ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

மலர்மன்னன்


பயங்கரவாதிகளை முகமதிய பயங்கரவாதிகள் என அடையாளப் படுத்தலாகாது என முகமதிய பயங்கர வாதத்தால் சூடு பட்டுக்கொண்டிருக்கும் பிரிட்டனின் அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற முமதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கும் வாக்கு வங்கி அரசியல் ஆரம்பமாகிவிட்டது என்பதற்கு இது ஓர் அடையாளம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் இப்போது கவனிக்க வேண்டியது இன்னொரு கோணம்.

பொது மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் குண்டு வைத்து ரத்தச் சேறாக்கும் பயங்கர வாத முயற்சிகளில் கைது செய்யப்படுபவர்களை ஆசியர்கள் என்றும், இந்தியர்கள் என்றும் ஊடகங்கள் அடையாளப் படுத்தத் தொடங்கியுள்ளன. இப்போதெல்லாம் கைதாகிவரும் முகமதிய பயங்கர வாதிகளில் ஹிந்துஸ்தானத்தைச் சேர்ந்த முகமதியர்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதும் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளிலிருந்து தெரியவருகிறது.

உண்மையில், அனைத்துலகிலும் முகமதிய பயங்கர வாதச் செயல்களால் நீண்ட காலமாக மிக அதிக அளவில் உயிர்ச் சேதமும் பொருள் சேதமும் அடைந்துவரும் தேசம் ஹிந்துஸ்தானம்தான். பயங்கரவாதச் செயல்களிலிருந்து நாட்டின் உடமைகளையும், நாட்டு மக்களின் உயிரையும் பாதுகாப்பதற்காக மிக அதிக அளவில் மனித வளைத்தையும், அரசின் நிதி ஆதாரத்தையும் செலவிடுகிற கட்டாயத்தில் உள்ள நாடும் ஹிந்துஸ்தானம்தான். ஆனால் நமது மத்திய, மாநில அரசுகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகளின் மெத்தனம், தயக்கம், வாக்கு வங்கி ஆதாயம் ஆகிய காரணங்களால்
பயங்கர வாதிகளின் கொட்டம் தங்கு தடையின்றிப் பெருகி, அவர்கள் கைது செய்யப்
பட்டாலும் காவல் நிலையங்களிலும் சிறைச் சாலைகளிலும் நிஜமான ராஜாங்க விருந்தினர்போல உபசரிக்கப்படுவதாலும், சிறைபட்டிருக்கும் பயங்கரவாதிகளின் நலன்கோரி மா நில முதல்வர்களும் அதிகாரிகளும் வெளிப்படையாகவே விண்ணப்பம் செய்வதாலும் வெகு விரைவிலேயே ஹிந்துஸ்தானம் முகமதிய பயங்கர வாதிகளைப் பராமரிக்கும் தேசம் எனப் பிற நாடுகளால் அறிவிக்கப்படும் நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஹிந்துஸ்தானத்து முகமதிய இளைஞர்கள் இதன் காரணமகவே அச்சமின்றிப் பயங்கர வாதக் குழுக்களில் இணைவதும் அதிகரித்து வருகிறது.

ஹிந்துஸ்தானத்து அரசியல்வாதிகள் முகமதிய பயங்கர வாதம் நமது மண்ணில் வேரூன்றிவிட்டிருப்பதற்குச் சமாதானம் சொல்லவும் தயங்குவதில்லை. ஊடகங்களும், தம்மை மதச்சார்பற்ற நடுநிலையாளர்கள் எனக் கட்டிக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தும் எழுத்தாளர்களும் அந்தச் சமாதானத்தையே திருப்பிச் சொல்லவும் யோசிப்பதில்லை.

