மெய்மையின் மயக்கம்-9

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)

துக்ளக் சோவும் ஜெய மோகனும்

கொண்ட கொள்கையினை விட்டுக் கொடுத்திடாமல் உறுதியுடன் நின்று போராடுபவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவை!

இத் தகு கொள்கையாளர்கள் நிறைந்த ஒரு நாட்டில், மனித உரிமைகளும் மாண்பும் மதிக்கப் படுகின்றன; எதிர்க் கருத்துகளின் மோதல்கள் ஊக்குவிக்கப் படுகின்றன; தவறான கொள்கைகளைத் திருத்திக் கொள்வதற்கும் சரியான கொள்கைகளை வளப்படுத்திக் கொள்வதற்கும் கொள்கையாளர்களுக்கு வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

ஆனால், பழைமையின் பிடிவாதத்தில் இறுகிப் போய்க் கிடக்கின்ற பிற்போக்காளர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு நாட்டிலோ, சமுதாயப் பண்பாட்டின் முற்போக்கான வளர்ச்சிக்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றன. எதிர்ப்புகளை முறியடித்திடாமல் முன்னேறிட முடியாத ஒரு சூழ் நிலையில், சமுதாய இணக்கங்களின் மூலமாக அன்றிப் பகைமைகளின் மூலமாக மட்டும்தான் சாதி ஒழிப்புப் போன்ற முற்போக்கான சமுதாய வளர்ச்சிகள் கூட வெற்றி பெற்றிட முடிகிறது.

இதன் இறுதி விளைவுதான் ஹே:கல் குறிப்பிடுகின்ற துயர உணர்மை—-பிற்போக்கில் தொடங்கிப் பிடிவாதத்தில் வளர்ந்து துயரத்தில் நிலைத்து விடுகின்ற ஓர் உணர்மை!

‘துயரப் பிறவிகள் ‘ என்று பொதுப் படையாக மனிதர்களை வரையறுத்தாராம் கீர்க்கெ:கார்ஃட்!

ஆனால், ஹே:கல் குறிப்பிடுகின்ற ‘துயர உணர்மை ‘ என்பது முற்றிலும் வேறுபாடு ஆனது; அழிவில் நின்று அணுவளவும் தப்பித்து விட முடியாத பழைமையைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இருக்கின்ற ஒரு பிடிவாதத்தில் இருந்து எழுவது!

இத் தகையது ஒரு பிடிவாதம் துக்ளக் சோ அவர்களிடம் நிலைத்து நீடித்துக் கொண்டு வருகிறது என்பது அவரது சில கருத்துகளில் இருந்து நமக்குத் தெரிய வருகிறது.

ஒரு சில சாதி மண்டைகளுக்குள் மட்டும் அடைபட்டுக் கிடந்திடக் கூடிய ஒரு சாதியப் பொருள் என்றுதான் திறமை என்பதனை இன்னமும் இவர் புரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்.

சாதி வேறுபாடுகளை எல்லாம் கடந்து, வாய்ப்புகளின் அடிப்படையில் வளர்ந்திடக் கூடிய ஒரு பொதுப் பொருள்தான்—-உழைப்பின் விளை பொருள்தான்—-திறமை என்பதனைப் புரிந்து கொள்ளுகின்ற ஒரு வாய்ப்பு இன்று வரை இவருக்குக் கிடைக்காமல் இருந்து இருக்கலாம்; இவருக்குக் கிடைத்துக் கொண்டு வந்து இருக்கின்ற முக்கியமான வாய்ப்புகள் எல்லாம் சாதி-மதம் பார்த்து இவருக்குக் கிடைத்து இருக்கக் கூடிய வாய்ப்புகளாகக் கூட இருக்கலாம்.

இருந்தாலும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு மேற்கொள்ளப் படும் என்றால் திறமை என்பதற்கு மதிப்பும் வாய்ப்பும் இல்லாமல் போய் விடும் என்று எழுதி, அழுந்திக் கிடக்கின்ற மக்களை இழிவு செய்வதற்கு இவர் முயல்வது என்ன வகையான ஒரு பண்பாடு ?

தமிழில் மந்திரம் ஓதினால் கடவுளுக்குப் புரியாது என்று வாதிட்டு முதலில் தமிழையும் பின்னர் கடவுளையும் இறுதியில் தம்மையும் இழிவு படுத்திக் கொண்டு இருந்தவர் இவர்! ஆனால், மனிதர்களை இழிவு படுத்துகின்ற உரிமையை இவருக்கு யார் கொடுத்தது ?

திறமையின் அடிப்படையில்தான் தனியார் துறையில் வாய்ப்புகள் வழங்கப் பட்டு வருவது போலவும் சாதிகளை எல்லாம் தனியார் துறையினர் பொருட் படுத்துவது இல்லை என்பது போலவும் துக்ளக் சோ எழுதுவது மெய்மைக்குப் புறம்பானதும் ஆகும்.

சாதி என்பது ஒழிக்கப் பட்டுதான் தீரும் என்கின்ற வரலாற்று நிகழ்ப்பாட்டினைப் புரிந்து கொண்டு, சாதி ஒழிப்பினைத் தீவிரப் படுத்துகின்ற முயற்சிகளில் ஈடு படுவதை விட்டு விட்டு, நல்ல வேளையாக ஆதிக்கச் சாதியில் நான் பிறந்து விட்டேன்; இந்தப் பிறவிப் பெருமையினை பாது காத்துதான் நான் தீருவேன்; என்று இந்த முதலாண்மை யுகத்தில் பிடிவாதம் பிடிக்கின்ற ஒரு மனிதன் இறுதியில் திளைத்திடப் போவது ஒரு வகையான துயர உணர்மையில்தான் என்பதில் அணுவளவும் ஐயம் இல்லை.

துக்ளக் சோவின் அளவிற்கு இல்லை என்ற போதிலும், இத் தகையது ஒரு பிடிவாதத்தினை ஓரளவிற்கேனும் ஜெய மோகனின் சொல்லாட்சிகளில் நாம் காண்கிறோம். எடுத்துக் காட்டாக, இலக்கியம் என்பது பற்றிய அவரது வரையறை!

எனவேதான், ‘சுரேஷின் நண்பரது பிரச்சனையாக இலக்கியத் துறையை ‘ அவர் அடையாளம் காட்டுகிறார். ஆனால், சுரேஷின் நண்பர் எழுதியதோ பல் வேறு வகையான இலக்கியங்களில் ஒரு துறையான கதை-கவிதைகளைப் பற்றிதான்; அறிவியல் இலக்கியத்தையோ, மெய்ப் பொருண்மை இலக்கியத்தையோ, கணித இலக்கியத்தையோ அல்லது வேறு பிற இலக்கியங்களையோ பற்றி அல்ல!

மனிதர்களுக்கு அறிவு தேவை என்பதை சுரேஷின் நண்பர் மறுத்திட மாட்டாராம்; மாறாக, இலக்கியத்தின், அதாவது, கதை-கவிதைகளின் அறிவுப் பயனை மறுப்பது மட்டும்தான் அவரது பிரச்சனையாம்; ஏனென்றால், கதை-கவிதைகளின் வாசிப்பும் ஓர் அறிதல் முறைதானாம்!

நல்லதுதான்!

ஆனால், பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு முன்வந்து இருக்கின்ற ஜெய மோகன், முட்டாள் பட்டத்தினை நமக்குச் சூட்டி விடுவதற்கும் முற்படுவதுதான் வேடிக்கை! எனினும், ‘கற்றது கை மண் அளவு ‘ என்று கூறிய அவ்வையாருக்குத் தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்து விட்டு, ஜெய மோகனின் பட்டத்தை நாம் ஏற்றுக் கொள்வதில் நமக்குத் தயக்கம் எதுவும் இல்லை.

ஹே:கல் கூறுவது போல, எல்லாம் தெரிந்தவன், ஒன்றும் தெரியாதவன்தானே!

முட்டாள் பட்டம்

‘இலக்கியம் தேவையா, இல்லையா ? என அதை அறிந்தவர்கள் அல்லவா சொல்ல வேண்டும்! ‘ என்று கேட்டு, அறிவாளர் பட்டத்தைத் தமது மண்டையிலும் முட்டாள் பட்டத்தை நமது மண்டையிலும் சூட்டி வைத்து விடுகிறார் ஜெய மோகன்!

‘இலக்கியம் ‘ என்னும் சொல்லின் பொருளைக் கூட சரியாகப் புரிந்து கொள்வதற்கு எந்த முயற்சியையும் இன்று வரை மேற்கொண்டிடாத ஜெய மோகன், கதை-கவிதைகளைப் பற்றித் தெரிந்து வைத்து இருப்பவர்கள்தாம் அவற்றைப் பற்றிப் பேசிட வேண்டும் என்று கூறுவது சற்று வேடிக்கைதான் என்ற போதிலும், அவரது கூற்றினை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால், தெரிந்தவர்-தெரியாதவர், அறிந்தவர்-அறியாதவர், என்று எல்லாம் மற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்குகின்ற அளவுக்குக் கதை-கவிதைகளைப் பற்றி ஜெய மோகன் தெரிந்து வைத்து இருக்கிறாரா ? என்பதுதான் கேள்வி.

