This entry is in the series 20080717_Issue

கே ஆர் மணி


அந்த நாற்காலியை எனக்கு
பிடித்துப்போயிற்று.

ரொம்ப நாள் ஆசைப்பட்டு
அதிகவிலை கொடுத்து
வாங்கிய நாற்காலியது.

இதுவரை பார்த்த,வாங்கிய
நாற்காலிகளை விட
அது நன்றாகயிருந்ததாகத்தான்பட்டது.

யாரையும் அதில் உட்கார
அநுமதிக்காமல்தானிருந்தேன்
அந்த சலிப்பு என்மீது உட்காரும்வரை.

குழந்தைகள் அதில் ஏறிக்குதிக்கிறார்கள்.
முதியவர்கள் அதை அழுக்குச்செய்கிறார்கள்.
என் வயதோத்தவர்கள் அதை அலட்சிக்கிறார்கள்.
அதன் பஞ்சுமுடிச்சு எந்நேரமும்
அறுந்துபோகலாம்.
கச்சடாக்காரனுக்கோ* , காம்வாலிக்கோ*
பரிசளிக்கப்படலாம்

எங்களுக்கான தூரம் அதிகமாகிவிட்டதாய்
கவலைப்படுவில்லையெனினும்.
நினைத்துக்கொள்கிறோம் வெறுமனே.

ஒரு கடைசிநாளில்
வேலைவிட்டு போய்விடுவோமென்று அதுவும்
வேலைவிட்டு போய்விடும் என்று நானும்
தெரிந்துகொண்டபின்
மெளனமாய் உரையாட ஆரம்பித்தோம்,

அந்த நாற்காலியை எனக்கு
பிடித்துப்போயிற்று.


* கச்சடாக்காரர் – குப்பை அள்ளும் தொழில் செய்பவர்
* காம்வாலி – வீட்டு வேலைக்காரி/காரர்


netwealthcreator@gmail.com

Series Navigation