This entry is in the series 20040722_Issue

வேதா மகாலஷ்மி


என் புன்னகையில் தான்
நீ தினமும் பூத்திருப்பாய் என்றறிந்தும்,
வெறுத்துப் பேசி வேடிக்கை பார்க்கும் வேளை…
மனசுக்குள் ஜெயித்தாலும்,
உண்மையில்,
தோற்கிறேன் தான்…
தேய்ந்து மறையும் உன் கொலுசு சத்தத்தை
காதுகளுக்குள் தேக்கிடும்போதெல்லாம்!!!

என் சிறு பார்வை புரிதலுக்காய்
நீ காத்திருப்பாய் என்றறிந்தும்,
சொல்லாமலே கிளம்பும் வேளை…
மனசுக்குள் ஜெயித்தாலும்,
உண்மையில்,
தோற்கிறேன் தான்…
சட்டைப்பையில் உன் புகைப்படத்தை
பேருந்து நெரிசலில், பத்திரப்படுத்தும்போதெல்லாம்!!!

என் தொலைபேசி அழைப்பிற்காய்
நீ தவமிருப்பாய் என்றறிந்தும்,
பிடிவாதமாய் மறுத்து மடங்கும் வேளை…
மனசுக்குள் ஜெயித்தாலும்,
உண்மையில்,
தோற்கிறேன் தான்…
உனக்குப் பிடித்த பாடலுக்கு மட்டும்
ஒலியைக் கூட்டி வைக்கும்போதெல்லாம்!!!

உன் நினைவைக்கூட நிஜத்தில் மறுத்து
மனதை ஒருநிலைப்படுத்தி
படித்தபடியே தூங்கிப்போகும் வேளை…
தினமும் இரவில் ஜெயித்தாலும்,
உண்மையில்,
தோற்கிறேன் தான்…
ஒவ்வொரு அதிகாலையிலும், உன் முகமாய்
என் வீட்டு ரோஜா மலரும்போதெல்லாம்!!!
—-
piraati@hotmail.com

Series Navigation