திண்ணைப் பேச்சு : அன்புள்ள சாரு நிவேதிதா

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

கோபால் ராஜாராம்



சாரு நிவேதிதா அவருடைய வலைப் பக்கத்தில் திண்ணை பற்றி எழுதியிருந்த குறிப்பு ஒன்றை எனக்கு அனுப்பி என் எதிர்வினை என்ன என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். சாருவின் குறிப்பு இது.

“திண்ணை.காம் என்ற இணைய தளம் உலகெங்கிலும் உள்ள ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், இந்துத்துவத் தமிழ்க் கும்பலின் ஹெட்குவார்ட்டர்ஸாக விளங்கி வரும் வேளையில் உயிரோசை மட்டுமே இன்று உலக அளவில் பரந்து பட்டுக் கிடக்கும் தமிழ்ப் படைப்பாளிகளின் இயங்கு தளமாக விளங்கி வருகிறது.”

திண்ணை கடந்த பத்து ஆண்டுகளாக இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஜெயமோகன் முதல் முத்துலிங்கம் வரை, ஞாநியிலிருந்து இ பா வரை, தமிழவன் (சாரு பாஷையில் தமாஷ் பேர்வழி) முதல் சுந்தர ராமசாமி வரை, பலரும் திண்ணைக்கு பங்களிப்புச் செய்திருக்கின்றனர். திண்ணையின் பத்தாண்டு வெளியீடுகளும் திண்ணை வலைதளத்திலேயே படிக்கக் கிடைக்கிறது. சாரு நிவேதிதா சொல்வதில் ஏதும் உண்மை இருக்கிறதா என்பதை வாசகர்கள் முடிவு செய்யட்டும். அவர் உயிரோசை/உயிர்மை வலை தளத்தைப் பாராட்டட்டும். எனக்கும் உயிரோசை பிடித்துத் தான் இருக்கிறது. மாயா, முத்துகிருஷ்ணன் போன்றோரின் அபத்தங்களைச் சகித்துக் கொண்டால் படிக்க புதிதாய்த் தெரிந்து கொள்ள பல விஷயங்கள் உயிரோசை தளத்தில் உள்ளன. உயிரோசையைப் பாராட்டி, தன் பிரசுரகர்த்தருக்கு தன் விசுவாசத்தைக் காண்பிக்க வேண்டும் என்றால் அதற்காக திண்ணையை ஏன் அவர் மட்டம் தட்ட வேண்டும்? யோசித்துப் பார்த்தால் ஒரு காரணம் புலப்படுகிறது. சாரு இளையராஜா பற்றிச் சொன்ன அபத்தத்தைக் கட்டுடைத்து சாரு எதையும் புரிந்துகொள்ளும் திராணியில்லாதவர் என்பதை திண்ணை பக்கங்களில் சேதுபதி அருணாசலம் எழுதியது தான் காரணமாய் இருக்க வேண்டும். சேதுபதி அந்தக் கட்டுரையை அனுப்பும்போது அந்தக் கட்டுரையை நகைச்சுவைக்குக் கீழ் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். சாரு பற்றிய கட்டுரையை நகைச்சுவைக்குக் கீழ் தான் வெளியிட்டிருக்க வேண்டுமோ என்னவோ?

சாரு திண்ணையைப் படிப்பதாக எனக்குத் தெரியாது. ஒரே ஒரு முறை திண்ணைக்கு அவர் அளித்த பங்களிப்பிலும் கூட ஜெயமோகனை விமர்சித்து , தன் உறுப்புகளின் அகலங்களையும், தான் எப்படி காம வெறியர் என்றும் தான் எழுதியதாய் நினைவு.

இளையராஜாவின் இசை பற்றிக் கருத்துச் சொல்ல, இசை தெரியாவிட்டாலும் ரசனை உள்ளம் வேண்டும். இசையறிவின்மையைப் பறைசாற்றிக் கொள்ள இளையராஜாவைத் தாக்கவேண்டுமா? சேதுபதியின் கட்டுரையில் அவர் மேற்கொண்ட கேள்விகளுக்கும், சாருவின் அபத்தங்கள் பற்றி அவர் எழுதியிருக்கும் பகுதிகளுக்கும் சாருவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இருக்கவும் இருக்காது.

ஏன் இளையராஜாவை சாரு விமர்சிக்கிறார்? இளையராஜா கே ஏ குணசேகரனின் மீது வழக்குத் தொடர்ந்தாராம். கத்தாரைப் பற்றி இளையராஜாவிற்கு நன்மதிப்பு இல்லையாம்.

நான் பெரிதும் மதிக்கும் நண்பர் கே ஏ குணசேகரனுக்கும், இளையராஜாவிற்கு நடந்த சிறு மனவருத்தத்தை முன்வைத்து இளையராஜாவைக் குற்றம் சாட்டும் சாருவின் பாணி புரிந்துகொள்ளக் கூடியதே. கே ஏ குணசேகரன் இளையராஜாவைப் பற்றி உயர்வாகத் தான் குறிப்பிட்டிருந்தார் என்ற செய்தியைச் சொல்லிவிட்டு, உடனேயே , அதற்கு எதிராகத் தன் கருத்தை முன்வைக்கிறார் சாரு. தன்னைப் பற்றிய தவறான தகவல்கள் பரவாமல் இருக்க வேண்டும் என்றுதான் இளையராஜா முயன்றார். அப்படி அவர் முயன்றதில் எந்தத் தவறும் இல்லை. சண்டை மூட்டும் சாருவிற்குத் தான் படிப்பது எதுவும் புரியாது என்பது தான் உண்மை.

