நீங்கள் மகத்தானவர்!

This entry is part of 41 in the series 20060421_Issue

கலைவாணி இராஜகுமாரன்


வெண்மணல் படர் வெளிகள் பார்க்கையில்
இன்னும் வாராத நதிகளையிட்டு வருத்தப்படுகிறீர்கள்
காதுகுடையும் பஞ்சு, மஞ்சள் துணி, பூ
இன்னபிற விற்கும் குழந்தைகளின்
சின்னக்குரலும் கெஞ்சலும்
போகுமிடங்களெல்லாம் நிழல்போல நீள்கிறது
கைக்குழந்தைப் பிச்சைக்காரிக்கு இடநினைத்து
தயக்கத்தில் தங்கிவிட்ட ஐந்துரூபாய்த்தாள்
உங்கள் சட்டைப்பைக்குள் சுட்டுக்கிடக்கிறது
கடந்த வாரம் ஏழாம் மாடியிலிருந்து தன்னை வீசியெறிந்து
கணவனை வெற்றிகொண்டவளுக்காய்
விழிக்கடையோரத்தில் அரைத்துளி நீரும்
சில நொடி மௌனமும் படர
உணவுச்சாலையில் மதுக்குவளையை உயர்த்துகிறீர்கள்.
வெற்றுக்காணிகளைக் கழிப்பறையாக்குபவர்களின் சங்கடமே
உங்களதும் நண்பர்களதும் இன்றைய பேசுபொருள்.
‘கவிவெளியில் ஆணாதிக்கம்’
நாளை ஆற்ற வேண்டிய சிறப்புரையை
மனதுள் நிகழ்த்தியபடி
நெடுஞ்சாலையில் விரையும்போது
நாசியில் மோதுகிறது
விற்காமல் இலைகளில் சுருண்ட பூக்களின் வாசனை
‘பாவம் பூக்காரி’
கடை வாசல்களில் சுருண்டிருக்கும் கரிய உருவங்கள்
பொதுவுடமை குறித்து தார்மீக வெறியேற்ற
நீங்கள்தான் எத்துணை மாமனிதராய்
வீட்டுக்குள் நுழைகிறீர்கள்.
தொலைவில் தெரிந்த ஒவ்வொரு வெளிச்சப்பொட்டிற்கும்
ஓடி ஓடிக் கதவு திறந்தவள் உறங்கிச் சில நொடிதான்
கோடை இரவு
நீண்டநேரமாக உலர்த்திக்கொண்டிருக்கிறது
வாயில் மறை திரைத்துணியின் சமையலறைப் பிசுக்கை.

-கலைவாணி இராஜகுமாரன்

Series Navigation