குரூரமும் குற்ற உணர்வும் (எனக்குப் பிடித்த கதைகள் – 25 -கு.ப.ரா.வின் ‘ஆற்றாமை ‘)

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

பாவண்ணன்


அடிக்கடி செல்லக் கூடிய அலுவலகம்தான் அது. பல நேரங்களில் நான் அங்கே காணப்படுவதைக் கொண்டு நானும் அங்கேதான் வேலை செய்கிறேனோ என்று நினைத்துக் கொள்பவர்கள் இருந்தார்கள். அங்கே இளம் கணக்கியல் அதிகாரியாக வேலை செய்து வந்தார் நண்பர். திடுமென அவரைக் கொல்கத்தாவுக்கு மாற்றி விட்டார்கள். அவர் மீது புகார் சொல்லி எழுதப்பட்ட ஏதோ ஒரு மொட்டைக் கடிதத்தின் வேலை. வயதான பெற்றோர்களையும் இளம் மனைவியையும் திருமணமாகாத இரண்டு தங்கைகளையும் விட்டுவிட்டு அவர் வண்டியேற வேண்டியதாயிற்று. ஆண்துணை இல்லாமல் அக்குடும்பம் நகரில் பட்ட பாடு சொல்லும் தரமன்று. நல்லதோ, கெட்டதோ, குடும்பத்தில் நடந்த ஒவ்வொன்றுக்கும் மாதத்துக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ வந்து சென்றதில் ஆளே இளைத்துத் துரும்பானார்.

ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு, அதே அலுவலகத்தில் வேலை செய்கிற மற்றொரு பணியாளருடன் தற்செயலாக மைசூரில் தங்க வேண்டியதாயிற்று. நண்பர் மது அரந்தியிருந்தார். பேச்சு அங்குமிங்கும் சுழன்று கொல்கத்தாவுக்கு மாற்றலாகிப் போன நண்பர் மீது படர்ந்தது. அவருடைய பேரைக் கேட்டதுமே முகத்தில் இருள்படரக் குனிந்து கொண்டார். சிறிது நேரத்தில் அவர் கண்கள் தளும்பின. பிறகு மெல்ல உடைந்த குரலில் ‘பாவி நான் பாஸ்கர், பாவி நான் ‘ என்றார். ‘என்ன விஷயம் ? ‘ என்று கேட்டேன். ‘அவன் மேல மொட்டக் கடுதாசிய எழுதனது நான்தான் ‘ என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவராகவே சொல்லட்டும் என்று என் திகைப்பைக் காட்டாமல் உட்கார்ந்து கொண்டேன்.

இருவருமே நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு முறை பொதுநலநிதியிலிருந்து கடனுக்கு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார் ஒருவர். பத்து நாட்களாகியும் வரவில்லை என்கிற கோபத்தில் தொலைபேசியிலும் நேரிடையாகவும் பலமுறை கேட்டிருக்கிறார். ஒரு நண்பன் இருந்தும் உதவவில்லையே என்ற கோபம். மேல் அதிகாரி வெளியூர் சென்றிருக்கிறார் என்றும் அவர் ஒப்புதல் இல்லாமல் கடனைத் தரஇயலாது என்றும் மீண்டும்மீண்டும் சொல்லியிருக்கிறார் அதிகாரியாக் இருந்தவர். மேல் அதிகாரி வந்து ஒப்புதல் கையெழுத்து போட்ட நேரத்தில் காசோலைப் புத்தகம் தீர்ந்து விட்டது. புதிய காசோலைப் புத்தகம் தலைமை அலுவலகத்திலிருந்து வந்தால்தான் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியும். கேட்ட உடனே பணம் கிடைக்காத எரிச்சலிலும் தாமதத்தால் உண்டான கோபத்தாலும் நண்பர் மீதே மொட்டைக் கடிதம் எழுதிப் போட்டு விட்டார். ஏதோ ஒரு ஆத்திரத்தில் அப்படி செய்து விட்டாரே தவிர, அதன் பிறகு அவர் நிம்மதியாக இல்லை. ஒவ்வொரு நிமிடமும் குற்ற உணர்வு அரிக்கத் தொடங்கி விட்டது. மனசாட்சியின் கேள்விக்குப் பதில் சொல்ல இயலவில்லை. கொல்கத்தாவிலிருந்து வரும் நண்பனைக் காணும் போதும் அவன் குடும்பத்தினர் கண்ணில்படும் போதும் அவர் குற்ற உணர்வு அதிகரித்து விடுகிறது.

அன்று அவரைத் துாங்க வைப்பதற்கு வெகுநேரமானது. ஏதோ ஒரு கணம். மனம் குரூரம் கொள்கிறது. விபரீதமாக எதையாவது செய்யத் துாண்டுகிறது அக்குரூரம். உண்மை உணர்ந்த மறுகணமே குற்ற உணர்வு பொங்க மனசாட்சி கேள்வி கேட்கத் தொடங்குகிறது. இந்த மன ஊசலாட்டம் ஞாபகம் வரும்போதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்த கு.ப.ரா.வின் ‘ஆற்றாமை ‘ சிறுகதையும் தவறாமல் ஞாபகம் வருகிறது.

