சதாரா மாலதி

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

க்ருஷாங்கினி


வணக்கம்,
சதாரா மாலதி மறைந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. (27-3-07). சிறுவயதில் எழுதத்தொடங்கி, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த மாலதி, இடையில் பல ஆண்டுகள் எழுதாமல் கழித்தார். ஆனால் வாசிப்பும் அதைப் பற்றிய எண்ணங்களுடனும் வாழ்ந்தவர். மாலதி, தனது கவிதை ஒன்றை இப்படி ஆரம்பிப்பார், பறந்து போன தனது வெள்ளைப் பக்கங்களை யாராவது மீட்டுத்தாருங்கள் என்று. கழிந்துவிட்ட காலங்கள் இனி திரும்பாது என்ற உணர்வுதானோ என்னமோ, கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் என்று தொடர்ந்து அதிகமாக எழுதிக்கொண்டே இருந்தார்.

முதல் நாள் இரவு பெங்களூரிலிருந்து கிளம்பி, இரவு பிரயாணம் செய்து சென்னை வந்து இலக்கிய கூட்டங்களில் கலந்துகொண்டு அல்லது சின்னத்திரைக்கு வசனம் எழுதிக் கொடுத்துவிட்டு அன்று இரவே மறுபடியும் பெங்களூர் திரும்பி விடுவார். பெங்களூர் சென்றவுடன் குளித்து அலுவலகம் கிளம்பிவிடுவார். நான் கொஞ்சம் கடிந்து கொள்வேன். பறக்கவிட்ட வெள்ளைத் தாள்களை சேகரிக்க அவ்வளவு அவசரம்.

மாலதியின் மறைவுக்குப் பிறகும், அவரின் கணவரும், அன்னையும் என்னுடன் இன்றளவும் நேரிலும், தொலை பேசி மூலமும் தொடர்பு கொண்டு வருகின்றனர். உரையாடல்களில் அநேகமாக மாலதியின் மறைவும் இழைப்பைப் பற்றிய உருக்கமான சொல்லாடல்களுமாக இருக்கும் அவை. ஒரு தாயின் பதிவாக அது இருக்கும். மாலதியின் அம்மா லலிதா அவர்களிடம் நான் அடிக்கடி சொல்வேன், நம்மிடையே ஒரு பழமொழி உண்டே, ‘சுவரோடாவது சொல்லி அழு’ என்று, அதை மனதில் கொண்டு மாலதியின் ஞாபங்களை என்னிடம் எழுத்தாக அளியுங்கள் அது உங்களிடன் கரையாமல் தங்கிவிட்ட துக்கங்களைக் கரைக்க உதவும் என்று. நீண்ட நாட்கள் தயக்கத்திற்குப் பிறகு, நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு எனக்கு அவர் எழுதி அனுப்பியதுதான் “என் மகள் மாலதி”.

இலக்கியம் என்பதே மனிதனின் உணர்வுகளை மனிதர்களுடன் பகிர்வதுதானே. பகிர்வது வாழ்க்கையை. அதில் ஒரு சில துளிகளை. எனவே நாம் எழுத்தை ஒரு வாகனமாக்கி கவிதை கட்டுரை, நாவல், நாடகம், சிறுகதை என எல்லா தளங்களிலும் அந்த வாகனத்தில் ஏற்றி அடுத்தவர்களிடம் சமர்ப்பிக்கிறோம். எல்லா எழுத்தும் எல்லோரையும் சென்றடையும் என்று எதிர்பார்த்து இல்லை. அது தேவையும் இல்லை. நம் பார்வையில் இடறிய பலதும் பகிரப்படத்தான் என எல்லோருமே எண்ணுகிறோம். அதுதான் சரி என்று நம்பவும் செய்கிறோம். எல்லோர் வாழ்க்கையும் இன்பமும், துன்பமும் இணந்ததுதான். ஆனால், துன்பங்கள் கரையாமல் நின்றுவிடும். அதுவும், தான் பெற்ற குழந்தைகளின் இழப்பு அல்லது இறப்பு, கண் முன்னே நிகழ்வது. அதனால்தான், தசரதனது துக்கமும், சந்திரமதியுடைய புலம்பலும் இன்றளவும் பேசப்படுகின்றன.