முமதியரிடையே அதிக அளவில் வறுமையும், கல்வியறிவு இல்லாமையும்,வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுகின்றனவாம். அதனால்தான் முகமதிய இளைஞர்கள் மனம் வெறுத்து வழி தவறி பயங்கர வாதத்தின் பக்கம் போய்விடுகிறார்களாம். இதைத் தவிர்ப்பதற்கு உள்ள ஒரேவழி கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கான நிதியுதவி என எல்லா வகைகளிலும் முகமதியருக்குத் தனிச் சலுகை தருவதுதானாம். இவ்வாறு சிறுபான்மையினர் என்கிற அடிப்படையில் முகமதியருக்குத் தனிச் சலுகைகள் வழங்குவதில் நமது அரசியல் கட்சித் தலைவர்களிடையே ஒரு போட்டியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் பயங்கர வாதச் செயல்கள் தொடர்பாகக் கைதாகிற முகமதியர்கள் நன்கு படித்தவர்களாகவும், நல்ல வேலையில் இருப்பவர்களாகவும், வசதிக்குக் குறைவில்லாதவர்களாகவுமே காணப்படுகிறார்கள். இவ்வாறான பிரத்தியட்ச நிலவரத்தைக் காணுகின்ற போதிலும் அதற்கு முரணாக நமது அரசியல் கட்சித்தலைவர்கள் முகமதிய இளைஞர்கள் பயங்கர வாதச் செயல்களில் ஈடுபாடு கொள்வதை நியாயப்படுத்துவதால் ஹிந்துஸ்தானம் முகமதிய பயங்கர வாதத்திற்கு அனுதாபம் காட்டி அனுமதி வழங்கும் தேசம் என்கிற கருத்து பரவலாக வலுப்பெறத் தொடங்கும்.

இங்கு பலவாறான பயங்கர வாதச் செயல்களுக்காக விசாரணைக் கைதிகளாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் முகமதிய இளைஞர்கள் நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படுகிற போதும், அவர்கள் திரும்ப அழைத்துச் செல்லப்படுகிற போதும், நீதிமன்ற வளாகத்தில் பெருந் திரளாகப் பலர் கூடி நின்று அவர்களைப் பாராட்டி ஊக்குவித்து வாழ்த்தொலி எழுப்ப அனுமதிக்கப் படுகிறார்கள். விசாரணைக் கைதிகளும் தாம் ஏதோ மாகத்தான சாதனை செய்துவிட்டவர்களைப் போல நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு, கைகளை அசைத்துக் கொண்டு கம்பீர நடை போடுகிறார்கள். அவர்களைப் பார்த்தால் சிறைச் சாலையிலிருந்தோ காவல் நிலையத்திலிருந்தோ அழைத்து வரப்படும் குற்றவாளிகளாகத் தெரிவதில்லை. உடம்பில் ஒரு தூசு கூடப் படாமல், ஏதோ மகிழ்வுச் சுற்றுலாவுக்கு வந்து போகிறவர்கள் மாதிரிதான் தோற்றமளிக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் ஜெர்மனியிலிருந்து ஒரு பெண்மணி என் வீட்டிற்கு வந்திருந்தார்.
இலங்கை திரிகோணமலைப் பகுதியில் ஐக்கிய நாடுகள் அவை அமைப்பு ஒன்றின் தொண்டராகப் பணியாற்றச் செல்லும் வழியில் சில நாட்கள் சென்னையில் தங்கிய அவர், பேச்சுத் தமிழில் சிறிது பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே என்னோடு அதிக நேரம் செலவழித்தார்.

