எண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

நேச குமார்


காஷ்மீர் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து விட்டது முஷாரஃப்பின் இந்திய விஜயம். அவர் வந்து சென்ற பின்னும் ஊடகங்கள் காஷ்மீர் குறித்து எதாவது பேசிக்கொண்டே இருக்கின்றன. சேனல் சர்ஃபிங் செய்து கொண்டிருந்தபோது எதோ ஒரு சேனலில் அகப்பட்டார் ஃபருக் அப்துல்லாஹ். என்ன செய்தாலும் இவரை ஓரங்கட்ட முடிவதில்லை. நடிகர் விவேக் பேசுவதை கேட்கும் கூட்டம் போல் அவர் கொட்டாவி விட்டால் கூட கூட்டம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தது. முடிக்கும்போது ஒரு பாடலையும் பாடி கூட்டத்தாரை மகிழ்வித்தார். ஆட்சிக்காலத்தில் குளறுபடிகள், கோமாளித்தனங்கள், அப்பட்டமான முறைகேடுகள், தேசிய நலனுக்கெதிரான முடிவுகள் என மன்னிக்க முடியாத தவறுகள் பலவற்றை செய்திருந்தாலும் ஃபரூக் அப்துல்லாஹ்வை யாராலும் உதாசீனப் படுத்த முடியவில்லை. காரணம், காஷ்மீர்ச் சூழலில் (ஓரளவு)இந்திய ஆதரவு நிலைப்பாட்டை மட்டுமல்ல, மனித நேய, மதச்சார்பின்மை தளங்களிலும் செயல்படுவதற்கு அவரது குடும்பத்தாரை விட்டால் ஆளில்லை என்றாகிவிட்டது.ஃபரூக் அப்துல்லாஹ்வையும் விட தீர்க்கமாக பேசக்கூடியவர் அவரது மகன் உமர் அப்துல்லாஹ், இன்னமும் அதிக மதச்சார்பின்மையை கொண்டிருப்பவர். பல சமயங்களில் பாகிஸ்தானின் நடவடிக்கைகளில் வாஜ்பாய் அரசு மனமகிழ்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறியபோது சுட்டிக் காட்டியவர். ஃபரூக் அப்துல்லாஹ், இந்த பேட்டியிலேயே கூட சமீபத்தய முஷாரஃப்- மன்மோகன்சிங் ஏற்படுத்தியுள்ள குதூகலங்களைக் குறித்து ஏகப்பட்ட கேள்விகளை எழுப்ப ி, பாகிஸ்தான் எந்தவிதத்திலும் மாறவில்லை என்ற தமது ஐயத்தையும் வெளிப்படுத்தி, இதனால் அகமகிழ்ந்து பாகிஸ்தான் பண்பட்டுவிட்டது என்ற கனவுக்கோட்டைக்குள் வாழவேண்டாம் என்று பார்வையாளர்களை எச்சரித்தார் – மிகவும் சரியே. அவரது தந்தையும் பல சமயங்களில் நியாயமாக பேசியவர்தாம். அதுவும் இன்றைய சூழலுடன் ஒப்பிடும்போது, நிச்சயமாக நியாயவாதி எனலாம், ஷேக் அப்துல்லாஹ்வை.

* * *

ஷேக் அப்துல்லாஹ் சம்பந்தமாக ஏற்படுத்தப்பட்டிருந்த உளவுத்துறைக் குழுவில் தாம் இருந்ததாக பேசும்போது தெரிவித்தார், வெங்கட் சாமிநாதன். சமீபத்தில் வெளிவந்துள்ள அவரது ‘கலையுலகில் ஒரு சஞ்சாரம் ‘ பற்றி பேசிக்கொண்டிருந்தபோது இவ்வாறு தெரிவித்தார். அந்நூலில் அவர் காஷ்மீரில் இருந்த காலங்கள் கோடிட்டுக் காட்டப் பட்டிருந்ததைத் தொடர்ந்து இது குறித்தெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஜம்முவில் குடும்பத்தை ஸ்தாபித்ததையும், ஆரம்பகால ஐபி வாழ்க்கை பற்றியும், காஷ்மீர் போலீஸ் ஸ்டேஷன்களில் தங்கிய காலங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார் வெசா. தமிழ் எழுத்துலகில் வெசா போன்று பலதரப்பட்ட அனுபவங்களை நேரடியாக அனுபவித்து அவை விரிவு செய்த எண்ணவுலகின் பின்புலத்திலிருந்து தமிழக நிகழ்வுகளை அசைபோட்டு, எடைபோட்டு அவற்றை தமிழ் வாசகர்களுக்கு முன்வைத்தவர்கள் மிகவும் குறைவே. ஸ்தூல உலகில் பயணிக்கும் தளம் சுருங்கச் சுருங்க, சிந்தனா உலகமும் சுருங்குகிறது. தமிழர்கள் காடு, மேடு, கடல், தீவுகள் என்று இடைவிடாது பயணித்து வந்த போது இருந்த ஆரோக்கியச் சிந்தனைகள், தமிழகத்துடன் முடங்கிப் போனபோது சுருங்கிப் போயின. மீண்டும் இப்போது பிரயாணிக்கத் தொடங்கியிருக்கிறோம் நாம். இதன் தாக்கத்தால் தற்போது எழுகின்றன புதிய சிந்தனைகள். கட்டமைக்கப் பட்ட – பல காலமாக பயிற்றுவிக்கப் பட்ட சிந்தனா முறைகளை, மரபுகளை கேள்வி கேட்கும் மனோபாவம் ஆகியன இப்போது நம்மில் எழும்பத் தொடங்கியுள்ளன. பிரயாணிக்கும் தமி ழர்கள் அதிகம் புழங்கும் இணையத்தில் இந்த ஆரோக்கிய முன்னகர்வைக் காணமுடியும். இணையமே ஓய்வொழிச்சலற்ற பரிமாற்றப் பிரயாணங்களின் தொகுப்புதானே. ஆற்றலைக் கொடுப்பவை பிரயாணங்கள்.

* * *

பிரயாணிகளில் தமிழர்களும் இருப்பதை காஷ்மீரத்து வைஷ்ணவி கோவிலில் நின்று சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடலுக்காக கம்பயர் செய்து கொண்டிருந்த இளைஞரிடமிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. இரு வாரங்களுக்கு முன்பு இதைக் காட்டினார்கள். சற்றே கடித்து தமிழைப் பேசிய ஒரு தமிழர் தாம் வேலூரைச் சேர்ந்தவர் என்றும் நிறைய தமிழர்கள் இந்தக் கோவிலுக்கு வருவதாகவும் சொன்னார். அமர்நாத் யாத்திரைக்கு யாராவது தமிழர்கள் செல்கின்றார்களா என்பது தெரியவில்லை. இந்தக் கோடியிலிருக்கும் தமிழகத்துக்கும் அந்தக் கோடியிலிருக்கும் காஷ்மீருக்கும் எப்படியோ தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அந்தக் காலத்தில் சைவம் இருந்ததென்றால், இந்தக் காலத்தில் தீவிரவாதமும், வகாபியிஸமும், இவற்றை எதிர்கொள்ளும் அரசு இயந்திரமும் இருக்கின்றன. சென்ற வருடம் சென்னையிலிருந்து ஒரு பெண் காஷ்மீர் சென்று வந்திருந்தார் – என்.சி.சி பயிற்சியின் ஒரு அம்சமாக.ஸ்ரீநகருக்கு தனி விமானம் மூலம் சென்றதை, ஸ்லேட்டுகளால் கட்டப் பட்டு பளபளக்கும் வீடுகளை(காஷ்மீரத்து லாரி பேக்கர்கள் டிசைன் செய்த லோக்கல் குடிசை ?) ப்பற்றியெல்லாம் கண்கள் அகல விவரித்தார். அவரிடம் தற்போதைய(அப்போதைய) சூழ்நிலை குறித்து கேட்டுக் கொண்டிருந்தேன். ஹிந்தி தெரிந்திராவிட்டால் நன்றாக இருந்திருக்கும், இது மாதிரியான திட்டுக்களையெல்லாம் கேட்டு மனம் வருந்தியிருக்க வேண்டியதில்லை என்றார். சரிதான் என்றே தோன்றியது. தோத்திவாலா என்று ஏனைய இந்தியர்களை இகழ்ந்த அதே காஷ்மீரி இன்றளவும் அதே மனப்பான்மையோடுதான் இருக்கிறார் என்று தோன்றுகிறது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பாண்டிகள் என்று தமிழர்களை இகழும் மலையாளிகள், பைய்யாலோக்-கை இடித்துரைக்கும் மும்பய்க்கர்கள் என்று மாநிலச் சூழல்களின் வழிவரும் ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் ஏற்படுத்தப் படும் மனப் பிம்பங்கள் நீடித்து நின்றுவிடுகின்றன. காஷ்மீர முஸ்லிம்களை இகழ்வாக பேசும் ஏனைய முஸ்லிம்களை முன்பு பார்த்திருக்கிறேன். இன்றளவும், அவர்களை கோழைகள் என்றுதான் பாகிஸ்தானியர் பலர் கருதுகின்றனர். அவர் விவரித்ததைக் கேட்ட போது என் நினைவுகள் பின்நோக்கி பயணிக்க ஆரம்பித்தன. காஷ்மீரில் நான் பிரயாணித்த காலங்கள் அவை.

* * *

காலங்கள் பல சென்றாலும் சில நினைவுகள், ஆல்பம் போன்று அப்படியே மனதில் தங்கிவிடுகின்றன. அவற்றோடு ஒப்புமை கொண்ட எதாவது ஒரு நிகழ்வு, இத்தகைய ஆல்பங்களிலிருந்து எதோ ஒரு பக்கத்தை ஒரு சர்ச் இன்ஜின் மாதிரி கொண்டு வந்து தந்து செல்கிறது. அதைத் தொடர்ந்து நினைவு அப்படம் அடங்கியிருக்கும் ஆல்பத்திலிருக்கும் ஏனைய படங்களையும் கோர்வையாக துண்டு துண்டாக்கிய சினிமா நெகட்டிவ்கள் மாதிரி சாயம்மாறியும் சுவையுடன், சோகத்துடன் கொண்டு வந்து காட்டுகின்றன. நான் கண்ட காஷ்மீர் 16-17 வருடங்களுக்கு முந்தயது. அப்போதுதான் காஷ்மீரில் தீவிரவாதம் முளைவிடத்துவங்கியிருந்த சமயம். கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் தனக்குத்தானே கற்பித்துக் கொண்ட ‘காஷ்மீரியத் ‘ கனவுகளில் மூழ்கியிருந்த காலமது. நான் பள்ளத்தாக்குக்கு(kashmir valley) சென்று கொண்டிருந்தேன். மீனாக்ஷி அம்மன் கோவிலைப் பற்றி ஆர்வமாக கேட்டபடி வந்தார் எனது சக பிரயாணி. அவர் ஒரு காஷ்மீரி இந்து, ஆனால் பண்டிட்(பிராம்மணர்) இல்லை. டோக்ரா என்று நினைக்கிறேன். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலெல்லாம் புதிது புதிதாக மதப்பிரச்சாரகர்கள் வந்து மசூதிகளில் ‘தூய ‘ இஸ்லாத்தைப் பற்றி போதிக்கின்றனர் என்றார். அப்போது இந்தியா இந்த இஸ்லாத்தை ‘தூய்மையாக்கும் ‘ அமைப்புகளையும், அவற்றுக்கு பின்புலமாயிருக்கும் சவுதியின் பெட்ரோ டாலர்களையும் பற்றி சரியாக புரிந்து கொள்ளாத காலகட்டமது. அவர் கூறிய பல சம்பவங்களைப் பற்றி மனது நம்ப மறுத்தது. எப்ப டி காஷ்மீரியத் இந்த சவுதி வார்ப்பு இஸ்லாமியர்களால் தாக்குதலுக்கு உட்படுத்தப் படுகிறது என்று புலம்பினார். அங்குள்ள இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாலமாக இருந்த விஷயங்கள் – சூஃபியிஸம், இசை, உடை, உணவு, வரலாறு, வழக்குகள் என்று எல்லாமே தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டு இஸ்லாத்துக்கு புறம்பானவை என்று அறிவிக்கப் படுகின்றன, பாமர காஷ்மீரி முஸ்லிம்களிடம் இதெல்லாம் உண்மையான இஸ்லாம் இல்லை என்று பிரச்சாரம் செய்யப்படுவதைப் பற்றியெல்லாம் கவலையோடு எடுத்துரைத்தார். இன்றளவுக்கும் நாம் காஷ்மீர் பிரச்சினையில் சவுதி அரேபியா, அது முன்னிறுத்தும் இஸ்லாமிய கோட்பாடுகள் ஆகியவற்றின் தாக்கங்களை சரிவர புரிந்து கொள்ளவில்லை. இதன் விளைவு அதே போன்ற நிகழ்வுகள் இந்தியா எங்கும் தற்போது நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்திலும் கூட இந்த ‘தூய ‘ இஸ்லாத்தை முன்னிறுத்துபவர்கள் தாக்குதலை தொடங்குவது இஸ்லாமியர்களுக்கும் ஏனையோர்களுக்கும் பாலமாயிருக்கும் கருத்தாக்கங்களையும், சின்னங்களையும்தான். இந்தப் புரிதல் இன்றளவுக்கும் நமக்கு முழுமையாக ஏற்படவில்லை. புரிந்து கொள்ளாத சமூகங்கள் மீண்டும் மீண்டும் தாக்குதலுக்குள்ளாகின்றன. அதே modus operandi தான் எங்கும். பாரமுல்லாவிலிருந்து காத்தான் குடி வரை, காஷ்மீரத்திலிருந்து ஈழம் வரை.

* * *

ஈழம் எனும்போது, இந்தியர்களின் மனோநிலையில் காஷ்மீர் ஏற்படுத்திய ஈழ எதிர்ப்பு சிந்தனைகளைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்த இரண்டு பிரச்சினைகளுமிடையேயான அடிப்படை வித்தியாசங்களை இந்திய சிந்தனாவர்க்கம் – அது நம்மூர் வாய்ச்சவடால் வாதிகளாகட்டும், சவுத் பிளாக் மண்டாரின்களாகட்டும் புரிந்து கொள்ளவில்லை, முயற்சிக்கவே இல்லை. இணையத்தில் கூட ஈழப் பிரச்சினையுடன் காஷ்மீர் பிரச்சினையை ஒப்பிட்டு தமிழினக் காவலர்கள்(ஓரிருவர்தாம், அனைவரும் அல்ல) எழுதுவதையும் காணமுடிகிறது. ஏனைய இந்திய இணையத்தவரும் இது போன்றே எழுதுகிறார்கள்(இங்கு இந்த எண்ணிக்கை அதிகம்). இனரீதியான ஒடுக்குமுறைகளால் பாதிக்கப் பட்டு மூலைக்குத் தள்ளப் பட்டபின் வேறு வழியில்லாமல் எதிர்த்து நிற்கும் ஒரு சமூகத்தின் பிரச்சினைகளையும், மத ரீதியான மூளைச்சலவைக்காட்பட்டு காஃபிர்களோடு சேர்ந்து வாழமுடியாது என்று கோஷிக்கும் கூட்டத்தார் ஏற்படுத்தும் பிரச்சினையையும் எப்படி ஒரே தட்டில் வைத்து ஒப்பிட முடிகிறது இந்த தமிழின காவலாளிகளால், இந்திய மதியூகிகளால் என்பது எனக்குப் புரிவதில்லை. இதைப் புரிந்து கொள்ளாததாலேயே பல தளங்களில் இந்திய அரசியல், அதிகார வர்க்கம் குழம்பிப் போய்க்கிடக்கிறது. இந்த வித்தியாசம் புலப்படாததாலேயே ஈழத்தமிழர் பிரச்சினை கவனத்துக்கு வரும்போதெல்லாம், ‘நியாயம் தான், ஆனால் காஷ்மீர் என்று ஒன்று இருக்கிறதே…. ‘ என்று கோரஸாக அனைவரும் இழுப்பதைப் பார்க்க முடிகிற து. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் முயன்று முடியாமல் போனவைகளும் இதுவும் ஒன்று. அவரால் காஷ்மீர் பிரச்சினையின் அடித்தளமாய் விளங்கும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்தியல்களை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஒப்புக் கொள்ளாததால், அதை சுட்டி வித்தியாசத்தை ஏனைய ஆளும்வர்க்கத்தவர்க்கு(ஆட்சியிலிருந்தபோது) புரியவைக்க முடியவில்லை. அவர் மட்டுமல்ல, இன்று எந்த இந்திய அரசியல் வாதியாலேயும் இது முடியாத ஒன்று. இந்த புரிதல் ஏற்படா வரை ஈழப் பிரச்சினையில் இந்தியா ஒரு நியாயமான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. தமிழக வாக்காளர்கள், கட்சிகளை மனதிற்கொண்டு காஸ்மடிக் வேலைகள் எதாவது செய்வதும், விடவும் முடியாமல் பற்றவும் முடியாமல் பிரச்சினையை குழப்பியடிப்பதுமே நடைபெறும், நடைபெறுகிறது. ஆணிவேரைப் பார்க்காமல், கொப்பும் கிளையும் குற்றம் செய்கிறது என்று புலம்பித்தள்ளியபடி இருக்கின்றது இந்த வர்க்கம். இந்தப் புரிதல் இல்லாததாலேயே வேருக்கு மருந்திடாமல் மேம்போக்காக எதாவது செய்வது, அதிக நிதி ஒதுக்கீடு செய்து பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்று தாற்காலிக நோய் நிவாரணிகளையே தீர்வென நம்பின தொடர்ந்து மத்தியில் ஆட்சியேற்ற குழுக்கள். ஆரம்பத்திலிருந்தே தெளிவானதொரு நிலைப்பாட்டை இந்திய அரசியல்-அதிகார-ஆளும் வர்க்கம் எடுக்காததாலேயே ஏகப்பட்ட குழப்பங்கள் காஷ்மீரில்.

