பத்திரிக்கையாளர்கள் சதிகாரர்கள் – கமலா சுரய்யா

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

அபூசுமையா


மாதவிக்குட்டி என்ற பிரசித்தி பெற்ற எழுத்தாளரை அறியாதவர்கள் எழுத்துலகில் மிகச் சிலரே இருப்பர். ஒரு பெண் இவ்வுலகில் எதிர்கொள்ளும் எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் பெண்ணியம் என்ற பெயரில் எழுத்தின் மூலமாகவும் அனுபவரீதியாகவும் அனுபவித்த இவர் அந்த எழுத்துகளுக்காக பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். தனது வாழ்வில் தான் விரும்பிய ஒன்றைத் தேடியலைந்த இந்த பெண்ணிய எழுத்தாளருக்குக் கடைசியில் இஸ்லாத்தின் மூலமாகவே அது கிடைத்தது.
எப்பொழுது அவர் சுரய்யாவாக மாறினாரோ அப்பொழுதிலிருந்து அவருடையப் புதிய மனமாற்றத்தை விரும்பாத, அவருடைய வாழ்வின் வெற்றிக்கான தீர்வாக அவர் கண்டறிந்த இஸ்லாத்தினை விரும்பாத பலர் அவரைக் குறித்து இல்லாததும் பொல்லாததுமாகப் பல அவதூறுகளைப் பரப்பத் தொடங்கினர். இந்த அவதூறுகள் அவரை இன்றும் பின்தொடர்ந்து வந்து என்றென்றைக்காக அச்சுறுத்திக் கொண்டேயுள்ளன.

எனினும் தனது தள்ளாத வயதிலும் தம் உறுதியை விடாத அவர், சமீபத்தில் அவர்களைக் குறித்து வெளியான “மதம் மடுத்து” என்ற அவதூறைக் குறித்து தேஜஸ் இதழுக்கு விளக்கமளித்தார்கள். அதிலிருந்து சில பகுதிகள்:

கமலா சுரய்யா இஸ்லாத்தை விட்டு மாறியதாக வந்த செய்தியைக் குறித்து அவரிடம் கேட்ட பொழுது,

“நான் கூறாத பலவற்றையும் அவர்கள் செய்தியாக்குகின்றனர். எனக்கு இஸ்லாம் மதம் மடுத்து என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர். எதற்காக, யாருக்காக இதெல்லாம் செய்கின்றனர் என்று எனக்குத் தெரியாது. சில பத்திரிக்கையாளர்கள் இங்கு வந்து என் வீட்டின் சமையல்காரிகளிடம் பேசி விட்டுப் போவர். பின்னர் அவற்றையெல்லாம் நான் கூறியதாகக் கூறி செய்தியாக்குகின்றனர். பத்திரிக்கையாளர்கள் இத்தனை சதிகாரர்களாக மாறி விட்டனரே?” என்று ஆதங்கத்துடன் பதிலளித்தார்.

கமலா சுரய்யாவின் மதமாற்றத்தில் மனதில் துவேசமுள்ள சில பத்திரிக்கைகள் மலையாளத்திலும் உள்ளன. ” மாத்ருபூமி”யின் போட்டோகிராபர் “மதம் மடுத்து ” என்ற தலைப்போடு எழுதிய கட்டுரையை மக்கள் நம்பினர். முன்னர் அவர் இஸ்லாத்தைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட போது எவ்வாறு சில இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து மிரட்டல்களும, மோசமான வசவுகளும் கொடுத்தனவோ அதே போல் அவருக்கு “மதம் மடுத்தது” என்ற பொய்ச் செய்தி பரவியதைத் தொடர்ந்து இஸ்லாத்தைச் சரியாக அறிந்து கொள்ளாத சில முஸ்லிம் பெயர் தாங்கிகளால் மிரட்டல்களும், மோசமான கடிதங்களும் அவரைத் தேடி வந்தன. பத்திரிக்கைகள் இப்பொழுதும் வேட்டைக்காரர்களைப் போல் சுரய்யாவைப் பின்தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