இவரது நுனிப் புல் மேய்ச்சல்களில் இருந்து எழுகின்ற மாய்மைகளைக் கண்டு இவரது எதிர்த் தரப்புக் கதை-கவிஞர்கள், குறிப்பாக, ஸ்தாலினிச வாதிகள், மிரட்சி அடைந்து இருக்கிறார்கள் என்பது உண்மைதான்; எதிர்க் கருத்துகளின் மூலமாக அன்றி, வசை மொழிகளின் மூலமாக மட்டும் இவரை அவர்கள் எதிர் கொண்டு வந்து இருப்பதற்கு இந்த மிரட்சிதான் காரணம் என்பதும் உண்மைதான்.

இதற்காக, எதிர்த் தரப்பினரின் மிரட்சியைக் கொண்டு தமது தரப்பின் தெருட்சியை (மெச்யுரிட்டி)—-அவர்களின் அறியாமையைக் கொண்டு தமது அறிவாண்மையை—-தாம் நிருபித்து விட்டதாக எப்படி இவர் கருதிக் கொள்ள முடியும் ?

தெரியாததை எல்லாம் தெரிந்தது மாதிரிப் பேசி விடுவது வீண் பெருமைத் தனமான ஒரு கோளாறு என்றால், தமக்கு மட்டும்தாம் எல்லாம் தெரியும் என்பது மாதிரித் தலையை நிமிர்த்திக் கொள்வது தற் பெருமைத் தனமான ஒரு கோளாறுதான் ஆகும்.

‘நானே வழியும் உயிரும் உண்மையுமாய் இருக்கிறேன் ‘ என்று கூறியவராகக் கருதப் படுகின்ற ஏசு, இறுதியில் குறுக்கத்தில் தொங்கிட நேர்ந்ததாம்; ‘தந்தையே, ஏன் என்னைக் கைவிட்டார்! ‘ என்று கடவுளிடம் அவர் கெஞ்சிய போதிலும், அவருக்கு உதவுவதற்குக் கடவுளால் இயன்றிடவும் இல்லையாம்!

இதனால்தான், ஏசுவின் தூதுப் பணி தோல்வியில் முடிந்தது என்று ஹே:கல் கூறுகிறார்.

எப்படியும், உண்மையைக் கொன்று விட முடியாது அல்லவா! எனவேதான், ஏசுவை உயிர்த்து எழுந்திட வைத்து விட்டார்கள் போலும், வரலாற்றுக் கதையாளர்கள்; அவரது மறு நிகரியான போப்பானவரோ பிழை பட முடியாத ஞானத்திற்கு உரியவராகக் கருதப் படவும் நேர்ந்து இருக்கிறது!

இப்படித்தான், கதை-கவிதைகளைப் பற்றிப் பேசுகின்ற உரிமை வாய்ந்த ஒரே மனிதராக—-கதை-கவிதைகளைப் பற்றிய உண்மையின் ஒரே உறைவிடமாக—-தம்மை ஜெய மோகன் கருதிக் கொள்கிறார் போலும்—-தமிழகத்தின் ஒரே கலைஞர் கருணா நிதியார்தாம் என்பது மாதிரி!

ஒற்றை நாயகர்கள்

இங்கே, கதைக்கு ஒரு நாயகன், ஒரே ஒரு நாயகன்! கவிதைக்கு ஒரு நாயகன், ஒரே ஒரு நாயகன்! நடிப்பிற்கு ஒரு நாயகன், ஒரே ஒரு நாயகன்! அறிவிற்கு ஒரு நாயகன், ஒரே ஒரு நாயகன்! இப்படிப் பல் வேறு ஒற்றை நாயகர்கள்!

இந்த ஒற்றை நாயகர்களால் நாட்டில் ஏற்பட்டு இருப்பது சீர் அழிவுதானே ஒழியச் செழுமை அல்ல—-நாணயம், பண்பாடு, சிந்தனை, முதலிய எதுவாக அது இருந்தாலும் சரி!

ஒரே ஒருவரைத் தலைவராகக் கொண்ட கட்சி அவரது குடும்பச் சொத்தாக இறுதியில் மாறி விடுகிறது. ஊழல் காரனைத் தலைவனாகக் கொண்ட கட்சியில் ஊழல் காரர்களாக அனைவரும் மாறி விடுகிறார்கள். ஒரே மாதிரியான நடிப்பும் ஒரே வகையான கதைப்பும் ஒரே மட்டத்தில் ஆன அறிவின் இயக்கமும் என ஒற்றை நாயகர்களும் அவர்களது வழிபாட்டாளர்களும் நீர்த்துப் போய் விடவும் நேர்ந்து விடுகிறது.

