நீர்த்திரை
ஹெச்.ஜி.ரசூல்

எரியும் தீக்குண்டாய் பாழ்கிணறு
தலைகீழாய் தொங்கவிடப்பட்டு
நெருப்புச் சவுக்குகளின்
அடிதாங்காமல் அலறல் நீள்கிறது.
நீரைக் கிழித்த மீன் குஞ்சாய்
நீந்தித் தொலைத்தபோது
பற்றியது நெருப்பு
ஒருநூறு குத்தப்பட்ட ஊசிகளோடு
நூல் பொம்மை ஒன்று
நீருக்குள் திறந்த வாசலில்
ம அரிபாவை கண்டடைய தியானித்திருந்தது
தீராதவலிகளுடன்
பேரீச்சம்பாளையினுள் ஒளித்து வைக்கப்பட்ட
உயிரற்ற மந்திரக் குழந்தையின் பேச்சு
இன்னமும் புரிபடவில்லை
நீர்த் திரைகளைத் தாண்டி நெருப்பு எரிகிறது