ஓர் இரவு உணவருந்தியவாறே தொலைக் காட்சியில் செய்தி விவரங்களை நாங்கள் பார்த்திருக்கையில், ஒரு முகமதிய பயங்கர வாத அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படும் காட்சியைக் காண நேர்ந்தது. அந்தக் கோலாகலத்தைப் பார்த்து மேல்விவரம் கேட்ட ஜெர்மன் பெண்மணி, நான் தெரிவித்த தகவல் அறிந்து ஆச்சரியப்பட்டார். முகமதிய பயங்கர வாதிகளுக்கு இங்கே இவ்வளவு ஆதரவு இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் இத்தனை வெளிப்படையாக அதைப் பகிரங்கப் படுத்த அனுமதிக்கப்படுகிறதா? என்றெல்லாம் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார். நம் தேசத்தைப்பற்றி எம்மாதிரியான அபிப்பிராயம் வெளியே போய்க்கொண்டிருக்கிறது என்பது தெரிய வேண்டும் என்கிற எண்ணத்தால் இதைச் சொல்கிறேன்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு ஏராளமான உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் விளைவித்தது. குற்றவாளிக் கூண்டில் எற்றப்பட்டவர்களிடையே தாம் இழைத்த கொடுமை குறித்து ஒரு சிறிதளவு வருத்தமும் தென்படவில்லை. தாõம் பிறந்து வளர்ந்து வசதியாக வாழ்ந்துகொண்டும் இருக்கிற பூமி! தாம் கலந்துறவாடும் சமுதாயம்! ஆனால் அதற்குத்தான் கொஞ்சமும் விசுவாசம் இன்றி இத்தகைய பெரும் கொடுமையைச் செய்திருக்கிறோம் என்கிற உறுத்தல் சிறிதேனும் இல்லை. நம்மோடு வாழ்ந்துவரும் பல குடும்பங்களின் அடி வேரையே ஈவிரக்கமின்றிப் பிடுங்கிப் போட்டுவிட்டோமே என்கிற குற்ற உணர்வு அவர்களிடம் சிறிதும் புலப்படவில்லை. குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்காக மனம் வருந்தி, எதோ ஒரு கண நேர ஆத்திரத்தில் தவறு செய்துவிட்டோம் என மன்னிப்புக் கோரும் மனப்பான்மையில்லை. ஆனால் நீதி மன்றம் அக்கொடுஞ் செயலுக்காக அவர்களுக்கெல்லாம் அளித்த தண்டனை எத்தனை மென்மையானது என்பது உலக நாடுகளின் கவனத்திற்கு வராமலா போகும்?

குற்றம் நிரூபிக்கப் பட்டுவிட்ட நிலையில் ஏராளமான உயிர்ச் சேதங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்பதற்காகவாவது அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டாமா? என்கிற கேள்வி பல்வேறு தேசங்களிலும் வலம் வந்துகொண்டிருக்கிறது.

தேசத்திற்கே தலைமைப் பீடம் எனச் சொல்லத் தக்க நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர வாதிகள் புகுந்து தாக்குகிற அளவுக்கு நிலைமை முற்றி, அவர்களின் முயற்சியை முறியடிப்பதற்காகக் காவலர் பலர் உயிர் துறக்க நேரிட்டிருக்கிறது. வேறு தேசமாக இருந்தால் அக்கணமே தேசம் முழுவதும் பயங்கர வாதிகளைக் களையெடுக்கும் வேலை விறுவிறுப்பாகத் தொடங்கியிருக்கும். ஆனால் ஹிந்துஸ்தானத்திலோ குற்றம் உறுதி செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு அந்த தண்டனையிலிருந்து விலக்கு அளிக்காலாமா என்பது குறித்துப் பல மாதங்களாகப் பரிசீலனை நடந்து வருகிறது!

நாடு முழுவதும் பாகிஸ்தானின் உளவு நிறுவனம் வேர் பரப்பி முகமதிய பயங்கர வாதக் குழுக்களுக்கு ஆள் எடுக்க வசதி செய்து தந்து, பல நாச வேலைகள் நடைபெறவும் வழிசெய்து கொடுத்திருப்பதோடு, ஹிந்துஸ்தானத்தின் பொருளாதாரத்தை முறியடிக்க ஹிந்துஸ்தானத்து ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தானே அச்சடித்து நம்மிடையே புழக்கத்தில் விட்டு, எல்லாவற்றுக்கும் உச்ச கட்டமாக நாடாளுமன்றத்தையே வெடிவைத்துத் தகர்க்கும் அளவுக்கு நிலைமை முற்றிவிட்ட போதே இன்னொரு நாடாக இருந்தால் உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும்!

இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என நீதிமன்றத் தீர்ப்பு வந்தமைக்கே நெருக்கடி நிலையை ஏற்றுக் கொன்டு, “முற்போக்கு” வாதிகளின் ஆதரவும் தாராளமாகக் கிடைத்த தேசம்தானே இது, ஒரு நியாயமான காரணத்திற்காக நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு ப்யங்கர வாத ஊடுருவலை வேரறுக்கும் செயல் தீவிரப்படுத்தப்
பட்டிருக்குமானால் அதற்கு உலக அரங்கில் ஆதாரவு கிடைத்திராமல் போயிருக்காது. ஆனால் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அதற்கான தொலைநோக்குப் பார்வையோ, புத்தி சாதுரியமோ, சாமர்த்தியமோ, துணிவோ இல்லாமல் போய்விட்டது.

இன்று நிலைமை வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது என்று சொல்லத்தக்கதாகிவிட்ட போதிலும் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனம் அகலவில்லை. மாறாக முகமதிய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது அனுதாபமும், மென்மைப் போக்கும் அதிகரித்துள்ளது. நக்சலைட் இயக்கத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது இவ்வாறான பரிவு காண்பிக்கப்படுவதில்லை. பிடிபடும் நக்சலைட் இளைஞர்கள் காவல் நிலையங்களிலும் சிறைச் சாலைகளிலும் மிகக் கடுமையாகவே நடத்தப்படுகிறார்கள். ஆனால் பிடிபடும் முகமதிய பயங்கர வாதிகளிடம் அதே காவல் துறையினரும் சிறைச்சாலை அதிகாரிகளும் மிகவும் மரியாதையோடும், அச்சத்தோடும் நடந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்துகொடுக்கிறார்கள். முகமதிய பயங்கரவாதிகளிடம் விசாரணை செய்யும்போது கடுமை காட்டினால் எங்கே ஆட்சியாளர்களிடமிருந்து தமக்குக் கண்டனமும், தண்டனையும் கிடைத்துவிடுமோ என்கிற தயக்கம் அதிகாரிகளிடம் காணப்படுகிறது. அரசாள்வோர் எவ்வழி, அவ்வழியே அதிகாரிகள் கூட்டமும்! அவர்களை நொந்து என்ன பயன்?

லண்டனில் குண்டு வெடிப்பு சதியிலும் பின்னர் குண்டு வெடிப்பு நாசவேலையிலும் ஈடுபட்ட முகமதிய இளைஞர்கள் ஹிந்துஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள். பொறுப்பான கடமையைச் செய்ய நியமிக்கப்பட்டு கணிசமான சம்பளம் தரப்படும் நிலையில் உள்ள டாக்டர்கள் அவர்கள். இந்தச் செய்தி வெளியானதுமே ஹிந்துஸ்தானத்து ஊடகங்கள் பதறியடித்துக் கொண்டு அவர்களின் பெற்றோர், உற்றார், நண்பர்கள் எனப் பலரையும் தேடிச் சென்று பிடிபட்ட இளைஞர்கள் மீது அனுதாப அலையினைத் தோற்றுவிக்கத் தொடங்கிவிட்டன.

மிக அதிக எண்ணிக்கையில் செலாவணியாகும் ஆங்கில நாளேடான டைம்ஸ் ஆப் இந்தியா முதல் பக்கத்திலேயே பிடிபட்ட இளைஞர்களின் தாய்மார்களைப் பேட்டி கண்டு சோகக் கதையைப் பரப்பலானது. என் மகன் அமைதியானவன்; பயங்கரவாதச் செயல்களுக்கெல்லாம் அவன் போகவே மாட்டான் என்று தாய்மார்கள் கண்ணீர் மல்க சத்தியம் செய்யாத குறையாக உறுதியளிக்கின்றனர். ஒரு தாய் மிகவும் அப்பாவித்தனமாக என் மகன் தினமும் தவறாமல் குரான் வாசிப்பான்; தொழுகை செய்வான் என்றெல்லாம் விவரிக்கிறார், பிரச்சினையே அதுதான் என்பது தெரியாமல்!