மனித மனங்களில், ஒரு நினைவு முன் வந்தது முன் செல்லும், பின் வந்தது பின்னேதான் செல்ல வேண்டும், செல்லும். பிறப்பு, சிரிப்பு, பேச்சு, நடை, கல்வி என எல்லாமே சற்றே முன் பின்னாக இருந்தாலும், ஒரு ஒழுங்கு முறையில் விளையும். ஆனால் மரணம் எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும். இன்னமும் அதனால்தான் இனக்கலவரங்களில் கொத்துக் கொத்தாக வயது வித்யாசமின்றி மடியும் உயிர்கள் நம்மைக் கதறவைக்கின்றன.

மாலதி, லலிதாவிற்கு ஒரே ஒரு வாரிசு. எண்ணமும் செயலும் அவரைச் சுற்றியே பின்னப்படிருக்கும். சில சமயம் அது மிகைப் படுத்தலாகக் கூட நம்மைப் போன்றவர்களுக்குத் தோன்றக்கூடும். ஏன் எனில் நாம் அனைவருமே தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள். வாழ்க்கை அவர்களுடையது.

இது இலக்கிய இதழ்களில் வெளி வந்த பின்னரே அதைத் தொகுப்பாக ஆக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.

மாலதியின் அன்னை என்னிடம் எழுதிக்கொடுத்து, அதை மாலதியின் மறைவு தினமான 27-3-09 அன்று திண்ணையில் வெளியிட்டதற்கு நன்றி. உலகத்தில் அநேகர் படித்திருக்க வாய்ப்பாக அமைந்ததற்கு நன்றி. மாலதியின் மரண கால கவிதைகள் சிலவற்றையும் இணைத்து எனது பதிப்பகமான ‘சதுரம் பதிப்பகத்தில்’ விரைவில் வெளியிட உள்ளேன்.

அவருடைய கவிதைகள் இரண்டு தாய் லலிதா அனுப்பியதிலிருந்து

கவிதை ஒன்று

என்னை ஜயித்தபின் மரணம்
ஜெயிப்பது சுலபமென்று நினைத்தேன்
காதல் வற்றாத மனம்போலவே
பயம் பிறழாமல் தவழ்கிறது
மரண எண்ணங்களில்
தாண்ட முடியாதது மரணக் கிணறு
எனினும் ஆசை பதைத்துப் பாய்ந்து
தூர்ந்து விட்டது அதை முடியாத
வாழ்வில் கிடைந்து நீராடுகிறேன்
குடம் கொண்டு முகந்து முகந்து
செடி வளர்க்கிறேன்.

——————————–
கவிதை இரண்டு

எரிந்து விழுந்த ஒற்றைச் சதைக்கடம்பில்
ஒட்டிக் கொண்டு கிடந்த வரலாற்றுத் துகள்கள்
அகலிகையின் பொருமலும், ஐவ்ரின்
எயிற்றுத் தடங்களும் அம்மையின் பெருமூச்சும்
தொடத் தொட்டு செற் செறிந்து
பல்லாயிரம் வருட காலத்துப் பாசி
அர்த்தநாரியின் இடது புறம் திருகி
விசிறி அடிக்கும் இவள் ஆண் மறுத்தவள்
ஏலத்தில் எஞ்சியிருக்கிறாள்
இன்னொரு முறை கூம்புகள்
கொடி பிடித்தன எழும்பி
தையல் கலைஞனின் விளம்பரமாய்
வீதிப் பெண் வியாபாரிகளின்
மூலதனமாய் எங்கும் எங்கும்
ஒலியொளிகளில் விசேஷமாய்
காம்பு மறைத்த கூம்புகள்
காட்சிகளாய்
கடைவிரித்த சேனல்களில்
இந்தச் சதைகள் பிரத்யேகம்
ஆணுக்காய் வலிந்தவை
பெண்ணைப் பிணமாக்க
கங்கணம் கட்டிக் கொண்டன
தலைமுறைச் சீருக்கு கட்டுச்
சோறு கால அவசரத்தில்
வைத்திருப்பவை
அவற்றில் ஒன்று பாமா
சொன்ன ஒத்தை
நெருப்புக் குச்சியாக
அன்று மதுரையில் விழுந்தது
மகவில்லாத பாலூட்டி ஒன்றின்
உக்கிரமான திருகலின் முடிவில்
அது ஏன் கையாகவோ காலாகவோ
இல்லாமல்?

நன்றி.

Series Navigation

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி