தேசம் என்ன செய்யும்

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

ராமசெல்வி


வலைப்பூக்கள் வசதி வந்தபின் நிறையபேர் தங்கள் சிந்தனைகளை கட்டுரைகளாகவும், பின்னூட்டங்களாகவும், கவிதைகளாகவும், எதிர்வினையாகவும், எழுதி அதனைப்பலரிடம் கொண்டுசேர்க்கவும் முடிந்திருக்கிறது, ஆனால் அதில் பல இளைய சமுதாய நண்பர்கள் இந்ததேசத்தின் மீதும் அரசியல் அமைப்பின் மீதும் சாதி மத அடையாளங்களின் மீதும் கடும் கோபத்தோடும் ஆவேசத்தோடும் எழுதுவதை படிக்கமுடிகிறது, இன்றைய சினிமாக்கள் கூட ஜப்பானையும், சிங்கபூரையும் உதாரணங்கள் காட்டி இந்தியாவின் முன்னேற்றம் பாழ்பட்டு கிடப்பதாய் வருத்தப்பட்டு வருகிறது,

எனக்கு தோன்றுவதெல்லாம் இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயம் ஏன் இந்தியாவை புரிந்துகொள்ள இவ்வளவு சிரமப்படுகிறது என்பதுதான்,பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் தனித்தனி ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்ட ஒருதேசம் தன்னகத்தே ஆயிரம் ஆயிரம் சாதி மதம் இனம் மொழி என எல்லா வகையுலும் தனித்தனியாக இத்தனை ஆயிரம் ஆண்டுகளாய் சிந்தித்த தேசம் ஏதோ ஒரு சுதந்திரபோராட்டத்தால் ஒன்றினைக்கப்பட்டதால் தனது சிந்தனைகளை ஒரு 50 ஆண்டுகளில் தனது 100 கோடி மக்களுக்கு அடிப்படை உணவு கொடுக்க போராடிக்கொண்டிருக்கும் ஒரு நிலையில் வேறுபாடுகளை மறந்து ஒன்றாய் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்.

ஜப்பானின் நிலை உலகப்போருக்கு முன் ஒரு மேம்பட்டநிலையிலேயே இருந்தது அதன் பின் உலகப்போரில் இரண்டு அணுகுண்டுகளை கொண்டுதாக்கப்பட்டது ஒரு அழிவுதான் என்றாலும் அது ஒரு முன்னேறிய வளர்ந்த நாட்டின் தொடர் வளர்ச்சியை எந்த அளவு பாதித்திருக்கப்போகிறது என்பது சற்று சிந்தனைக்குரியது, ஆனால் இந்தியா மொத்தமாக சுரண்டப்பட்டு ஒரு வெற்று பாத்திரமாக இந்தியர்களுக்கு சுதந்திரம் என அளிக்கப்பட்டபோது எத்தனை சோதனைகள், ஜப்பானில் அணுகுண்டுகளால் இழந்த உயிர்களை விட நமது நாடு சுதந்திரம் வாங்கிய சில மணித்துளிகள் இழக்கதொடங்கிய உயிர்களின் எண்ணிக்கை அதிகம் பிரிவினையின் போது நாம் சந்தித்த இழப்புகள் எந்த சராசரி கற்பனைக்குள்ளும் எட்ட முடியாத கொடுமை,

இந்தியாவை ஏதாவது ஒரு நாட்டுடன் ஓப்புமைபடுத்தி பார்க்க இளைய சமுதாயம் பார்க்க விரும்பினால் 1947 ல் எல்லா நாடுகளும் எந்த நிலையில் இருந்தன என மனதில் கொண்டு அதன் பின் நமது வளர்ச்சியை கணக்கெடுக்க வேணும். ஒரு ஜப்பானையோ அல்லது சிங்கப்பூரையோ காட்டி நாம் இன்னும் திருந்தவில்லை என்று கோபப்படுவது சரியில்லை என்றே தோன்றுகிறது,

நம் இந்தியாவில் எத்தனை வேறுபாடுகள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அடையாளம், அவர்கள் ஒரு 60 ஆண்டுகளில் தங்கள் வேறுபாடுகளை எல்லாம் விட்டு ஒன்றாக சிந்திக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும், இன்றைய இளைய தலைமுறை இத்தனை வேகமாக சாதி,மத,இன,மொழி அடையாளங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் அதை ஒரு சம்பிரதாயமாக மட்டும் கடைபிடிக்கும் நிலையில் மாறியிருப்பது எந்த ஒரு நாட்டிலும் நடைபெறாத வேகமான மாற்றம் என்றே நான் நினைக்கிறேன், அது பெருமை படக்கூடியதும் கூட,