மாறாக, ஒவ்வொரு துறையிலும் பல் வேறு நாயகர்கள் தலை எடுக்கின்ற ஒரு சமுதாயத்தில், மாற்றுக் கருத்துகளும் மாற்றுத் திறமைகளும் வரவேற்கப் பட்டு, புதிய கருத்துகளும் புதிய திறமைகளும் செழித்து வளர்ந்திடத் தக்க வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

ஒரு சாதியின் மனிதன் என்றும் ஒரு மதத்தின் மனிதன் என்றும் ஓர் ஊரின் மனிதன் என்றும் ஒரு குலத்தின் மனிதன் என்றும், ஒரு குழுவின் மனிதனாக மட்டும் மனிதர்களுக்கு ஒப்பளித்துக் கொண்டு வந்து இருந்த முந்திய சமுதாயங்களில் நின்று வேறு பட்ட வகையில், தனி ஒரு மனிதனாக ஒவ்வொரு மனிதனும் திகழ்ந்திடத் தக்க அடித் தளங்களை அமைத்துக் கொடுத்து இருக்கின்ற ஒரு சமுதாயம் இந்த முதலாண்மைச் சமுதாயம்!

இங்கே, ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி மனிதன்—ஒரு நாயகன்! தாங்கள் விரும்புகின்ற துறைகளில் நாயகர்களாகத் திகழ்ந்திடத் தக்க வாய்ப்புகள் ஒவ்வொரு மனிதனுக்கும் இங்கே உண்டு! எனவேதான், ஒற்றை நாயகர்களாகத் தங்களைக் கருதிக் கொள்கின்ற மனிதர்களை நாம் காண்கின்ற பொழுது நமக்குச் சிரிப்பு வருகிறது—-எத் துணைக் கொம்பர்களாக அவர்கள் இருந்தாலும் சரி!

கடவுளின் பரிதாப நிலை

பல கடவுள்கள் இருந்து இருக்கக் கூடாதா ? என்று சில சமயங்களில் நமக்குத் தோன்றிடலாம் என்ற போதிலும், அவர் அல்லது அவள் அல்லது அது, ஒன்றே ஒன்றுதான் என்று எல்லோரும் கூறுகிறார்கள்.

அப்படி என்றால், மிகவும் பரிதாபத்திற்கு உரிய ஒரு சுயமையாகத்தான் பல காலம் அது இருந்து இருக்க வேண்டும்; எனவேதான் உலகத்தை அவர் படைத்து இருக்க வேண்டும். இல்லை என்றால், அவளுக்குப் பைத்தியம்தான் பிடித்து விட்டும் இருந்து இருக்கும்!

கையில் ஒரு கண்ணாடியை வைத்துக் கொண்டும் தமது முகத்தை அதில் பார்த்துக் கொண்டும் ‘நான்தான் ஜெய மோகன் ‘ என்று தமக்குள் கூறிக் கொள்வதில் ஜெய மோகனுக்கு அப்படி என்னதான் ஒரு நிறைவு ஏற்பட்டு விட முடியும் ?

தன் நிறைவு இல்லாதவராம் கடவுள்; எனவேதான், விண்ணாகவும் மண்ணாகவும் கல்லாகவும் மரமாகவும் முதலிய பிற எல்லாமாகவும் தம்மை வெளிப் படுத்திக் கொண்டு அவர் வருகிறாராம்; ஹே:கல் கூறுகிறார். அவரைக் கார்ல் மார்க்ஸ் கிண்டல் அடிக்கின்ற விதம் சிறப்பு ஆனது.

காரண அறிவின் உறைவிடமாம் கடவுள்; எனினும், தன்னை அறிந்து கொள்வதற்காகத் தன்னை அறியாமல்தான் உலகத்தை அவர் படைத்தாராம்; விண்ணையும் மண்ணையும் படைத்து முடித்து விட்டு மனிதர்களைப் படைத்ததன் பின்னர் கூட தம்மை அவரால் அறிந்து கொள்ள முடிய வில்லையாம்; ஏனென்றால், காரண அறிவின் நிறைவினை மனிதர்களில் அவரால் கண்டிட முடிய வில்லையாம்!

இறுதியில், ஒரு மெய்ப் பொருண்மையாளனை—-தத்துவ ஞானியை—-அவர் படைத்தாராம்; அந்த மெய்ப் பொருண்மை யாளனின் காரண அறிவினில் தம்மைக் கண்டு தம்மை அவர் அறிந்தும் கொண்டாராம்; யார் அந்த மெய்ப் பொருண்மை யாளன் என்றால், அவர்தாம் ஹே:கலாம்!

ஆக, ஓர் ஒற்றை அறிஞனாக இருந்து கொள்வதில் அந்த ஒற்றை அறிஞனுக்குக் கூட நிறைவு ஏற்படுவது இல்லை என்பது தெளிவு.

இனி, ஜெய மோகன் குறிப்பிடுகின்ற வண்ண வண்ண ஆடைகளுக்குள் நாம் நுழைவோம்.

3-07-2004

(தொடரும்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்