இந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

குனால் குமார் குண்டு


1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்தியாவில் 33 கோடி மக்கள் இருந்தார்கள். இன்று இந்தியாவில் அதே அளவுள்ள ஏழைகள் இருக்கிறார்கள். சுமார் அரை நூற்றாண்டுகால சுதந்திரத்துக்குப் பின்னரும், மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டங்களின் பின்னரும், சுதந்திர இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். பொருளாதார சீர்திருத்தங்களாலும் அவர்களது வாழ்வு தொடப்படவில்லை. பல கோடிக்கணக்கான ரூபாய்கள் ஏழ்மையை நீக்க செலவிடப்பட்டிருந்தாலும், தவறான குறிகளாலும், போதுமானவையாக இல்லாத வழங்கும் அமைப்புக்களாலும், பச்சையான ஊழலாலும் சிறிதளவு உதவி கூட அவர்களிடம் செல்லவில்லை.

வரி என்பது கொள்கை ரீதியான ஒரு விஷயம். வரி கொடுக்கும் சக்தி என்ற அடிப்படையிலும், மிக அதிக அளவு வருமான ஏற்றத்தாழ்வு உடைய நாடுகளிலும், அதிக வருமானம், அதிக வரி விகிதம் என்ற வரி அமைப்பு இருக்கிறது. (மொ.கு: progressive tax structure என்பது அதிக வருமானம் வாங்குபவர் அதிக வரி, குறைந்த வருமானம் வாங்குபவர் குறைந்த வரி என்ற வரி அமைப்பு) ஆனால், இந்தியாவில் ஏழைகளிடமிருந்தே பணத்தை வரியாகப் பெற்று, அவர்களுக்கே வேலை வாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வழங்குவது போன்ற வரி அமைப்பு இருக்கிறது. எல்லோரும் அனுமானிப்பது போன்று, இந்த திட்டங்கள் பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்கு பணத்தை பங்கிடும் திட்டங்களல்ல. இவை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட ஏழை மக்களிடமிருந்து இன்னொரு ஏழை மக்களுக்கு பணத்தை வினியோகிக்கும் திட்டங்களே. இந்திய மத்திய தர வர்க்கம் கொண்டிருக்கும் எண்ணம் போல, மத்திய தர வர்க்கமும் பணக்காரர்களும் கொடுக்கும் வரி ஏழைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது என்பது உண்மையல்ல. நாம் வரிச்சுமையை ஆராய்ந்து பார்த்தோமானால், யார் உண்மையிலேயே வரி கொடுக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தோமானால், நமக்கு வேறுவிதமான சித்திரம் கிடைக்கிறது.

வரிகள் இரண்டு வகையானவை. ஒன்று நேரடி வரி, இன்னொன்று மறைமுக வரி. நேரடி வரி என்பது பெரும்பாலும் நிறுவன வரி மற்றும் வருமான வரி ஆகியவையே. (corporate and income tax). மற்றவை, சொத்துவரி, வட்டி வரி, அன்பளிப்பு வரி, நில வரி, ஹோட்டல் வரி மற்றும் விவசாய வரி ஆகியவை சிறிய அளவுக்கு நேரடி வரியில் பங்கு பெறுகின்றன. மறைமுக வரி என்பது, பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் வரி. இது எக்ஸைஸ் வரி, கஸ்டம்ஸ் வரி, விற்பனை வரி ஆகியவை. மற்ற மறைமுக வரிகள், கேளிக்கை வரி, வாகன வரி, மின்சார வரி ஆகியவை.