ஏதோ ஒருசில அடிப்படைவாத நிலைவாதிகளை மட்டும் ஊடகங்கள் வெளிப்படுத்துவதில் இருந்தே அவைகள் சொற்பமாகவே உள்ளதை அறிய முடிகிறது, இன்றைய இலக்கிய உலகமும்,அறிவாளர்களும்,நடுநிலை வாதிகளும் இந்த மாற்றத்திற்கு பெரும்பங்காற்றியுள்ளனர் என்பது நிச்சயம்,

அது நடந்து கொண்டுருக்கிற நிலையில் இன்று ஏற்ப்பட்டுள்ள சில சம்பவங்கள் ஏதோ இந்தியா பிரிவினையால் தவிக்கிறது போன்ற பொய்த்தோற்றம் கண்டு இளைய சமுதாயம் கோபமாகிறது, அது சந்தோஷமான விஷயம் தான் ஆனால் தெளிவு படுத்த வேண்டிய கோபமும் கூட,

இப்போது காணப்படுகிற பிரச்சினைகளைவிட கடுமையான சோதனகளை இந்த தேசம் வெற்றிகொண்டு தாண்டி வந்திருக்கிறது அது அப்போதைய ஊடக வளர்ச்சி குறைகளால் அறியப்படாது இருந்ததே ஒழிய இது புதிதில்லை, தனது கம்பீர வளர்ச்சியால், அமெரிக்கா போன்ற மனித உரிமைகள் மிகுந்த நாட்டில் கத்திரினா போன்ற இயற்கை அழிவு மீட்பு பணிகளில் காணப்பட்ட இனதுவேஷம் போல் தனது சுனாமி பாதிப்புகளிலும், குஜராத் பூகம்பங்களிலும் இந்த தேசம் எந்த வேறுபாடும் காட்டாமல் பொங்கிஎழுந்து ஓடியதை கண்டு அறியமுடியும், அதுதான் இந்தியா,

இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டியது, இந்தியா ஒரு அற்புதமான கூட்டுகுடும்பம் அதன் உள்ளே எத்தனையோ வேறுபாடுகள் வரிசைகட்டி நிற்க்கும் அதெல்லாம் அதன் பாரம்பரிய அடையாளம்,அதனைக்கொண்டு அது அந்த அடையாளங்கள் அழிந்து போகாமல் தன் சுயமுயற்சியால் தட்டுத்தடுமாறி இன்று உலகே நிமிர்ந்து பார்க்கும் ஒரு தேசமாக மாறி இருக்கிறது, அது வெறும் 60 ஆண்டுகளில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம். இன்னும் இங்கே தேவைகள் ஏராளம் இருக்கிறது அது நம்நாட்டின் இயல்பு, மக்கள்தொகை என்ற பெரிய சுமையும் படிப்பறிவு குறையும் மற்ற எந்த வளர்ந்த நாட்டைவிட இங்கே அதிகம் அதன் பாதிப்புகள் நமது வெற்றியை தள்ளிப்போட்டிருக்கின்றன, இன்று உலகிலேயே அதிக அந்நியச்செலாவனி கையிருப்பில் உள்ள சீனாவில் தேவையான எண்ணிக்கையில் குழந்தை பெறமுடியுமா? ஆனால் நம்நாடு அதுபோன்று யாரையும் வற்புறுத்துவதில்லை,அறிவுறுத்தல் மட்டுமே செய்கிறது இப்படி ஜனநாயக கடைமையும் செய்துகொண்டு முன்னேற்றத்திலும் குறைந்து விடாமல் தனது சாதனையை செய்து வருகிறது அதுதான் இந்தியா.

ரத்தத்தில் ஊறிப்போன வேறுபாடுகளை களைய காலங்கள் பிடிக்கும், அதனை மக்களை நல்ல சிந்தனையாளர்களாக ஆக்குவதால் மட்டுமே சாதிக்கமுடியும், அது நல்ல இலக்கியங்களாலும், கலைகளாலும்தான் சாத்தியம், அதனை இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும், இந்த தேசம் ஒரு களம் அதில் நல்ல பயிர்கள் வளர இளைய சமுதாயம் கோபப்படுவதை விட்டுவிட்டு குணப்படுத்த முயலலாம், அதற்கான அற்புதமான மருந்துகள் இந்தியாவில் மகாத்மா,புத்தர், போன்றவர்களால் கண்டு கொடுக்கப்பட்டுள்ளது.
–ராமசெல்வி


rm_slv@yahoo.com

Series Navigation

ராம செல்வி

ராம செல்வி