பிடிபட்டு விசாரணைக் கைதிகளாக இருக்கும் நக்சலைட் இளைஞர்களின் பெற்றோரையோ நண்பர்களையோ இதேபோல் விரிவாகப் பேட்டி எடுத்துப் பக்கம் பக்கமாக வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் இந்தப் பிரபல ஊடகங்களுக்கு இல்லாமல் போனதேன்?

போதாக்குறைக்கு, நமது பிரதமர் மன்மோகன் சிங்கே விசாரணையில் உள்ள முகமதிய இளஞர்களின் தாய்மாருடைய கண்ணீர்ப் பேட்டி கண்டு இரவெல்லாம் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு துக்கப்பட்டதாகப் பகிரங்கமாய் அறிவிக்கிறார்!

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முகமதியக் குழுக்கள் மதத்தின் பெயரால் ஜிகாத் நடத்துவதாகத்தான் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன. தங்கள் மதத்திற்கு ஆபத்து என்பதால்தான் அதனைச் சமாளிக்கும் பொருட்டு பயங்கர வாத நாசவேலைகளில் இறங்குவதாக அவை பெருமையுடன் அறிவிக்கின்றன. எவ்விதத்திலும் பிரச்சினையில் சம்பந்தப் படாத அப்பாவி மக்கள் பலரைக் கொன்று குவித்தும், நிரந்தரமாகப் பலரை ஊனப்படுத்தியும் ஏராளமாகப் பொருட் சேதம் விளைவித்தும் கொடுஞ்செயல் புரிவது குறித்து அவை கவலைப் படுவதில்லை. இத்தகைய வெறியாட்டங்களைப் பெருமிதம் கொள்ளத்தக்க சாதனையாகவும், தமது மதத்திற்கு ஆற்றும் கடமையாகவும்தான் அவை மகிழ்ச்சியடைகின்றன. ஆனால் முகமதிய பயங்கர வாதச் செயல்களால் உலகில் வேறெந்த நாட்டையும்விடக் கூடுதலாக இழப்புகளை அனுபவித்து வரும் ஹிந்துஸ்தானத்தின் பிரதமர் மன்மோகன் சிங் பயங்கர வாதிகள் ஒவ்வொருவரையும் தனி நபராகத்தான் அடையாளம் கான வேண்டும் என்று உபதேசிக்கிறார்! பயங்கர வாதக் குழுக்களின் உறுப்பினராகக் கூட அவர்களைக் காணக் கூடாதாம்! குறிப்பிட்ட ஒரு மதத்தோடு பயங்கர வாதக் குழுக்களை அடையாளப் படுத்தக் கூடாதாம்! அந்த பயங்கர வாத இயக்கங்களே தமது மதத்திற்காகத் தான் பயங்கரவாதச் செயல்களில் தாம் ஈடுபடுவதாக ஒவ்வொரு முறையும் பகிரங்கப் படுத்திய போதிலும் நமது பிரதமர் முகமதிய பயங்கர வாதக் குழுக்களுக்கு மத அடையாளம் கொடுப்பது முகமதிய சமுதாயத்தைப் புண்படுத்துவதாகும் என்கிறார். இவ்வளவுக்கும் எந்த முகமதிய மத குரு மாரும் மதத்தின் பெயரை இழுத்தால் தலை கொய்யப்படும் என முகமதிய பயங்கர வாதக் குழு எதற்கும் பத்வா கொடுக்கவில்லை!

பிடிபட்டிருக்கிற முகமதிய பயங்கர வாத இளைஞர்கள் வேலை வெட்டியில்லாதவர்களோ தெருக் கூட்டுவது போன்ற பணியில் உள்ள விவரம் தெரியாத நபர்களோ அல்ல. மாறாக, டாக்டர்களாகப் பணியாற்றுபவர்கள். ஆகையால் அடுத்து அவர்களை டாக்டர்கள் என்று அடையாளப்படுத்துவது மனித குலத்திற்குத் தொண்டு செய்யும் டாக்டர்களின் மனம் புண் படுமாதலால் டாக்டர்கள் என்றும் அவர்களைச் சொல்லக் கூடாது என்று நமது பிரதமர் அறிவுறுத்தக்கூடும்!