‘ஆற்றாமை ‘ சிறுகதையில் இடம்பெறுகிறவர்கள் இரண்டு இளம்பெண்கள். அவர்களில் ஒருத்தி ஓராண்டுக்கு முன்புதான் திருமணமானவள். வேகவேகமாக நடந்த சாந்தி முகூர்த்தத்தைத் தொடர்ந்து பட்டாளத்துக்குச் சென்ற கணவன் திரும்பாததால் மனம் நிரம்ப ஏக்கங்களைச் சுமந்து கொண்டிருக்கிறாள். உடலிலிருந்து மீட்டப்பட்ட புதிய ராகங்களின் இசையைக் கேட்டது பாதியாகவும் கேட்காதது பாதியாகவும் வாழ்கிறாள். யாரிடமும் தன் மனக்குமுறலைச் சொல்ல முடியாத நிலைமை. மற்றொருத்தி அதே வரிசையில் குடியிருப்பவள். புதிதாகத் திருமணம் முடித்தவள். சாத்தப்பட்ட அறையிலிருந்து வெளிப்படும் சிரிப்பும் கொஞ்சல் சத்தமும் முதலாமவளை மிருகமாக்குகிறது. அந்த மிருகத்தை அடக்க அவள் படாத பாடு படுகிறாள். ஒருநாள் அந்த மிருகம் அவள் கட்டுப்பாட்டை மீறி வெளியே வந்து விடுகிறது.

தம்பதிகள் வீட்டுக்குள்ளேயும் தனிமைக்காரி வெளியேயும் இருக்க நேர்ந்த ஒரு தருணத்தில் விருந்தாளி ஒருவன் வருகிறான். வீட்டுக்குள் இருக்கும் ஆணைப்பற்றிக் கேட்கிறான். சட்டென அவளிடம் குரூரம் வெளிப்படுகிறது. கதவைத் தட்டிக் கூப்பிடச் சொல்கிறாள். கதவு திறக்கப்பட்ட கணத்தில், ஆடை நெகிழ்ந்த நிலையில் உள்ளே படுத்திருந்த இளம்பெண்ணின் உருவம் தெரிகிறது. வந்த இளைஞனுக்கும் அது காட்சியாகி விடுகிறது. ஒரு கணத்துக்கு மேல் அக்காட்சியை அவளால் பார்க்க முடியவில்லை. உடம்பும் மனமும் கூசிவிடுகின்றன. அந்தரங்கம் திறந்து கிடந்தது போன்ற அந்த அறையை அவளால் நிமிர்ந்து நோக்கவே முடியவில்லை. மறுகணமே அவளைக் குற்ற உணர்வு தைக்கிறது. தன் மீதே கட்டுக்கடங்காத கோபம் எழுகிறது அவளுக்கு. அந்த சுய கோபத்தை அவளால் ஆற்றிக் கொள்ள முடியவில்லை. ‘இப்போது திருப்திதானே பேயே ‘ என்று தன் மனத்தைத் தானே நொந்து கொள்கிறாள். ஆற்றாமை அவளுக்கு மட்டுமல்ல. ஏகாந்தமே ஆடையற்று நின்றதைப் போல நிற்க நேர்ந்துவிட்ட இளம்மனைவியும் தன் அவமானத்தை எப்படி ஆற்றிக் கொள்வது என்று புரியாமல் கணவனைப் பார்த்துச் சீறுகிறாள். முன்யோசனை இல்லாமல் கதவைத் திறந்து விட்ட கணவனும் தன் அறியாமையால் நேர்ந்த மனச்சங்கடத்தை ஆற்றிக்கொள்ளும் வகை தெரியாமல் வருத்தமுறுகிறான்.

மனத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவை எதுவுமே மூர்க்கமேறிய குறிப்பிட்ட தருணத்தில் செல்லுபடியாவதில்லை. அம்பை எய்யாமல் தோளின் துடிப்பு அடங்குவதில்லை. தோளின் துடிப்பு அடங்கும்போது எய்யப்பட்ட அம்பைத் திரும்ப எடுக்க இயல்வதில்லை. குற்ற உணர்ச்சியும் தன்னிரக்கமும் பெருகி மூர்க்கத்தின் விளைவைக் கரைக்கப் பார்க்கிறது. மூர்க்கமுற வைப்பதும் மனம். மூர்க்கத்தைக் கரைப்பதும் மனமே.

*

மணிக்கொடி கால எழுத்தாளர்களுள் முக்கியமானவர் கு.ப.ரா. மனத்தில் தீவிரம் கொள்ளும் உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களைக் கச்சிதமான சொற்களால் ஓவியமாகத் தீட்டிக் காட்டியவர். இவரது வசன கவிதைகள் புதுக்கவிதை வாசகனை இன்றும் ஈர்க்கவல்லவை. வாசகர் வட்ட வெளியீடாக வெளிவந்த ‘சிறிது வெளிச்சம் ‘ என்னும் தொகுப்பு மிகவும் முக்கியமானது. ‘ஆற்றாமை ‘ என்னும் சிறுகதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்