சிறு தெய்வ வழிபாட்டில் ஆகம விதிகளின் தாக்கம்

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

மலர்மன்னன்



நாட்டார் தெய்வம் என்று அடையாளங் காணப்படும் சிறு தெய்வங்களை வழிபடும் வழக்கம் முறையான சமய நம்பிக்கை தோன்றுவதற்கும் முன்னதாகவே தொன்றிவிட்ட சமூக நடைமுறை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவை பெரும்பாலும் ஒரு சமூகத்தின் தலைமகனாகவோ தலை மகளாகவோதான் இருக்ககூடும். அல்லது தனது சமூகத்திற்காக உயிர்த் தியாகம் செய்த, சமர்செய்து மாண்ட, மானம் காப்பதற்காக உயிரைத் துறந்த, தவறான அனுமானத்தினால் தண்டிக்கப்பட்டுப் பின்னர் நிரபராதி என அறியப்பட்டு அதற்கான பிராயச் சித்தம் போல் மரியாதை செய்யப்படுகிற, ஒரு கால கட்டத்தில் நிஜமாகவே தம் சமூகத்து மக்களிடையே உயிர் வாழ்ந்த நபர்களாகவும் இருக்கக்கூடும்.

கன்னி கழியாத மகளிரும், அதே போல் இளம் பிராயத்திலேயே மரித்துவிட்ட ஆண் களுங்கூடத் தம் சமூகத்தவரால் வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்காமல் போய்விட்டார்களே என்கிற கழிவிரக்கங் காரணமாக இரங்கலுடன் நினைவுகூரப்பட்டு, காலப்போக்கில் வணங்கி வழிபடவும் தொடங்கப்பட்டு, தெய்வ நிலைக்கு உயர்ந்துவிடுவதுண்டு.

தலைமுறைகள் பல தாண்டியதும் இவ்வாறு வணங்கப்படும் சிறு தெய்வங்கள் நமது நாட்டைப் பொருத்தவரை சிவ பெருமானின் கணங்களைச் சேர்ந்தவர்களாகவோ பராசக்தியின் பரிவாரங்களைச் சேர்ந்து, சக்தியின் அம்சமாகவே கருதப் படுபவர்களாகவோ மிகவும் உயர்ந்த பீடங்களில் வைக்கப்பட்டுத் தேர், திருவிழா என்றெல்லாம் கொண்டாடப்படும் நிலைக்கு அந்தஸ்துப் பெற்றுவிட்டிருக்கின்றனர். மனிதரிடையே சமய உணர்வு உருப்பெற்று, எதற்கும் சமயத்தின் அங்கீகாரம் தேவையென்ற விழைவும் தோன்றுகையில்தான் சிறு தெய்வங்கள் இம்மாதிரி உயர் அந்தஸ்துப் பெறும் கட்டம் தோன்றுகிறது.

ஒரே வீச்சில் பல உயிர்களைக் குடித்துச் செல்லும் கொள்ளை நோய்களையும் அச்சங்காரணமாகத் தெய்வமென வணங்கும் வழக்கம் உள்ளது என்றாலும், இதுவும் தொடக்கத்தில் குறிப்பிட்ட நோய் கண்டு இறந்த நபரின் மீதான பரிகார உணர்வுடன் தொடங்கப்பட்ட சம்பிரதாயம்தான் எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

சிறு தெய்வ வழிபாடு உலகெங்கிலும் எல்லா சமுதயங்களிலும் இருந்து வந்துள்ளது. இன்றுங்கூட அய்ரோப்பாவி லுள்ள பல நாடுகளில் பழங்குடியினப் பண்பாடுகளின் எச்சமாகச் சிறு தெய்வ வழிபாடு மக்களின் ஆழ்மனதில் உறைந்து கிடப்பதால் கிறிஸ்துவ தேவாலயங்களின் மேன் மாடங்களில் சிறுதெய்வப் பிரதிமைகள் மறைவாகப் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்தவ சமயப் பிரசாரகர்கள் தாம் சென்ற விடங்களில் மக்கள் கிறிஸ்தவத்தை ஏற்கச் செய்யவேண்டும் என்பதற்காக, அங்கெல்லாம் மக்காளால் மிகுந்த நம்பிக்கையுடன் வணங்கப்பட்டுவரும் சிறுதெய்வங்களைப் பேய் என்றும் பிசாசு என்றும் வர்ணித்து, அவற்றை வழிபடுவது அறிவீனம் எனப் போதனை செய்ததன் விளைவாகக் கிறிஸ்தவம் பரவிய சமுதாயங்களில் எல்லாம் சிறு தெய்வ வழிபாடு இழிவாகக் கருதப்பட்டு, நின்றும் போனது. சில சமுதாயங்களில் மக்கள் கிறிஸ்தவராக மதம் மாறிய பின்னரும் தலைமுறை தலைமுறையாக ரத்தத்தில்லுஊறிப்போய்விட்ட சிறுதெய்வ வழிபாட்டைக் கைவிட மனமின்றி, ரகசியமாக அதைத் தொடர்ந்த போது, அது தெரிய வருகையில் பாதிரிமார்கள்
பூண்போட்ட பிரம்புகளால் மக்களை அடித்து தண்டித்தமைக்கான ஆதாரங்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி முதலான மாவட்டங்களில் உள்ளன.

