மெளனமான உணர்த்துதல்கள்

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

தேவமைந்தன்



ஆரவாரமிக்க புலப்பாடுகளைவிட மெளனமான உணர்த்துதல்களுக்கு ஆற்றல் மிக உண்டு. “ஆரவாரப் போர்க்குணங்கள் ஆர்ப்பரித்துக் கெக்கலிக்க, கூர்த்தமதி பொங்கியழும் காலம்” என்று கவிதை சுட்டும் இந்தக் காலத்திலும் மெளனமான உணர்த்துதல்களுக்கே மரியாதை அதிகம். வளவளத்த பேச்சை விடவும் மெளனத்துக்கு மவுசு அதிகம் அல்லவா? ‘யாரே இதை மறுக்க வல்லார்?’ என்று பழைய நடையில் கேட்டு விடலாம்.

“கோடி காணச் சொன்னதைநீ நாடிடுவாய் மனமே” என்று மோகன ராக வரியில் வரும் கந்தகுரு கவசம் சொல்லுவதும் இந்த மெளன உணர்த்துதல் பாணியில்தான். கரூரில் உள்ள ஒற்றை வேட்டிச் சுவாமிகள் என்ற சித்தர் சமாதியருகில் வாழ்ந்த சித்த மருத்துவர் ஒருவர், இதற்குத் தந்த பொருண்மை என்னை வியப்பில் ஆழ்த்தியது. கோடிதரம் மூலமந்திரம் ஏத்திடச் சொன்ன கந்தாஸ்ரம குருவானவர், இந்த வரியைப் பின்னால் இட்டது பக்குவமடைந்த முருகனடியார்க்காகவே என்றார் அவர். பக்குவம் பெறாத அடியார்கள் ஒன்றும் தாழ்வானவர்கள் அல்லர். அவர்கள்தாம் ஒரு திருத்தலத்துக்குப் பருப்பொருள் அடிப்படையிலான வளர்ச்சியைத் தருகிறார்கள். இருந்தாலும் பால்குடமும் காவடியும் எடுத்துப் பகவனைத் தரிசிக்க வேண்டிய நிலையைத் தாண்டிவிட்ட பக்குவமானவர்கள், கோடிதரம் ஜபிக்க வேண்டாத நிலையில் பரம்பொருள் இருக்கிறது. ஞான பரிபக்குவ நிலையிலும் பகுத்தறிவு நிலையிலும் அவர்கள் கந்தனைக் குருவாகக் கொண்டு பயன்பெறவே சேலம் நகர் அருகே ஓடிய கன்னிமார் ஓடைக்கு மேல் தானத்தில் உள்ள கந்தகிரி – கந்தாஸ்ரமத்தில் வீற்றிருக்கும் கந்தகுரு அடிபற்றிய துறவியார் ‘அவ் வோரடி’யை ‘அவண் இட்டார்’ என்றார் அந்த சித்த மருத்துவர்.

திருவள்ளுவர், இந்த மெளனமான உணர்த்துதல் பாணியை எளிதாக உணர்ந்துகொள்பவர்களின் சிறப்பைத் தன் குறள்களில் பாராட்டியிருக்கிறார்:
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி

என்ற குறளில் முகக்குறிப்புக் காட்டும் அகத்தின் உணர்த்துதலாக இதைக் கூறுகிறார்.
உள்ளம் பொருந்திய மெளனமே காதல் மொழி என்பதை,
கண்ணொடு கண்இணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

என்று மிக ஆழமாகச் சொல்லுகிறார். ‘கடலை போடுவது’ என்ற சென்னைத் தமிழுக்குரிய செயலையே செய்து கொண்டிருக்கும் ஆண்களும் பெண்களும் இந்தக் குறளை மனத்தில் இருத்திக் கொள்வது மற்றவர்களுக்கும் நல்லது.

ஜெயகாந்தன் அவர்கள் ஆனந்தவிகடனில் (1962, மேமாதம்) எழுதிய ‘மெனனம் ஒரு பாஷை’ என்ற சிறுகதை, மெளனமான உணர்த்துதலை மொழியாகவே காட்டி விடுகிறது. அவர் அதே இதழில் அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் (14-8-1960 இதழ்) எழுதிய ‘வாய்ச்சொற்கள்’ என்ற சிறுகதையும் வாழ்க்கையின் அதிநுட்பமான தருணங்களில் வாய்ச்சொற்கள் பயனற்றுப் போவதையும் மெளனமே வெல்லுவதையும் புலப்படுத்துகிறது.

அருணகிரிநாதர்,
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
“சும்மா இரு,சொல் லற”என் றலுமே
அம்மா பொருளொன் றுமறிந் திலனே

என்று இரங்கிப் பாடியதும் இந்த மெளன உணர்த்துதலே. இல்லையென்றால் அம் மாபொருள் ஒன்றும் அறிந்திலனே என்று பாடியிருப்பாரா? அதன் விளக்கமாகத் தொடர்ந்து பன்னூறு பாடல் பாடியிருக்க மாட்டாரா?

ஆம். மனிதன் உண்டாக்கிய சொற்கள் அவனுக்கே கை கொடுக்காத பொழுது அவனால் உருவாக்கப்பெற முடியாத மெளனமே அவனுக்குக் கைகொடுப்பதோடு ஆதரவும் கொடுக்கிறது.

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்