நமது அணுகுமுறை இப்படியிருக்க, பாகிஸ்தானில் நிலைமை என்ன? அங்கே அரசாங்கம் மசூதிகளையும் மதரசாக்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கிறது. மதரசாக்கள் மத அடிப்படையில் சிறுவர்களுக்குப் பயங்கர வாதச் செயல்களில் ஈடுபடுவதற்கான மனப்போக்கையும் துணிவையும் தோற்றுவித்து, நவீன ஆயுதங்களைக் கையாள்வதற்கான பயிற்சியையும் அளிப்பதாலும், மசூதிகள் வழிபாட்டுத் தலமாக இருப்பதற்குப் பதிலாக ஆயுதக் கிடங்குகளாகவும், பயங்கரவாதிகளின் பதுங்குமிடமாகவும் இருப்பதாலும்
அவற்றை அரசே மேற்கொள்ளும் நிர்பந்தம் முஷரபுக்கு எற்பட்டதால் நிகழ்ந்த மாற்றம் இது!

சிவப்பு மசூதி என்ற பெயரில் அழைக்கப்படும் மசூதியையும் அதன் பொறுப்பில் சிறுவருக்கும் சிறுமியருக்கும் நடத்தப்படும் மதரசாக்களையும் சொந்தமாகக் கொண்டுள்ள அண்ணன்தம்பி முல்லாக்கள் இருவர் அரசின் ஆணைக்குக் கட்டுப்பட மறுத்துத் தமது மத ரசாவில் கற்கும் ஆண், பெண் இளையோரிடம் ஆயுதங்களைக் கொடுத்து ஆட்சிக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்துவிட்டார்கள். அதுவும் அவர்கள் கண்ணோட்டப்படி ஜிகாதுதான்! ஆனால் முஷரப் அந்த முல்லாக்களை அடக்கி வழிக்குக் கொண்டு வருவதுதான் ஜிகாது என்று முடிவு செய்தார். அரசின் காவல்துறையும் ராணுவமும் சிவப்பு மசூதியையும் அதன் மதரசாக்களையும் கைப்பற்றிக் கொள்ள அனுப்பிவைக்கப்பட்டன. மசூதியி லுள்ள ஆண் பெண் மாணவர்கள் காவல் துறையினரையும் ராணுவத்தினரையும் ஆயுதங்கொண்டு எதிர்க்குமாறு முல்லாக்களால் தூண்டப்பட்டனர். இரு தரப்பிற்குமிடையே ஆயுத பலப் பரீட்சை தொடங்கியது. முற்றுகையிடப்பட்ட மசூதியிலிருந்து பெண்ணைப் போல புர்கா அணிந்து தப்பியோட முனைந்த அண்ணன் முல்லாவைப் பெண் காவலர்கள் சோதனைசெய்து அடையாளங் கண்டு கைது செய்தனர். நமது நாடு என்றால் புர்கா அணிந்து கொண்டு குற்றவாளி எவரேனும் வெளிப்பட்டால் பெண் காவலர் கூட அவர்களைத் தொடத் தயங்குவர்கள்: அரசின் வழிகாட்டுதல் அப்படி!

சிவப்பு மசூதியில் பதுங்கியுள்ள பயங்கர வாதிகளை எவ்வித தயை தாட்சண்யமும் இன்றி நசுக்குவதில் முஷரப் உறுதியாக இருக்கிறார். முல்லாக்களுடன் சமரசப் பேச்சு எதற்கும் இடம் இல்லை; அவர்கள் சரண் அடைந்து மசூதியையும் மதரசாக்களையும் அரசிடம் ஒப்படைப்பது தவிர வேறு வழியில்லை என்கிறார். அண்ணன் முல்லா தன் மனைவிமார்களும் குழந்தைகளும் நோய்வாய்ப்பட்ட வயதான அன்னையும் வசிப்பதற்காகவேனும் மசூதியின் பின்புறம் உள்ள அறைகளைத் தருமாறு கெஞ்சுகிறார். ஆனால் முஷ்ரப் மசியவில்லை. வயதான அம்மாவைக்காட்டி முல்லா அனுதாபம் தேட முடியாது என்கிறார்.