“எனக்கு வாழ்வில் தேடலின் தீர்வை அளித்த என் சமுதாயத்திற்கு நான் என்றைக்கும் துரோகம் செய்ய மாட்டேன். எனக்கு மதம் மடுத்து என்று நான் கூறாததை பரப்பியது போல் ஒவ்வொருவரும் என்னைப்பற்றி நாளுக்கொரு பொய்யை புனைந்து பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஒரு எறும்பைக் கூட வேதனைப்படுத்த நினைக்காத என்னை எதற்காக இவர்கள் இப்படி துன்புறுத்துகின்றனர்? எனக்குத் தெரியவில்லை. நான் இனி எத்தனை காலம் இருப்பேன்? எந்த நிச்சயமும் இல்லை. எனக்கு இனி எழுதுவதற்கு முடியுமா?” என்று கேட்கும் கமலா சுரய்யாவின் முகத்தில் ஒரு குழந்தையின் கள்ளங்கபடமற்ற தன்மை தென்படுகிறது.

“இஸ்லாத்தை மதமாக ஏற்றுப் பின்னர் அதனை எனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டேன். ஒரு மதத்தில் இருந்து தேடலின் தீர்வாக மற்றொன்றை ஏற்றுக்கொண்ட நான் இந்த சமுதாயத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டேன்” என உறுதிபட கமலா சுரய்யா கூறுகிறார்.

“எனது எல்லாக் கேள்விகளுக்கும் கடைசியில் கிடைத்த ஒரே பதில் தான் இஸ்லாம். ஏளனப்படுத்துபவர் ஏளனப்படுத்தட்டும். பிரபஞ்சத்தின் நாயனாகிய அல்லாஹ்வை நான் விசுவசிக்கின்றேன். எல்லாவற்றையும் அவன் நிச்சயிக்கட்டும்.” என்று கூறும்பொழுது அவர் முகத்தில் உறுதியும் மட்டில்லாத மகிழ்ச்சியும் தென்படுகிறது.

_________________________

கடவுள் குறித்த கருத்து

“கடவுள் என்பவன் மதத்திற்கு அப்பாற்பட்டவன். மதத்திற்கல்ல முக்கியத்துவம், தெய்வத்திற்காகும். இப்பொழுது மனிதனின் மனதிலிருந்து தெய்வத்தின் சிந்தனையை மாற்றி மதத்தை விதைத்து விட்டனர். ஸ்ரீநாராயண குருவை ஈழவனாக்கியது போல் அல்லாஹ்வை பள்ளியில் ஒதுக்கியிருக்கின்றனர். தெய்வத்தை அவ்வாறு அடைத்திட முயற்சிக்கக் கூடாது.” – முன்பு ஒருமுறை தெய்வத்தைக் குறித்து கேட்ட பத்திரிக்கையாளர்களுடன் தெய்வத்தின் முக்கியத்துவத்தினைக் குறித்து அவர் உரையாடியது இவ்வளவு மட்டுமே.

_________________________

ஆனால் பத்திரிக்கைகள், “மதம் சுத்த பைத்தியகாரத்தனம் என்று சுரய்யா கண்டறிந்ததாக” எழுதி பரப்பினர். உலகம் முழுவதும் மரியாதையுடன் பார்க்கும் ஒரு எழுத்தாளரைக் குறித்து “நான் இஸ்லாத்தினை எனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக அவதூறு எழுத பத்திரிக்கைகள் போட்டியிடுகின்றன.” என தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்.

எதையாவது தன்னைப்பற்றி அறிய விழையும் பொழுது, தொடர்ந்து தன்னோடு தொடர்பு வைத்திருப்பவர்களிடம் மட்டும் கேட்டு உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்று சுரய்யா வேண்டுகோள் விடுக்கிறார். எனினும் தெய்வ விசுவாசம் என்பது மற்றவர்களுக்குக் கூறி புரியவைப்பதற்கெல்லாம் அப்பாற்பட்டது என்பதையும் அவர் முழுமையாக புரிந்தே வைத்துள்ளார்.

