் பொருத்தமானதே.

துரையனார் அடிகளின் சிறப்புகளைக் குறித்து ஓர் உரைவீச்சையும் மு.இளங்கோவன் படைத்துள்ளார். அதிலிருந்து கிடைக்கும் கருத்துகள் சில:
1. தென்னாப்பிரிக்காவில் தோன்றியவர் வெ.துரையனார் அடிகள்.
2. அண்ணல் காந்தியின் கொள்கைகளை இடையறாமல் போற்றிக் கடைப்பிடித்தவர்.
3. “தென்னாப்பிரிக்கச் சிறையில் திருடருடன் பிணைக்கப்பட்டு மலக்கூடை சுமந்த”வர்.
4. பல்லாவரப் பல்கலைக் கழகமாம் மறைமலை அடிகளாரிடம் தமிழ் கற்றவர்.
5. திரு.வி.கலியாணசுந்தரனாரும் மொழியறிஞர் மாகறல் கார்த்திகேயரும் இவரிடம் ஆசிரியர்களாகவும் நண்பர்களாகவும் பழகினர்.
6. இராஜாஜி, காமராசர், வேதரத்தினம் முதலானவர்களுடன் சிறையில் விடுதலை குறித்து விரிவாக உரை செய்தவர்.
7. 1922-இல் வ.உ.சிதம்பரனார், சுவாமி மலையில் சுவாமிநாதர் கோவில் பிரகாரத்தில் [புத்தகத்தில்பக்.54-55இல் துரையனாரின் விரிவான விளக்கம் உள்ளது] இரண்டு மணி நேரம் நம் நாட்டு மக்களின் இழிநிலை குறித்து உருக்கமாகப் பேசக் காரணமானவர்.
8. “கட்டிய மனைவி செத்துக் கிடக்கையில் இந்தியத் தாயினுக்குத் தாலிக்கயிறு நெய்தவன்!”
9. குடந்தைப் பகுதியில் இந்திய விடுதலை குறித்த விழிப்புணர்வை விதைத்தவர்.

வெ.துரையனார் அடிகளின் தன்வரலாற்றிலிருந்து சிறப்பான செய்திகள்:

1. தென்னாப்பிரிக்கச் சிறைச்சாலையில் காந்தியடிகள் குறித்த அரிய பதிவு:

“ஒருநாள் மாலையிலே டீப்குளுஃப் சிறைச்சாலையிலே உணவு நேரத்திலே திரு காந்தியடிகள் தமக்குக் கிடைத்த சிறிய துண்டு அடையையும்(bread) சோளக் கஞ்சியையும் ஓரிடத்தில் வைத்து விட்டுச் சிறைச்சாலை அதிகாரியிடம் ஏதோ ஒரு அலுவலைக் குறித்துப் பேசப் போயினர். அப்போழ்து மற்றையோர் தத்தம் உணவைப் புசித்தனர். காந்தியடிகள் திரும்பி வந்து உண்ணுவதற்குத் தம் உணவை எடுக்குங்கால், அந்தோ! அந்தக் கோதுமை அடை காணப்படவில்லை. கஞ்சி மட்டும் இருந்தது. அந்த அடையை யாரோ திருடித் தின்றனர். அடிகளார் அத்திருட்டைப் பற்றி ஏதும் கூறாமல் சோளக் கஞ்சியை மட்டும் பருகித் தம் பசியைத் தணித்தனர். ஆயினும் வெகுண்டாரல்லர். வைதாரல்லர். அடுத்த நாள் மாலையிலே சத்தியாக்கிரகிகளை நோக்கி சிறைச்சாலைக்கண் அத்தகைய தீச்செயல் செய்தல் நடந்தது என சிறையதிகாரிகள் அறிந்தால் இந்தியரை இழிவாகக் கருதுவதோடு மதியார்கள் எனவும் நயம்பட அறிவு உரைத்தனர். அதுகேட்ட அக்குற்றவாளி காந்தியடிகளின்பால் சென்று அக்குற்றத்திற்குத் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார். அன்னார் கழிவிரக்கம் கொண்டதைக் காந்தியடிகள் பாராட்டினார்கள். மனமொழி மெய்களால் தூய்மையாகச் சிறைச்சாலையிலும் ஒழுகல் வேண்டும் என்றார்.”