* * *

காஷ்மீரில் வசிக்கும் ஒரு புரொபசரை ஒரு நிகழ்சியில் சந்திக்க நேர்ந்தது. என்ன நீங்கள் இணையம் பற்றி பெரிதாகப் பேசுகிறீர்கள், ஸ்ரீநகரிலிருந்து இருபது கிலோமீட்டர் அப்பால் சென்றால் இணைய வசதி எங்குமே கிடையாது தெரியுமா என்றார். அதிர்ச்சியாக இருந்தது. ஒரு காலத்தில் ஆறு மாதங்களுக்கொருமுறை புதிய மாடல் ஷீ வரும் காஷ்மீரில். இன்றோ நிலைமை தலைகீழ். அரசியல் இஸ்லாத்தின் அதி தீவிர version அங்கே உள்ளே நுழைந்ததிலிருந்து அழிவு மேல் அழிவாக வந்து விழுந்து கொண்டிருக்கிறது காஷ்மீரின் மேல்.அஸ்திவாரங்கள் முன்பே போடப்பட்டாலும், இந்தியா ஒளிரத்துவங்கிய 90களின் ஆரம்பக் கட்டத்தில் காஷ்மீர் காரிருளுக்குள் நுழைந்ததை நாம் தெளிவாக காணமுடிந்தது. லைசன்ஸ் ராஜ் தனது அந்திமக் காலத்தை இந்தியாவெங்கும் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், முல்லா ராஜ் காஷ்மீரில் ஸ்தாபிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. தினம் தினம் மசூதிகளிலிருந்து அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன. சுன்னாஹ்வைக் காட்டி, யூதர்களை நபிகளார் வெளியேற்றியது போல காஷ்மீர இந்துக்களை சக காஷ்மீர முஸ்லிம்கள் வெளியேற்ற வேண்டும் என்று இஸ்லாத்தை ‘நன்கு ‘ கற்று, அழகு மொழியில் தெளிவாக எடுத்துரைக்கும் நூதன மதப்பிரச்சாரகர்கல் அப்பாவி முஸ்லிம்களிடம் எடுத்துரைத்தனர். 1400 வருடங்களுக்கு முன்பு அரேபியாவில் ஒலித்த அதே கட்டளைகள், ‘உங்களது உடைமைகளையும், பெண்களையும் விட்டுவிட்டு காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள் ‘ என்று மசூதிகளின் ஒலிபெருக்கிகளிலிருந்து ஓதப்பட்டன. மெல்ல மெல்ல காரிருள் சூழ்ந்தது – மதக் காரிருள், மூளையை மழுங்கடிக்கும், மனித நேயத்தை மறக்கடிக்கும் காரிருள். இன்றும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது பலரின் மனங்களை, அங்கு. அவரிடம் ஹசரத் பால் மசூதி பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். முகமது நபியவர்களின் முடி இருக்கிறதா என்று கேட்டேன். ஆம் என்றார். மசூதிக்குப் பக்கத்தில் ஒரு சிறிய இடத்தில் அது வருடத்தில் மூன்று அல்லது நான்கு முறை அங்கிருக்கும் இஸ்லாமிய மதாசார்யர்களால் பொதுமக்களுக்கு காண்பிக்கப் படுகிறது என்று தெரிவித்தார். இதை எப்படி இன்னமும் இந்த வகாபிக்கள் விட்டு வைத்திருக்கின்றனர் என்று கேட்டேன். செப்டம்பர் 11 நிகழ்வுகள் நடந்திருக்காவிட்டால் அதுவும் அழிக்கப் பட்டிருந்திருக்கும் என்றார். செப்டம்பர் 11 அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோ, நல்லது செய்ததோ (நீள் பார்வையோடு நோக்கும்போது, அது நன்மையே செய்தது அமெரிக்காவுக்கு என்று கருதுகிறேன்) இந்தியாவுக்கு மாற்றுடை அணிந்து வந்த வரம் இந்த செப்டம்பர் 11.