இனி உள்ள வாழ்க்கை

“பாஷாபோஷிணி, மாத்ருபூமி, மனோரமா இவர்களுக்கெல்லாம் இப்பொழுது என்னுடைய கதைகள் தேவையில்லை. அவர்களுக்கெல்லாம் “பைங்கிளி” (அவைகளில் வெளிவரும் விரசமான தொடர்களில் ஒன்று) போதும். நான் இப்பொழுது அல்லாஹ்வினைக் குறித்து மட்டுமே எழுதுகிறேன்.”

அல்லாஹ்விற்கு மொத்தமும் அர்ப்பணித்து “யா அல்லாஹ்”, “நேசம்” முதலிய புத்தகங்கள் எழுதிய சுரய்யா, “இனியுள்ள மீதி வாழ்க்கையை அல்லாஹ்விற்காக அர்ப்பணித்த யதார்த்தத்தை உட்கொள்ளுவதற்கு இம்மலையாள பத்திரிக்கைகளும் மக்களும் தயங்குவது ஏன் என்று புரியவில்லை” என்று வேதனையுடன் கூறினார்.

பர்தா

பர்தா முஸ்லிம் பெண்களின் அடையாளமாகும். பர்தாவில் தனது பாதுகாப்பினையும் கண்ணியத்தினையும் கண்டு கொண்ட சுரய்யா இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் பின் பர்தாவில் இது வரை எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை.

“முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று புலம்புவது யார்? இன்று ஹிஜாப் அணிந்த கல்வியில் சிறந்த பெண்கள் எல்லா துறைகளிலும் இருக்கின்றனர்.” என்று கேள்வி எழுப்புகிறார்.

“சுரய்யா பர்தா ஹௌஸ்” என்ற பெயரில் துபாய் உட்பட எல்லா பகுதிகளிலும் பர்தா சென்டர்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதிகமான பெண்கள் பர்தா அணியத் தொடங்கியதாக அறிவித்தனர். இதெல்லாம் தான் பர்தா அணிந்த பின்னால் சம்பவித்தவை என்று மிகவும் மகிழ்ச்சியுடன் சுரய்யா நினைவு கூர்கிறார்.

“ஆபாச ஆடை மோகத்திலிருந்து முஸ்லிம் பெண்களாவது விலகி நிற்கட்டும்.” என்று கூறும் அவர், நியூயார்க்கில் இருந்து வெளிவரும் “ஃபெமினிஸ்ட்” என்ற மாத இதழ் அவரின் பர்தா அணிந்த படத்தினை “இம்மாத ஃபெமினிஸ்ட்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அச்சடித்து வெளியிட்டதை நினைவு கூர்ந்து, “இதைவிட வேறு என்ன வேண்டும்? பர்தா அணிவதால் பெண்கள் அடிமைப்படவில்லை என்பதற்கு” என்று கேள்வி எழுப்புகிறார்.

அரசியல்

“கேரளத்தில் இன்று நடப்பது எமர்ஜென்சி காலகட்டமாகும். உருட்டியும் மிரட்டியும், அடித்தும் மிதித்தும் குற்றம் ஒப்புக் கொள்ள வைக்கும் போலீஸ் தான் இங்கு உள்ளனர். எமர்ஜென்சி காலகட்டத்தில் போலீஸ் காவலில் ராஜன் இறந்தபோது அப்பொழுது முதலமைச்சராக இருந்த கருணாகரன் அதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு தனது பதவியை இராஜினாமா செய்தார். மற்ற மந்திரிகள் வருத்தம் தெரிவித்தனர். ஆனால் தற்போது உதயகுமாரை அடித்துக் கொன்றதற்கு எத்தனை மந்திரிகள் வருத்தம் தெரிவித்தனர். யார் இங்கு இராஜினாமா செய்தார். பிரிட்டீஷ் காலத்தில் உள்ள போலீஸ் விதிமுறைகளே தற்போதும் உள்ளன. இது தீயிட்டு கொளுத்த வேண்டிய சமயம் கடந்து விட்டது. தம் மக்களை இவ்வாறு கொடுமைப்படுத்தி கொல்வதை எப்படி இந்த அம்மாக்கள் சகிக்கின்றனர்?”