வனவாசிகளிடையே சிறு தெய்வ வழிபாடு என்பது முக்கியமாக முன்னோர் வழிபாடுதான். இதனால்தான் வனவாசி சமூகங்கள் பலவற்றில் ஒவ்வொரு குடும்பத்துக்குமே பிரத்தியேக தெய்வங்களின் சின்னங்கள் ஒவ்வொரு குடிசைக்கு வெளியேயும் வைக்கப்பட்டிருக்கும். இதன் நுட்பம் உணராமல் வனவாசிகளிடையே கிறிஸ்தவ மதத்தைப் பரப்பச் செல்லும் சில பிரசாரகர்கள் அத்தகைய சிறு தெய்வங்களான முன்னோர் சின்னங்களை உதாசீனப் படுத்தி யும் அவமதித்தும் விடுவதால்தான் வனவாசிகளிடையே மனக் குமுறல் உருவாகி, கிறிஸ்தவ மதப் பிரசாரகர்களைத் தாக்கும் அளவுக்கு நிலைமை முற்றி, மோசமாகிவிடுகிறது.

முகமதியம் வேரூன்றுவதற்கு முன் அரேபிய தீபகற்பத்திலும் அதனைச் சார்ந்த பிரதேசங்களிலும் சிறு தெய்வ வழிபாடு இருந்து வந்தது. சொல்லப்போனால் இன்று முகமதியாரால் புனிதத் தலங்களாகக் கருதப்படும் மக்காவும் மதீனாவும் முகமதியம் தோன்றுவதற்கு முன்பே சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்களாக இருந்தவைதாம். அராபியர் முகமதியாரக மாறியதன் விளைவாக, மெல்ல மெல்ல அவை சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்களாகத் திகழ்ந்தது மறக்கடிக்கப்பட்டது. அங்கிருந்த சிறுதெய்வ அடையாளங்களும் அகற்றப்பட்டன. இதனைச் சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்கள் மீதான ஆகிரமிப்பு என்றே வகைப்படுத்த வேண்டியிருக்கும்.

ஹிந்து சமயத்தைப் பொருத்தவரை அது அனாதி காலமாகவே இருந்து வரும் சமயமாதலால் சிறு தெய்வ வழிபாடு வெகு இயல்பாகவே ஹிந்து சமய வழிபாடுகளுள் ஒன்றாக ஒன்றிப் போனது. வேத காலத்திலிருந்தே சிறு தெய்வ வழிபாடு சமய அங்கீகாரம் பெற்றுவிட்டது. காலப்போக்கில் ஆண் தெய்வங்கள் சிவ கணங்களாகவும் பெண் தெய்வங்கள் பராசக்தியின் அம்சங்களாகவும் கருதப்பட்டு, பின்னர் சிவபிரானாகவும் பராசக்தியாகவுமே கூட மக்களின் விழைவால் உயர் அந்தஸ்தைப் பெற்று, மக்களின் விழைவினாலேயே அச்சிறு தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்களுங்கூட ஆகம விதிப்படி அமைந்த ஆலயங்களில் அனுசரிக்கப் படும் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவனவாகிவிட்டன.

ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் ஆலயங்களினுள் நுழையலாகாது என்று இன்னமும் ஒருசிலரால் எண்ணப்படும் நிலைமை தொடருமானால் ஆண்டவனே உங்களைத் தேடி வருகிறான் எனச் சொல்வதுபோல் ஞானவேல் முருகன் என்ற திருநாமத்துடன் முறைப்படி ஆராதனைகள் செய்த திருவுருவை ஒதுக்கிவைக்கப் பட்டிருக்கும் பகுதிகளுக்கெல்லாம் ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்கள் அர்ச்சனை செய்யும் திட்டம் ஒன்று ஏறத் தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. அதில் நானும் பங்கேற்றுப் பல ஊர்களுக்கும் சென்று தமிழிலேயே அர்ச்சனை செய்வித்தேன். அப்போது அர்ச்சனை செய்ய வந்த பலரும், நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால்தான் சமஸ்கிருதத்திற்குப் பதிலாகத் தமிழில் அர்ச்சனை செய்கிறீர்களா என்று கேட்டு, எங்களுக்கும் சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்விக்கவேண்டும் என்று நிர்பந்தித்தார்கள்!

எதற்காக இதை நினைவு படுத்துகிறேன் என்றால் மக்களின் விழைவு காரணமாகத்தான் சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்கள் ஆகம விதிப்படியிலான ஆலய நடைமுறைகளை ஏற்றிருக்கக் கூடுமே யன்றி, வலிந்து திணிக்கப்பட்டனவாக அவற்றை எண்ணத் தேவையில்லை என்று சுட்டிக் காட்டுவதற்காகத்தான்.

சபரிமலை அய்யப்பனும் சமயபுரம் மாரியம்மனும், ஏன் பல வீரபத்திரர், முனீஸ்வரர் கோயில்களுங்கூடமுன்பு சிறு தெய்வ வழிபாட்டுத்தலங்களாக இருந்து இன்று ஆகம விதிப்படியிலான வழிபாட்டுமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஆலயங்களாக மாறிவிட்டிருகின்றன. எவ்வித நிர்பந்தங்களும் இன்றி, மக்களின் விழைவு காரணமாகவே வெகு இயல்பாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

பல்லையும் நகங்களையும் பின்னர் கல்லையும் ஆயுதங்களாகக் கொண்டு இரை தேடித் தின்ற மனிதன்தான் இன்று உணவு தேடும் முறையிலும் உண்ணும் விதத்திலும் நயமான வழிகளைக் கடைப் பிடிக்கத் தொடங்கிவிட்டிருக்கிறான். வழிபாட்டு முறையிலும் இதேதான் நிகழ்வதாகக் கொள்ளவேண்டும். மாற்றம் எதுவாயினும் அது இயல்பாக
நிகழ்ந்துள்ளதா என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்