* * *

செப்டம்பர் 11ஐத் தொடர்ந்த மேற்குலகின் விழிப்புணர்வே இன்று காஷ்மீரில் நிலவும் குறைந்த பட்ச அமைதிக்கு காரணம், முஷாரஃப் காரணமல்ல என்பதை இந்திய சிந்தனையாளர்கள், ஊடகவியலார்கள் முழுமையாக உணரவில்ல. ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் 180 டிகிரி வளைவை மேற்கொண்ட முஷாரஃப் கூட அதன் அடுத்த கட்டமாக காஷ்மீரிலும் ஓரளவு வளைந்தாக வேண்டும் என்பதை அப்போது உணர்ந்தாற்போல் தெரியவில்லை. அரசியலில் புதிதாக நுழைந்த லோக்கல் ரவுடி போலவே பேசிவந்தார் அப்போது. முஷாரஃப் மட்டுமல்ல பாகிஸ்தானின் சிந்தனாவர்க்கம் முழுவதும் காஷ்மீரில் தமது மத உணர்வுத் தூண்டுதல்கள், செக்டேரியன் மோதல்கள், ஆஃப்கானிஸ்தானின் தடுமாற்றங்கள் ஆகியவற்றிலிருந்து அன்னியப்பட்டவை என்றே நம்பினார்கள். ஆயினும், இன்று இதில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அவர்களின் ஊடகங்கள் வழியே காணமுடிகிறது. ஆயினும் இதெல்லாம், லாஹூர், கராச்சி, ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் போன்ற பெருநகரங்களின் சில வர்க்கங்களுக்கே பொருந்தும். தத்தமது நாட்டைக் காப்போம் என்பதே ஏனைய ராணுவங்களின் மோட்டோவாக இருக்கையில், பாகிஸ்தானின் ராணுவத்தின் அதிகாரபூர்வ கோட்பாடு இன்றளவும் ‘அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் ‘(Jihad Fi Sabil lillah) என்பதாகத்தான் இருக்கிறது. இராணுவம் மட்டுமல்ல, சாமன்யர்களின் முழக்கமும் அதுவாகவே இருக்கிறது. சாதாரண முஸ்லிம்கள் இன்னமும் முல்லாக்களின் பேச்சைக் கேட்டு, இந்தியா என்பது இருண்ட கண்டம் என்றும் இங்கு அனைவரும் ஏழ்மையில் வாழ்வதாக ஒருபுறக் கற்பனையும், அதே சமயத்தில் இந்தியா என்பது ஒழுக்கக் கேடான நாடு என்றும் நம்புகிறார்கள். நான் ஒரு முறை பேச நேர்ந்த பாகிஸ்தானியப் பெண், இந்தியப் பெண்கள் அனைவரும் மல்லிகா ஷெராவத், நேஹா துப்யா, பிபாஷா பாஸு போன்று உடையணிந்து உலவுபவர்கள் எனக் கருதுவதைக் காண நேர்ந்தது. எப்படி உங்களது பெண்கள் இப்படியெல்லாம் உடையுடுத்துகிறார்கள் என்று அங்கலாய்த்தபடியே இருந்தார். இதன் பிண்ணனியில் இருந்தது ஒழுக்கம் பற்றிய கரிசனமா அல்லது இயலாமையின் அங்கலாய்ப்பா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாமலேயே இருந்தது – இதுதான் பாகிஸ்தானில் இந்தியர்களைப் பற்றி ஏற்படுத்தப் பட்டிருக்கும் மனச்சித்திரம். இதை ஏற்படுத்துபவர்கள், மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காயும் குருமார்கள். இவர்களது ஆதிக்கம் சமூகமெங்கும் கோலோச்சுகிறது. இவையெல்லாம் மாறாதவரை இந்தியா பற்றிய பாகிஸ்தானின் மனப்பாங்கில் பெரும் மாற்றம் வரும் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. அது வரை எத்தனை பஸ்கள் விட்டாலும், மனங்களில் பாலங்களை ஏற்படுத்த முடியாது.