2. சட்டசபைத் தேர்தலில் துரையனார் அடிகள், வேட்பாளர் வேண்டிக் கொள்ளாமலேயே நடுநிலை நின்று ஆற்றிய கடமைகள்:

“திரு எ. இரங்கசாமி ஐயங்கார் என்பவர் ‘சுதேசமித்திரன்’ செய்தி மலருக்கு முன்னாள் ஆசிரியரும் திரு சி.ஆர். தாசு அவர்களால் நிறுவப்பட்ட ‘சுயராச்சிய கட்சி’யின் செயலாளரும், இந்தியக் குடியரசு அரசாங்க முன்னாள் அமைச்சர் திரு கோபால்சாமி ஐயங்காரின் தமையனாரும் ஆவார். இவரும் திரு சேஷகிரி ஐயரும் (உயர்நீதி மன்ற நீதிபதி) மேல் சட்டசபைத் தேர்தலுக்குப் போட்டியிட்டு நின்றனர். அவருள்ளே சேஷகிரி ஐயர் (ஓய்வு பெற்ற உபகாரச் சம்பளக்காரர்)..மேல் சட்டசபைக்குச் சென்றால் அரசாங்கத்தைக் கண்டித்துப் பேசார். திரு எ.இரங்கசாமி ஐயங்கார் சட்டசபைக்குச் சென்றால் அரசாங்கத்தைக் கண்டித்துப் பேசுவார் என்று எண்ணி, எ.இரங்கசாமி ஐயங்காருக்குத் தேர்தலில் பிரச்சார வேலை செய்தல் வேண்டும் என்று முடிவு செய்தேன். இரங்கசாமி ஐயங்காரேனும் அவரைச் சேர்ந்தாரேனும் தேர்தலில் நான் உதவுமாறு (தெரிவிக்கவுமில்லை) கேட்கவுமில்லை.”

“சில நாள் பின்னர் தேர்தல் நாள் வந்தது. நான் அன்று காலையில் நீராடிக் கடவுளை வணங்கினேன். காலைச் சிற்றுண்டி உண்டபின் நடந்து உமையாள்புரம் என்னும் ஊரிலுள்ள தேர்தல் நிலையத்துக்குச் சென்றேன். அங்கு ஸ்மார்த்தர்கள் மிகுதியாவர். ஆதலின் முதற்கண் அவர்களைக் கண்டு ஸ்மார்த்த வைணவ வேற்றுமையை அரசியலில் கையாளல் கூடாது எனவும் பத்திரிகையாசிரியர் ஆதலின் எ.இரங்கசாமி ஐயங்காருக்கே மிகுந்த வாக்கு கிடைக்கும்படி செய்யின் அவரால் நம் நாட்டிற்கு நன்மையுண்டாம் எனவும் எடுத்துச் சொல்லிப் பிரச்சாரம் செய்தேன்.

நான் கூறியவற்றைக் கேட்ட ஸ்மார்த்தர்கள் சொன்னதாவது:

நாங்கள் சேஷகிரி ஐயருக்கு வாக்கு அளிப்பதெனச் சொல்வோம். ஆனால், இரங்கசாமி ஐயங்காருக்கே வாக்களிப்போம். நீங்கள் சிறிதும் ஐயப்பட வேண்டாம் என்றார்கள். அளவிலா மகிழ்ச்சியடைந்தேன். அவர்கள் சேஷகிரி ஐயருக்கு உறவினராயினும் பெரும்பாலோர் இரங்கசாமி ஐயங்காருக்கே வாக்களித்தனர். நான் காலையினின்று மாலை வரைக்கும் தேர்தல் நிலையத்தின் முன்னே நின்று உதவி புரிந்தேன். எதிர்க்கட்சியார் என்னோடு பேரம் பேச விரும்பினர். நான் அதற்கு இசைந்திலேன். நண்பகலில் நான் உணவு உண்ணவில்லை. சேஷகிரி ஐயரின் சாரார் வைத்த சிற்றுண்டிச் சாலைக்கு நான் போகவில்லை. அப்போது உமையாள்புரம் உயர்தரப் பள்ளியின் தலைவரும் சேஷகிரி ஐயருக்கு உறவினருமான திருமான் துரைசுவாமி ஐயர் என்பார் அறிவிலும் பண்பிலும் சிறந்தவர். நான் பட்டினி கிடப்பதைக் கண்டு உள்ளம் இரங்கி என்னிடம் வந்து சிற்றுண்டி உண்ணற்கு அழைத்தார்.