ஹிந்துஸ்தானத்துப் பிரதமரோ, போதிய ஆதாரங்கள் சிக்கியதன் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாக லண்டனில் வைக்கப்பட்டிருக்கும் ஹிந்துஸ்தானத்து முகமதிய இளைஞர்களின் தாய்மார்கள் அளிக்கும் கண்ணீர்ப் பேட்டிகளைப் பார்த்துத் தாமும் கண்ணீர் மல்க இரவெல்லாம் உறக்கமின்றி உழன்றதாகச் சொல்கிறார். அந்தத் தாய்மார்களுக்கு ஆறுதலும் தைரியமும் அளிக்கிறார். ஹிந்துஸ்தானத்து தூதரகங்கள் அந்த விசாரணைக் கைதிகளின் நலனைக் கவனித்துக் கொள்ளும் என உறுதி கூறுகிறார். இங்கிலாந்தின் பிரதமரிடம் பேசுகிறார். தப்பித் தவறிக்கூட மதத்தின் சாயத்தை இதில் பூசிவிடாதீர்கள் என்கிறார்.

அமெரிக்காவின் கை முறுக்கல் தாங்காமல்தான் முஷரப் பயங்கரவாதிகளிடம் கடுமை காட்டுகிறார் என்று கண்டுபிடிப்பதில் பொருள் இல்லை. முஷரப்புக்கே பயங்கரவாதிகளிடமிருந்து உயிருக்கு ஆபத்து வந்து விட்டதால் அவர் பயங்கரவாதத்தை ஒடுக்க முனைந்து விட்டார் என்று விளக்கம் சொல்வதிலும் பொருள் இல்லை. அவரது பயங்கரவாத ஒடுக்கல் மேற்கிற்கு பாதிப்பு நிகழ்வதைத் தவிர்ப்பதற்கானதுதான் என்றாலும், எப்படியோ ஒரு முகமதிய பயங்கரவாதக் கும்பல் நசுக்கப் படுகிறது என்பதுதான் நிதர்சனம். முஷரப் ஆப்கானிஸ்தானத்துடனான எல்லைக் கோடு நெடுகிலும் கண் காணிப்புக்கும் ஏற்பாடு செய்து, தாலிபான்களின் ஊடுருவலைத் தடுக்க முனைந்துவிட்டார். ஆக, பயங்கர வாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் உறுதியாகவும், ஒரு முகமதிய தேசமாக இருப்பினும் நிர்தாட்சண்யமாகவும், திறமையாகவும் செயல்படுவதாக உலக அரங்கில் நம்பிக்கை பிறக்கிறது. அதே சமயம், ஹிந்துஸ்தானம் முகமதிய பயங்கரவாதிகளிடம் காட்டும் மெத்தனத்தையும் மீறிய பரிவின் காரணமாக, பயங்கர வாத ஆதரவு நாடாகக் கருதும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

உலக நாடுகளுக்கு ஹிந்துஸ்தானத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உள்விவகாரங்கள் பற்றி சரியான புரிதல் ஏதும் இல்லை. புரிந்துகொள்ள வேண்டுமென்கிற அக்கரையும் அவற்றுக்கு இல்லை. எனவே அவற்றின் பார்வையில் பாகிஸ்தான் பயங்கர வாதத்தை ஒடுக்கும் நாடாகவும் ஹிந்துஸ்தானம் பயங்கர வாதிகள் மீது அனுதாபம் கொண்டு சலுகை அளிக்கும் நாடாகவும்தான் தோற்றமளிக்கும்.

+++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்