“எல்லா அரசியல்வாதிகளும் திருடர்களே. ஆட்சி செய்து தளர்ந்த இவர்களையெல்லாம் அந்தமானிற்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ நாடு கடத்த வேண்டும். வாழ்க்கையின் மீதி பகுதியை அங்கு அவர்கள் இளநீர் குடித்து உல்லாசமாகக் கழிக்கட்டும். கொலை எனக்கு வெறுப்பானதனால் தான் இவர்களை கொன்று விடுவதற்கு நான் கூறவில்லை.”

“நல்ல நிதி இருந்தாலே அரசியல் கட்சி உருவாக்குவதற்கு முடியும் என்று என் நலனில் நாட்டமுடையவர்கள் என்னிடம் கூறியதோடு என்னுடைய அரசியல் ஆசை முடிந்தது. 18 வயதுடையவர்களுக்கு ஓட்டு போட உரிமையுண்டு. ஆனால் தேர்தலில் நிற்க உரிமையில்லை. இதெல்லாம் நம் நாட்டு சட்டங்களில் உள்ள ஓட்டைகளாகும். பெண்களை மானபங்கப்படுத்தும் அரசியல்வாதிகளும் அதற்கு துணை நிற்கும் காவல்துறையும்!. என் பேரக்குழந்தைகள் வந்தால் அவர்களை வெளியில் செல்ல அனுமதிக்க எனக்கு பயமாக இருக்கிறது. அவர்கள் அழகான குழந்தைகள். இதோ இது தான் கடவுளின் சொந்தம் நாடு.” என்று தனது மனக்குமுறலை கொட்டித் தீர்க்கிறார்.

தறவாடு (பிறந்த வீடு – குடும்ப வீடு)

“ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் நிர்பந்தத்திற்கு இணங்கி தரவாட்டிற்குப் போனேன். பழைய பாம்புப்புற்றும், நீர்மாதளம் பூவும் இலஞ்சியுமெல்லாம் கண்டு மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. ஊர்க்காரர்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடினர். சிறிது நேரத்திற்கு பழைய நினைவுகளில் நான் “ஆமியாக”(அவரின் குழந்தைப்பருவ செல்லப்பெயர்) மாறிப் போனேன். பின்னர் நான் கேள்விப்பட்டது, என்னுடைய வருகைக்குப் பின்னர் என் உறவினர்கள் அங்கு ஷுத்திகலசம்(தீட்டை சுத்தம் செய்ய தண்ணீர் விட்டு கழுவும் சடங்கு) நடத்தினர் என்பதை – ஒரு முஸ்லிம் ஏறி வீட்டை அசுத்தமாக்கியதன் காரணத்தினால்.” என்று வேதனை தழும்ப தனது பிறந்த வீட்டினை நினைவு கூர்கிறார்.

சுரய்யாவின் தற்போதைய இருப்பிடம் முதியோர் இல்லம் போல் காட்சியளிக்கிறது. காரணம் சுரய்யாவைப் போன்று 5 வயதான பெண்கள் அங்கு வேலை செய்கின்றனர். இளமையானவர்களை வேலைக்கு வைக்க ஆலோசனைக் கூறுபவர்களிடம், “இந்த வயதானவர்களுக்கு நீங்கள் வேலை கொடுப்பீர்களா” என்று திருப்பிக் கேட்கும் சுரய்யாவிற்கு கடைசி காலத்தில் அரவணைப்பும் பாதுகாப்பும் இவர்கள் மட்டுமே. விசுவாசமும் அன்பும் கொண்ட இவர்கள் தான் இந்த எழுத்தாளரின் பலம். இதில் ஒருவர் பத்து வருடங்களாக சுரய்யாவுடன் இருக்கின்றார்.

தமிழாக்கம்: அபூசுமையா (தேஜஸ் நவம்பர் 15-1-2005 இதழிலிருந்து)

Series Navigation

அபூசுமையா

அபூசுமையா