அதற்கு நான் கூறியதாவது: சேஷகிரி ஐயரின் சிற்றுண்டியை உண்டு இரங்கசாமி ஐயங்காருக்கு உதவுவது நெறியன்று எனக் கூறினேன். அதற்கு அவர் சொன்னார், அங்கு வழங்கப்படும் சிற்றுண்டிகள் சேஷகிரி ஐயரின் பணத்தால் வழங்கவில்லை எனவும் தம் பணத்தால் வழங்கப்படுகின்றது எனவும் கூறினார். அவர் கூறியதற்கு இணங்கி நான் போய்ச் சிற்றுண்டி உண்டேன். அயர்வு அற்றேன். உடனே வந்து தேர்தல் நிலையம் மூடும் வரைக்கும் அங்கிருந்து தேர்தல் அதிகாரிகள் வாக்குச் சீட்டுப் பெட்டிகளுக்கு முத்திரை போட்டு அனுப்பும் வரைக்கும் கண்காணித்து, பிறகு வீட்டுக்குக் கால்நடையாக வந்து சேர்ந்தேன். தேர்தல் அதிகாரிகள் என்னிடத்தில் அன்பு வைத்து நடந்தனர். இரங்கசாமி ஐயங்காரிடம் பணம் பெற்ற தரகர் நேர்மையாக வேலை செய்யவில்லை. அத்தேர்தலிலே எ.இரங்கசாமி ஐயங்கார் வெற்றி பெற்றார். அதன் விளைவாக அன்னார் சி.ஆர்.தாசு(C.R.Dass) நிறுவிய சுயராச்சிய கட்சிக்குக் காரியதரிசியானார்.”

மேலே நாம் பார்த்தவற்றால் சிலவற்றை அழுத்தமாக உணர முடியும். எண்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னே தேர்தல்கள் எவ்வளவு கண்ணியமாக நடந்தன என்பதையும்; அழைக்காமலேயே உரிய வேட்பாளர்களுக்கு நம் துரையனார் போன்றவர்கள் வேலை செய்தனர் என்பதையும்; ஒருவருக்கு உதவி செய்யும் பொழுது அவருக்கு எதிராளி ஏற்பாடு செய்யும் உணவை அவர்கள் உண்ண மறுத்தனர் என்பதையும்; தேர்தல் பணிகளில் ஈடுபட்டால், தன்னலமின்றி, வேட்பாளர்கள் ஏற்பாடு செய்யும் வாகனங்கள் முதலான எவ்வுதவியும் பெற அவர்கள் விழையவில்லை என்பதையும்; இன்னும் சில “வரிகளுக்கிடையிலான”(between the lines) செய்திகளையும் உணர முடியும்.

3. காந்தியடிகளுக்குத் திருக்குறளைத் தென்னாப்பிரிக்காவில் கற்பித்தவர்:

“காந்தியடிகள், தென்னாப்பிரிக்காவில் போன தொடக்கத்திலே அவரோடு தமிழர்கள் அன்புடன் நெருங்கிப் பழகினார்கள். அவர்களுள் திரு சுந்தரம் பிள்ளை என்பார் [நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் ஆவார்] காந்தி அடிகட்குத் திருக்குறளைக் கற்பித்தார்.(பக்கம் 24)

4. கோகலே, அன்னி பெசண்டு அம்மையார் – காந்தியடிகள் உடல் குறித்து வியந்தது:

“நான் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்று திரு மோகன்தாசு கரம்சந்து காந்தி என்னும் ஒரு ஒல்லிய இந்திய மகனோடு நான் சிறிது காலம் பழகலுற்றதானது என் வாழ்நாளிலே ஒரு பெரும் பேறு…ஒரு சிறிய உடலிலே பெரியதொரு தூய உயிர் மோகந்தாசு கரம்சந்து காந்தி என்னும் பெயரால் திகழ்வதைக் கண்டு பெரிதும் வியப்புற்றேன்.” – கோபாலகிருட்டிண கோகலே, 1910 ஆம் ஆண்டு சொன்னது.