அடிப்படையில் சொல்லப்போனால், மிகச்சிறந்த நேர்மையான நியாயமான வரி அமைப்பு என்று ஒன்றும் இல்லை. வரி மூலம் பயன்பெறுபவருக்கு நல்லதாக இருப்பது வரி கொடுப்பவருக்கு நியாயமானதாக இருக்காது. ஆனால், வரி அமைப்புக்களில் ஓரளவுக்கு வித்தியாசம் இருக்கிறது. வருமானத்துக்குத் தகுந்தாற்போல வரி கொடுப்பது என்பதும், ஒட்டு மொத்தமாக எல்லோரும் ஒரே அளவு சதவீதம் வரி கொடுப்பது என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டாவது முறையில் பாதிக்கப்படுவது பொருட்களை வாங்குபவர்களே. ஒரே விகிதத்தில் எல்லோரும் விற்பனை வரி கொடுப்பது ஏழைகளை அதிகம் பாதிக்கிறது. ஏனெனில் கொடுக்கப்படும் விற்பனை வரி ஏழைகளின் வருமானத்தில் பெரும் சதவீதத்தை ஆக்கிரமிக்கிறது. அது பணக்காரர்களின் வருமானத்தில் மிகக்குறைந்த அளவு சதவீதத்தையே அது ஆக்கிரமிக்கிறது. ஆகவே நேரடி வரிகளே சமத்துவத்தை உருவாக்க சிறந்த வழிமுறை.

கீழ்க்கண்ட அட்டவணை, வரிகள் மூலம் இந்திய அரசாங்கம் பெறும் வருமானம் எந்த அளவுக்கு மறைமுக வரிகளைச் சார்ந்துள்ளது என்று தெளிவாக உரைக்கிறது.

மொத்த வரிவசூல தொகைகள் பில்லியன்களில் : அதாவது 100கோடிகளில்

Year Revenue Direct tax, % rev Indirect, % rev

வருடம் வருமானம் நேரடிவரி சதவீதம் மறைமுக வரி சதவீதம்

2000-2001 1886.03 36 74

2001-2002 1870.60 37 73

2002-2003 2160.44 38 62

2003-2004 2544.38 41 59

இந்திய அரசாங்கத்தின் வருமானத்தில் பெரும்பகுதி மறைமுக வருமானத்தின் மூலமே கிடைக்கிறது என்பது தெளிவு. இது 1990களில் சுமார் 70 சதவீத அளவுக்கு இருந்தது. இது இறக்குமதிக்கான விதிகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக கஸ்டம்ஸ் சுங்க வரிகள் (கஸ்டம்ஸ்) குறைந்ததன் காரணமாக அதிகரிக்கவில்லை என்றுதான் சொல்லலாம். அதுவும் பண்ணாமல் இருந்திருந்தாலும் இது இன்னமும் அதிகமாக இருந்திருக்கும். மாநிலங்களைப் பொறுத்தமட்டில் இந்த நிலைமை இன்னமும் மோசம். 2003-04இல் மறைமுக மாநில வரிகள், மாநிலங்களின் மொத்த வரி வருமானத்தில் சுமார் 88 சதவீதம். மாநில மற்றும் மத்திய வரிகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், மறைமுக வரிகள் 70 சதவீத வரி வருமானத்தை கொடுக்கின்றன.

மறைமுக வரிகள் அதிகம் இருப்பது ஏழை மக்கள் தங்களது வருமானத்தில் மிக அதிக அளவை (பணக்காரர்கள் தங்கள் வருமானத்திலிருந்து வரியாகக் கொடுக்கும் சதவீதத்தை விட அதிகமாக) வரியாக கொடுக்கிறார்கள். 1980இல் வரிகளை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட எல் கே ஜா கமிஷன், இந்தியாவின் வரி வருமானத்தில் 85 சதவீதம் ஏழை மக்களிடமிருந்தே வசூலிக்கப்படுவதாக தெரிவித்தது. அரசாங்கத்தின் வருமானத்தை மறைமுக வரிகளிடமிருந்து மாற்றி நேரடி வரிகளின் மூலம் பெறுவதற்காக பல வரி சீர்திருத்தங்கள் ஆலோசனைகளாய் வழங்கப் பட்டிருக்கின்றன.

மறைமுக வரியை இந்திய அரசு நம்பியிருக்க வேண்டிய நிலைமைக்கு முக்கிய காரணம் இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 3 சதவீதமே வருமான வரி கட்டுகிறது என்பதே. விவசாய வருமானத்திற்கு இந்தியாவில் வரி கிடையாது. கிராமப்புறங்களில் இருக்கும் பணக்காரர்கள் தங்கள் வருமானத்துக்கு வரி கட்டுவது கிடையாது. இது மட்டுமல்ல, நகரத்தில் இருக்கும் ஏராளமான மக்கள் தங்கள் வருமானத்தை விவசாய வருமானம் என்று வரையறை செய்து கொள்வதற்கு ஏற்ப விதிகள் இருப்பதால், அவர்களும் வரி கட்டுவதில்லை. இத்தோடு கூட மிகவும் மோசமான ஊழல் நிறைந்த வரி வசூலிக்கும் அமைப்பு. ஆச்சரியத்துக்கு இடமேதுமின்றி, இந்தியாவின் வரிக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் இடையேயான சதவீதம் வெறும் 10 சதவீதமே. இந்தியாவின் மோசமான வரி வசூலிப்புக்கு மிகவும் மோசமான வரி நிர்வாகமே காரணம்.