* * *

பாலமாக ஒரு காலத்தில், காஷ்மீரத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே இருந்தது – சைவம். ஒரு காலத்தில் சைவத்தின் இரு கண்களாக விளங்கியவை காஷ்மீரமும் தமிழகமும். இவ்விரண்டு பிரதேசங்களில் நிலவிய சைவ தத்துவங்களிடையே வித்தியாசங்கள் சில இருந்தன என்றாலும், வித்தியாசங்களையும் விட ஒற்றுமைகள் நிறைய இருப்பதை காஷ்மீர சைவத்தைப் பற்றி படிக்கும்போது அறிய முடிகிறது. இந்த ஒற்றுமை நல்ல விஷயங்களில் மட்டும் வெளிப்படுவதில்லை, எப்படி நமது சைவ மன்னர்கள் சில சமயங்களில் மத உணர்வு நிரம்பப் பெற்று மாற்று கொள்கைகளைப் பின்பற்றியோர் மீது தாக்குதல்களைத் தொடுத்தார்களோ, அதே போன்று காஷ்மீரத்து மன்னர்களும் செய்திருக்கின்றனர். பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோருக்கு சைவ உணர்வு ஓங்கிய அதே கிபி பத்தாம் நூற்றாண்டில் க்ஷேம குப்தன் என்ற காஷ்மீரத்து மன்னன் சைவ உணர்வு மேலோங்க புத்த விகாரங்களை இடித்துத் தள்ளியதைக் காணமுடிகிறது. இந்த காலகட்டத்தில்தான் இங்கு சிதம்பரம் கோவிலை வீரசோழன் விரிவு படுத்தியதைக் காணமுடிகிறது. அதே சமயத்தில் இந்தோனேசியாவிலும் பெளத்தத்திலிருந்து சைவத்திற்கான மீள் பயணம் ஏற்பட்டது. எப்படி அக்காலத்தில் தூரமாயிருந்த, முற்றிலும் மாறுபட்ட இந்தப் பிரதேசங்களில் ஒரே மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டன என எண்ணும்போது வியப்பாயிருக்கிறது. இது நகர்ந்து சென்ற பல மனிதக் கூட்டங்களினால் தான் சாத்தியமாயிருக்கக் கூடும். சிதம்பரத்திலுள்ள தீஷிதர்கள் காஷ்மீரத்திலிருந் து வந்தவர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அதே போல இங்கிருந்து இந்தோனேசியாவுக்கு குழுக்கள் பிரயாணித்திருக்கக் கூடும்.