“..இந்தச் சிறிய உடலுடைய இந்திய மகனார் இளப்பமானவர் அல்லர். இவர் ஒரு மகாத்துமாவாகக் கருதுகிறேன்..” – அன்னிபெசண்டு அம்மையார் இவ்வாறு சொன்னதன் பின்னர்தான் காந்தியடிகளை “அன்று முதல் மகாத்துமா காந்தி என்று வழங்கலாயினர்” என்று துரையனார் அடிகள் எழுதியுள்ளார். (பக்கம் 63)

5. துரையனார் அடிகளுக்குத் தென்னாப்பிரிக்காவில் அரசியலறிவைப் புகட்டியவர்:

“எனக்கு முதற்கண் அரசியல் அறிவை அறிவுறுத்தியவர் ‘புனா’ நகர்க்கண்ணே பிறந்து வளர்ந்த தமிழரே ஆவர். அவர் பெயர் திருமான் இரகுநாத முதலியார்….1904-ஆம் ஆண்டிலே சப்பானுக்கும், உருசியாவுக்கும் நடந்த சண்டையில் எவ்வாறு சப்பான் வென்றது என்பது பற்றியும், ஆங்கிலேயர்க்கும், தென்னாப்பிரிக்கா, டச்சுக்காரர்க்கும் நடந்த சண்டை பற்றியும், அச்சண்டையில் எவ்வாறு ஆங்கிலேயர் வென்றனர் என்பது பற்றியும் விளக்கமாய் விளம்பினார். அவர் நாள்தோறும் எம் இல்லிற்கு ஏகி இரவில் இரண்டு மணிவரைக்கும் அவ்வரலாறுகளைச் சொல்வார். தென்னாப்பிரிக்காவில் குளிர் மிகுதியாதலின் அவர்க்கென்றே குளிர்காய நிலக்கரி அடுப்பு எரித்து அதோடு, காஃபியும் வைத்துக் கொடுத்து உபசரிப்பேன். இந்நிகழ்ச்சி சோகன்சுபர்க்கிலே(Johanesberg) நடந்தது….

இந்திய தேசிய காங்கிரசு பேரவையை நிறுவிய திருமான் தாதாபாய் நெளரொசி பற்றியும், ‘வந்தே மாதரம்’ என்னும் வாக்கியத்தை இயற்றிய திருமான் பங்கிம் சந்திர சட்டர்சி பற்றியும், தமிழ்நாட்டில் முதல் செய்தி மலரை ஆங்கிலத்திலும் தமிழிலும் இயற்றிய திருமான் சி.சுப்பிரமணிய ஐயர் பற்றியும், பெருந்தியாகம் ஆற்றிய திருமான் வ.உ.சிதம்பரம் பிள்ளை பற்றியும், தேசியகவி சுப்பிரமணிய பாரதி பற்றியும், திருமான் சுப்பிரமணிய சிவா, திருமான் உலோகமானிய பாலகங்காதர திலகர், திருமான் லாலாலஜபதிராய், இராஜாராம் மோகன்ராய் முதலியவர்கள் இந்திய நாட்டிற்கு ஆற்றிய அரிய பெரிய தொண்டுகளைப் பற்றியும் வீரம் உண்டாகும் வண்னம் என்னிடம் விளக்கமாய்ச் சொல்லுவார்…”

6. வேலூர் சிறைச் சாலையில் ஆந்திரர்கள் பண்பு:

கடலூர் சிறைச்சாலையில் இவரும் அவினாசிலிங்கம் செட்டியார் முதலானவர்களும் வைக்கப்பட்டிருந்தனர். கடலூர் சிறைச்சாலையில் உள்ள தங்கள் எல்லோர்க்கும் சமைக்கும் வேலை தனக்கும் சிறுக்குவடா நரசிம்மராவுக்கும் அமைந்ததாம். சிலநாள் பின்னர் இவர்கள் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்கள். அதன் பின் நடந்ததை துரையனார் அடிகளின் நடையிலேயே காண்பது நல்லது.