இத்தோடு கூட, இந்தியாவின் கறுப்புப்பண பொருளாதாரம் மக்களை வெறும் பணத்தின் மூலமாகவே கொடுக்கல் வாங்கலை அனுமதிக்கிறது. இதனால் இவர்கள் எந்த வித வரியும் கட்டுவதில்லை. இந்தியாவின் வரி வசூலிக்கும் துறை, மருத்துவர்கள், வக்கீல்கள், சுய தொழில் முனைவோர்கள் ஆகியோரிடமிருந்து எந்த வரியையும் வசூலிப்பதில்லை. ஏனெனில் இவர்களது வருமானம் பணம் கொடுக்கும் மூலத்திலிருந்து பிடிக்கப்படுவதில்லை. மிகவும் குறைவான வருமான வரி வசூலிப்பு, ஊழல், நிர்வாகச் சீர்கேடு ஆகியவை இந்த வரிகள் மூலம் பாதிப்புப் பெறுபவர்கள் ஏழைகளாகவே இருக்குமாறி ஆகிவிட்டது.

மகாராஷ்டிராவில், உதாரணமாக, ‘professional tax ‘ என்ற தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. இது இந்த மாநிலத்தில் இருக்கும் வேலையில்லாதவர்களுக்கு வேலை தருவதற்காக வசூலிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சுமார் 8000 கோடி ரூபாய் இதன் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப்பணத்தில் 1984 முதற்கொண்டு இதில் பாதி அளவைக்கூட வேலை வாய்ப்பு உருவாக்கச் செலவிடவில்லை இந்த அரசாங்கம். மத்திய அரசாங்கம் ஏன் இந்தப்பணம் செலவிடப்படவில்லை என்று ஆராய்ந்தபோது, மாநில அரசாங்கத்தில் பலம் மிகுந்த பணக்கார விவசாயிகளின் கூட்டமமைப்பு ஒன்று அறுவடை காலத்தின் போது கூலி குறைவாக கேட்கக்கூடிய உழைப்பாளர்களை வேண்டி, வேலை வாய்ப்புத் திட்டங்களை முடக்கிப் போட்டு வைத்திருக்கிறது என்பதை அறிந்தது. இந்தப் பணத்தை நன்றாகச் செலவிடக்கூடிய ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், உழைப்பாளர்களுக்கு முக்கியமான நேரங்களில் நன்றாக பேரம் பேசக்கூடிய நிலையைத் தந்துவிடும். மேலும் ஏற்கெனவே இந்த பணத்தின் மூலம் செலவிடப்பட்ட திட்டங்களை ஆராய்ந்தபோது, அவை சாலைகளையும் பாலங்களையும் கட்டவே கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதும் கண்டறியப்பட்டது. இது காண்டிராக்டர்களுக்கு பணம் வினியோகம் செய்ய உதவியதே தவிர உழைப்பாளர்களுக்கு வேலை தர உதவவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

மறைமுக வரிச்சுமை மட்டும் போதாது என்று, இந்தியாவின் ஏழைகள் ஊழலினாலும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அரசாங்கம் இந்த சமூகப்பாதுகாப்பு திட்டங்களைச் செப்பனிட வேண்டுமெனில் இந்த இரண்டு பிரச்னைகளையும் நேரடியாக பரிகாரங்கள் காண வேண்டும்.

***

(குனால் குமார் குண்டு வர்த்தக சேம்பரின் முதுநிலை பொருளியல் நிபுணர். பொருளாதார அளவியலில் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்.)

Series Navigation

குனால் குமார் குண்டு

குனால் குமார் குண்டு