கத்தார் ஒரு பாடகர் . மக்களை நோக்கி தன் லட்சியத்துக்காக பாடல் புனைந்து பாடுபவார். அவரிடம் இசைப் புலமையோ, சோதனைகளோ , பரந்த வீச்சோ எதுவும் இல்லை. அவருடைய ஒரு பாடலைக் கேட்டால் இன்னொன்றைக் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. இளையராஜா போன்று கத்தார் இசைக்கலைஞர் அல்ல. இந்த அடிப்படையைக் கூட புரிந்து கொள்ளும் திராணியில்லாத சாருவிடம் எதை முன்வைத்து விவாதம் செய்ய முடியும்? கருத்துகள் ஏதும் பொருட்படுத்தத் தக்கதாய், சிந்திக்க இடம் அளிப்பதாய் இருந்தால் விவாதிக்க இயலும். இப்படி அடிப்படைகளையே புரிந்து கொள்ளாத ஒருவருக்கு என்ன சொல்லி விளக்க முடியும்?

ஆஸ்கார் பரிசு என்பது அமெரிக்கப் படங்களை முதன்மையாகவும், அமெரிக்கச் சந்தையை முன் வைத்தும் நிகழ்த்தப் படும் ஒன்று. இன்றும் ஆஸ்கர் பரிசுகளில் விடுபட்ட முக்கியமான படங்கள், ஆளுமைகள் என்று ஒரு பட்டியல் உண்டு. அங்கீகாரம் என்ற அளவில் ஆஸ்கார் பரிசு ஏ ஆர் ரஹ்மானுக்கு வழங்கப் படுவது நம் பெருமைக்குரிய ஒன்று தான்.ஏ ஆர் ரஹ்மானும் கிளாசிக் இசையில் பாண்டித்தியம் பெற்றவர் தான். ஏன் ஏ ஆர் ரஹ்மானுடன் ஆஸ்கர் பரிசுக்கு நியமனம் பெற்ற எல்லோருமே கிளாசிக் இசைக் கலைஞர்கள் தான். ஆஸ்கார் பரிசு பெற்றவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்ற பொய்மையை ஏ ஆர் ரஹ்மானே தகர்த்திருக்கிறார்.

தமிழவன் தமாஷ் செய்கிறாராம். எனது சமகாலத்தவர் என்றாலும் ஒரு குறிப்பிட்ட பொருளில் எனக்கு அவரையும் ஒரு mentor என்று தான் நான் கருதிக் கொண்டிருக்கிறேன். படிகள் என்ற முக்கியமான சிற்றிதழை நடத்தியவர். பெங்களூரில் கன்னட அறிவுஜீவிகளுடன் தொடர்பு கொண்டவர். ஈழ இலக்கியத்தின் காத்திரமான அம்சங்களை விமர்சன நோக்கொடு அறிமுகப் படுத்தியவர். சாரு அளவிற்கு வெற்று ஆரவாரம் இல்லாமல், முக்கியமான மூன்று நாவல்களையும், பல கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியவர். அவருடைய விமர்சனங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. மொழிதல் கோட்பாடு என்று கவிதையின் நவீன ஆக்கங்களைக் கோட்பாடாக்க முயல்பவர். முதன்முதலில் தலித் இலக்கியத்தை அறிமுகம் செய்தவர். ஸ்ட்ரக்சுரலிசம் என்ற கோட்பாட்டை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியத்தின் பழங்கால இலக்கியத்தையும் சரி, சமகால இலக்கியத்தையும் சரி கட்டுடைப்புக் கோட்பாட்டினைப் பயன்படுத்தி பல ஆழமான விமர்சனக் கட்டுரைகளை எழுதியவர். அவர் உயிரோசையில் எழுதிவரும் கட்டுரைகளில் சில கருத்து மாறுபாடுகள் எனக்கும் உண்டு. ஆனால் வெறும் பெயர் உதிர்ப்பைத் தவிர வேறு எந்த விதமாகவும் இலக்கியப் பரிச்சயம் கொள்வதில்லை என்று பிடிவாதமாய் இருக்கும் திருட்டு எழுத்தாளர் சாருவிற்கு தமிழவனைப் புரிந்துகொள்ளும் எந்தத் தகுதியும் இல்லை. மனுஷ்ய புத்திரன் முன்வந்து சொல்லவேண்டும் – தமிழவனை தமாஷ் பகுதியாகத் தான் பிரசுரிக்கிறாரா?

நான் பெரிதும் மதிக்கும் இ பா ஒரு முறை சொன்னார், எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்த தைரியத்தை வைத்துக் கொண்டு மரபை எதிர்க்கிறேன் என்று கிளம்பி விடுகிறார்கள். இ பாவிற்கு ஒரு செய்தி : எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியாதவர்கள் கூட இசை விமர்சனம் செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.


Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்