This entry is in the series 20080515_Issue

கே. ஆர். மணி


என் காரின் கண்ணாடிமீது
ஒரு ரொட்டித்துண்டு.

எவரும் தூக்கி எறிந்திருக்கும் வாய்ப்பில்லை
எலிகள் அவ்வளவு தூரம் ஏறியிருக்கவும் முடியாது.

நாய்களை நம்பமுடியாது ஆயினும்
இத்தனை உயரம் சாத்தியமில்லை.

கழுகுகள் மனிதர்கள்
உயிருடன் கூட்டமாயிருக்குமிடத்தில்
அவ்வளவு தைரியமாய் வருவதில்லை.

பூனைகளிலிருக்கலாம்.
சுவர்தாவலின் சுவாராசியத்திலும்
பயத்திலும் நழுவவிட்டிருக்கலாம்.

குருவிகள்..
சின்னவாய் கொண்டவை.
வாய்ப்பேயில்லை.

காக்கைகளுக்கு சாத்தியமதிகம்.
காக்கைகளின் கால்நகங்களில் வழியே
அவை கசிந்திருக்கலாம்.

ரிவைண்டரால் சுத்தப்படுத்திவிட
முடியும்தானென்றாலும்
பாவம் யாருக்கோ சாப்பிடகுறைவாய்போய்
பசித்திருக்குமே.


mani@techopt.com

Series Navigation