* * *

பிரயாண வசதிகளை எளிதாக்க பாகிஸ்தானும், இந்தியாவும் முன்வந்து மக்களிடையேயான தொடர்புக்கு வித்திட்டிருக்கும் இந்த நேரத்தில், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள சாரதா கோவில் குறித்து காஷ்மீரத்து இந்துக்கள் முஷாரஃப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளனர், அதை பாதுகாக்குமாறு. பாகிஸ்தான் அரசு செய்யுமா எனத்தெரியவில்லை. சமீபத்தில் லாஹூரில் ஒரு இந்து ஆலயத்தை புனரமைக்க பாகிஸ்தானிய அரசு உதவியது. புனரமைக்கப் பட்ட இக்கோவிலை துவக்கி வைக்க அத்வானி அவர்களும் அழைக்கப் பட்டுள்ளார். ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் இம்மாதிரி நல்லெண்ண முயற்சியெல்லாம் எடுபடுமா என்று தெரியவில்லை. இந்திய காஷ்மீரில் இருக்கும் குறைந்த பட்ச உரிமைகள் கூட பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் கிடையாது. அடிக்கடி தலைதூக்கும் ஷியா- சுன்னி தகராறுகள், பெண்ணடிமைத்தனம், வறுமை என்று எல்லாவிதத்திலும் பின் தங்கியே இருக்கிறது பாக் ஆக்ரமித்துள்ள காஷ்மீர்(பா.ஆ.கா). பாகிஸ்தானில் அதன் நிலை என்ன, வடக்கு எல்லைப்பகுதிகளின்(Northern Areas) தலையெழுத்து என்ன என்பதும் நிர்ணயிக்கப் படாமலேயே இருக்க, பாக் அரசின் ஒரு அதிகாரியே ஒட்டுமொத்த பா.ஆ.கா வின் தலையெழுத்தை தீர்மாணிக்கிறார். பாகிஸ்தானிய பஞ்சாபின் வளமைக்கு காஷ்மீரின் தண்ணீர் தேவைப்படுகிறது – ஆர்மிக்கு (இந்திய) காஷ்மீர் தேவைப்படுகிறது – முல்லாக்களுக்கும் முஜாஹித்தீன்களுக்கும் காஷ்மீரில் இந்திய அடக்குமுறை தேவைப்படுகிறது – லஷ்கர்-இ-தொய்பா போன்ற மதவாத அமைப்புகளுக்கு தாருல் ஹர்பான இந்தியாவை அல்லாஹ்வுக்காக வெற்றி கொள்ள ஏவும் தளமாக(launching pad) காஷ்மீர் தேவைப்படுகிறது. இப்படி பாகிஸ்தானிலும் காஷ்மீரிகளுக்கான கண்ணீர் காரணத்துடனேயே பலவித குழுக்களால் சிந்தப் படுகிறது. இந்நிலையில், காஷ்மீரில் இருக்கும் ஒரு இந்துக் கோவிலை அவர்கள் உடைக்காமல் விட்டுவைத்திருப்பதே பெரிய விஷயம் என்றே தோன்றுகிறது. உள்ளடங்கியிருந்த காரணத்தினால் அந்தக் கால முஸ்லிம் படையெடுப்புகளால் இந்தக் கோவில் அழிக்காமல் விட்டுவைக்கப் பட்டதாம். அவர்கள் விட்டு வைத்ததை இன்று காலம் அழித்துக் கொண்டிருக்கிறது. நொடிக்கு நொடி மாறும் இவ்வுலகில் அழிவு மட்டுமே நிரந்தரம் என்று தோன்றுகிறது. அழிவு அழகானதுதான், தனது சுய நிலையில் இருக்கும்போது. தன்னிலை மாறாமலிருக்கும்போது, ஓய்வின்றி வந்து விழும் கடலலைகளைப் போல சோவென்று இரைந்து ஆர்ப்பரிந்து விழுந்து அழிந்து போகிறது அழிவு. அந்த அழிவு-அலைகள் நம்மில் எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை, சொல்லப் போனால் நமது உயரிய உணர்வுகளை, அவை கொணரும் எண்ணச் சுழல்களை முடுக்கி விடுவது இந்த சாவதான அழிவு. ஆனால், ஆவேசமாய் வந்து எதிர்பாராத நேரத்தில் தலைகாட்டும் போதுதான் அது விகாரமடைகிறது – சுனாமி போல. நமது சிந்தனைகளை நிறுத்தி, காரிருளில் நிரந்தரமாக ஆழ்த்திவிடுகின்றன இத்தகைய விகாரப்பட்ட அழிவுகள். பழையன கழிதலும் புதியன புகுதலும் அழி வுகளின் மூலம் சாத்தியமாகும் வேளையில், இத்தகைய சுனாமிக்களோ, புதியனவற்றை உள்ளே நுழையவிடாது பழையனவற்றை மட்டும் அழித்து, ஒரு சூனியத்தை, வண்ணங்களற்ற, மாற்றுக்கள் அற்ற – கொடும் பாலை நிலத்தை போகுமிடமெல்லாம் ஏற்படுத்தி விடுகின்றன. பல சூழல்களில் என்றோ ஒருமுறை சுனாமி வந்துபோக, ஒரு சில இடங்களில் மட்டும் இது போன்ற அழிவுகள் நிரந்தரமானவைகளாகி விடுகின்றன, மத அடிப்படைவாதம் எனும் இந்த சுனாமி ஒரு முறை ரத்த ருசி கண்டுவிட்டால் மீண்டும் மீண்டும் வந்து தாக்கிக் கொண்டே இருக்கும் என்பதற்கு. நல்ல உதாரணம் – காஷ்மீர்.

* * *

நேசகுமாரின் வலைப்பதிவு

Series Navigation

நேச குமார்

நேச குமார்