காலமும் பயணியும்

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

தா.பாலகணேசன்


பயணிகள்
எவ்வளவு ஆசையோடு கேட்கிறார்கள்
தங்கள் முகவோவியங்களை வரைந்து தருமாறு

செம் பொன் சுடர்கள் படர்
தேமலெனத்திகழ்
செய் நதிக் கரையின் ஓவியர்களிடம்

எனதும்
எனை யொத்த நண்பர்களினதும்
உடைந்து, சிதறுண்ட பிம்பங்களினை
ஆற்று நீரலைக் கரங்கள்
எடுத்தும், ஏந்தியும் சிரிக்கையில்…

ஆற்றின் வழி வழியும்
இரகசிய இருப்பின் செளந்தர்யத்துள்
காற்றின் வெளி விரிந்து
காலங் கடந்து வீற்றிருக்கின்ற அற்புதத்துள்
நானுமோர் பயணியே

காலத்தைப் போலவே
எனதும்
எனையொத்த நண்பர்களினதும்
சுக துக்கங்கள்

எனது முகத்தை வரைந்து தாவென
கால ஓவியனிடம்
என்ன கேட்க வேண்டியிருக்கிறது;
அவன் தானே மிகப் பெரிய ஓட்டியாயிற்றே.

***
தா.பாலகணேசன்
கோடை கால மாலை
19.ஆடி.2002

Series Navigation

தா.பாலகணேசன்

தா.பாலகணேசன்