மகள் வளர்த்தேன்

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

இராம. வயிரவன்



மகள் வளர்த்தேன்
புதுமைப்பெண்ணாய் வளர்த்தேன்
ஆணுக்குப்பெண் சமம் என்றே
அறிவில் புகுத்தினேன்
தயக்கம் போக்கினேன்
தன்னம்பிக்கை கூட்டினேன்
சுயமறியாதை ஊட்டினேன்
புயம் ஓட்டினேன்
‘தவறா?’- தட்டிக்கேள் என்றேன்
கற்றுக் கொண்டாள்
கல்வியில்
கரை கண்டாள்
உத்தியோகம்
உயர்பதவி என
உச்சிக்குப் போனாள்
ஒளி விளக்கெனச்
சுடர் விட்டாள்!

மணவேளை
வந்தது
ஒத்த கருத்தினனைக்
கரம் பிடித்தாள்
ஓராண்டு கழிந்தது
ஒரு மகவு பிறந்தது

கரம்பிடித்தவனோடு
கருத்து வேறுபாடு
பினக்கு வந்தது
பெரிதாகியது
பிரிந்தனர் இருவரும்
பிரிந்தாள் மகளோடு!
சேர்த்துவைக்கும்
முயற்சிகள்
செல்லாமல் போனது!

இன்று
ஒற்றைப் பெற்றோராகத்
தன் மகளுக்குச்
சொல்லிக்கொடுக்கிறாள்
‘மன்னிப்பதும் மனித குணம்’ என்று
‘விட்டுக்கொடுப்பதும் வீரம்’ என்று
‘குடும்பத்திற்காக “நான்” தோற்கலாம்’ என்று!


– இராம. வயிரவன்

Series Navigation

இராம. வயிரவன்

இராம. வயிரவன்