“வேலூர் சிறைச்சாலையிலே இருந்த ஆந்திர நண்பர்கள் எங்களின் வருகையறிந்து அவர்களின் உணவை மீத்து எங்களுக்கு வழங்கினர். ஏறக்குறைய 15 நாள் வரைக்கும் தமிழர்களும், ஆந்திரர்களும், மைசூர்காரர்களும், மலையாளிகளும் ஒற்றுமையாகவே உணவைச் சமைத்து உண்டோம். அப்போது அச்சிறைச்சாலையிலே தமிழ் ‘பி’ (B) வகுப்புக் கைதிகளினும், ஆந்திர ‘பி’ (B) வகுப்புக் கைதிகள் மிகுதியாவர்.

நாங்கள் வேலூர் சிறைக்குப் போகும் முன்னே ஆந்திரர்கள் தம் (பி) வகுப்புக் கைதிகளின் உணவுப் பொருளையும் ஒன்று சேர்த்து, சமைத்து அவர்கள் இருசாராரும் சமதையாகப் பங்கிட்டுப் புசித்தனர். அவ்வரிய செயலை நான் அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஆயினும் 15 – நாட்குள் தமிழர்கள் தாம் தனிச்சமையல் செய்வதெனக் கருதினர். தமிழர்கள் என்னை அவர்களின் சமையல் கூட்டத்தில் சேருமாறு கேட்டனர். அதற்கு நான் சொன்னதாவது தமிழர்களின் ‘பி’ வகுப்பு உணவையும், ‘சி’ வகுப்பு உணவையும் ஒன்று சேர்த்துச் சமைத்துச் சமதையாக நாமும் அவர்களும் புசிப்பதற்கு உடன்பட்டால் நான் சேருகிறேன் என்றேன். அதற்குத் தமிழர்கள் உடன்படவில்லை. அதனால் நான் ஆந்திரர்களோடு பல திங்கள் சாப்பிட்டு வந்தேன்.

தமிழர்கள் இம்முறையில் சாப்பாடு நடத்துவது தப்பு எனப் பெரிய தலைவர்களிடம் சொல்லி முறையிட்டேன். அக் குறைபாட்டைப் புறக்கணித்தனர். அப்போது ‘எ’ வகுப்பிலே திருமான்கள் ச.இராஜகோபாலாச்சாரியார், ச. சத்தியமூர்த்தி, டாக்டர் இராஜன், ‘பி’ வகுப்பிலே இருந்தவர்கள் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், கே.சந்தானம், சி.இராமச்சந்திரன், அரியரசர்மா, மன்னார்குடி மகாலிங்கம் பிள்ளை, டாக்டர் முத்துசாமி ஐயர், கோபால் ரெட்டி (இந்திய அரசாங்க அமைச்சர்), நாகேசுவரராவ், பிரகாசம் (முதலமைச்சர்), கிருட்டிணராவ், சந்திரமெளலி, திருமல்ராவ், ஆனந்த தீர்த்தர் முதலியவர்கள் ஆவர். மேற்கூறப்பட்ட பங்கீட்டு ஒற்றுமைக் கொள்கைக்காக ஆந்திரர்களோடு சாப்பிட்டு வந்தேன். அவர்களின் உறைப்பும், புளிப்பும் மிகையாக உள்ள உணவு என் உடலுக்கு ஏற்கவில்லை. ஆயினும் அவர்களின் பங்கீட்டு முறையானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அவ்வுணவு ‘சி’ வகுப்புச் சத்தியாக்கிரகக் கைதிகளுக்கும் பகுத்து உண்ட உணவாதலின் அவ்வுணவு அமிழ்தம் போன்றதாயிற்று.” (பக்கம் 86-87)

7. துரையனார் அடிகள் வாழ்க்கையின் இரண்டு அடிப்படைக் கொள்கைகள்:

“தெய்வச் சாட்சியும், உள்ளச் சாட்சியும் என் வாழ்க்கையில் அடிப்படையான கொள்கைகளாம்” (பக்கம் 88) “உள்ளச் சான்று எனக்கு இயல்பாய் அமைந்த கொள்கையாதலின் நன்மை சிறிதும், துன்பம் பெரிதும் எய்தினேன். ஆயினும் புறங்கொடுத்தேனல்லன். இடுக்கண், பொருளிழப்பு, பகைமை முதலியன வந்துழியும் மனசாட்சி என்ற கொள்கையிலிருந்து சிறிதும் வழுவினேனல்லன்”(பக்கம் 144-145) என்றெல்லாம் எழுதுகிறார். தனக்கும் இராஜாஜி அவர்களுக்கும் உற்ற நண்பராக இருந்த மருத்துவர் எம்.கே.சாம்பசிவ ஐயர், கும்பகோணம் 28-ஆவது தொகுதிக்கு நகராட்சி மன்றத் தேர்தலிலே, கதர்த் துணி உடுத்தாத ஐ.சீ.செட்டியாரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யுமாறு வேண்டியபொழுது மனசாட்சிப்படி மறுத்ததோடு தேர்தல் முடியும் வரை 35 நாள் அவரிடமிருந்தே மறைவாக இருந்திருக்கிறார். தனக்கு முதன்மையான நண்பராக இருந்த மருத்துவர் எம்.கே. சாம்பசிவ ஐயரிடமே – கதர் உடுத்தாமல் காங்கிரஸ்காரனாக இருக்கிறேன் என்னும் ஐ.சீ. செட்டியாரை ஆதரித்து, கதர்த்துணி உடுத்துபவரான எம்.சி.செ. இரத்தினசபாபதி செட்டியாரைக் காங்கிரஸ் அல்லாதவர் என்று பிழையாகப் பிரச்சாரம் செய்வது தன் மனசாட்சிக்கே மாறுபட்டது என்று சொல்லி மறுத்திருக்கிறாரென்றால் அதை விட இதற்கு வேறென்ன சான்று வேண்டும்? (பக்கம் 145-146)

8. துரையனார் அடிகள் பட்ட பாடு:

“…என் உயிர் நீங்கும் தறுவாயில் இருப்பினும் நான் மன்னிப்புக் கேளேன். எத்துன்பம் வரினும் பொறுப்பல் என்றிருந்தேன். ஆயினும் நான் பின்வருமாறு சிந்திக்கலாயினேன். நான் சிறைச்சாலையில் இருக்கவும், என் இல்லம் ஒருபால் இருக்கவும், என் தொழில் ஒருபால் இருக்கவும், என் குழந்தைகள் தாயிழந்து தவிக்கவும் ஆகிய நிலைமையை அடைந்துள்ளேன் என்றெண்ணிக் கடவுளை மன்றாடினேன். இறையெம் பெருமாரே! என் குழந்தைகளைக் காத்தருளுமின்! துணை நின்று அருள்மின்! என மன்றாடினேன்.

இன்றோ நாளையோ என்றோ சாவு வருதல் அறிகிலேன். ஆதலின் பொதுநலம் புரிந்து சாதல் நன்று என்று துணிந்தேன்…”(பக்கம்106)

9. இட்டலி விற்கும் மகளிருக்காகவும் மன்றாடினார்:

“திரு புருஷோத்தம சாஸ்திரியார் கமிஷனராய் இருந்தபோது, இட்டலி, பலகாரம் முதலிய சிற்றுண்டிகளைத் தெருவில் விற்பதை நிறுத்திட வேண்டும் எனவும், அதற்கு அவர்களுக்கு மிகுந்த வரியைப் போடல் வேண்டும் எனவும் கவுன்சிலில் ஆலோசனைக்கு வைக்கப்பட்டது. அதைக் கவுன்சிலர்கள் பலர் ஆதரித்தனர். நான் அதை ஆதரித்தேன் அல்லேன். அந்த இட்டலி வணிகத்தால் விற்போர்க்கும், வாங்குவோர்க்கும் நன்மையுண்டு எனவும், அதாவது ஏழைகள் இட்டலியை விற்கிறார்கள், ஏழை மக்கள் வாங்குகிறார்கள்…கூடையில் வைத்து இட்டலி விற்போர் பல்லாயிரம் குடும்பம் பிழைக்கின்றார்கள். ஆதலால் அத்தகைய சட்டத்தை இயற்றி நகர மக்களைத் துன்புறுத்தலாகாது என்றேன். அங்ஙனமே உறுப்பினர்கள் ஒத்துழைத்துத் தீர்மானத்தைத் தள்ளினோம்.

10. வ.உ.சி. அவர்கள் ஊட்டிய தற்காப்புக் கலை விழிப்புணர்வு:

தான் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபொழுது வ.உ.சி. அவர்களின் பெருந்தொண்டு பற்றிக் கேள்வியுற்றிருக்கிறார் துரையனார். 1922ஆம் ஆண்டு சுவாமி மலையில் அவரைச் சந்தித்தார். அன்று வ.உ.சி., “தமிழர் தெருவினின்றும், துளுக்கத் தெருவினின்றும், பார்ப்பனத் தெருவினின்றும் நாட்டாண்மையாளர்களைத் தருவிக்குமாறுசொன்னார். அவ்வாறே அவர்களை அழைத்தேன். திரு வ.உ.சி. அவர்களை நோக்கி, உங்கள் தெருவிலே கத்திச்சண்டை, குத்துச் சண்டை, மல்லுச்சண்டை, சிலம்பச் சண்டை ஆகிய தற்காப்புப் பயில்கிறார்களா எனக் கேட்டார். சாஸ்திரி விடைகூறும்போது வாழ்க்கைக்குரியனவற்றைக் கவனிப்பதில் பொழுது செல்கிறதால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றார். இராவுத்தர் விடைகூறும்போது கொடிக்கால் வேலை செய்யவும் வெற்றிலை கும்பகோணத்தில் விற்கவும் பொழுது போகிறதால் மிகுதியாகப் பயில முடியவில்லை. ஆனாலும் சிலர் பயில்கின்றனர் என்றார். தமிழர் தெரு நாட்டாண்மையர் விடை கூறும்போது பிழைப்புக்குப் பல இடங்களுக்குப் போய் வேலை செய்து வருவதால் நாங்கள் தற்காப்புப் பயிற்சி செய்ய இயலவில்லை என்றார்.

திரு வ.உ.சி., அவர்களை நோக்கிச் சொன்னதாவது: பின்னொரு காலத்தில் நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்தே தீரும். அப்போது நாமே நம் நாட்டைக் காத்துக் கொள்ளல் வேண்டும். ஆதலின் உங்கள் மரபினர்க்குத் தற்காப்புக் கலையைப் பயில்வித்து வீரர்களாக்கல் வேண்டும் என்றார்…..திரு வ.உ.சி. கூறியவண்ணம் என் புதல்வர் மூவர்க்கும் தற்காப்புக் கலையைத் தக்க ஆசிரியர்களால் பயில்வித்தேன்.”
தற்காப்புக் கலையைக் குறித்த விழிப்புணர்வு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு 1922-இலேயே மேலோங்கி இருந்திருப்பதற்கு இவர் வரலாறு சான்று பகர்கிறது.

இப்படிப் பற்பல செய்திகளும் கடைசிப் பக்கங்களில் துரையனார் அடிகளின் கையெழுத்துக்குச் சான்றான ஒளிப்படப்படிகளும் காந்தியடிகள் கோகலே ஆகியோருடன் அவர் உள்ள ஒளிப்படமும் தென்னாப்பிரிக்காவில் அவர் மிதிவண்டியுடன் நின்றிருக்கும்(1908) ஒளிப்படமும் முறையே தரப்பெற்றுள்ள இந்தப் பதிப்பும் இதன் பின்னால் உள்ள முனைவர் மு.இளங்கோவன் என்ற இளைஞரின் சலிபில்லாத கடின உழைப்பும் பாராட்டத் தக்கவை. தவிர, “இந்நூல் விற்பனையின் ஒரு கூறு கண்பார்வையற்ற மாணவர்களின் கல்வி நலனுக்கு வழங்கப்படும்” என்ற அறிவிப்பும் இவர்தம் சமூக நோக்கைக் காட்டும்.

புத்தகத்தின் தலைப்பு: விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்[தன் வரலாறு]
பக்கம்:228 விலை: உரூ. 60/-
பதிப்பாசிரியர் முகவரி: முனைவர் மு.இளங்கோவன்,

43, முதல் குறுக்குத் தெரு (தெற்கு),
சூரியகாந்தி நகர்,
புதுச்சேரி – 605 003
இந்தியா.
தொ.பே: 91 – 413 – 2210365
91 – 9442029053

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்